Sunday, April 20, 2025
முகப்புவாழ்க்கைபெண்திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

-

trichy-pevimu-bannerவீட்டிலும் வெளியிலும்
உழைப்பும் உணர்வும்
கரும்புச் சக்கையாய்
பிழியப்படும் பெண்ணே,

உனது நிலை மாற
வழி காட்டத்தான்
உலக உழைக்கும் மகளிர் நாள்!

எல்லாத் துறையிலும்
பெண்களின் உழைப்பு
கட்டிட வேலை முதல்
கணினி வேலை வரை…
உரிமைகள் பறிப்பு.
முதலாளி முதல்
கணவன் வரை
சுரண்டல் அடக்குமுறை நீடிப்பு.
ஆறு முதல் அறுபது வரை
எல்லா வயதிலும்
எல்லா இடத்திலும் பாதிப்பு.
எதிர்த்து கேள்வி கேட்டால்
“பொம்பளையா லட்சணமா நடந்துக்க”
என உபதேசக் கொழுப்பு!

என்னதான் செய்வது
வாருங்கள்… விவாதிப்போம்!

முகநூலில் வலை விரிக்கும்
தந்திரங்கள்,
முகத்துக்கு நேரே
நல்லவன் போல நடித்து
உடல்மேயக் காத்திருக்கும்
வக்கிரங்கள்.

சம்பாதிப்பதற்காக
பெண் வெளியே போவதை
குடும்பப் பாங்காகவும்
சந்திக்கும் பிரச்சனைகளுக்காக
பெண்
போராட வெளியே வந்தால்
குடும்பத்துக்கு ஆகாததாகவும்
இழுத்துப் பிடிக்கும்
ஆணாதிக்க நுட்பங்கள்.

காதலால் சுரண்டப்படும்
பெண்ணின் ஆளுமைகள்…
சுகமான சுமைகள் என
குடும்பத்தால் அழிக்கப்படும்
பெண்ணின்
சமூக விருப்பங்கள்…

கூண்டுக் கிளிகளாய்
சுயநலத்தில் அடைத்துவிட்டு
வாட்ஸ்அப், ஸ்மார்ட் போன்
இணையத்தளம்
இரை மட்டும் போதுமா?

women-suppressedஅரசியல் வளர்ச்சிக்கு வழியில்லாது
அறிவியல் வளர்ச்சி மட்டும்
முன்னேற்றுமா?
வாருங்கள் வழி காண்போம்!

கூந்தலுக்கு அயர்னிங்…
புருவத்திற்கு லைனிங்…
உதட்டுக்கு சயினிங்…
என உறுப்புகளை சந்தையாக்கும்
அழகு வெறி.

ரகரகமாய் உடுத்தி…
புதுசு புதுசாய் தின்று…
விதவிதமாய் சுற்றி…
உணர்வுகளை வணிகமாக்கும்
நுகர்வு வெறி.

கற்றுக்கொடுக்க
கையைப் பிடித்து இழுக்கும்
டி.வி. சேனல்கள்.

சுற்றிலும் நடக்கும்
சமுதாய உண்மைகளை
உணரமுடியாதபடிக்கு
சுரணையை இழக்க வைக்கும் சீரியல்கள்.

இது வளர்ச்சியா? இகழ்ச்சியா?
வாருங்கள் பேசுவோம்!
போலீஸ் ஸ்டேசன் போனாலும்
புடவையை உருவுகிறான்,
அரவிந்தர் ஆசிரமம் போனாலும்
ஆடைகளை அவிழ்க்கிறான்.

பேருந்தில் வருபவன்
நோட்டம் பாத்து உரசுகிறான்
மாண்பமை நீதி அரசனோ
நேரிடையாய் அழைக்கிறான்.

தாழ்த்தப்பட்ட பெண்
தலை நிமிர்ந்தால்
நிர்வாணமாக்கி தூக்கு,
தன் மகளே
சாதி மாறி மணம் புரிந்தால்
எரித்து சாம்பலாக்கும்
ஆதிக்க சாதிவெறி.

பெண் என்பதை விட
தாழ்த்தப்பட்டவள் என்பதற்காகவே
சிதைக்கப்பட்ட உடல்கள் எத்தனை?

சைடிஷ்சுக்கும்
சகோதரிக்கும்
வித்தியாசம் தெரியாமல்
குதறும் கொடூர குடிகாரர்களை
உருவாக்கும் டாஸ்மாக்குகள்.

திறக்கப்படும்
ஒவ்வொரு மது பாட்டிலுக்குள்ளும்
புதைக்கப்படும்
பெண்களின் இதயங்கள்.

ஊத்திக் கொடுக்க ஐ.ஏ.எஸ்.சு
காத்து நிற்க போலீசு
ஆணையும் பெண்ணையும்
எதிர் எதிராக்கி
அடக்கிச் சுரண்டும் மூலதன அரசு!

சட்டம், நீதி, மதம், அதிகாரவர்க்கம்
கலாச்சாரம், அரசியல், அரசாங்கம்
என இந்தக் கட்டமைப்பே
நமக்கு எதிராக இருக்கையில்
இதை ஒழிக்காமல் ஏது வாழ்க்கை?

சட்டை பழசானாலே
பழைய மாடல் என
தூக்கி எறியும் மனசு
சமுதாயம் குப்பையானால்
அதை வீசி எறியாமல்
எப்படி கிடைக்கும் புதுசு?

ஆணும், பெண்ணும்
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்தால்
உதவாத இந்த சமூக அமைப்பை
ஒழித்துக்கட்ட முடியும்.
சமத்துவ வாழ்வுக்கான
சுரண்டலற்ற சமூக அமைப்பை
உருவாக்க முடியும்!

அதற்கொரு அமைப்பாய்
திரள வேண்டும் என்கிறோம் நாங்கள்

நீங்கள்?

பேசலாம்!
நேரில் வாருங்கள்!

– தோழர் துரைசண்முகம்

சமூக விடுதலையே! பெண் விடுதலை!

குருதியில் மலர்ந்த மகளிர் தினம் மார்ச்-8.

திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும்

அரங்குக்கூட்டம்.

நாள்: 08.03.2015 ( ஞாயிற்றுக்கிழமை )

இடம்: செவனா ஹோட்டல், மத்திய பேருந்து நிலையம், திருச்சி

நேரம்: மாலை 6.30மணி

தலைமை
தோழர்.அம்சவள்ளி, பொதுக்குழு உறுப்பினர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

சிறப்புரை
கவிஞர் தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
தோழர் மீனாட்சி, வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை
தோழர் பவானி, மாவட்டபொருளாளர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர்! வாரீர்!

trichy-pevimu-poster

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க