Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ - வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்

உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்

-

வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்” சார்பாக “ஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்! தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!” என்கிற தலைப்பின் கீழ் 30-03-2015 அன்று காலை 11 மணி அளவில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஆல்வின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுலவகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தோழர் ஆல்வின் தனது தலைமை உரையில்

தோழர் ஆல்வின்
தோழர் ஆல்வின் தலைமையுரை
  • லைட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் பேட்ஜ் வழங்க வேண்டும்.

  • வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • ஆட்டோக்கள் நிரம்பி வழியும் வேலூர் மாநகரத்தில் புதிய பெர்மிட் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

  • அநியாய வட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

தோழர் சரவணன் உரை
தோழர் சரவணன் உரை

“வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகளை அரசு அலுவலர்கள் செய்யாமல் தரகர்கள் மூலமாக செய்யப்படுவதால் ஆட்டோ தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது” என்பதை அம்பலப்படுத்தி தோழர் சரவணன் பேசினார்.

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் டெக்னீசியன்கள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய தோழர் வெற்றிவேல் செழியன்
சிறப்புரையாற்றிய தோழர் வெற்றிவேல் செழியன்

அவர் தனது உரையில்…

“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தராமல் அரசு அதிகாரிகளுடன் சமரசமாக நடந்து கொள்ளுமாறு வேலூர் மாவட்டத்தில் செயல்படும் பிற சங்கங்கள் தொழிலாளர்களை ஏமாற்றி வந்ததன் விளைவாக பெருவாரியான தொழிலாளர்கள் தற்போது ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்துள்ளனர்.

பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வலியுறுத்தி வரும் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இவர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறை ஆகிய அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் ஆட்டோ தொழிலாளர்களை சுரண்டுவதோடு பல்வேறு வகைகளில் அலைக்கழிக்கவும் வைக்கின்றனர்.

இத்தகைய அரசு நிறுவனங்களுக்கு எதிராக வர்க்க ஒற்றுமையோடு ஓரணியில் திரளும் போது மட்டுமே ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறமுடியும்!”

என்பதை தெளிவுபடுத்திப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்களை அணி திரட்டுவது என்ற வகையில் பிரச்சாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதிலிமிருந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களின் உரையும் இந்த ஆர்ப்பாட்டமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆட்டோ தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்தது. தங்கள் பகுதிகளிலும் இத்தகையதோர் சங்கத்தை கட்டியமைத்து இது போன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆர்வம் காட்டினர்.

 வேலூர் நகரை நிறைத்த ஆட்டோ ஓட்டுநர் சங்க சுவரொட்டிகள்
வேலூர் நகரை நிறைத்த ஆட்டோ ஓட்டுநர் சங்க சுவரொட்டிகள்

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்ஆட்டோ ஓட்டும் தொழிலாளியிடம்
வட்டி போட்டு கொள்ளையடிக்கும்
ஆட்டோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

தலைவிரித்தாடுது! தலைவிரித்தாடுது!
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்
தரகும் லஞ்சமும்
தலைவிரித்தாடுது! தலைவிரித்தாடுது!

உழைத்து பிழைக்கிறான் ஆட்டோ தொழிலாளி!
அத – உறிஞ்சி கொழுக்கிறான் ஆர்.டி.ஓ அதிகாரி!

தொழிலாளி பணத்தில் வயிறு வளர்க்கும்
காப்பீட்டு நிறுவன அதிகாரிகளே!
பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு
இழுத்தடிக்காமல் அலைக்கழிக்காமல்
காப்பீட்டு பணத்தை உடனே வழங்கு!

நேர்மையாக உழைத்து வாழும்
மக்களுக்காக சேவை செய்யும்
ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை
குற்றவாளிகளாக சித்தரிக்கும்
காவல் துறையை கண்டிக்கின்றோம்!

இல்லை இல்லை! இல்லவே இல்லை!
ஆட்டோ தொழிலாளி இல்லை என்றால்
மக்களுக்கான போக்குவரத்து
இல்லை இல்லை! இல்லவே இல்லை!

போக்குவரத்து இல்லாத
சாலைகள் எதுவும் இல்லாத
அனைத்து கிராம மக்களுக்கும்
போக்குவரத்தே ஆட்டோதான்!

நேரம் காலம் இல்லாமல்
நல்லது கெட்டது எல்லாத்துக்கும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன்
ஆட்டோ ஓட்டும் தொழிலாளியே!

மத்திய மாநில அரசுகளே!
மானியம் வழங்கு! மானியம் வழங்கு!
ஆட்டோக்களின் எரிபொருளுக்கு
மானியம் வழங்கு! மானியம் வழங்கு!

ஆட்டோ தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சி
கொழுத்துத் திரியும் அதிகாரிகளுக்கு
பாடம் புகட்டுவோம்! பாடம் புகட்டுவோம்!
சங்கமாக ஒன்று சேர்ந்து
பாடம் புகட்டுவோம்! பாடம் புகட்டுவோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்கும்
தனியார் மயம் தாராள மயம்
உலக மயம் என்கின்ற
மறுகாலனியாக்க கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

தகவல்:

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்
வேலூர் மாநகர் மாவட்டம்
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி