Saturday, April 19, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்உ.பி.மாநிலம்: பார்ப்பன - பனியா அக்கிரகாரம் !

உ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம் !

-

சாதி என்பது புனிதம் – தீட்டு குறித்த நம்பிக்கை மட்டுமல்ல, இத்தகைய நம்பிக்கைகளின் துணை கொண்டு சமூக மேலாதிக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு. அந்த ஏற்பாட்டின் மூலமாக சமூகத்தின் மீது கட்டாயமாக வேலைப் பிரிவினையைத் திணிக்கும் ஒரு விதி. அந்த விதியின் பெயரில் உற்பத்தி சாதனங்கள் மீதான உடைமையையும், அரசியல் அதிகாரத்தையும் தம் வசம் வைத்துக் கொள்வதற்கு ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“நான் பிறவி அறிவாளி. எனது வாழ்க்கையை இட ஒதுக்கீடு சீர்குலைத்து விட்டது” என்ற ஆதிக்க சாதி திமிர் பிடித்த பதாகைகளோடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

தேர்தல் ஜனநாயகத்தின் மூலமும் தொழில்மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் மூலமும் சாதி என்ற நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பது இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரின் கருத்து. இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் வெற்றிகளின் மூலம் சாதி ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பன போன்ற பல நம்பிக்கைகள் இதிலிருந்ததுதான் வளர்கின்றன.

இதனை ஜனநாயக அரசமைப்பு என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் கூட, இந்த ஜனநாயக அரசு இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தி விடவில்லை என்பதையும், சாதி உள்ளிட்ட ஜனநாயக விரோத நிறுவனங்களைப் புதுப்புது வடிவங்களில் வலுப்பெறவே செய்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு ஒப்புக் கொள்பவர்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களோ, ஒரே முகாமைச் சேர்ந்தவர்களோ அல்ல.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்தவரை, தமக்கெதிரான சாதி ஆதிக்க வன்கொடுமைகள் காரணமாகவும், மதச் சிறுபான்மையினர் தமக்கெதிரான இந்துவெறித் தாக்குதல்கள் காரணமாகவும் இந்த ஜனநாயகத்தின் மீது நியாயமாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

பார்ப்பன, பனியா, ஆதிக்க சாதியினரோ இட ஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், பிறப்பின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும் இந்த நாட்டில் தகுதி-திறமைக்கு மதிப்பில்லை என்றும், சாதி அரசியலின் மூலம் தங்களது ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாகவும் புலம்புகிறார்கள். இதன் காரணமாகத்தான் தங்களைப் போன்ற திறமைசாலிகள் அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்.

பிறப்பின் அடிப்படையில் சொத்துடைமை, கல்வி, சமூக அதிகாரம் உள்ளிட்ட பலவற்றையும் வாரிசுரிமையாகப் பெற்று அனுபவித்துக் கொண்டே, சாதி என்ற நிறுவனத்தின் பயனைத் எள்ளளவும் அனுபவிக்காதவர்கள் போலவும், சாதி அடையாளத்தைத் துறந்தவர்கள் போலவும் இவர்கள் பாவனை செய்கிறார்கள். இவர்களது முகவிலாசத்தை அம்பலப்படுத்தும் வகையிலான விவரங்களை, அண்மையில் எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தருகிறது. (Caste and Power Elite in Allahabad, Ankita Agarwal, Jean Dreze, Aashish Gupta, EPW, Feb 7, 2015)

இந்தக் கட்டுரை உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளில் உள்ள 1852 நபர்களுடைய பெயர்களைத் திரட்டி, அவர்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வு செய்திருக்கிறது. அலகாபாத் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நீதிமன்றங்கள், தொழிற்சங்கங்கள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் பதவியிலிருப்பவர்கள் யார் யார் என்பதை இக்கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.

06-job-opportunities-cartoonஉ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த ஆண்கள்தான் 75% பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இந்த 21% க்குள்ளும், வெறும் 12% மட்டுமே உள்ள பார்ப்பன, காயஸ்தா சாதியினர்தான் 50% பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

அரசுப் பதவிகளில் மட்டுமல்ல, அலகாபாத் நகரில் உள்ள தன்னார்வக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் 80%, பார் அசோசியேசனின் தலைமையில் 90% பேர் முன்னேறிய சாதியினர்தான் இருக்கின்றனர். பிரஸ் கிளப்பின் நிர்வாகிகளோ 100% பார்ப்பன மற்றும் காயஸ்தா சாதியினர் என்கிறது இந்த ஆய்வு. விளம்பர நிறுவன உரிமையாளர்கள் 55%, மருத்துவர்கள் 39%, மாணவர் சங்கத் தலைவர்கள் 54%, போலீசு அதிகாரிகள் 58%, ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் 56%, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 75%, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 58% என்று நீள்கிறது இந்தப் பட்டியல்.

உயர் பதவிகளில் மட்டுமல்ல, வேலைவாய்ப்பு உத்திரவாதமும், நல்ல சம்பளமும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர், செக்யூரிட்டி போன்ற அதிகத் திறமை தேவைப்படாத பணிகளிலும் முன்னேறிய சாதியினர் 36% இருக்கின்றனர் என்றும், அதேநேரத்தில், கடைநிலை ஊழியர்களிலேயே கடுமையான உடலுழைப்பைக் கோருகின்ற வேலைகளில் இவர்களைக் காண முடிவதில்லை என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை அங்கே தம் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டதைப் பயன்படுத்தாதவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும்தான். மற்ற ஆதிக்க சாதியினர் அனைவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை மிகவும் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, சாதிப் பட்டத்தை பயன்படுத்தாதவர் என்றாலே, அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதும் நிலையே சமூகத்தில் நிலவுகிறது.

ஆனால், உத்தர பிரதேசமாக இருக்கட்டும் அல்லது பெரியார் இயக்கத்தின் காரணமாக சாதி வால் துண்டிக்கப்பட்ட தமிழகமாக இருக்கட்டும்; முன்னேறிய சாதியினரைப் பொருத்தவரை அவர்களெல்லோரும் தம்மைச் சாதி பாராட்டாதவர்கள் என்றே கூறிக்கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் இவர்கள், சாதியைச் சொல்லி சலுகை பெற விரும்பாதவர்களாகவும் தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளையும் பெருமளவில் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?

மற்ற சாதிகளில் தகுதியான நபர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று அவர்கள் உடனே இதற்கு விளக்கமளிப்பார்கள். உண்மை அப்படியில்லை. உ.பி. மாநிலத்தின் பட்டதாரிகளில் 50% பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் முஸ்லிம்கள். இருந்த போதிலும் வேலைவாய்ப்பில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், அவர்களுடைய பின்தங்கிய சமூகப் பின்புலமோ, தகுதிக்குறைவோ அல்ல. மாறாக, அவர்களை உள்ளே நுழைய விடாமல் மவுனமான முறையில் முன்னேறிய சாதியினர் காட்டும் எதிர்ப்பு.

ஏற்கெனவே அதிகாரமிக்க பதவிகளில் நிரம்பியிருக்கும் முன்னேறிய சாதியினர், ஒடுக்கப்பட்ட சாதியினரைத் தங்கள் உலகத்துக்குள் அவ்வளவு சுலபமாக அனுமதித்து விடுவதில்லை. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் என்று மட்டும் இதனை நாம் புரிந்து கொள்ளக் கூடாது. தங்களது ஆதிக்கம் தொடருவதை உத்திரவாதம் செய்து கொள்வதன் வழியாக, இந்தப் படிநிலைச் சாதி அமைப்பு குலைந்து விடாமல் பாதுகாக்கிறார்கள்.

இதனைச் சாதிப்பது முன்னேறிய சாதியினரின் சாதி ரீதியான வலைப்பின்னல். இத்தகைய சாதி அபிமானம் என்பது முன்னேறிய சாதியினருக்கு மட்டும் உரியதல்ல என்பது உண்மைதான். எனினும், ஏற்கெனவே சமூக ஆதிக்கத்தில் இருக்கும் சாதிகள் என்ற முறையில், தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த வலைப்பின்னல் நவீன சமுதாயத்துக்கு ஏற்ற வடிவில், சாதிச் சங்கம், கூட்டுறவு, வங்கிகள், டிரஸ்டுகள் போன்ற வடிவங்களில் இருக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் இது அமைப்பு என்ற ஒன்றே தனியாகத் தேவைப்படாத சுயசாதி அபிமான உள்ளுணர்வாக இருப்பதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் போல இதனை வெளிப்படையாக அடையாளம் காண முடியாது.

