போலி கல்வி நிறுவனம் சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு! கட்டிய பணத்தையும் – சான்றிதழையும் திருப்பிக் கொடு!
’குறுகியகாலத்தில் வேலை’ என்று மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்திருக்கிறது சாய் இண்டர்நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆப் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற 420 கல்வி நிறுவனம்.

ரூபாய் 1500 கொடுத்தால் கிடைக்கும் ஐ.எஸ்.ஓ சான்றிதழை முறைகேடாக வாங்கி வைத்துக்கொண்டு ஆண்டுக்கு சுமார் 350 மாணவர்களிடம் சில கோடிகளை சுருட்டியிருக்கிறார்கள்.
30 அடி நீள கட்டிடத்தில் தடுப்புகளை வைத்து 5 வகுப்புகள், செய்முறைக்கான வசதி இல்லை, முறையான பட்டம் பெற்ற / அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை. சத்தியா என்ற முன்னாள் மாணவர்தான் துறைத்தலைவர் (HOD). இவரும் அந்த வேலையைப் பார்ப்பதில்லையாம். ஆள்பிடிப்பது, கல்லூரியின் தரம் பற்றி கேட்கும் மாணவர்களை மூளைச் சலவை செய்வது, ஏற்காத மாணவர்களை “எங்க அண்ணன் கலெக்டர், நான் நினைத்தால் எதையும் செய்வேன்” என்று மிரட்டுவது போன்ற அடியாள் வேலையைத்தான் செய்கிறாராம். காலையில் 5 நிமிடம் தாமதமானாலும் ரூபாய் 100, ட்ரெய்னிங் செல்லாத மாணவர்களுக்கு 5000, 80 ரூபாய் மதிப்புள்ள செய்முறை கருவிகளுக்கு 800 என அபராதம் விதித்து பணம் பறிக்கிறார்கள்.
இவைகளை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து மாணவர்கள் போராடத் தொடங்கினார்கள். கிணறு வெட்ட புதம் கிளம்பிய கதையையாக, இந்த கல்வி நிறுவனத்தின் உண்மை முகம் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வகுப்புகளை நடத்த இந்த நிறுவனம் நேரடியாக அரசிடம் அனுமதி பெறவில்லை. இதுபோன்ற சிறிய இன்ஸ்டிட்யூட்களுக்கு அரசு அங்கீகாரமும் கொடுக்க முடியாது. இதற்குறிய அடிக்கட்டுமான வசதிகள் இருக்க வேண்டும், அதனால் இந்த பாடப்பிரிவுகளை அரசு பொறியியல் கல்வி நிறுவனங்களும், பாலிடெக்னிக்குகளும், பெரிய கல்வி நிறுவனங்களும்தான் நடத்துகின்றன.
இது தவிர சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போன்றவை தொலைதூரக்கல்வி மூலம் இந்த பாடப்பிரிவுகளை கற்றுக்கொடுக்கின்றன. இதற்கு ஆண்டுக் கட்டணமாக ரூபாய் 8000 மட்டுமே வாங்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) மட்டுமே வகுப்புகள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பவர்கள் வாரம் ஒரு முறை நேரடியாக செல்ல முடியாது என்பதால் அந்தந்த மாவட்டப்பகுதிகளிலேயே ’’படிக்கும் மையம்’’(study centre) உருவாக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட படிப்பு மையம் ஒன்றிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இந்த சாய் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருவது அம்பலப்பட்டுள்ளது.
இந்த உண்மை தெரிந்து மாணவர்கள் கேட்டபோது 420 வினோத் முதலில் எதை எதையோ சொல்லியிருக்கிறார். இந்த முறை மாணவர்கள் ஏமாறாததால் “தொலைதூரக்கல்விதான் ஆனால் ஆன் கேம்பஸ்” என்று மாணவர்களுக்கு புரியாத மொழியில் வகுப்பெடுத்திருக்கிறார்.
“இனியும் இந்தப் போலி நிறுவனத்தில் படிக்க முடியாது. கட்டிய பணத்தையும், சான்றிதழையும் கொடு” என்று கேட்டுப் போராடும் மாணவர்களை, 10 நாள் இடை நீக்கம் செய்வது, சைதாப்பேட்டை போலீசை ஏவி மிரட்டுவது, பெற்றோருக்கு போன் செய்து மிரட்டுவதோடு, “நாங்கள் மட்டும் இப்படி நடத்தவில்லை. எங்களைப் போன்று பல நிறுவனங்கள் தொலைதூரக்கல்வி மூலம் தான் நடத்துகின்றன, உங்களால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக்கொள்ளுங்கள்” என்று திமிராக சவால் விடுகிறார் சாய் நிறுவன முதலாளி.
ஓடி ஒளிய வேண்டிய இந்த 420 க்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்த மாணவர்கள், இந்த அரசு தீவிரமாக அமுல்படுத்தி வரும் கல்வி தனியார்மயக் கொள்கைதான் இவரை இப்படி பேச வைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
சமீபத்தில் யூ.ஜி.சி எனும் பல்கலைக்கழக மானியக் குழு, “தொலைதூரக் கல்வி மூலம் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வகுப்புகளை நடத்தக்கூடாது, அப்படி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தது. ஆனால் தமிழகம் முழுவதும் போலியாக செயல்பட்டு வரும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு அங்கீகாரம் இல்லாமலும், யூ.ஜி.சி விதிமுறையை மீறியும் போலியாக கல்வி நிறுவனம் நடத்தி கொள்ளையடித்து வரும் சாய் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும்.
கல்வி சான்றிதழையும், கல்விக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 15.4.2015 அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், இதுபோன்று நடத்தப்பட்டு வரும் அமிர்தா உள்ளிட்ட கேட்டரிங் இன்ஸ்ட்யூட் மாணவர்களும், பெற்றோர்களும், உழைக்கும் மக்களும், தரமான கல்வியில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ள வேண்டும் என கோருகிறோம்.
ஆர்ப்பாட்டம்
15.4.2015 காலை 11 மணி வள்ளுவர்கோட்டம்.
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு