Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஆசியாகுற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

-

2006 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வங்கதேசத்தின் சிறுகடன்கள் வழங்கும் கிராமீன் வங்கியின் நிறுவனருமான முகமது யூனுசை வரி ஏய்ப்பு செய்ததாக  குற்றம் சாட்டி வரிபாக்கியை கட்டச் சொல்லியிருக்கிறது, வங்கதேசத்தின் தேசிய வருவாய் வாரியம்.

முகமது யூனுஸ்
வரிஏய்ப்பு, ஏழ்மை ஒழிப்புக்கான பணத்தை குடும்பத்துக்கு கொடுத்தல், சட்டவிதி மீறல்கள் – முகமது யூனுஸ்

முன்னதாக, 2010-ம் ஆண்டில் கிராமீன் வங்கியில் நுண்கடனுக்காக திரட்டப்பட்ட பணத்தை வேறு லாபநோக்கத்திலான தனியார் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

மேலும் 2011-ல் அவரை கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலக்க உத்தரவிட்ட வங்கதேசத்தின் மத்திய வங்கி, அவரது நியமனம்  முறையான ஒப்புதலை பெறவில்லை என்றும், 1999 முதல் சட்ட விரோதமாக பதவியில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது. தான், பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக யூனூஸ் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகவே, அவர் பதவி விலகினார்.

ஏற்கனவே, யூனுஸ் கிராமீன் வங்கியைத் தனது சொந்த சொத்தாகப் பயன்படுத்துகிறார் என்றும், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கிறார் என்றும் வங்கதேசத்தில் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

நார்வே, சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளிடமிருந்து கிராமீன் வங்கி நிவாரணப் பணிக்காக பெற்ற சுமார் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 600 கோடி) பணத்தை கிராமீன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராமீன் கல்யாண் என்ற தனியார் நிறுவனத்திற்கு கைமாற்றியதாக நார்வே அரசுத் தொலைக்காட்சி 2010-ம் ஆண்டில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியது.

கிராமீன் கல்யாண் என்பது சிறுகடன்கள் வழங்கும் நிறுவனம் அல்ல. இது பணத்தை கைமாற்றி செலவழிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனம்.

“ஆஸ்லோவிலிருந்து செயல்படும் நார்வீஜிய உதவி நிறுவனமான நோராட் பராமரிக்கும் ஆவண காப்பகத்திலிருந்து இது தொடர்பான ஆவணங்களை நான் பெற்றேன்” என்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த அந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் டாம் ஹைன்மன்.

நார்வே அதிகாரிகள் இது குறித்த தமது குற்றச்சாட்டுகளை கிராமீன் வங்கிக்கு தெரிவித்ததும், 10 கோடியில் ஒரு பகுதியாக 3 கோடி டாலர்களை கிராமீன் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் அந்த ஆவணப் படம் தெரிவிக்கிறது. ”நுண்கடனில் சிக்கியவர்கள் (“Caught in Microdebt”) என்பது தான் அந்த ஆவணப்படத்தின் தலைப்பு.

“வங்கதேசம், இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நுண்கடன்கள் ஏழைகளுக்கு எப்படி பலனளித்தன என்று ஆய்வு செய்தேன். அதன்படி நுண்கடன்களின் மூலம் ஏழைகள் மேலும் மேலும் கடனுக்குள் தள்ளப்படுவதை கண்டறிந்தேன்” என்று பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ஹைன்மன். இந்த ஆவணப்படத்துக்கு பதில் சொல்லும் சப்பைக் கட்டுகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கின்றன.

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்
ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்

பணம் கைமாற்றப்பட்டிருப்பது பற்றி அதிருப்தி தெரிவித்து, ஏழ்மை நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட பணம் வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

யூனுஸ் தலைமை தாங்கும் கிராமீன் குழுமம் கிட்டத்தட்ட 30 நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் லாப நோக்கத்தில் இயக்கப்படும் நிறுவனங்களும், லாபநோக்கமற்ற நிறுவனங்களும் உள்ளன. லாப நோக்கமற்ற நிறுவனங்களின் பெயரில் நிதிதிரட்டி லாபமீட்டும் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியங்களை கிராமீன் குழுமம் ஏற்படுத்தி வைத்திருந்தது. இவ்வாறு, 30 நிறுவனங்களை வைத்து அம்பானி, டாடா போல சட்டத்தின் கண்ணைக் கட்டும் வலைப்பின்னலை உருவாக்கியிருந்ததன் நோக்கம் வேறு என்னவாக இருக்கும்?

அதே நேரம் யூனுஸ் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக தான் கருதவில்லை என்று ஆவணபட இயக்குனர் ஹைன்மெனும், நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்மும் கூறியிருந்தனர்.

ஏழை நாடுகளையும், மக்களையும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து அரசியல் ரீதியாக காயடிக்கும் வேலையினை ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. இப்போது அவர்களே தாங்கமுடியாத அளவுக்கு ஊழல் இருப்பதால்தான் ஏகாதிபத்திய பங்காளிகளான நார்வே போன்றோர் மெல்லிய தொனியில் யூனூசை கண்டிக்கின்றனர். கத்தரிக்காய் அழுகினால் குப்பைக்குத்தான் போக முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முகமது யூனூஸ் தனது பெயரிலான அறக்கட்டளைகளுக்கு 77 கோடி டாக்கா பணத்தை பரிசாக  கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது வங்கதேசத்தின் வருவாய் வாரியம் . இதற்கு 14 கோடி டாக்கா (வங்கதேச பணம் 1 டாக்கா = 0.80 இந்திய ரூபாய்)  வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக கூறி யூனுசுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

வறுமை ஒழிப்பு
வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய தீர்வுகள்.

யூனுஸ் பல நாடுகளில் நிகழ்த்திய உரைகளுக்காக கிடைத்த பெரும் பணம்,  அவருடைய புத்தகங்கள் விற்றதற்கான தொகை ஆகியவற்றின் மூலம் 2011-14 ஆண்டுகளில் அவருக்கு டாக்கா  பணம் 77 கோடி வருமானம் வந்திருக்கிறது. அதாவது, வங்கதேசம் மற்றும் பிற ஏழை நாடுகளின் வறுமையை விற்று சம்பாதித்த பணம் அது.

அதில் 72 கோடி டாக்கா பணத்தை ஆராய்ச்சி, சமூக ஆய்வுகளுக்கு பணம் கொடுக்கும் முகமது யூனுஸ் அறக்கட்டளைக்கும், 5 கோடி டாக்காவை யூனுஸ் குடும்பத்தினரின் நலனுக்கான யூனுஸ் குடும்ப அறக்கட்டளைக்கும் கொடுத்துள்ளார். இந்தப் பரிசுகளுக்கான வரித் தொகையாக 15 கோடி டாக்கா கட்ட வேண்டும் என்று வருவாய் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வங்கதேச சட்டத்தின்படி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை கொடுத்தால் வரி கட்டத் தேவையில்லை என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார், யூனுஸ்.

வரி ஏய்ப்பு இருக்கட்டும், ஏழைகளின் வாழ்வை துயர் துடைக்க வந்த யூனூஸ் சொந்த குடும்பத்தினருக்கு எப்படி 5 கோடி ரூபாயை பரிசாக வழங்கினார்? புத்தக விற்பனை, உரைகள் என்ற பெயரில் பணம் வந்தாலும் அதில் 5 கோடியை (இந்திய ரூபாய் சுமார் ரூ 4 கோடி) ஸ்வாகா செய்வதை என்னவென்று அழைப்பது? மேலும், ஏழை நாட்டின் ஏழை மக்களுக்கு நுண்கடன் கொடுப்பதாக நிதி திரட்டும் இவர், வரி இல்லா அறக்கட்டளைகளை ஏற்படுத்தி வரி செலுத்த மறுப்பதை என்னவென்று சொல்வது? கிராமீன் குழுமத்தின் எந்த நிறுவனத்துக்கு பணம் வருகிறது, எங்கு போகிறது, எப்படி செலவாகிறது இன்ன பிற பினாமி வேலைகள் எதற்காக?

ஏழ்மையை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் வங்கி துவங்கி பாவப்பட்ட வங்கதேச ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சி, நிவாரணப்பணிகளுக்கு என்று பெற்ற பணத்தை கையாடல் செய்த வட்டிக்கடைக்காரன்தான் முகமது யூனூஸ். குறுங்கடன்கள் என்கிற பெயரில் 30 லிருந்து 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் கிராமீன் வங்கி, கடனைக் கட்ட இயலாத ஏழை மக்களை அடியாட்களை வைத்து மிரட்டும். அப்படியும் கடனை கட்டாதவர்களின் உடைமைகளை பறித்தெடுக்கும். இந்த வங்கிக்கு பயந்து கடனை கட்ட முடியாத பலர் சொந்த ஊரைவிட்டே ஓடியிருக்கின்றனர்.

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான யூனூசுக்கு தான் 2006-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைத்தான் ஏழ்மையிலிருந்து ஏழைகளை கடைத்தேற்றிய மீட்பர் என்றும், தேவதூதர் என்றும் பலர் விதந்தோதுகின்றனர்.

யூனூசின் வங்கி மட்டுமல்ல பல பன்னாட்டு வங்கிகளும் தற்போது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டு ஏழமையை ஒழிக்க குறுங்கடன்களை வழங்க இறங்கியிருக்கின்றன. உலகளவில் உள்ள நிதிமூலதன கொள்ளையர்கள் ஏழை நாடுகளில் புகுந்து இவ்வாறு கடனளிப்பதன் காரணம் கிராமங்களின் சந்தையையும், பொருளாதாரத்தையும் சுருட்ட வேண்டியே. கூடவே அந்த கொள்ளைக்கு ஏழ்மையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு விளம்பரமும் செய்யலாம்.

ஏழ்மையை ஒழிப்பதாக கூறும் இத்தகைய குறுங்கடன்கள் ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி கொள்ளையடிக்கவே செய்கின்றன. இலட்சக்கணக்கான ஏழைகளின் இரத்ததை உறிஞ்சி தான் யூனூஸ் தனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

2011-ம் ஆண்டிலேயே யூனுசை அம்பலப்படுத்தி வெளியான வினவு கட்டுரையில், முதலாளித்துவத்தின் பிரச்சாரகர் திருவாளர் அதியமான் (உண்மையில் முதலாளித்துவம் என்றால் என்னவென்றே அறியாதவர்) இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

“முகமது யுனஸ் செயற்க்கறிய செயல் செய்யும் கர்ம வீரர். சுயநலமில்லாமல், ஏழைகளுக்குகாக முப்பது வருடங்களாக உழைப்பவர். சுயநலம் இருந்திருந்தால் அவர் படித்த படிப்பிற்கு, நியூ யார்க் நகர் வால் ஸ்ட்ரீட்டில் பல மில்லியன் டாலர் சம்பளம் தரும் நல்ல வேலையில் ஆரம்பத்திலேயே அமர்ந்து, இன்னேரம் பெரும் கோடிஸ்வரராகியிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யாமல், தம் நாட்டு மக்களுக்குகாக தொண்டாற்றுகிறார். அதை புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி எழுதுவது மடமை மற்றும் சிறுபிள்ளை தனம்.”

அதியமானுக்கு மேலாக கிழக்கு பதிப்பக பத்ரி யூனுசுக்கு வாய் வலிக்க பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். யூனூஸ் வறுமையை ஒழித்துவிட்டார்  என்று புகழ்ந்தும் எழுதியிருக்கிறார்.

“ஏழைமையை முற்றிலும் ஒழிக்க குறுங்கடன் போதாது என்றாலும்கூட பெரும்பாலான உலக ஏழைகளின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தும் எனலாம். அந்த வகையில் குறுங்கடன் முன்னோடியான முகமது யூனுஸுக்கும் அவரது நிறுவனமான கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.”

வணக்கம் நேயர்களே,

நான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.

இவர் என்ன செஞ்சாரு? என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்? கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் – யேசு, புத்தர், காந்தின்னு. எனக்குத் தோணுது.

இதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual – அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல – நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.”

புத்தர், ஏசு, காந்தி வரிசையில் யூனுசை சேர்த்திருக்கிறார் என்றால் பத்ரியின் உள்ளக்கிடக்கையை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

அதியமானுக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாது; பத்ரிக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்று நன்கு தெரியும். அதனால் அதனை நியாயப்படுத்தி சென்டிமெண்டாக வாதங்களை எப்போதும்  சலிக்காமல் முன்வைப்பார். அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார்;  அதிலும் இந்த முட்டாள்தனமான கனவை ஓயாமல் மொக்கை விக்கிபீடியா அல்லது சுவாமிநாதன்களின் லிங்குகளால் போட்டு நம்மை வதைக்கிறார்.

பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் கனவின் மாயைகளை மக்கள் உணர்ந்து கொண்டால் தனது வாழ்நிலை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை நன்கு உணர்ந்தவர். அதனாலேயே ஒரு கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக முதலாளிகளின் கருத்துக்களுக்காக வாதிடுவார். அதியமான் ஒரு முட்டாள் என்பதை அநேகர் ஏன் பத்ரி உட்பட ஒத்துக்கொண்டாலும், முதலாளித்துவ நாயகர்களை ஆதரித்து வாதாடும் பத்ரியை ஒரு ‘கிரிமினல் லாயர்” என்பதை அதியமான் உட்பட யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

இன்று யூனூசை வங்கதேச அரசு, அதிமயான் போற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள், பத்ரி மதிக்கும் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் தலையில் குட்டி அம்பலப்படுத்துகின்றன. யூனுஸ் நோபல் பரிசு வாங்கும் போதே பல்வேறு பத்திரிகையாளர்கள் இதனை மேற்குல ஊடகங்களில் கோடிட்டும் ஆழமாகவும் பேசியிருக்கின்றனர். அதை வைத்தும், பொதுவில் என்.ஜி.ஓக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏகாதிபத்தியங்களின் கருணை பேசும் சுரண்டல் திட்டங்கள், முதலாளித்துவ பொருளாதாரத்தின் இயங்கு முறை மற்றும் அதன் முரண்பாடுகள், இவை அனைத்தும் கலந்த ஒரு அறிவியல் பார்வையோடு வினவில் விரிவாக ஒரு கட்டுரை வந்தபோது யூனுசுக்கு ஆதரவாக பேசியவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள்.

குறுங்கடனை ஆதரித்து பத்ரி அவர்கள் ஒரு வலைப்பூவையே ஆரம்பித்துவிட்டார்.

அதியமான், பத்ரி மட்டுமல்ல, பொதுவில் 5000 ரூபாய்க்கு ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாயை பிச்சை போடுவதை மாபெரும் கருணை பாய்ச்சலாக கருதிக் கொள்ளும் கனவான்கள் கூட இந்த குறுங்கடன்களை பாராட்டி, விரைவில் குறுங்கடனை வாங்குவோரின் வீட்டில் தங்க பிஸ்கட்டு நிரம்பி வழியும் என்று நம்பினார்கள்.

ஆனால் இவ்வாறு குறுங்கடன்கள் வழங்குவதன் மூலமோ, என்.ஜி.ஓக்கள் பாணியிலோ ஏழ்மையை ஒழிக்க முடியாது. பெரும்பான்மை மக்களின் வறுமைக்கும், இழிநிலைக்கும் காரணம் இந்த சமூக அமைப்பு தான். அதாவது சுரண்டப்பட்டதால் ஏழைகள், சுரண்டியதால் பணக்காரர்கள். இதுதான் இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை.

இதை மாற்றியமைக்காத வரை ஏழ்மையை மட்டுமல்ல, ஏழைகளை மூலதனமாக்கி உயிர்பிழைக்கும் யூனூஸ், யூனூசுக்கு புரவலராக ஏகாதிபத்தியங்கள், ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளான என்.ஜி.ஓக்களையும் ஒழிக்க முடியாது.

மேலும் படிக்க: