Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
கைபேசி 9443260164
12-03-2015

பத்திரிக்கைச் செய்தி

அன்புடையீர் வணக்கம் !

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனித உரிமை என்ற இந்தச் சொற்றொடரை அமெரிக்க வல்லரசு முதல், ஏகாதிபத்தியத் தொண்டூழிய நிறுவனங்களான என்.ஜி.ஓக்களும் தமது கேடான நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வருவதாலும், ஒடுக்குவோர் ஒடுக்கப்படுவோர் என்று பிரிந்து கிடக்கும் மக்கட் சமூகத்தில், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளைக் குறிப்பதற்கு மனித என்ற பொதுச்சொல் பொருத்தமற்றதாக இருப்பதாலும், இந்தப் பெயர் மாற்றத்தின் அவசியம் குறித்து சில காலமாகவே நாங்கள் பரிசீலித்து வந்தோம். எனினும் சமீபத்திய சில நிகழ்வுகளின் காரணமாக தற்போது இந்தப் பெயர் மாற்றம் உடனடி அவசியமாகியிருக்கிறது.

மனித உரிமை என்ற பெயரில் அமைப்பு வைத்துக் கொண்டு, அதனைப் பலர் கேடாகப் பயன்படுத்துவதால், அரசு சார்ந்த அமைப்பான மனித உரிமை ஆணையம் தவிர்த்த மற்றவர்கள், தமது அமைப்பின் பெயரில் மனித உரிமை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என அரசு சார்ந்த அமைப்பான தமிழக மாநில மனித உரிமை ஆணையம், 2009-ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 2 -ல் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்தது. மனித உரிமை என்ற சொற்களைப் பயன்படுத்தி இனி யாரும் சங்கங்களைப் பதிவு செய்ய அனுமதி இல்லையென்றும், ஏற்கெனவே அவ்வாறு பதிவு செய்திருப்பவர்கள் 6 மாதங்களுக்குள் தங்கள் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்து கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மனித உரிமைக் கழகம் என்ற பெயரிலான ஒரு அமைப்பு, குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி போலீசில் புகார் செய்திருந்தது. அது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், “மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்து 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், பலர் இந்தப் பெயரில் அடையாள அட்டை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு வைத்துக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடும்போது, இவர்களுக்கு எதிராக அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை நீதிமன்றத்துக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதனை ஒட்டி இந்தப் பெயரைப் பயன்படுத்தும் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை போலீசு முடுக்கி விட்டுள்ளது.

மனித உரிமை என்ற பெயரில் பிழைப்புவாதிகள் பலர் கட்டைப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வருவது உண்மைதான் எனினும், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன்தான் நடக்கின்றன. இத்தகைய போலி மனித உரிமை அமைப்புகள் நடத்தும் விழாக்களில் உயர் போலீசு அதிகாரிகள், நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இருந்த போதிலும் உரிமை என்ற சொல்லையே கட்டோடு வெறுக்கும் போலீசுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பொன்னான வாய்ப்பாக அமைந்து விட்டது. அரசு நிறுவனம் போலப் பெயர் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது என்று குற்றம் சாட்டி இ.பி.கோ 170, 420 பிரிவுகளின் கீழ், எல்லா மனித உரிமை அமைப்புகள் மீதும் போலீசு வழக்கு தொடுத்து வருகிறது.

நுகர்வோர் ஆணையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருப்பதால்  நுகர்வோர் என்ற சொல்லைப் பயன்படுத்தி யாரும் அமைப்பு வைக்கக்கூடாது என்று கூற இயலுமா? மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பு அரசின் பெயரால் அமைக்கப்பட்டிருப்பதால், மனித உரிமை என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி யாரும் அமைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறும் நீதிமன்றத் தீர்ப்பும் அரசு உத்தரவும் கேலிக்கூத்தானவை.

அரசின் அத்தனை உறுப்புகளும் தாங்கள் அறிவித்துக் கொண்ட நோக்கங்களுக்கே எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பது நாடறிந்த உண்மை. ஆனால் அவற்றைக் கலைக்குமாறு எந்த நீதிமன்றமும் உத்தரவிட்டுவிடவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னால் பணிந்து சலாம் போடுகிறது நீதித்துறை. உச்ச நீதிமன்ற உத்தரவுகளையே கால் தூசுக்கு சமமாக மதிக்கும் போலீசு, இந்த உயர் நீதிமன்ற உத்தரவை மட்டும் சிரமேற்கொண்டு அமல்படுத்துகிறது. மனித உரிமைகளின் காவலன் என்று கூறிக்கொள்ளும் நீதித்துறை, அரசுடனும் போலீசுடனும் சேர்ந்து கொண்டு நடத்தும் இந்த ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில், மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரை மாற்றுவதென்ற முடிவு ஏற்கெனவே எம்முடைய பரிசீலனையில் இருந்து வருவதால், அந்தப் பெயரிலேயே தொடர்ந்து இயங்கி, இதற்காக வழக்குகளை சந்திப்பதும் சட்டப் போராட்டம் நடத்துவதும், காலத்தையும் உழைப்பையும் வீணடிக்கும் செயலாக இருக்கும் என்று நாங்கள் கருதுவதால்,

இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் People’s Right Protection Centre – PRPC என்ற பெயரில் இயங்குவது என்ற எமது முடிவை, இந்த அறிவிப்பின் வாயிலாக வெளியிடுகிறோம்.

நன்றி !

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்