Saturday, April 19, 2025
முகப்புசெய்திநீதிபதிகள் நியமனம் – தேவை ஒரு வெளிப்படைத்தன்மை !

நீதிபதிகள் நியமனம் – தேவை ஒரு வெளிப்படைத்தன்மை !

-

டந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதிகள் நியமனத்தில் “கொலீஜியம் முறை” பின்பற்றப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே! இம்முறையை எதிர்த்தும், இதில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்றும் தொடர்ந்து போராடியும் வருகிறோம்.

நீதிபதிகள் நியமனம்குறிப்பாக, கடந்த வருடம்  இது குறித்து ஒரு வழக்கு போடப்பட்டு, அது சென்னை உயர்நீதி மன்றத்தில் சர்ச்சைக்குள்ளாகி உச்சநீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முன்னாள் நீதிபதி சந்துருவை போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை  கண்டித்தத்தோடு, அருவருக்கதக்கதாகவும் கருதி கீழ்க்கண்ட அபாரமான  தீர்ப்பை வழங்கினர்.

“நீதிபதி பதவிகளில் தகுதியான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஒரு வழக்கறிஞரின் தொழில் வெற்றியை மட்டுமல்லாமல் அவரது சமூக மற்றும் சட்டப் பின்னணி தவிர, அவருடைய அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டும். பொதுவாக, அனைத்துத் தரப்பினருக்கும் பங்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையைக் கணக்கிலெடுக்கும்போது பங்களிப்பு தரவேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக திறமையற்ற நபர்களை நியமிக்க முடியாது.

நீதிபதி நியமனங்களில் பல தரப்பினருக்கும் பங்கு உண்டென்றாலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சட்டப் பயிற்சியுடனும், தனிப்பட்ட குணாதிசயம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்டவர்களின் விருப்பங்களால் செல்வாக்கு பெறக் கூடாது. இதனால்தான் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைத் தவிர்க்கும்படி கூட்டு முடிவுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நியமனப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியையோ, சட்ட அமைச்சரையோ அணுகி முறையிடாமல் முறையற்ற போக்கைக் கடைபிடிப்பது தவறு.”

மதிப்பிற்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகளே, நீங்கள் கூறியது போல   வழக்குரைஞர்களின் தொழில்வெற்றி, அவரது சட்ட-சமூக பின்னணி தவிர அவரது அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உண்ரச்சி போன்றவையெல்லாம் பரிசீலித்து தான் நியமனத்துக்கு பரிந்துரைக்கிறார்கள் என்று உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லமுடியுமா?

உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில் உங்கள் கொலீஜிய முறை இதுவரை நியமித்த நீதிபதிகளின் யோக்கியதையை பரிசீலித்துப் பார்த்தால் கூவத்தை விட நாறும்.

இதுவரை எத்தனை தீர்ப்புகள் சட்டப்படி பரிசீலித்து தீர்ப்பளித்து இருக்கிறீர்கள்? சட்டத்தை படித்துப் பார்த்து-அதோடு ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு அளித்ததை விட நீதிபதிகள் நினைத்தப்படி-விருப்பப்படி- தேவைப்பட்டவர்களின் மனம் குளிரும்படி – அதற்காக எதையெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் செய்து தீர்ப்பளித்து தான் அதிகமாக உள்ளது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? முடியாது. அது தான் உண்மை.

நீதிபதிகள் நியமனம் குறித்த தற்போதைய வழக்கில் கூட உங்கள் தீர்ப்பை மீண்டுமொருமுறை பரிசீலித்து பாருங்கள், ஜனநாயகப் பண்பு இருந்தால்! அப்பொழுது தெரியும் அதிலுள்ள முரண்பாடுகள்! அநீதியான தீர்ப்புகள்!

இதுவரை நீங்கள் அளித்த தீர்ப்புகள் எவ்வளவு அநீதியான தீர்ப்புகள்! அவற்றை குறித்து எல்லாம் சொல்லி மாளாது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, உங்கள் தீர்ப்பின் யோக்கியதையைச் சொல்ல கிரிமினல் குற்றவாளி ஜெயாவிற்கு கொடுத்த பிணையும் வழக்கை முடிப்பதற்கான கால இலக்குமே போதுமானது.

இந்தக் குறைபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் காரணம் கொலீஜிய முறை என்கிறது மோடி அரசு. இதற்குத் தீர்வாக நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையக் குழுவை அமைக்க மோடி கொண்டு வந்திருக்கும் மசோதா, நீதித்துறையில் பார்ப்பன மதவெறி பாசிசத்தை நிலைநாட்டவே உதவும்; ஆளும் கும்பலின் தலைமையின் ஆதிக்கத்தை-அதிகாரத்தை உறுதி செய்வதாகவே இருக்கும்; ஜனநாயக சக்திகள்- வழக்குரைஞர்கள்-மக்கள் பங்களிப்பு அறவே இருக்காது!

நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நியமிக்கப்படும் நீதிபதிகள்-அமைச்சர்கள்-பிரதம மந்திரி-உச்சநீதிமன்ற நீதிபதி- எதிர்க்கட்சி தலைவர்கள் யோக்கியதை நமக்கு தெரியாதது எதுவும் இல்லை. போதாக்குறைக்கு இவர்களெல்லாம் சேர்ந்து தகுதிவாய்ந்த நபர்கள் இருவரை தேர்ந்தெடுக்கலாம் !

எப்படி இருக்கிறது கதை? அப்படி இவர்கள் கூறும் தகுதி வாய்ந்த நபர்கள் சு.சுவாமியும், சோவும் கூட இருக்கலாம் அல்லவா! யோக்கிய சிகாமணிகளாகிய இவர்கள் இந்த நீதிபதிகள் நியமனத்தை எதிர்த்தால் நீதிபதிகளை நியமித்தது செல்லாது. மேலும் நீதிபதிகளை கண்காணித்து தகவல் சொல்லும் உளவுத்துறை எதிர்த்தாலும் நீதிபதியின் நியமனம் செல்லாது. இது இதோடு மட்டும் நிற்காது. ஆளும் கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பவர்களைக் கூட நீதிபதிகளாக நியமிக்கமாட்டார்கள்.

இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்? ஏற்கனவே அரசுத்துறையில் அதிகாரிகளாக 90%க்கு மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள் –ஆதரவாளர்களாகத்தான் நிரம்பி வழிகிறார்கள். மேலும் மேலும் நிரப்பி வருகிறார்கள். பார்ப்பன பாசிஸ்டுகளால் நிரம்பி வழியும் இந்த அதிகாரக் கூட்டம் என்ன செய்யும் என்பதை இட்லர் ஆட்சியோடு ஒப்பிட்டுப்பாருங்கள். எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், இன்னும் 60 வருடங்களுக்கு மோடி அரசால் நியமிக்கப்படும் நீதிபதிகளே உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வலம் வருவார்கள். இனி என்ன? ஏட்டளவில் உள்ள மதச்சார்பின்மையும் இத்தகைய நீதிபதிகளின் தீர்ப்புகளால் நீக்கம் செய்யப்படும். எல்லாத் துறைகளிலும் பார்ப்பன மதவெறி பாசிசம் சட்டபூர்வமாக்கப்பட்டுவிடும்.

இத்தகைய கொடுமைகளிருந்து மீள ஒரே வழி. கொலீஜிய முறையையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையத்தையும் ஒழித்துக்கட்டுவதே!

இவற்றுக்குப் பதிலாக நீதிபதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிற-அறிவிக்கப்படுகின்ற நபர்களை வெளிப்படையாக அறிவித்து, அவர்களின் மீதான மதிப்பீடுகளை வழக்குரைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகள் மத்தியிலும் கருத்துக்கேட்டு, அதிலுள்ள சாதக பாதக அம்சங்களை பரிசீலித்து தெரிவு செய்வது தேவை.

அப்படி தெரிவு செய்தவர்களை “என்ன தகுதிகள் அடிப்படையில் தெரிவு செய்துள்ளோம்” என்பதை முடிவாக அறிவிப்பது மூலமே வெளிப்படைத் தன்மையை கொண்டுவரமுடியும்.

இந்த அடிப்படையில் நீதிபதிகளின் நியமனத்தை கொண்டுவர போராடுவோம்! நீதிபதிகளின் நியமனத்தில் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவோம்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க