Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !

ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !

-

டந்த மே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடியின் பா.ஜ.க ‘வரலாறு காணாத’ ‘மகத்தான’ வெற்றியை சாதித்ததாக ஊடகங்கள் வியந்தன. இப்போது நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்களின் வியப்பு ஆம் ஆத்மிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. கூடவே பா.ஜ.க மற்றும் மோடியை கழுவி ஊற்றாதவர்கள் பாக்கி இல்லை.

ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
மும்பையில் ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்

“ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றிபெறும்” என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், தேர்தலன்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் மொத்தமுள்ள 70 இடங்களில் 67-ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், பதிவான வாக்குகளில் 54.3% அக்கட்சிக்கு விழுந்ததையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வெறுத்தனர். முதலாளிகளோ சிங்கின் வேகம் பத்தாது என்பதோடு அவர் மக்களிடம் பெயரிழந்துவிட்டார் என்று மோடியை அழைத்து வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆகக் குறைந்திருக்கிறது. 2014 தேர்தலுக்காக கட்டியமைக்கப்பட்ட மோடி அலை என்ற பிம்பம் புஸ்வாணமானதை இந்த டெல்லி தேர்தல் முடிவுகள் இன்னும் தெளிவாக காட்டுகின்றன.

மோடி அலை என்ற பிம்பம்
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆக குறைந்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் நாட்டை ஆளும் வர்க்கங்களின் அதிகாரக் கூத்துகளை அணுக்கமாக பார்ப்பவர்கள் என்ற முறையிலும், பெருநகர வாழ்க்கையில், கவனத்தை திசை திருப்பும் சாதி, மத அரசியலுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்ற முறையிலும் மன்மோகன் சிங்கின் அடியொற்றி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடியின் பொருளாதார கொள்கைகளுக்கான முதல் அடி டெல்லியில் விழுந்திருப்பதில் வியப்பில்லை.

ஏழை உழைக்கும் மக்களுக்கான அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து, நொறுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு அருகிலேயே கண்ணாடியாலும், உலோகத்தாலும் பளபளக்கும் தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் பணம் படைத்த வர்க்கத்தினருக்கு சேவை செய்து கொண்டிருந்தன.

மேட்டுக்குடி அதிகாரவர்க்கத்தினர் வசிக்கும் புது டெல்லியின் தெருக்கள் மாசு மருவற்று ஜொலிக்கும் போது, பழைய டெல்லியின் குடியிருப்புப் பகுதிகள் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்பட்டு வந்தன. மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்பதற்கு ரூ 10 லட்சம் விலையில் தனது பெயர் பொறித்த சூட்டை தைத்து போட்டுக் கொண்ட மோடியின் அற்பத்தனம் டெல்லி மக்களின் பொறுமையை முறித்த கடைசி ஊசி என்று வைத்துக் கொள்ளலாம். ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

மோடி
ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய சிந்தனை குழாம்கள் வகுத்துக் கொடுத்த கையேட்டின்படி வேலை செய்து அவர்களது எதிர்ப்பை திரட்டியது ஆம் ஆத்மி கட்சி.

இந்தத் தேர்தல் முடிவு தொடர்பான அலசல்களில் ஆம் ஆத்மியின் வெற்றியின் அடிப்படை டெல்லியின் ஏழை உழைக்கும் மக்கள் என்பதும் பா.ஜ.க மேட்டுக்குடி, ஆதிக்கசாதியினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகின்றன. அடுத்தடுத்து 3 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று, டெல்லியை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் 8%-க்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது; நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்த காங்கிரஸ் டெல்லியிலிருந்தும் துடைத்து எறியப்படுவது உறுதியாகியிருக்கிறது.

மேலும், மோடி பரிவாரத்தின் இந்துமதவெறி அமைப்புகள் சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பா.ஜ.கவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிறுபான்மை மக்களை தள்ளின. வெற்றி பெறும் குதிரையாக உருவாகி வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த வாக்குகள் இயல்பாகவே திரும்பியிருந்தன.

காப் பஞ்சாயத்துகள், லவ் ஜிகாத் மூலம் சாதி, மதவெறி தாக்குதல்கள், கர் வாபசி என்ற பெயரில் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம் செய்யும் நாடகங்கள், சமஸ்கிருதத் திணிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், ராமனை நம்பாதவர்கள் விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் என்று மத்திய அமைச்சரின் திருவாக்கு, இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அமைச்சர்கள் அறிவிப்பது என்று அடுத்தடுத்த இந்துத்துவ அரசியல் சவடால்கள் கணிசமான நடுத்தர வர்க்க மக்களை பா.ஜ.கவிடமிருந்து தனிமைப்படுத்தின.

மோடியின் ஆடை அணிகலன்கள் குறித்து நக்கல் அடித்த கையோடு, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்துத்துவ திருவிளையாடல்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே எச்சரித்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “மோடியின் அபாயகரமான மௌனம்” என்று தலையங்கம் எழுதி மோடி மீதான அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்ட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது நிறைவேறிவிட்டது. ஆனால் உலகமயமாக்கத்தின் நடைமுறை வேகத்திற்கு இந்துத்துவத் தாக்குதல்கள் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற வகையிலும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மோடியை செல்லமாகக் கண்டிக்கிறது. அதன் பின்னணியில்தான் ஆம் ஆத்மியின் இருப்பு முன்வைக்கப்படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி பதவி ஏற்பு விழாவில் ரூ 15-க்கு மலிவு விலை AAP கோலா.

ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர்.

மின்சார, குடிநீர் கட்டண கட்டண உயர்வுகள் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்து, ஒரு குடும்பத்துக்கு மாதம் 20,000 லிட்டர் வரை தண்ணீருக்குக் கட்டணம் இல்லை, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற அன்று 20,000 பாட்டில்கள் AAP கோலா இலவசமாக வினியோகிக்கப்பட்டன. “குடிசையில் வசிக்கும் ஒரு டெல்லி குடிமகன் ரூ 35 கொடுத்து கோலா குடிக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே சாதாரண மக்களுக்கு சேவை செய்ய ரூ 15-க்கு 400 மிலி கோலா என்ற விலையில் AAP கோலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் AAP கோலா நிறுவன முதலாளி ஜிதேந்தர் கேஸ்வானி.

AAP Cola
ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்” என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதாரத் தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் மாதம் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் வரை இலவசம் என்ற AAP தண்ணீர், குழாய் இணைப்பு இல்லாத சுமார் டெல்லியின் 3-ல் 1 பங்கு ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்காது. AAP தண்ணீர் திட்டத்திற்கு தகுதி உடைய குடும்பங்களும் 20,000 லிட்டருக்கு ஒரு சொட்டு அதிகமாக பயன்படுத்தினாலும் முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். தண்ணீருக்கு விலை வைத்து விற்று தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை கேள்விக்குள்ளாக்காமல், அதற்குள் இலவசத் திட்டம் அறிவிப்பது என்ற “அம்மா” பாணி அரசியலை பார்க்கும் தமிழகத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் புதுசில்லைதான்.

மின்கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் உத்தரவை டெல்லியின் மின்வினியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகியவை எதிர்த்திருக்கின்றன. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் அதை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தாங்கள் கோருவதாக கூறியிருக்கின்றனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் சித்தாந்தம்
ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகளை எதிர்க்கவில்லை.

கேஜ்ரிவால் அரசு அளிக்கவிருக்கும் மின் கட்டண சலுகைக்கான செலவை அரசே தங்களிடம் கொடுத்து விடும்படி கோருகின்றனர். அதாவது, கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். டெல்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்தே வசூலித்துக் கொள்ளும். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மக்கள் பணத்தை பிடுங்கி, அதிலிருந்து இலவசப் பொருட்களை வாரி வழங்குவதைப் போல மக்கள் விரலை வெட்டி மக்களுக்கு சூப்பு வைத்துக் கொடுக்கும் வித்தையைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் செய்யவிருக்கிறார்.

உதாரணமாக, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி செலவு 2 ரூபாய்க்கும் குறைவு என்றால் தனியார் அனல் மின் நிலையங்கள் யூனிட்டுக்கு ரூ 6.50 முதல் ரூ 18 வரை விலை வைத்து விற்கின்றன. கேஜ்ரிவால் கூறும் தீர்வு தனியார் மின்சாரம் ரூ 12-க்கு விற்கப்படுவதை பேச்சுவார்த்தை நடத்தி யூனிட்டுக்கு ரூ 10 ஆக குறைப்போம் என்றும் யூனிட்டுக்கு ரூ 10-ஐ அரசே தனியார் நிறுவனத்திடம் கொடுத்து விடும் என்பதும்தான்.

திறன் குறைந்த, கொள்ளை விலை வைத்து வசூலிக்கும் தனியார் மயத்தை ஒழித்துக் கட்டி பொதுத்துறை மின் உற்பத்தியை தொடங்கினால்தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். அதைச் செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் தயாராக இல்லை என்பதோடு அப்படி செய்யவும் முடியாது.

கேஜ்ரிவாலின் சித்தாந்தம்
“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை.”

“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்ததை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார் அரவிந்த கேஜ்ரிவால்.

எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

இதைத்தான் “மின் உற்பத்தியே செய்யாத டெல்லி எப்படி மின் கட்டணத்தை குறைக்க முடியும்” என்று நரேந்திர மோடி, கேஜ்ரிவாலை குத்திக் காட்டியிருகிறார்.

“பாரத் மாதா கீ ஜெய்” என்று முழங்குவதிலும், வாரணாசி தேர்தலின் போது கங்கையில் முழுக்கு போட்டு இந்துக்களின் மனம் கவர் கள்வனாக மாற முயற்சித்ததும், காங்கிரஸ் பாணியிலான மிதவாத இந்துத்துவம்தான் அரவிந்த் கேஜ்ரிவாலின் மதச்சார்பின்மை என்பதைக் காட்டுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டியதோடு மேலே இருப்பவனுக்கு நன்றியும் சொன்னது, அப்படி கடவுளை நம்பும் பெரும்பான்மை மக்களுக்கு தன்னை ஏற்புடையதாகக செய்யும் முயற்சிதான் என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரான ஆதித்ய நிகம்.

கடவுளை நம்பும் கோடிக்கணக்கான மக்களை மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படி சொல்ல வேண்டுமானால், தான் கடவுளை நம்புவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். அதே அடிப்படையில்தான் டெல்லி திரிலோக்புரியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ கும்பல் நடத்திய வன்முறையின் போது அந்தப் பகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினரோ, கட்சித் தொண்டர்களோ சிறுபான்மை மக்களின் பக்கம் நிற்பதாக காட்டிக் கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படிக் காட்டிக் கொண்டால் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற பயம்தான் ஆம் ஆத்மியின் இந்துத்துவ எதிர்ப்பின் நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவாலின் கொள்கையற்ற அரசியலின் ஒரு பகுதியாக சாதி அடிப்படையிலான காப் பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை அங்கீகரிக்கிறார்.

காஷ்மீர் மக்களின் போராட்ட உரிமையை அங்கீகரிக்காமல் இந்திய அரசை ஆதரித்து, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகவே ஆதரித்தவர் கேஜ்ரிவால். தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிப்பது அல்லது நெருக்கிக் கேட்டால் இந்துத்துவத்தின் செல்வாக்கை கணக்கில் கொண்டு பேசுவதுதான் ஆம் ஆத்மியின் உத்தி.

ak.cartoonஆம் ஆத்மியின் அரசியல் வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல் என்கிறார் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ்.

டெல்லி சோட்டா நகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்குவதற்காக குடிசைகளை இடித்து தரைமட்டமாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் போலீசார் தாக்கினர். ஆம் ஆத்மி கட்சியினரும், போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர். அரசுக்கு சொந்தமான நிலம், வேறு ஒரு பணிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சிலர் குடிசைகளை அமைக்க முயற்சித்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமானவர்கள் அவற்றை அகற்றினர். பாதுகாப்பு பணிக்காக மட்டுமே போலீசார் சென்றனர்.” என்று கூறியிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. தனியார் நிறுவனத்துக்காக தமது குடிசைகள் இடிக்கப்பட்டால், போராடக் கூடாது என்பதுதான் யோகேந்திர யாதவின் வர்க்கப் போராட்டம் அற்ற வர்க்க அரசியல். டெல்லியில் வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ள கேஜ்ரிவால் அரசு, நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படப் போகும் வீடுகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆம் ஆத்மி பிரச்சாரம்
“ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிய இலவச குடிநீர் பிரச்சாரம் செல்லாது” என்று தீர்ப்பு எழுதுகின்றனர் முன்னாள் உலக வங்கி இயக்குனர்கள்.

உண்மையில் அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நவ் அல்லது முகேஷ் அம்பானியின் சி.என்.என் ஐ.பி.என் போன்ற ஊடகங்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. “நீங்கள் தேசத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்று அர்னாப் தினசரி எட்டுகட்டையில் முழங்குவதுதான் ஆம் ஆத்மியின் முழக்கமும் கூட. இதில் லஞ்ச எதிர்ப்பு மட்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஜெயலலிதா போன்று அரசு திட்டங்களை தனியார் மயமாக்கிக் கொண்டே ஒரு பக்கம் ஏழைகளுக்கு பிச்சையாக இலவசங்களை அறிவிக்கும் வேலையையோ அல்லது அதை விட புதுமையான திட்டங்களையோ ஆம் ஆத்மி செயல்படுத்தலாம். ஆனால், அதைக் கூட செய்வதற்கு அவர்களின் மேற்கத்திய நிதி உதவியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலக வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் ஜே சிவகுமார் மற்றும் இந்தர் சூத் ஆகியோர் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், “தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை எல்லாம் மறந்து விட்டு ‘நடைமுறை’ அரசியலை உணர்ந்து ஆம் ஆத்மி கட்சி செயல்பட வேண்டும்” என்றும் “டெல்லியில் ஏழைகளுக்கு இலவச குடிநீர் தேவையில்லை, கட்டுப்படியாகும் விலையிலான குடிநீர்தான் தேவை” என்று டெல்லியில் வாக்களித்த மக்களின் சார்பாக சிந்தித்து அவர்களது தேவையை கணித்து கூறியிருக்கின்றனர்.

மொத்தத்தில், “இந்தியாவை ஒளிர”ச் செய்த 7 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு வாஜ்பாயி குப்பைக் கூடைக்கு அனுப்பபட்டார். அடுத்த 10 ஆண்டுகள் அன்னிய முதலீட்டின் உதவியால் இந்தியாவை வல்லரசாக்க முயற்சித்த மன்மோகன் சிங் வெறுக்கத்தக்க கோமாளியாக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். “வளர்ச்சி நாயகனாக” முன் நிறுத்தப்பட்ட மோடி இப்போது மக்களின் கோபமான கிண்டலுக்கும் பரிகாசத்துக்கும் நாயகனாகியிருக்கிறார்.

அவர்களின் இடத்தில் இப்போது நிறுத்தப்பட்டிருப்பவர் அரவிந்த் கேஜ்ரிவால். அதனால்தான் மேற்கத்திய ஊடகங்கள் ஆம் ஆத்மியின் வெற்றியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் மோடியின் வெற்றிக்கு சியர்ஸ் சொன்ன கைகள் இன்று ஆம்ஆத்மிக்கு ஜே சொல்கின்றன.

அன்றாடம் பெருகிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, கல்வி வணிகமயம், மருத்துவம் மக்களுக்கு கிடைக்காமல் போவது என்று மறுகாலனியாக்கத்தின் நெரிப்பில் மூச்சுத் திணறும் மக்களின் கோபம்தான் மோடிக்கு கிடைத்த செருப்படி. அதனால் வெற்றிபெற்ற கேஜ்ரிவால் தனியார் மயம் எனும் ஊழலை ஆதரித்துக் கொண்டே கலெக்டர் ஆபிஸ் சிப்பந்தியின் லஞ்சத்தை முறியடிக்க முழங்குகிறார்.

மாறி மாறி ஓட்டுப் போட்டு, இருக்கும் சனியன்களில் ஏதோ ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் எனும் மூடநம்பிக்கையின் படிதான் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கிறது. மாறி வரும் காலத்தில் இந்த மூடநம்பிக்கை நிரந்தரம் இல்லை.

–    பண்பரசு

தொடர்புடைய சுட்டிகள்

ஆம் ஆத்மி தொடர்பான முந்தைய வினவு பதிவுகள்

ஆம் ஆத்மி பிறப்பு ரகசியம் – தொடர்

  1. ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
  2. சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
  3. அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்
  4.  நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்