இந்தாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையை இந்து பத்திரிகை உள்ளிட்ட தேசிய, பிராந்திய, ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களும் போற்றி புராணம் பாடுகின்றன. “புதிதாக இரயில்களை அறிவிப்பது, கட்டணக் குறைப்பு என்று கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் முன்னேற்றத்திற்கான ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டாதாக இருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை” என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார மேதைகள்; “இதை அரசியலற்ற பட்ஜெட், நுகர்வோருக்கான பட்ஜெட்” என்கிறார்கள். அதாவது, ரயில்வே மக்களுக்கான பொது சேவைக்கானது என்பதை மாற்றி முதலாளிகளுக்கான லாப வணிகத்துக்கானது என்பதை கொண்டாடுகிறார்கள்.

ஜால்ரா கச்சேரி களை கட்டிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்பிரதாயமான முறையில் “இது பயனற்றது” என்று ஜால்ராவைத் திருப்பித் தட்டியுள்ளன. எதிர் லாவணி பாடியுள்ள எதிர்க்கட்சிகளும் தாங்கள் விட்ட ‘காட்டமான’ கண்டன அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் வந்ததா இல்லையா என்று கூட கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது தனி கதை.
ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே துறைக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சடங்கு நடந்தேறும் போதும் செய்யப்படும் அறிவிப்புகள் என்ற மோசடியைப் பார்த்து ஈமு கோழி நிறுவன அதிபர்களே வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதற்கு முந்தைய ரயில்வேத் துறை அமைச்சர்கள் பறக்கவிட்ட குமிழிகளின் நிலை என்னவென்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா – மர்ச்சாலா பகுதிகளுக்கு இடையிலான இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட ஆண்டு – 1997. மேற்படி திட்டத்திற்காக பதினெட்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பிடிக்கும் இந்த திட்டத்திற்கு இப்போது ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கோடிகளை ஒதுக்கி, அதில் ஒப்பந்ததாரர் தின்று கழித்தது போக மிஞ்சிய தொகையில் வேலை நடந்து, இடைப்பட்ட காலத்தில் பணிகளின் மறுமதிப்பீட்டில் அதிகரித்த தொகைக்கான ஒப்புதல் கிடைத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு நடந்து, ஒரு வழியாக வேலை முடியும். மர்ச்சாலா மக்கள் இந்த இருப்புப் பாதையில் ஓடும் இரயிலில் ஏறி பத்து நூற்றாண்டுகள் கழித்து நல்கொண்டா வந்து சேர்ந்திருப்பார்கள்.

கடந்த இருபதாண்டுகளில் இரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட சுமார் ரூ 6 லட்சம் கோடி மதிப்பிலான 362 திட்டங்கள் நிதி நெருக்கடியின் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன என்று கடந்த ஜனவரி 15-ம் தேதி ஜீ தொலைக்காட்சியில் நடந்த ராஜ்நீதி என்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் சுரேஷ் பிரபு. ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2.4 கோடி டன் அத்தியாவசிய சரக்குகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்தி நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதாவின் அப்போதைய இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரெயில்கள் இப்போது எங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன என்கிற தகவல் தெரியவில்லை.
சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான். சாதாரண மக்களுடைய அன்றாடப் பிழைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அத்தியாவசிய சரக்குகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் இரத்த நாளங்களாகவும் விளங்கும் இரயில்வே துறையில் இத்தனை நாட்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை வெறும் வாயில் சுட்ட வடைகள் தான். நிறைவேறிய சொற்ப திட்டங்களும் ஆமை இனமே வெட்கித் தலைகுனியும் வேகம் கொண்டவை. அதில் நடக்கும் லஞ்சம், ஊழல், கமிஷன் போன்ற லாகிரி வஸ்துக்களை இங்கே கணக்கில் சேர்க்கவில்லை.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உரையில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் –
– இரயில் நிலையம் சுத்தமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா
– இன்பச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த பிரத்யேகமான சுற்றுலா இரயில்கள்
– மும்பை அகமதாபாத் இடையே புல்லட் இரயில்
– முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ’வைர நாற்கர’ இருப்புப் பாதைத் திட்டம்
– இரயில் நிலையங்களில் வைஃபை மூலம் இணைய இணைப்பு
– இரயில்களில் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதி (infotainment)
– இரயில் கோச்சுகளில் விமானங்களில் உள்ளது போன்ற கழிவறை
– இரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறை
– இரயில் கோச்சுகளில் செல்போன்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி
– இரயில் நிலையங்களைச் சுத்தமாக பராமரிக்க 50,000 பேர்கள் கொண்ட தனி(யார்) படை
இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு சுமார் ரூ 8.56 லட்சம் கோடி தேவைப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒரு புறம் ஏற்கனவே உள்ள இருப்புப் பாதைகளை முறையாகப் பராமரித்து விபத்துகளைத் தடுக்கவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு புறம், ஏற்கனவே உள்ள இரயில்கள் போதாமல் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் இருந்து பெருநகரங்களுக்குத் தொழிலாளிகளைச் சுமந்து வரும் இரயில்கள் ஒவ்வொன்றும் பிராய்லர் கோழிகளைச் சுமந்து செல்லும் டி.வி.எஸ் மொப்பட்டைப் போல் காட்சியளிக்கிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் முன்பதிவு தேவையில்லாத பொதுக் கோச்சுகளோ பன்றிகளே நுழைய சங்கடப்படும் கோலத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இரயில் பயணம் என்பது மக்களின் தலையில் எழுதப்பட்ட மோசமான விதி என்ற நிலையில், “கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்கிறார் இரயில்வே அமைச்சர்.
வாலாஜாபேட்டையில் இருந்து நெஞ்சாங்கூடு நசுங்க காலை ரெயிலில் பயணித்து சென்னைக்கு வேலைக்கு வரும் சாதாரண மக்களுக்குத் தேவை குத்துப் பாட்டுக்களோ, செல்போன் ரீசார்ஜோ அல்ல – மேலும் புதிய இரயில்களும், இணைக்கப்படாத பகுதிகளை இணைப்பதும், புதிய வழித்தடங்களில் மலிவான சேவையுமே மக்களுக்குத் தேவை. ஆனால், முட்டையிடும் கோழியின் பிட்டி வலியைப் பற்றி ஐந்து நட்சத்திர ஓட்டலில் ‘புல்ஸ் ஐ’ தின்னும் சுரேஷ் பிரபுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதே ஐந்து நட்சத்திர ‘புல்ஸ் ஐ’ பார்ட்டிகளுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதுதான் அவருக்கு இடப்பட்ட கட்டளை.
அத்தியாவசியத் திட்டங்களுக்கே காசு இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன் புலம்பியவர், இந்தப் புதிய ஆடம்பரங்களுக்கு எங்கே இருந்து நிதி திரட்டப்போகிறார்?
மோடி அரசு பதவியேற்ற உடனேயே டீசல் விலையேற்றத்தைக் காரணமாகச் சொல்லி இரயில்வே பயணிகள் கட்டணம் 14.2 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சர்வதேச எண்ணைச் சந்தையில், இரசியாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்க அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கச்சா எண்ணை கடுமையாக வீழ்ந்துள்ளது – விளைவாக, டீசலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. டீசல் விலை உயர்ந்தபோது உயர்த்தப்பட்ட பயணிகள் கட்டனம், பின்னர் குறைந்த போது குறைக்கப்படவில்லை. இந்த வகையில் சேமிக்கப்பட்ட ரிசர்வ் தொகையை புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு.
இது தவிர, “உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் வாங்குவது குறித்துப் பேசி வருவதாகவும் ஓய்வூதிய நிதியில் இருந்து கணிசமான தொகையை இரயில்வே துறைக்குத் திருப்பி விடுவது குறித்து அலோசனைகள் நடந்து வருவதாகவும்” சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உள்ளே நுழைகிறது என்றாலே தனியார் முதலாளிகள் உள்ளே நுழைவதற்கான முன்னோட்டமாக அதைப் புரிந்து கொள்ளலாம். கூடுதலாக, ஓய்வூதிய நிதியை இரயில்வேத் துறையை நோக்கித் திருப்பி விடும் பாரதிய ஜனதாவின் யோசனையையும் இணைத்துப் பார்த்தால் புதிருக்கான விடை தெளிவாகிறது.
ஓய்வூதிய நிதியை இரயில்வேயில் கொட்டுவது, மக்களின் இரத்தப் பணத்தில் வைஃபை இணையம், குளு குளு சொகுசுப் பெட்டிக்குள் குத்தாட்டப் பாடல்கள் என்று மக்களுக்கான சேவையாக இயங்க வேண்டிய இரயில்வே துறையை பணக்காரர்களுக்கான விற்பனை பொருளாக மாற்றுவது, பின் இரயில்வே துறையை மொத்தமாகத் தூக்கி பன்னாட்டு முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, உள்ளே நுழைந்த தனியார் முதலாளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்கு விளக்குப் பிடிப்பது என தனியார் மயத்துக்கான விரைவு தடத்தை போடுவதுதான் மோடி அரசு வழங்கியிருக்கும் இந்த ரயில்வே பட்ஜெட்டின் நோக்கம்.
மோடி சொல்லும் “அச்சே தின்”, இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – “அச்சே தின”ங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
இது தொடர்பான செய்திகள் :
- RAILWAY BUDGET 2014-15: A ROADMAP FOR PRIVATISATION
- Railway Budget 2015: 15 things common man can cheer about
- 25 railway projects of previous Budgets still pending
- Focus on pending railway projects, MP urges govt
- Railway projects worth 6 lakh crore pending due to lack of funds: Suresh Prabhu
- Railway Budget 2014-15 and 2015-16:Comparative Analysis between the two
- Railway Budget: A brief analysis of last six years’ budget
- Suresh Prabhu’s Rail Budget 2015 if for the common man, not political allies