இந்திய நவீனதொழில்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒட்டுமொத்தமாக 25 ஆயிரம் ஊழியர்களை வேலையைவிட்டுத் துரத்தும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை டி.சி.எஸ். நிறுவனம் தனது ஊழியர்கள்மீது ஏவியுள்ளது. டிசம்பர் மத்தியில் இருந்தே கொத்துக்கொத்தாக பணிநீக்க உத்தரவுகளை அது வழங்கிக்கொண்டுதான் உள்ளது. பல்வேறு ஊடகங்களிலும் இக்கொடுமை குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுவரை ஊமைகளாய் அடங்கிக்கிடந்த ஐ.டி. ஊழியர்கள் டி.சி.எஸ்-க்கு எதிராக பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகின்றனர்.

மனம் உடைந்து குமுறிக்கொண்டிருக்கும் பல ஊழியர்களை நாம் சந்தித்து டி.சி.எஸ்-சின் காட்டு தர்பாரை எதிர்த்து நிற்க அவர்களை அணிதிரட்டி உள்ளோம். நாம் தொடங்கியுள்ள “புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு” சங்கத்தில் பல ஊழியர்கள் இணைத்துக் கொண்டு போராடத் தயாராகி வருகின்றனர். இக்கொதிநிலையை அடக்கிடும் நோக்கில் தவறான புள்ளிவிவரங்களை அவிழ்த்து விடுகின்றது, டி.சி.எஸ் நிர்வாகம்.
தனது 3 லட்சம் ஊழியர்களில் பணித் திறனின்மை காரணமாக வெறும் 0.8 சதவீதம் பேர்தான் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சத்தியம் செய்கிறது, நிர்வாகம். 2014 டிசம்பர் 31-ம் நாள் வரை கணக்கில் கொள்ளப்பட்ட மூன்றாவது காலாண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி 2400 பேர் மட்டுமே (அதாவது 0.8 சதவீதம்) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சாதிக்கின்றது. டிசம்பர் 2014-ல் வேலை நீக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஜனவரி 2015 வரை ஒரு மாத கால, கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் ஜனவரி 2015 வரை பணியில் இருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளனர். இது போன்ற உலக மகா மோசடியை கார்ப்பரேட்டுகள் தவிர எவராலும் செய்ய முடியாது.
டி.சி.எஸ். வெளியிட்டுள்ள இந்தப் புள்ளிவிவரம், ஆட்குறைப்பின் அளவை மூடி மறைக்கிறது. டிசம்பர் 2014 -க்குப் பின்னர் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என நாம் கோருகின்றோம்.
அதைப்போலவே டி.சி.எஸ் ஊழியர்களின் மாத ஊதியத்தின் ஒரு பகுதியை சட்டத்துக்குப் புறம்பாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அதனை திருப்பித் தருவதைக் கூட ‘எல்லா ஊழியர்களுக்கும் 100 சதவீத போனஸ்’ தரப்போவதாக அறிவித்து மோசடி செய்கின்றது.

