Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்புஸ்வாணமானது மோடி அலை ! நிரந்தரமானது சமூக பிளவு நிலை !!

புஸ்வாணமானது மோடி அலை ! நிரந்தரமானது சமூக பிளவு நிலை !!

-

ஜார்கண்ட், ஜம்மு – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்:

புஸ்வாணமாகிப் போனது மோடி அலை! நிரந்தரமானது சாதி – மத பிளவு நிலை!!

ண்மையில் ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், ஆளும் இந்துவெறி கும்பலுக்கு பீற்றிக் கொள்ளுமளவுக்குப் பெரிய வெற்றியைத் தரவில்லை. நாடெங்கும் மோடி அலை தொடர்ந்து வீசுவதாக ஊதிப்பெருக்கிய இந்துவெறி கும்பல், இப்போது அப்படி எந்த அலையும் வீசாததையும் காஷ்மீர் பள்ளத்தாக்கு தனது கைக்கு வராத ஆத்திரத்தாலும் புளுங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்
அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிழைப்புவாதத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, அக்கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க பதவிவெறியோடு பா.ஜ.க. அலைகிறது.

ஜம்மு-காஷ்மீரில் ‘வளர்ச்சி’ வந்தால் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் விழுந்துவிடும் என்று அரசியலுக்குப் பதிலாக மறுகாலனியாக்க வியாபாரத்தை மோடி கடைவிரித்த போதிலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்க வேண்டுமென்ற தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்காமல் அடக்கி வாசித்த போதிலும், 44-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் “லட்சியம்” புஸ்வாணமாகிப்போனது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது இப்போது அம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போயுள்ளதோடு, வெற்றி பெற்ற ஜம்மு தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பா.ஜ.க.வால் டெபாசிட் கூடப் பெறமுடியவில்லை. காங்கிரசு மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளின் கூட்டணி முறிந்து போனதைச் சாதகமாக்கிக் கொண்டு, மத ரீதியான முனைவாக்கத்தைக் கட்டியமைத்து பா.ஜ.க.வால் கூடுதல் இடங்களைக் கைப்பற்ற  முடிந்துள்ளதேயன்றி, அங்கு பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை எதுவுமில்லை.

ஏறத்தாழ 66 சதவீத வாக்குப்பதிவைக் காட்டி, இது ஜனநாயகத்தின் வெற்றியாகவும் காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்தைப் புறக்கணித்துவிட்டதாகவும் ‘தேசிய’ப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் போலீசும் துணை இராணுவப் படைகளும் பயங்கரவாத அட்டூழியங்களில் ஈடுபடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டு, துப்பாக்கி முனையில் தேர்தலை நடத்தி, இதுதான் ஜனநாயகம் என்றால் அதைவிடக் கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.

மாநில தேர்தல் முடிவுகள்
சாதி மத பிளவு நிலை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் நான்குமுனை போட்டி காரணமாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், ஓட்டுக்கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சேர்ந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜம்முவிலுள்ள இந்துக்கள் பா.ஜ.க.வுக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள முஸ்லிம்கள் இந்துவெறி பா.ஜ.க. காலூன்றுவதைத் தடுக்க மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும், லடாக்கிலுள்ள பௌத்தர்கள் காங்கிரசுக்கும் வாக்களித்துள்ளனர். இத்தகைய மத ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்துவது, ஜம்முவிலுள்ள இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவது, இதன் மூலம் அரசியல் ரீதியில் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சினையை மதரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயமடைவது என்பதே இந்துவெறிக் கும்பலின் நோக்கமாக உள்ளது.

அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிழைப்புவாதத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, அக்கட்சியுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க பதவிவெறியோடு பா.ஜ.க. அலைகிறது. ஒருபுறம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்ற பெயரில் பா.ஜ.க.வைத் தோளில் தூக்கி அதற்கு அங்கீகாரம் அளித்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியானது பேரங்கள் படியாத நிலையில், மறுபுறம் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது என்ற பெயரில் காங்கிரசு மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் மெகா கூட்டணி ஆட்சியமைக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், எந்தக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நித்திய கண்டம், பூரண ஆயுசாகவே இருக்கும் என்பதையே ஓட்டுக் கட்சிகளுக்கிடையிலான பேரங்களும் இழுபறியும்  காட்டுகின்றன.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், ஆளும் இந்துவெறி கும்பலுக்கு பீற்றிக் கொள்ளுமளவுக்குப் பெரிய வெற்றியைத் தரவில்லை

பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில், பிற்பட்ட சாதியினரது சாதிய முனைவாக்கத்தைக் கட்டியமைத்துக் கொண்டு பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் மறுகாலனியச் சூறையாடல் மேலும் தீவிரமாகி, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் துப்பாக்கி முனையில் பிடுங்கப்பட்டு விரட்டப்படும் கொடூரம் அரங்கேறுவதற்கான சூழலும், ஜம்மு-காஷ்மீரில் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, பள்ளத்தாக்கிலுள்ள முஸ்லிம் மக்களைத் தனிமைப்படுத்தி ஒடுக்குவதற்கான சூழலும் நிலவுவதையே அபாய எச்சரிக்கையாக இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

– தலையங்கம்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

படங்கள் : இணையத்திலிருந்து