Tuesday, April 22, 2025
முகப்புசெய்திவேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்

வேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்

-

வேதாரண்யம் வட்டம் கத்திரிப்புலத்தில் வசித்து வருபவர் சித்ரா. அவரது கணவர் வெளிநாடு செல்வதற்காக தேத்தாக்குடியைச் சேர்ந்த வேதமூர்த்தி என்பவரிடம் ரூ 20,000 பணத்தையும் கடவுச்சீட்டையும் கொடுத்திருக்கிறார். வெளிநாடு அனுப்ப காலம் தாழ்த்தியதால், பஞ்சாயத்து பேசி கடவுச்சீட்டை திரும்ப வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

10-police-1பணத்தை உடன தருவதாகச் சொல்லியிருக்கிறார், வேதமூர்த்தி. ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் பணம் தராமல் ஏமாற்றியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பணத்தை கேட்பதற்காக சித்ரா வேதமூர்த்தி வீட்டுக்குச் சென்ற போது அவரை ஆபாசமாக பேசி தாக்க வந்திருக்கிறார், வேதமூர்த்தியின் தம்பி சோமசுந்தரம். “உனக்கு பணம் கொடுக்க முடியாது. உன்னால் என்ன வேண்டுமானாலும் செய்து பார்” என்று மிரட்டி அனுப்பியிருக்கின்றனர்.

பணத்தை மீட்டு தருமாறும், தன்னை ஆபாசமாக பேசி தாக்க வந்த சோமசுந்தரத்தை தண்டிக்குமாறும் காவல் துறைக்கு மனு கொடுத்திருக்கிறார் சித்ரா. இதைத் தொடர்ந்து ஆரம்பமானது புதிய சித்திரவதை.

அன்று முதல் செல்லத்துரை என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அவருடைய செல்பேசி——- எண்ணிலிருந்து சித்ராவை பலமுறை அழைத்து, அவரை தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லா விட்டால் பணத்தை வாங்கித் தர முடியாது என்றும் கூறியிருக்கிறார். பயந்து போன சித்ரா காவல் நிலையம் போவதையே தவிர்த்து விட்டாலும், தொடர்ந்து தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் செல்லத்துரை.

2014 டிசம்பர் மாதம் உறவினர்கள் உதவியோடு, அவரது ஆபாச பேச்சுக்களை பதிவு செய்து வழக்கறிஞரிடம் கொடுத்து வழக்கு போடச் சொல்லியிருக்கிறார் சித்ரா. காவல்துறை மீது வழக்கு போட முடியாது என்று ஒரு வழக்கறிஞர் மறுத்து விட, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், வேதாரண்யம் சார்பு நீதிமன்ற நீதிபதிக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கேட்டிருக்கிறார் சித்ரா.

இதைத் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சித்ராவிடமிருந்து வாக்குமூலம் பெற்று ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால், செல்லத்துரை விசாரிக்கப்படவில்லை.

இந்நிலையில், செல்லத்துரைக்கு ஆய்வாளராக பதவி உயர்வு கொடுக்கும் நடைமுறை தொடங்கி விட்டதாக கேள்விப்பட்ட சித்ரா மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மனு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு என்று தொடர்ந்து போராடி வருகிறார் சித்ரா.

நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் சிலர் கூறி வருகின்றனர். அந்த சட்டத்தினை நிலைநாட்டக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் பல காவல்துறை அதிகாரிகளும் தங்களது கண்ணியம் கட்டுப்பாட்டை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை நீதிபதி கங்கூலி விவகாரம், சென்னை காவல் துறை உதவி ஆணையர் தொலைபேசி உரையாடல் வெளியானது இவற்றிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

இதற்கு வலு சேர்க்கும் மற்றொரு நிகழ்வாக இருக்கும் செல்லத்துரை புகார் கொடுத்த பெண்ணிடம் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறிய ஆடியொ பதிவு வாட்ஸ் அப்பில் வெளிவந்து காவல் துறையின் யோக்கியதையை நாறடித்தது.

ஆனாலும் காவல்துறையின் அனைத்து கட்டமைப்பும் பொறுக்கி செல்லதுரையைப் பாதுகாக்கிறது; ஆய்வாளர் பதவி வழங்கி அழகு பார்க்கத் துடிக்கிறது.

காவல்துறை மக்களுக்கானது இல்லை; மக்கள் விரோத கிரிமினல்கள்தான் காவல்துறை என்பதை அம்பலப்படுத்தி வீதியில் நிற்கிறார் பாதிக்கப்பட்ட பெண். காவல்துறை மக்களால் தட்டிக்கேட்கப் பட்டால்தான் அதன் மக்கள் விரோத செயல்களை தடுக்க முடியும்.

இந்நிலையில் மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊருக்கு ஊர் தாமாகவே அமைப்பாவதே தீர்வு என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

 

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க