Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா கரடிகள் - டாஸ்மாக் குரங்குகள் - மாண்புமிகு கழுதைகள்

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

-

வனங்களின் குடலுருவ வட்டமிடும் மூலதன வல்லூறுகள்

காடுகள் பேசும்.. மலைகள் எதிரொலிக்கும்
தமிழகமே
வனவிலங்கு
சரணாலயமாகத்தான்
இருக்கிறது.
தனியாக எதற்கு
கொடைக்கானலில் ஒன்று?

கொடைக்கானல் மலை
தமிழகமே வனவிலங்கு சரணாலயமாகத்தான் இருக்கிறது.

வார்டுக்கு வார்டு
திரியும்
‘அம்மா’ கரடிகள்
இலக்கு வைத்து கடிக்கும்
டாஸ்மாக் குரங்குகள்.
அம்மா அடித்துப் போட்டதை
இழுத்துப் போகும்
‘மாண்புமிகு’ கழுதைப் புலிகள்.
மணல் லாரியில்
ஆற்றைக் கொல்லும்
‘ரத்தத்தின் ரத்தமான’ நரிகள்
முதலமைச்சர் நாற்காலியில்
மூட்டை’ பூச்சி.
அத்தனைக்கும் காவலிருக்கும்
அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள்.
கால் வைக்கும் இடமெல்லாம்
காக்கி அட்டைகள்.

ஆட்கொல்லி விலங்குகளே
ஆளும் நாட்டில்
கரடி மட்டும் என்ன
கட்டிப் பிடித்து முத்தமா தரும்?

கொடைக்கானல்
மொத்தத்தில் இது மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும் கார்ப்பரேட் யுத்தம்!

மனிதனை
காப்பாற்றுவதாகச் சொல்லி
விலங்குகளைச் சுடுவது,
விலங்குகளை
காப்பாற்றுவதாகச் சொல்லி
மனிதர்களைச் சுடுவது,
மொத்தத்தில் இது
மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும்
கார்ப்பரேட் யுத்தம்!

நாட்டைக் காப்பாற்றவே
வக்கில்லாதவர்கள்
காட்டைக் காப்பற்றப்
போகிறார்களாம்,

ஆறு காப்பாற்றி வைத்திருந்த
மணலை
அள்ளித் தீர்த்தவன் எவன்?
மணல் காப்பாற்றி வைத்த
தண்ணீரை
உறிஞ்சிக் கொன்றவன் எவன்?

கொடைக்கானல்
மழை மேகங்களில் தாகம் தணிந்த மரங்களை மலைகளில் வெட்டி விற்றது யார்?

எட்டிப்பிடித்து
இலை நாவுகளால்
மழை மேகங்களில்
தாகம் தணிந்த மரங்களை
மலைகளில்
வெட்டி விற்றது யார்?

சந்தனப்பூக்களின் வாசமும்
தேக்கு மரங்களின் சுவாசமும்
மூலிகைச் செடிகளின் நேசமும்
நிறைந்து இறங்கிய அருவிகள்
கோக்,பெப்ஸியின் அமிலமும்
குடித்த சாராய பாட்டிலும் தீண்டி
விழுந்து துடிப்பது யாரால்?

தேன் கூடு கட்டி
பலாச் சுளை பிளந்து
வாசம் பரவிய கானகத்தே
வந்திறங்கிய
ஈரக்காற்று இருந்த இடத்தில்,
ரிசார்ட்டுகளை கட்டி
பாறை முகம் பிளந்து
நாசம் செய்தது யார்?

கொடைக்கானல்
நோட்டுவாசிகளால் கானகம் அழித்து விட்டு

நோட்டு வாசிகளால்
கானகம் அழித்துவிட்டு
கடைசியில்
காட்டு வாசிகள் மேல்
பழியைப் போட்டு
காடு மலை விட்டு துரத்துவது
கார்ப்பரேட்டு
நிலப்பறிப்புக்கே!

வழியில் கிடக்கும்
கொடியையும்
எடுத்து படரவிட்ட
கைகள்
எங்கள் கைகள்….

நெளியும்
பாம்புகள் கண்களும்
எங்களை எதிரியாகப்பார்த்ததில்லை…
அது தன் வழிப்போக
தாண்டிப் போகும்
சகவாசிகள் !
ஆதிவாசிகள்!

மரத்தின் கனிகளை
பறவைகளோடு
பங்குபோட்டுக் கொள்ளுமளவுக்கு
நாகரீகமானவர்கள்
வனவாசிகள்,
பச்சை மரத்தின்
ரத்தத்தை அறுக்குமளவுக்கு
மரத்துப்போகவில்லை
காட்டு வாசிகள்

காட்டுப் பூச்சிகளின்
உணர்ச்சி ஒலிகளை
ஒருபோதும் தடைசெய்ததில்லை
எங்கள் அதிகாரம்,
யானைகளை
பிச்சை எடுக்க வைக்க
எங்களுக்கு தெரியாது!

காடுகள் மலைகளை
கெள்ளி எடுத்து காசாக்கும்
கார்ப்பரேட்டுகளை விட்டுவிட்டு
சுள்ளிபொறுக்குபவர்களால்
சுற்றுச் சூழல் கெடும் எனில்
காடு சிரிக்கும்
மலைகள் சரியும்!
ஒரு
ஓணான் கூட
ஒத்துக் கொள்ளாது
மோடி
உயிரினச் சூழலைக் காப்பாற்றும்
திட்டமுள்ளவர் என்பதை!

மலைகளைத் தூக்க
காத்திருக்கின்றன
மோடியின் அனுமார்கள்
வனங்களின் குடலுருவ
வட்டமிடுகின்றன
மூலதன வல்லூறுகள்.

வனங்களின் வேர்கள்
எங்களிடம்
எங்களின் உறுதி
மலைகளிடம்
காடில்லையேல் நாங்கள் இல்லை
நாங்கள் இல்லையேல் காடு இல்லை

நன்றாக உணர்ந்த
கொடைக்கானலின் பிள்ளைகள்
கொண்டை ஊசி வளைவுகளை
போராட்டங்களிலும் காட்டுவார்கள்

– துரை.சண்முகம்