Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமொழிப்போர் தியாகிகள் நாள் - மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு

மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு

-

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் தொகுப்பின் முதல் பகுதி.

1. சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்

னவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள காமராஜர் காலனி 6-வது தெருவில் உழைக்கும் மக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
கோடம்பாக்கம் காமராஜர் நகரில் தெருமுனைக் கூட்டம்

முன்னதாக, சனவரி 10-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை என ஒட்டு மொத்த சென்னையையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தில் சுழல வைத்தார்கள்.

1938, 1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித்திணிப்புக்கு எதிரான மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்களின் சிந்தனை என்பது இயல்பானதாக இருந்தது, இயற்கையாக உருவான புயலைப்போல.

ஆனால் இன்றோ, ஒரு புறம்  ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் மாணவர்கள் இளைஞர்களை சின்னாபின்னமாக்கி அனைத்து உணர்வுகளையும் பிடுங்கி தன்மானமற்ற சூடு சொரணையற்றவர்களாக மாற்றி எந்நேரமும் பாலியல், நுகர்வு வக்கிர சிந்தனையிலேயேவைத்து இருக்கிறது.

இன்னொரு புறம், மோடிமஸ்தான் சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டுத்திணிப்பை கலர்கலராக சீன் காட்டி நடைமுறைப்படுத்தும் முறையில் பலர் குழம்பிப்போயிருக்கின்றனர்.

இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை நினைவு கூர்ந்து ஆரியப் பார்ப்பன, பண்பாட்டுத்திணிப்புக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்ற அறைகூவல் விடுத்து 15 நாட்கள் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை ஒவ்வொரு நாளும் பம்பரமாக சுழன்று இந்த இயக்கத்துக்கு மக்களின் ஆதரவைப் பெற்றது என்பது உண்மையில் செயற்கையாக ஒரு புயலை உருவாக்குவது போன்றதுதான்.

இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது பல பிரிவினர்களைக் கண்டோம்.

  • இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்றாலே என்னவென்று அறியாத ஒரு தலைமுறை,
  • இந்தித்திணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு அது சரி என்று கூறும் ஒரு பிரிவு,
  • இந்தித்திணிப்பு போராட்டமே தவறு அதனால்தான் நமக்கு வேலை கிடைக்கவில்லை, தமிழ்நாடு முன்னேறவில்லை என்று கூறும் ஒரு பிரிவு ,
  • நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் நைட் 11 மணிக்கு நீங்க என்னதான் கத்தினாலும் எவனுக்கும் சொரணை இல்லை என்று ஆதங்கப்படும் ஒரு பிரிவு,
  • இந்த இயக்கத்துக்கே மொத்தமாக எதிராக இருக்கும் பார்ப்பனிய மேட்டுக்குடிப் பிரிவு.

அத்தனை பிரிவினரையும் சமாளித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்த இயக்கத்தை எடுத்துச் செல்லவேண்டும், மீண்டும் ஒரு மொழிப்போருக்கான தேவையை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முன் நின்ற ஒரே இலக்கு.

பிரச்சாரத்திற்கு சென்ற யாரும் சொல்வன்மையில் மிக்கவர் இல்லை, படிப்பிற் சிறந்த அறிவாளிகள் இல்லை, பார்ப்பன படையெடுப்பை எதிர்த்த பிரச்சாரத்துக்காக கல்லூரிக்கும், பள்ளிக்கும் மட்டம் போட்டிருந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள்தான் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

DSC00676மக்களின் சில சந்தேகங்களுக்கும் நாங்கள் பதில் அளித்தோம். அத்தனைப் பிரிவினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தோம். சமாதானமாக சில இடங்களில், சண்டையாக சில இடங்களில். எங்களின் பல சந்தேகங்களுக்கு உழைக்கும் மக்கள் பதில் அளித்தார்கள். முதல் நாள் நமது பிரச்சாரத்தை கவனிக்காதவர்கள் கூட தொடர்ச்சியான பிரச்சாரத்தில் தமது கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள்.

ரயிலில் வயதான ஒருவர் கூறினார் “நான் மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையை இழந்தவன், அதற்காக கவலைப்படவில்லை, பெருமைப்படுகின்றேன்”. “தாய்த்தமிழ் மொழிக்காக இவரைப்போன்ற எத்தனை ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பார்கள்” என்ற சிந்தனை எங்களை உந்தித்தள்ளியது.

மக்களிடம் கிடைத்த அனுபவங்களை மாணவர்களிடம் கொண்டு சென்றோம். மக்களின் பதில்களைக் கொண்டு மாணவர்கள் மத்தியில் நிலவும் தடைகளை உடைக்க உளியானோம். மாணவர்கள் என்றாலே ரவுடிகள், பொறுக்கிகள், சீரழிந்தவர்கள் என்ற கருத்து இருக்கும் போது அதை உடைப்பதுதானே நமது வேலை. உலகை வியாக்கியானம் செய்வது மட்டுமல்ல; மாற்றியமைப்பதுதானே நமது வேலை.

வாரி அணைத்துக் கொண்டார்கள் மாணவர்கள். அவர்களில் பலருக்கும் இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த வரலாற்றை சொன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் இன்னமும் மாறவில்லை.

கல்லூரிகளில் பற்றிய போராட்ட உணர்வு

ஒரு கல்லூரியில் பிரசுரங்களை வாங்காமல் சென்ற மாணவிகளைப் பார்த்து பெண் தோழர் ஒருவர் கூறினார்

“உங்க வாழ்க்கையே அழியப்போகுது, எல்லாம் எங்கப் போறீங்க?”.

“என்னது எங்க வாழ்க்கை அழியுதா?” என்று கேட்டவர்களிடம் இந்தித்திணிப்பையும் சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை விளக்கியவுடன் “பத்து பிரசுரம் கொடுங்க நான் காலேஜில கொடுக்கிறேன் ” என்று வாங்கிச் சென்றார்கள்.

DSC00709ஓடிவந்த போலீசு “ஏம்மா நீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரா போன மாசம் பிரச்சாரம் செஞ்ச, இப்ப என்னம்மா?” என்று கேட்டு பிரசுரத்தை வாங்கினார். “இங்கே பிரசுரம் கொடுக்கக்கூடாது” என்று உதார் விட்டு அது வேலைக்கு ஆகாமல் சென்று விட்டார்.

பின்னர் கல்லூரி முதல்வர், பேராசிரியர் படை வந்து மிரட்டியதும் வேலைக்கு ஆகவில்லை.

பின்னர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் “அக்கா, இங்க நோட்டீஸ் தராதீங்க, இன்னைக்கு கல்ச்சுரல் புரோகிராம், எல்லா பொண்ணுங்களும் ஸ்டேஜை கவனிக்காம உங்க நோட்டீசைத்தான் படிக்குறாங்க, பிரின்ஸிபல் எங்களை திட்டறாங்க” என்றார்கள்.

அதற்கு பதில் அளித்தார் தோழர் “அதுக்கு என்னம்மா பண்ணறது, மாணவிகளுக்கு எது தேவையோ அதைப் பண்ணறாங்க. அவங்களுக்கு இப்போ கல்ச்சுரல் பிடிக்கல, தமிழ் கலாச்சாரத்தை காக்கிற இந்தப்போராட்டம்தான் பிடிக்குது”.

பல கல்லூரிகளிலும் மாணவர்கள், “இதனை இப்படியே விடக்கூடாது. எல்லா கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டம் செய்ய வேண்டும், நாங்கள் கண்டிப்பாக வருவோம், உங்கள் அமைப்பில் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்

பச்சையப்பன் கல்லூரி, ராணி மேரிக்கல்லூரி, நந்தனம், சென்னைப்பல்கலைக்கழகம், பாரதி கலைக்கல்லூரி, தியாகராயா கல்லூரி என சென்னையில் உள்ள அனைத்துக்கல்லூரிகளிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரச்சார மேகம் பரவியது.

DSC00746

அம்பேத்கர் கல்லூரி மாணவர்களோ இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தினை விளக்கும் “வீரம் செறிந்த மொழிப்போர்” நாடகத்தை பல முறை நடத்தச் சொன்னார்கள்.

மாநிலக்கல்லூரியில் நாடகத்தைக் கண்டு மிரண்ட போலீசு தடுத்து நிறுத்தியது. சுற்றியிருந்த மாணவர்கள் பிரசுரங்களைக் கேட்டுவாங்கினார்கள். போலீசை பொருட்டாக மதிக்காமல் நம்மிடம் விவாதித்தார்கள். தாய்த்தமிழ் உணர்வுக்கு முன் போலீசின் கூலி உணர்வு எம்மாத்திரம்?.

