Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா ?

மணல் கொள்ளை : கொல்லப்படுவது நதிகள் மட்டும்தானா ?

-

ற்று மணற்கொள்ளை தமிழகத்தின் நதிகள் அனைத்தையும் அடியோடு நாசப்படுத்தி வருகிறது.  இக்கொள்ளையின் பண மதிப்பு ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் வேறு பாதிப்புகள் – நிலத்தடி நீர் மட்டம் சரிவது, குடிநீர்த் தட்டுப்பாடு, விவசாய நிலங்கள் தரிசாவது போன்றவை ஒரு பேரழிவை நோக்கித் தமிழகத்தைத் தள்ளிவருகின்றன.  இம்மணற்கொள்ளையைத்  தடுத்து,  தமிழக நதிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மணற்கொள்ளை மாஃபியா கும்பல்கள் இலஞ்சத்தின் மூலம் சீரழித்து வேரறுத்துவிடுகின்றன. அல்லது, அச்சுறுத்தல், கொலை, வழக்கு, சிறை எனக் கொடூரமாக ஒடுக்கித் தோற்கடித்துவிடுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் கார்மாங்குடி மணல் குவாரியை எதிர்த்து, ஆசைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பணியாத மக்கள் திரள் போராட்டம் வெடித்திருக்கிறது.

பேராசிரியர் எம்.அருணாசலம்.
தாமிரபரணியில் நடந்த மணற்கொள்ளையால் நேர்ந்த பாரதூரமான விளைவுகளை நீதிமன்றத்திடம் அறிக்கையாக அளித்த பேராசிரியர் எம்.அருணாசலம்.

விருத்தாசலம் நகருக்கு அருகேயுள்ள கார்மாங்குடி கிராமத்தையொட்டி ஓடும் வெள்ளாறில் அமைந்துள்ள மணல் குவாரியை மூடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு நடத்திவரும் தொடர் போராட்டங்களின் விளைவாக அம்மணல் குவாரியைத் தற்காலிகமாக மூடியிருக்கிறது, தமிழக அரசு. இப்போராட்டம் தொடர்பாக அக்கிராம மக்களையும் அப்போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களையும் சந்தித்த நாம், இது தொடர்பாகவும் தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளை தொடர்பாகவும் மேலும் விவரங்களைச் சேகரிக்க முடிவு செய்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறச் சூழல் அறிவியல் புலத்தின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் அருணாசலம் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடைசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட  கமிட்டியில் பேராசிரியர் அருணாசலமும் ஒருவர்.  தாமிரபரணியில் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும், அதனால் ஏற்பட்டிருந்த பாதிப்புகளையும் அறிக்கையாக அளித்த பேராசிரியர் அருணாசலம், தாமிரபரணியில் மணல் அள்ளுவதைத் தடைசெய்யும்படி நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தார்.  இக்கமிட்டி அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தாமிரபரணியில் ஐந்தாண்டுகள் மணல் அள்ளுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது, உயர் நீதிமன்றம்.

கார்மாங்குடி மணல் குவாரியில் நாம் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, “ஒரு ஆறு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இதுவொரு உதாரணம்” எனக் கூறினார், அவர்.  சத்தியமான வார்த்தைகள் இவை.

கார்மாங்குடி மணல் குவாரியில் கால் வைத்தவுடனேயே ஏதோவொரு வேற்று கிரகத்தில் இறங்கிவிட்ட உணர்வுதான் எமக்கும் மேலிட்டது. ஒருபுறம் 30 அடி ஆழமுள்ள கிடுகிடு பள்ளம்; இன்னொருபுறம் இரண்டு ஆள் மட்டத்திற்கு அரைவட்ட வடிவில் முக்கால் கி.மீ. தொலைவுக்குச் செல்லும் கணவாய் போன்ற பள்ளம். கட்டாந்தரையைத் தொடும் அளவிற்கு மணலை வாரி எடுத்துச் சென்றதால் விட்டுவிட்டு உருவாகியிருக்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள்; கழிவு மணலைக் கொட்டியதால் உருவாகியிருக்கும் திட்டுகள்; மணலை அள்ளிச் செல்வதற்காக ஆற்றினுள் குறுக்கும் நெடுக்குமாகப் போடப்பட்டிருந்த சாலைகள் என அந்த ஆறு சிதைந்து சின்னாபின்னாமாகியிருந்தது. பேராசிரியர் அருணாசலம் சொன்ன வார்த்தைகள் வெள்ளாறுக்கு மட்டுமல்ல, மணல் கொள்ளை நடைபெறும் தமிழகத்தின் ஆற்றுப் படுகைகள் அனைத்திற்கும் பொருந்திப் போகும்.

வெள்ளாறில் இந்த ஆண்டின் (2014) தொடக்கத்தில்தான் மணல் அள்ளுவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதை நாம் சுட்டிக்காட்டியவுடனேயே, ஓராண்டுக்குள்ளாகவே அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட பத்துமடங்கு மணல் கொள்ளை நடந்திருப்பதை இப்புகைப்படங்கள் காட்டுவதாகச் சொன்ன பேராசிரியர் அருணாசலம், இம்மணற்கொள்ளையால் வெள்ளாறில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இயற்கை தானாகவே சீர்செய்து கொள்வதற்கு, அதாவது கொள்ளையடிக்கப்பட்ட மணலை இயற்கை உற்பத்தி செய்வதற்கு வெள்ளாறில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு வெள்ளம் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  இயற்கையின் ஐம்பது ஆண்டு கால உற்பத்திப் பொருளை எவ்வித அறநெறிகளுக்கும் கட்டுப்படாமல் ஒரே ஆண்டில் கொள்ளையடித்திருப்பதுதான் உண்மையிலேயே பயங்கரவாதம்.

ஆற்றின் உயிரோட்டம் குறித்து . . .

“ஆற்றில் ஓடிவரும் நீரை மணல்தான் பிடித்து வைக்கிறது.  கட்டாந்தரை தெரியும் அளவிற்கு, களிமண் வரும் வரையிலும் மணல் சுரண்டப்பட்டுவிட்டால், அந்த ஆற்றலை ஆறு இழந்துவிடுகிறது.  அதன் பிறகு, ஆறும் நமது வீட்டு குழாயும் ஏறத்தாழ ஒன்றுதான். வீட்டுக் குழாய்கள் திறந்தவுடன் தண்ணீரைச் சடசடவெனக் கொட்டித் தீர்ப்பது போல, ஓடிவரும் நீரை விரைவாகக் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிடும் உயிரற்ற கடத்தியாக ஆறு மாறிவிடும். இப்படி கடலை நோக்கி வேகமாக ஓடிவிடும் நீரை, கோபமான தண்ணீர் (angry water) எனக் குறிப்பிடுவோம்” என்கிறார் பேராசிரியர் அருணாசலம்.

வெள்ளாற்றுப் படுகை
கார்மாங்குடி மணல் குவாரியில் நடந்துள்ள மணற்கொள்ளையின் விளைவாக கட்டாந்தரையாகி, குட்டையைப் போல மாறிப் போன வெள்ளாற்றுப் படுகை மற்றும் வெட்டி்க கூறு போடப்பட்டுள்ள ஆற்றங்கரை.

“நீரோட்டம் இருப்பது மட்டுமே ஆற்றின் அளவுகோல் இல்லை.  நீரோட்டத்தோடு, ஆற்றின் கரைகள், அக்கரைகளையொட்டி வளர்ந்திருக்கும் தாவர வகைகள், ஆற்றினுள் வளர்ந்து நிற்கும் புல் வகைகள், ஆற்று நீரில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்துவரும் மைக்ரோப்ஸ் (microbes) எனப்படும் நுண்ணுயிரிகள், அவற்றை உண்டு வாழும் மீன்கள் என இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு நதியை உயிரோட்டமிக்கதாக” வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆற்று மணலை அடியோடு அள்ளுவதால் மட்டும்தான் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றில்லை. மணலை அள்ளும்பொழுது ஆற்றின் கரைகளுக்குச் சேதம் ஏற்பட்டு, அவை பலவீனப்படும்பொழுது, ஆற்றின் கொள்ளளவு குறைந்து அதன் காரணமாகவும் மணல் அள்ளும் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும்” என எச்சரிக்கிறார்.

“ஆறு உற்பத்தியாகும் இடம் தொடங்கி, அது சமவெளிப் பகுதியில் பாய்ந்து கடலில் கலக்கும் வரையிலும் அதன் இரு கரைகளிலும் வளர்ந்து நிற்கும் தாவர வகைகள் ஆற்றின் நீரோட்டத்திற்கு அவசியமானவை.  அத்தாவரங்கள் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் தமது தேவைக்கும் அதிகமான நீரை உறிஞ்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அரணாக விளங்குகின்றன.  கோடைக் காலங்களில் தம்மிடமிருந்து நீரை வெளியேற்றுவதன் மூலம் ஆறு வறண்டு போய்விடாமல் காப்பாற்றுகின்றன.

ஆற்றுப் படுகையையொட்டியுள்ள மண்ணின் தன்மைக்கேற்ப இயற்கையாக வளரும் தாவர இனங்களுக்கு மட்டும்தான் ஆற்றின் நீரோட்டத்திற்கு உதவும் இந்த ஆற்றல் உண்டு. இந்த இயற்கை தாவரங்கள் அழிக்கப்பட்டால் அல்லது நதிக்கு அந்நியமான தாவர இனங்கள் அதன் கரைகளில் வளர்க்கப்பட்டால் இந்த தொடர்சங்கிலி விளைவுகள் அற்றுப் போய்விடும். மணிமுத்தாறு பாய்ந்துவரும் பகுதியில் அதற்கு அந்நியமான தேயிலை எஸ்டேட்டுகள் உருவாக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதனின் நீரோட்டமே பாதிக்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பலவீனப்படுத்தப்பட்ட ஆற்றங்கரை
மேலே : மணல் வாரப்பட்டதால் அடிப்பகுதி பலவீனமடைந்து காணப்படும் கரை. கீழே : இயற்கையான முறையில் அமைந்த ஆற்றங்கரை.

இந்த மண்ணுக்கே உரிய தேக்கு மரங்களை எடுத்துக் கொண்டால், அவை தமது தேவைக்கும் அதிகமான நீரை இலைகளின் வழியாக ஆவியாக வெளியேற்றுவதன் மூலம், காடுகளின் தட்பவெப்பத்தை சமநிலைப்படுத்துவதோடு, மழைப் பொழிவுக்கும் உதவுகின்றன. கோடைக் காலங்களில் தமது நீர்த் தேவையைக் குறைத்துக் கொள்ள இலைகளை உதிர்த்து விடுகின்றன. அதேசமயம், இந்த மண்ணுக்கு அந்நியமான யூகலிப்டஸ் மரங்கள் தாம் உறிஞ்சும் நீரை ஆவியாக வெளியேற்றுவதேயில்லை. அதனால்தான் யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீர்க் கொள்ளையனாக மக்களால் அடையாளம் காட்டப்படுகின்றன” என இந்த உயிர்ச் சங்கிலியை அடுக்கடுக்காக அவர் விளக்கியபொழுது, ஆற்றையும் தாவரங்களையும் குறித்த நமது அறியாமையை எண்ணி வெட்கம் கொள்ள வேண்டியிருந்தது.

வெள்ளாற்றின் உயிர் அறுக்கப்பட்டால். . .

ஆற்றின் இந்த உயிரோட்டத்தையும் உயிர்ச் சங்கிலித் தொடரையும் பாதுகாக்கும் நோக்கில்தான்,

ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம் வரை மட்டுமே தோண்டி மணலை அள்ள வேண்டும்;

மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர, இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், கொடிக்கம்பங்களும் நட்டுப் பிரித்துக் காட்ட வேண்டும்.

மணலை அள்ளும்பொழுது ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.

ஆற்றின் இரு கரைகளிலும், கரைகளையொட்டியுள்ள பகுதிகளிலும் காணப்படும் தாவரங்களைச் சேதப்படுத்தக் கூடாது. கழிவு மணலை ஆற்றில் கொட்டக்கூடாது.

ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.

மணலை அள்ளும்பொழுது நீர் ஊறினால், அந்தப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.

மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது;

மணல் அள்ளும் போக்கில் ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை ஏற்படுத்தக் கூடாது

என்றவாறு பல்வேறு சட்டங்களும், உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்களும் இருப்பதை எடுத்துக்கூறிய பேராசிரியர் அருணாசலம், இவை ஒவ்வொன்றும் கார்மாங்குடி மணல் குவாரியில் மீறப்பட்டிருப்பதைப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டினார்.

வெள்ளாறு பள்ளமும் மேடுமாகக் கூறு போடப்பட்டிருப்பது, அந்த ஆற்றின் போக்கையே – மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறு, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், கார்மாங்குடி மணல் குவாரியிலிருந்து கிட்டதட்ட 60 கி.மீ. தொலைவில் கடல் அமைந்துள்ளதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்பொழுது கடல் நீர் உள்ளே புகுந்துவிடும் அபாயமுள்ளது. ஆற்றுப் படுகையின் கட்டாந்தரை தெரியும் அளவிற்கு மணல் கொள்ளையிடப்பட்டு, கரைகள் பலவீனப்படுத்தப்பட்டு, கரைகளையொட்டியுள்ள தாவர இனங்கள் அழிக்கப்பட்டு ஆற்றின் நீர்ப் பிடிப்பு நிரந்தரமாகப் பாதிக்கப்படும்பொழுது, மணல் குவாரி அமைந்துள்ள ஆற்றுப்படுகையின் 30 கி.மீ. சுற்றளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிடும்.

கார்மாங்குடியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நெல்லும் கரும்பும் சாகுபடி செய்யப்படுகிறது.  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கடல் நீர் உள்ளே புகுந்தால் இந்தச் சாகுபடி படிப்படியாக அழிவைச் சந்திக்க நேரிடும்.  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பூமிக்கடியில் வெற்றிடம் ஏற்படும்பொழுது, இக்கிராமப்புறங்களில் உள்ள கான்கிரீட் கட்டிடங்கள் பூமிக்குள் சிறுகச்சிறுக இறங்கும் அபாயமுண்டு என்றெல்லாம் மணல் கொள்ளையின் பாதிப்புகளைப் பட்டியலிட்ட பேராசிரியர் அருணாசலம், “இந்தப் பாதிப்புகள் உடனடியாக நேர்ந்துவிடாது; ஆனால், காலப்போக்கில் இப்பகுதியைச் சேர்ந்த எதிர்கால சந்ததியினர் இத்தகைய அபாயங்களைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.

தமிழக நதிகளின் சிறப்பு, மணல் கொள்ளைக்கா?

ஆற்று மணல் குவியல்
ஆற்றின் போக்கையும், மண் குவியும் இடத்தையும் காட்டும் வரைபடம்.

“குன்று நீரோட்டம், சமவெளி நீரோட்டம், கழிமுகப் பகுதி நீரோட்டம் என ஆறுகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும்.  தமிழக ஆறுகள் அனைத்தும் இந்த மூன்று அம்சங்களையும் கச்சிதமாகக் கொண்டிருப்பதுதான் அவற்றின் தனிச்சிறப்பு. குறிப்பாக, தமிழகத்தின் ஆறுகள் சமவெளிப் பகுதியில் அதிக தொலைவுக்கு ஓடிவருவதன் காரணமாகவே, இங்கு மணல் வளமும், மண் வளமும் செழித்துக் காணப்படுகின்றன” என விளக்கிய அவர், கேரளாவில் 40-க்கும் மேற்பட்ட நதிகள் ஓடினாலும், அவை தமிழக ஆறுகளைப் போல சமவெளிப் பகுதியில் நெடுந்தொலைவு ஓடுவதில்லை. இதன் காரணமாகவே கேரள ஆறுகளில் பாயும் தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதோடு, அவற்றிலிருந்து மண் எடுப்பதும் எளிதானதாகவும், மலிவானதாகவும் இருக்க சாத்தியமற்றுப் போவிட்டது” என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்திற்கு இயற்கை தந்திருக்கும் இந்தக் கொடை வரைமுறையின்றிச் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவது நமது காலத்தின் கொடுந்துயரம். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இத்தகையதொரு மணல் கொள்ளை நடப்பதைக் காண முடியாது. “அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அகலம் கிட்டதட்ட 9 கி.மீ. இருக்கும். ஒரு கரையிலிருந்து மறுகரையைப் பார்க்கக்கூட முடியாது. அப்படிபட்ட வற்றாத, பிரம்மாண்டமான நதியில்கூட இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்காமல், மனித உழைப்பைப் பயன்படுத்திதான் மண் அள்ளப்படுவதை நான் நேரடையாகவே பார்த்தேன்” எனக் குறிப்பிட்ட பேராசிரியர் அருணாசலம், “ஆற்று மணலை அள்ளாமல் போனால் வளர்ச்சி முடமாகிப் போய்விடும்” என இந்தக் கொள்ளைக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதத்தின் மோசடித்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

தமிழக மணல் எங்கே போகிறது?

கேரளாவில் ஆற்று மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால், அம்மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுப் போய்விட்டது எனச் சொல்ல முடியுமா? என்ற நியாயமான வாதத்தை முன்வைத்த பேராசிரியர், “தமிழகத்தில் இதுவரை அள்ளப்பட்டுள்ள மணலை வைத்துக் கணக்கிட்டால், தமிழகத்தில் சிங்கப்பூர் அளவிற்கு கட்டுமானங்கள் உருவாகியிருக்க வேண்டும். அப்படிபட்ட வளர்ச்சி இல்லையெனும்பொழுது எடுக்கப்பட்ட மணலில் பெரும்பகுதி எங்கே போகிறது?” என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். “தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் எவ்வளவு மணல் எடுக்கப்படுகிறது, தமிழகத்தின் மணல் தேவை என்ன என்பதையெல்லாம் வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால் கடத்தப்படுவதற்காகவே மணல் கொள்ளையடிக்கப்படுவதை நாம் புரிந்துகொள்ள முடியும்” எனத் தர்க்கரீதியாகத் தெளிவுபடுத்தினார்.