இந்நிறுவனத்தின் பணிநீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார், சசிரேகா நடராஜன் என்ற ஊழியர். அவ்வழக்கில் டி.சி.எஸ் நிர்வாகம், இந்த உத்தரவை வழங்கியபோது மனுதாரர் கர்ப்பிணியாக இருந்தது தெரியாதென்றும், நிறுவனத்தின் கொள்கைப்படி கர்ப்பிணியாக இருப்போரை வேலையை விட்டு நீக்குவதில்லை என்றும் கூறி பணிநீக்கத்தைத் திரும்பப் பெறுகிறோம் என அறிவித்துள்ளது.
25 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தையோ, அவர்களின் குடும்பம், இளம் வயது குழந்தைகளின் வாழ்நிலையையோ கிஞ்சித்தும் எண்ணிப்பாராமல் தனது லாபவிகிதம் குறைந்துவிடக்கூடாது என்ற வெறியை மட்டுமே மையமாகக் கொண்டு தொழிலாளர்களைத் தூக்கி எறியும் இரக்கமற்ற டி.சி.எஸ், தற்போது கர்ப்பிணிப் பெண் மீது கருணை காட்டுவது போல நாடகமாடுகின்றது.
ஒருவேளை சசிரேகா நடராஜன் நீதிமன்ற உத்தரவை வாங்காமல் இருந்திருந்தால், அவரது வேலைநீக்கத்தை தடுத்திருக்க முடியாது. ஏனெனில், 25,000 பேரை வேலைநீக்கம் செய்ய உத்தேசித்திருந்த டி.சி.எஸ்., இவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்றோ, எத்தனை பேர் கர்ப்பிணிகள் என்றோ கணக்கெடுப்பு செய்யவில்லை.
மேலும் நீதிமன்றத்துக்கு கட்டுப்பட இந்த கார்ப்பரேட் நிறுவனம் விரும்பவில்லை. இதை அனுமதித்தால் அடுத்தடுத்து கார்ப்பரேட்கள் நீதிமன்றப் படிக்கட்டை மிதிக்க நேரிடலாம் என்பதால் இதனை நரித்தனமாகக் கையாண்டுள்ளது. கர்ப்பிணிப்பெண் என்பதால் இரக்கம் காட்டுவதாக சொல்லும் டி.சி.எஸ். கார்ப்பரேட்டிடம், ‘தங்களின் கருணைக்கு உட்பட்டுப் பிழைத்துக் கொள்ள’ அனுமதிக்கும் பண்ணையார்த்தனம்தான் வெளிப்பட்டுள்ளது.
நாம் கோருவது இவர்களின் கருணையை அல்ல, நமது உரிமையை. டாடாவின் ‘முதலைக் கண்ணீரை’ நம்பி ஏமாற நாம் தயாராக இல்லை. உடனடியாக வேலை நீக்க உத்தரவுகள் அனைத்தையும் திரும்பப் பெறக் கோரிப் போராடுவதுதான் இதற்குத் தீர்வேயொழிய, அவர்களின் கருணையினால் அல்ல.
சசிரேகா வழக்கில் நீதிமன்றத்தில் டி.சி.எஸ் ஊழியர்கள், ‘தொழிலாளர்’ என்ற வகைப்பாட்டில் வரமாட்டார்கள் என்று டி.சி.எஸ் கூறியுள்ளது. இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு டி.சி.எஸ் கட்டுப்படாது என்றும் சட்டத்துக்கு மேலானவர்கள் தாங்கள் என்றும் கருதும் கார்ப்பரேட் திமிர்தான் இந்த வாதம். இந்திய தொழில் தகராறுகள் சட்டம் 1947 இன் பிரிவு 2 S,– யாரெல்லாம் தொழிலாளர்கள் என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது.
“”workman” means any person (including an apprentice) employed in any industry to do any manual, unskilled, skilled, technical, operational, clerical or supervisory work for hire or reward,”
ஐ.டி. துறையினர், தொழில்நுட்பம் சார்ந்த தொழிலாளர்கள்தானே?

ஊழியர்களிடம் பிடுங்கியதை திருப்பித் தருவதையே ‘100% போனஸ்’ என்று கூறுதல், பழைய கணக்கைக் காட்டி நடப்பிலுள்ள வேலைநீக்கத்தை மூடிமறைத்தல், சக்கையாகப் பிழிந்து வேலையை உறிந்துவிட்டு தொழில்நுட்ப ஊழியர்களை ‘தொழிலாளர்’ இல்லை’ என்று வாதிடுதல் எனப் பலப்பல நரித்தனங்களை செய்து எல்லோரையும் ஏய்க்கப் பார்க்கிறது, டி.சி.எஸ் கார்ப்பரேட்.
டி.சி.எஸ். மட்டும் விதிவிலக்கானது, மற்ற நிறுவனங்கள் யோக்கியமானவை என்று கருதிவிட முடியாது. ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்துமே, இரவு பகலாக தங்கள் உழைப்பைத் தந்து லாபத்தை உருவாக்கித் தந்த ஊழியர்களை தங்களது லாபவெறிக்காக கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.
சென்ற வாரத்தில் பெங்களூருவில் ஆல்டிசோர்ஸ் எனும் ஐ.டி.நிறுவனம் 300 பேரை ஒரே நாளில் வேலைநீக்கம் செய்துள்ளது. சிஸ்கோவிலும் வேலைநீக்கம் ஆரம்பமாகியுள்ளது. இனி அடுத்தடுத்து இவர்களின் தாக்குதல்களை சந்திக்கும் நிலையில் நாம் உள்ளோம். கார்ப்பரேட்களின் இந்தப் பயங்கரவாதம் கடலடியில் வெளித்தெரியாமல் இருக்கும் பனிப்பாறை என்றால் டி.சி.எஸ்., இந்த பயங்கரவாதத்தை வெளிக்காட்டி இருக்கும் பனிப்பாறை நுனி.
எனவே அனைத்து ஐ.டி. கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்ந்த, வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும், அடுத்து நம்மை எப்போது நீக்குவார்களோ என்ற அச்சத்தில் இருப்பவர்களும் இந்தத் தந்திரங்களுக்குப் பலியாகாமல் கார்ப்பரேட் லாபவெறிக்காக ஊழியர்கள் பலியிடப்படுவதைத் தடுத்திட சங்கமாகத் திரண்டு உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டுமென்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐடி ஊழியர் பிரிவு கேட்டுக் கொள்கிறது.
கற்பகவிநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி -ஐடி ஊழியர்கள் பிரிவு
பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com