பச்சையப்பன் கல்லூரி விடுதி அறை எண் 80ல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

50 ஆண்டுகளுக்கு முன் 1965-ம் ஆண்டு சனவரி 22-ம் தேதி இந்தித்திணிப்புக்கு எதிரான மாபெரும் எழுச்சியை மீண்டும் தோற்றுவிப்பதற்காக பச்சையப்பன் கல்லூரியில் விடுதி அறை எண் 80-ல் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் கூடினார்கள்.

DSC00760அந்த நாளை நினைவு கூரும் விதமாக, சனவரி 22 அன்று கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி அக்கல்லூரியின் புமாஇமு செயலர் தோழர். செல்வா தலைமையில், அந்த அறைக்குச் சென்று மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் மொழிப்போர் தியாகிகளின் வரலாறும் இன்று மொழிப்போரின் அவசியமும் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், “இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த கல்லூரியில் படிப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தற்போது பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் “எங்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களைக்கொண்டதாக உங்கள் பிரசுரம் இருக்கிறது. உங்களால் இக்கல்லூரிக்கே பெருமை” என்றார்.

DSC00843

காமராஜர் காலனியில் சிவலிங்கம் வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை

தெருமுனைக்கூட்டம் நடக்க உள்ள கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சுற்றியுள்ள மக்களிடம் இப்பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். இப்பகுதியில் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க போலீசு 23-ம் தேதிவரை இழுத்தடித்து கூட்டமே நடத்த முடியாத அளவுக்கு கண்டிசன்களைப் போட்டு இருந்தது.

ஒலி, ஒளி அமைக்க பலர் முன்வரவில்லை. அவர்கள் கூறிய காரணம் இதுதான் “அந்தப் பகுதியில் எல்லாம் பொறுக்கிப் பசங்க , எந்தக்கட்சி மீட்டிங் போட்டாலும் லைட், சேர்களை உடைப்பானுங்க. நாங்க வர முடியாது, 5000 ரூபாய் டெபாசிட் கட்டுங்க” என்றார்கள்.

அந்தப் பகுதியைப் பற்றி அப்படி ஒரு கருத்து இருக்கிறது என்றால் அதை மாற்றியே ஆக வேண்டும் என்று 20 தோழர்களோடு 24-ம் தேதி காலை 9 மணிக்கு களம் புகுந்தோம் .

“இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தோட பொன் விழா ஆண்டினை ஒட்டி…………..” என்று நாம் பேசும் போதே பலர் “இங்க கூட சிவலிங்கம்னு ஒருத்தரு நெருப்பு வச்சுகிட்டாரே ” என்றார்கள்.

“ங்கோத்தா, மோடி வந்து நம்ம தமிழ அழிச்சுடுவானா, நாங்க உடமாட்டோம்பா”,

“ஏற்கனவே ஆதார் கார்டு, சிலிண்டருக்கு அக்கவுண்ட்ன்னு அலைய வுடறான், அந்த பாரம் எல்லாம் தமிழ்ல இருந்தா நாங்க பண்ணிடுவோம். இங்கிலீசுல இருக்கும் போதே நாயா அலையுறோம். எல்லாத்தையும் இந்தி ஆக்குனா நாங்க எங்க போவோம். இவனுங்களுக்கு டின்னு கட்டணும்”

ஒரு இடத்தில் வயதான அம்மாவிடம் “ என்னம்மா இப்படி எங்களை கைவிட்டுட்டியே, அன்னைக்கு நீ போராடித்தான தமிழ காப்பாத்துன, இன்னைக்கு மறுபடியும் இந்தியை திணிக்கிறானே நீ கேக்க மாட்டியா” என்று தோழரொருவர் கேட்டவுடன் “ யார் சொன்னது, தமிழுக்கு ஒரு பிரச்சினைன்னா அன்னைக்கும் வந்தேன், இன்னைக்கும் வருவேன் ” என்றார் அவர்.

மதியம் உணவு அருந்திக்கொண்டு இருந்த போது சாலை ஓரத்தில், வயதான ஒருவர் சாலையில் நின்று கொண்டு அழைத்தார். அவரிடம் சென்று பிரசுரத்தை கொடுத்து விளக்கினோம்.

“நான் திருநெல்வேலிக்காரன், செயிண்ட் சேவியர் காலேஜில் படிக்கும் போது போராட்டத்தில் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர் மண்டையை உடைச்சேன், ஜெயிலுக்குப்போனேன். வெளியே வந்து இன்னொரு போராட்டத்துல இன்ஸ்பெக்டருக்கு நெருப்பே வச்சேன். அப்பவும் ஜெயிலுக்குப் போனேன். அப்புறம் இங்க வந்துட்டேன் . இந்தித் திணிப்பு போராட்டம்ங்குற வார்த்தைய பார்த்துட்டுதான் கூப்பிட்டேன், இன்னைக்கு உங்களைப்பார்க்கும் போதே பெருமையா இருக்கு”.

எங்கள் கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு பெரிய வீரத்தை, இழப்பை, அர்ப்பணிப்பை ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தாமல் நம்மால் எப்படி இந்த ஆரிய பார்ப்பன – இந்திப் பண்பாட்டுத்திணிப்பை விரட்டியடிக்க முடியும்?

அப்பகுதி மக்கள் அனைவரும் தமிழை, தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப்பிடித்தார்கள். மாலை 6 மணிக்கு, உடலில் சோர்வு இருந்தாலும் உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டு எழுந்தது.

கோடம்பாக்கத்தில் மையங் கொண்ட புயல்

25-ம் தேதி கோடம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளான எம்.எம்.டி.ஏ, எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, புலியூர், புதூர் உள்ளிட்டப் பகுதிகளில் தோழர்கள் இப்பிரச்சாரத்தைக் கொண்டு சென்றார்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவளித்தார்கள். தாங்களும் கூட்டத்திற்கு வருவதாகவும் பலர் இப்படிப்பட்ட அமைப்பில் எங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்25-ம் தேதி காலை முதலே காமராஜர் காலனி களைகட்டியது. தோழர்கள் கொடிகளை கட்டிக்கொண்டும் தட்டிகளை கட்டிக்கொண்டும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டும் இருந்தனர். சொந்த ஊரைப்போல எல்லோரின் வீடுகளிலும் சென்று உதவிகளைப் பெற்றுக்கொண்டு இருந்தனர். ஏற்கனவே 24-ம் தேதி இப்பகுதியில் நாம் பிரச்சாரம் செய்த போது சந்தித்திருந்த மக்கள் “ நீங்க தானா, சந்தோசம்பா” என்றார்கள்.

அந்தத் தெரு மிகவும் அடைசல் மிகுந்தது, அங்கே கார் மெக்கானிக் கடை ஒன்று இருந்தது. அதன் உரிமையாளர் காலையிலே தானே முன் வந்து தனது பழைய வாகனங்களை அப்புறப்படுத்தினார். அவரிடம் பிரசுரம் கொடுக்கச் சென்ற போது “நீங்க திருநெல்வேலிக்காரர் ஒருத்தரை பார்த்தீங்களா? அவர் நோட்டிசை நேத்து வந்து கொடுத்துட்டாருப்பா ”

நிகழ்ச்சி சரியாக மாலை 6.30 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கியது. மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி தமிழ்த்தேசிய இனத்தின் கடவுள் மறுப்பு, ஆன்மீகமறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 10 நிமிடங்கள் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமை உரையாற்றிய மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் சென்னைக்கிளையின் செயற்குழு உறுப்பினரான தோழர்.வாசுதேவன், தமிழ் நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டில் நடைபெறும் இந்த மொழிப்போர் தியாகிகள் நாள் கூட்டத்தின் அவசியத்தை விளக்கியும் இந்தித்திணிப்புக்கு எதிராக தன்னையே எரித்து குடியரசு தினக் கொண்டாட்டத்தை நிறுத்திய சிவலிங்கத்தினை வீரமிக்க தியாகத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்தில்லை உனக்கு சொந்தமா” என்ற பார்ப்பனிய பண்பாட்டின் இழிவை வீழ்த்த வேண்டியதை வலியுறுத்தும் வகையில் பாடலை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் பாடினார்கள்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்அடுத்து மக்கள் முதல்வரின் கடந்த கால யோக்கியதையை புமாஇமு இளந்தோழர்கள் “பேயொன்று நாடாள்வதா” என்ற பாடலில் காற்றில் பறக்கவிட ஓடிவந்தது போலீசு.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்

“கலைநிகழ்ச்சியெல்லாம் நடத்தக்கூடாது” என்று மிரட்டிக்கொண்டு இருந்தது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
கலை நிகழ்ச்சியெல்லா்ம நடத்தக் கூடாது என்று மிரட்டும் போலீசு.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மொழிப்போரினை கண் முன்னே கொண்டு வந்து இன்றைய மோடி அரசின் ஆரிய- பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் சென்னைப்பகுதி புமாஇமு தோழர்கள் “ வீரஞ்செறிந்த மொழிப்போர்” என்ற நாடகத்தை நடத்தி மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறப்புரையாற்றிய பு.மா.இ.முவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர். கணேசன் 1938 மற்றும் 1965-ல் நடைபெற்ற மொழிப்போரில் பங்கு கொண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரமிக்க உணர்வுகளை பதிவு செய்து, அன்றைய நாட்களில் பார்ப்பன சமஸ்கிருத பண்பாட்டை ராஜாஜி மற்றும் பக்தவச்சலம் மூலமாக நிறைவேற்ற முயன்றதையும் விளக்கி, “ஒரு மொழிக்காக 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்றால் அது அது தாய்த்தமிழுக்காக மட்டும்தான். இதை வெறும் மொழிக்கான போராட்டமாக தியாகிகள் பார்க்கவில்லை. தமிழ்ப் பண்பாட்டிற்கானப் போராட்டமாக கண்டார்கள்” என்று பதியவைத்தார்.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல்
தோழர் கணேசன் உரை

“இன்றைய நாளில் அமெரிக்காவின் அடிமையும் தெற்காசிய பிராந்திய பேரரசனுமான மோடி வெளி நாடுகளுக்கு சென்று கீதையை பரிசளிப்பதும், இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் கூறுவதும், ஆசிரியர் நாளை குரு உத்சவ் என்று மாற்றியதும் மத்தியப்பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கியதும் இந்தியை அலுவலக மொழியாக அறிவித்ததும் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழகம் தயாராக இருப்பதையே காட்டுகிறது. இந்த மொழிப்போர் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை, தமிழே நிர்வாக மொழி, தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி என்பதை நோக்கி இருக்க வேண்டும் என்றால் நம்முடைய போராட்டங்களும் 1965-ல் நடைபெற்ற மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தினை போன்றதாக இருக்க வேண்டும்” என்று எழுச்சியுரையாற்றினார்.

நிறைவாக புமாஇமுவின் சென்னை மாநகர செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜா, இறுதி நேரத்தில் ஒலிஒளிக்கு ஏற்பாடு செய்த ஒருவர் வராமல் போக இந்தித்திணிப்புக்கு எதிரான கூட்டம் என்று சொன்னவுடனேயே பணத்தைப்பற்றி பிறகு பேசலாம் ஒலி ஒளி அமைத்துக்கொடுத்த உரிமையாளர் மோசஸ். அவர்களுக்கும் கூட்ட செலவை ஈடுகட்ட துண்டேதி வசூல் செய்த தோழர்களுக்கு நிதியளித்த மக்களுக்கும் இந்தித்திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று உத்வேகத்தை அளித்த கோடம்பாக்கம் பகுதி காமராஜர் காலனி பகுதி மக்களுக்கும் நன்றியுரை கூறினார்.

students-against-hindi-imposition-chennai-34எழுச்சிமிக்க இந்தக்கூட்டத்தில் காமராஜர் காலனி மக்கள் நூற்றுக்கணக்கில் கொண்டனர். கூட்டம் முடிவதற்கு சற்று முன்பு வரை பகுதி மக்கள் வந்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டமும் சரி, 15 நாட்கள் இப்பிரச்சார இயக்கமாகட்டும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது ஏராளம். ”இந்தி எதிர்ப்பு என்பது அன்றல்ல, என்றும் நீறு பூத்த நெருப்பே” என்பதை நேரில் உணர்ந்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்று முதல் இன்று வரை உழைக்கும் மக்களே தமிழுக்காக போராடியிருக்கிறார்கள், தன்னுயிரை மாய்த்து இருக்கிறார்கள், அவர்கள் கண்டிப்பாக தமிழை தமிழ்ப் பண்பாட்டை காத்து நிற்பார்கள் களத்தில் என்ற நம்பிக்கை புரட்சிகர அமைப்பு என்ற வகையில் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையை சுழன்றடித்த இந்தி எதிர்ப்புப் புயல் விரைவில் சூறாவளியாக மாறும்; உழைக்கும் மக்களுடன் இணைந்து நாங்கள் மாற்றுவோம்.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை
தொடர்புக்கு : 9445112675

(பிற பகுதிகளைப் பற்றிய செய்திகள் தொடரும்)