“வளர்ச்சி குறித்து இந்தியாவிற்கு பாடம் எடுத்துவரும் மேற்கத்திய நாடுகளில்கூட இந்த அளவிற்கு மணல் கொள்ளை நடப்பதில்லை” எனக் கூறிய அவர், “ஒரு ஆற்றில் ஆண்டுதோறும் எவ்வளவு மணல் சேருகிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்பவே அந்த நதியிலிருந்து மணலை அள்ளும் அளவை நிர்ணயிக்கும் மணல் பட்ஜெட் முறையை அந்நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.  இந்த மணல் பட்ஜெட் முறை அந்நாடுகளில் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இல்லை என்பதோடு, ஆறுகளையும் சாகடிப்பதில்லை” என்றார்.  மேலும், மணலுக்கு மாற்றாக அந்நாடுகளில் எம்.சாண்ட், டால்கம் ஆகியவைப் பயன்படுத்தப்படுவதையும், கேரளாவில்கூட மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார், அவர்.

“மனிதனால் உற்பத்தி செய்யப்படும் சிமெண்டிற்கு ரேஷன் முறை இருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவை என்பதும் கணக்கிடப்படுகிறது. ஆனால், மனிதனால் உற்பத்தி செய்ய முடியாத மணலுக்கு இந்தக் கட்டுபாடுகள் தமிழகத்தில் விதிக்கப்படவில்லை. கட்டுப்பாடற்ற இந்த மணற்கொள்ளைத் தமிழகத்தைப் பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது” என்றார் அவர்.

அரசு, அதிகார வர்க்கம் – மணற்கொள்ளையர்களின் பாதுகாவலன்!

“இயற்கையின் கொடையான மணலைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, போலீசு துறை அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, நீதிமான்களும்கூட கட்டுப்பாடற்ற மணற்கொள்ளையால் தமிழக ஆறுகளுக்கு நேர்ந்துவரும் பேரழிவைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மணற் கொள்ளையால் விவசாயமும் சுற்றுப்புறச் சூழலும் பல்லுயிர்ப் பெருக்கமும் அழிவதை எடுத்து வைத்து வாதாடினால், நீதிமன்றங்கள் அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதற்கு எதிராக வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற மோசடியான வாதத்தை முன்வைத்து இக்கொள்ளையைச் சட்டபூர்வமாக்கிட முயலுகிறார்கள்.  இனி வேலைவாய்ப்பு என்பதைக் காட்டி கள்ளச் சாராயம் காய்ச்சுவதையும் விபச்சாரத்தையும் அனுமதித்துவிடத் துணிந்துவிடுவார்கள் போல!” என வேதனையோடு தெரிவித்த அவர், “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பசுமைத் தீர்ப்பாயங்கள் மிகவும் வெளிப்படையாகவே இயற்கை வளங்களைச் சூறையாடிவரும், அதனை மாசுபடுத்தி வரும் கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொள்வது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு பெருந்தடையாக உள்ளது” என அம்பலப்படுத்தினார்.

“ஆறுகளும் மணலும் தமிழக மக்களின் பொதுச் சொத்து.  அரசு, இதனை மக்களின் சார்பில் பாதுகாக்க வேண்டிய பாதுகாவலன்தானே தவிர, இதனை விற்பனை செய்வதற்கான எஜமானமோ, ஏஜெண்டோ கிடையாது.  ஆனால், இதனைப் பாதுகாக்க வேண்டிய அரசே இன்று இதனை அழிக்கும் வில்லனாக உருவெடுத்திருக்கிறது.  எனவே, இனி அரசை நம்பாமல் ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கடமையையும் பொதுமக்களே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது” என மாற்றுவழியை முன்வைத்த பேராசிரியர் அருணாசலம், “வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தையும் தமிழகத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் மணல் கொள்ளைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களையும் இதன் தொடக்கப்புள்ளியாக”க் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

இளங்கதிர் உதவியுடன்
– ஆர்.ஆர்.
__________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க