இந்த வலைப்பின்னலின் மூலம் முன்னேறிய சாதியினர் தங்களுடைய ஆட்களுக்கு வழங்கிக் கொள்ளும் இட ஒதுக்கீடு, ஒருவகை சங்கேத மொழியினால் ஆனது. சட்டபூர்வமான இட ஒதுக்கீட்டு ஏற்பாடு எதுவுமின்றி, தாங்கள் வகிக்கின்ற பதவி மற்றும் அதிகாரத்தின் துணையைக் கொண்டே தமது சாதியின் ஆதிக்கத்தை இவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கேற்ற, பல சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான வழிமுறைகளை இவர்கள் ஒரு கலையாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மார்ச் 2011-ல் மைய அரசு வெளியிட்டுள்ள விவரப்படி, மைய அரசின் துறைச் செயலாளர்கள் 149 பேரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒருவர்கூடக் கிடையாது. பழங்குடியினத்தவர் 2 பேர். கூடுதல் செயலர்கள் 108 பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் தலா 2 பேர் மட்டும்தான்.

நாடு முழுவதும் உள்ள மையப் பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 43.5% நிரப்பப்படவில்லை. சட்டப்படி இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் அரசு வேலைவாய்ப்புகளிலேயே இதனை அவர்களால் சாதிக்க முடிகிறது என்றால், தனியார் துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

தனியார் நிறுவனங்களில் பதவியிலிருக்கும் முன்னேறிய சாதியினர், வேலைக்கான விண்ணப்பப் படிவங்களிலிருந்தே விண்ணப்பிக்கும் நபரின் சாதியைத் தெரிந்து கொள்ள முடிவதால், மற்றவர்களுக்கு அங்கேயே கதவு மூடப்பட்டு விடுகிறது. தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் அல்லாத மற்ற வேலைகளுக்கு தலித் மற்றும் முஸ்லிம்கள் விண்ணப்பித்தால் அதற்குப் பதிலே வருவதில்லை என்று கூறுகிறது இந்த ஆய்வு. உ.பி.யில் மட்டுமல்ல, ஏறத்தாழ நாடு முழுவதுமே இதுதான் நிலைமை.

உ.பி.யை விட்டுத் தள்ளுவோம். இந்தியாவின் 40 பெரிய ஊடக நிறுவனங்கள் ஒன்றில்கூட, குறிப்பிட்டு சொல்லத்தக்க பதவி எதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கூடக் கிடையாது. 71% பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர்தான் என்கிறது 2006-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

ஆனால், உ.பி. அரசுப் பணிகளிலேயே துப்புரவுத் தொழிலாளிகளில் 40% தாழ்த்தப்பட்டவர்கள். மலம் அள்ளுவோர் 100% தாழ்த்தப்பட்டவர்கள். அலகாபாத் நகரின் ரிக்சா ஓட்டிகளில் 50% தாழ்த்தப்பட்டவர்கள். மாநகராட்சியில் இறந்து போன விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்போர் 100% பேர் “டோம்” என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர். டோம் என்பது சாதியின் பெயராக மட்டுமின்றி, அந்தப் பணியாளர்களுக்குரிய பெயராகவே அங்கே புழங்கப்படுகிறது.

அதாவது, செத்த மாட்டைத் தூக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செய்யவேண்டிய தொழில் என்று மிகவும் இயல்பாக இந்த ஜனநாயக சமூகத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

போலோ விளையாட்டை ராஜ்புத் சாதிக்காரர்களைத் தவிர, பிறர் விளையாடக்கூடாது என்று அந்தச் சாதியைச் சேர்ந்த தனது பள்ளி நண்பர்கள் இயல்பாகவே கருதிக் கொண்டிருந்தனர் என்றும், தன்னை விளையாட அனுமதிக்கவில்லை என்றும் ராஜஸ்தானில் தான் பெற்ற அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு பத்திரிகையாளர். 2008- ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் 11 உறுப்பினர்களில் 7 பேர் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியபோது, அது தற்செயலானது என்று அலட்சியமாகப் பதிலளித்தார் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர். அவரும் ஒரு பார்ப்பனர் என்பது இன்னொரு தற்செயல் நிகழ்வு.

இயல்பானவை அல்லது தற்செயலானவை என்று கருதப்படுவனவற்றின் பட்டியல் இதோடு முடியவில்லை. 2012-ம் ஆண்டில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் முதல் 46 கோடீசுவர தொழிலதிபர்களில், 28 பேர் பனியா, மார்வாரி சாதிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பார்சி, சிந்தி, பார்ப்பனர்கள். ஒரு சிலர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். முஸ்லிம் ஒருவர். தாழ்த்தப்பட்டோர் யாரும் இல்லை. இந்தியாவின் முதல் பத்து கோடீசுவரர்களில் 8 பேர் பனியாக்கள்.

தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்த முதல் 1000 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடைய மொத்த இயக்குநர்களின் (போர்டு உறுப்பினர்களின்) எண்ணிக்கை 9052. இவர்களில் பார்ப்பனர்கள் 4037, வைசியர்கள் 4167, சத்திரியர்கள் 43, பிறர் 137, பிற்படுத்தப்பட்டோர் 346, தாழ்த்தப்பட்டோர் 319 பேர். அதாவது 93% பேர் முன்னேறிய சாதியினர்.

கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் தொழில்முறை இயக்குநர்களிலும் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களாகவும் பனியாக்களாகவும் இருப்பதை வாரிசுரிமை, தற்செயல், திறமை என்பன போன்ற பல சொற்கள் மூலம் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சாதியை ஒரு மூடுண்ட வர்க்கமாக அவர்கள் பேணுகிறார்கள் என்பதே உண்மை.

தரகு முதலாளிகளாகவும், அதிகார வர்க்கமாகவும் தங்கள் சாதிக்காரர்களே தொடர்ந்து நீடிக்கும்போது மட்டும்தான், தமது வர்க்க நலனையும் ஆதிக்கத்தையும், (அதாவது தேசிய நலனை) பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர்களுடைய உள்ளுணர்ச்சியே அவர்களுக்குச் சோல்கிறது. அர்ச்சகனாகப் பார்ப்பான் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தங்களுடைய நலனுக்காக செய்யப்பட்ட ஏற்பாடல்ல, கோயிலின் நலன் கருதியும் சமூகத்தின் நலன் கருதியும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்று பார்ப்பனர்கள் கூறும் விளக்கத்தைப் போன்றதுதான் இது.

இது புரிந்து கொள்ளக் கடினமான விடயமல்ல. தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஒரு தாழ்த்தப்பட்டவரோ முஸ்லிமோ குடியமர்ந்து விடக்கூடாது என்று எண்ணும் ஆதிக்க சாதி மனோபாவம், தனது அலுவலகத்தில் தனக்குச் சமமான ஒரு பதவியில் அவர்கள் அமர்வதை சகித்துக் கொள்ளுமா? தன்னுடைய தொழிலில் ஒரு பங்குதாரராகவோ, இயக்குநர் குழுமத்தில் ஒரு இயக்குநராகவோ அவர்களைச் சேர்த்துக் கொள்ளுமா?

இந்தச் சாதிய மனோபாவம் பழமைவாதக் கட்டுப்பெட்டித்தனமல்ல. தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பார்ப்பன, பனியா ஆதிக்க சக்திகள் நடத்தும் அழுகுணி ஆட்டம். இட ஒதுக்கீட்டுக் கொள்கை தவறு என்றும், தகுதி – திறமை – போட்டி அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரம்தான் வேலை வாய்ப்புகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சமூகத்துக்கு உபதேசம் செய்யும் இந்த யோக்கியர்கள், எல்லா இடங்களிலும் புழக்கடை வழியாகத் தம் சாதிக்காரனை நுழைத்து போட்டியையும் திறமையையும் முறியடிக்கிறார்கள்.

சமத்துவம் கிடையாது, சமூகம் முழுமைக்கும் பொதுவான ஒரு நீதியோ விதியோ கிடையாது – என்பதுதான் சாதியமைப்பின் விதி. ஜனநாயக விழுமியங்களின்படி இது ஒரு முறைகேடு, ஊழல். அந்த வகையில் தொழில்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள் உள்ளிட்ட அரசியல் பொருளாதார சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதென்பதுதான் இந்த சமூக அமைப்பின் முதற் பெரும் ஊழல்.

சவுதாலாவுக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி என்ற அயோக்கியத்தனமும், குஜராத் கொலையாளிகள் விடுவிக்கப்படுவதும், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஊடகங்கள் காவடி எடுப்பதும், உச்சநீதி மன்றம் முதல் ஊடகங்கள் வரை சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனத் தரகன் செல்வாக்கு செலுத்துவதும், இந்த நாட்டையே அம்பானி, அதானி தேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எதிர்ப்பின்றி நிறைவேறுவதற்கும் அடிப்படையாக அமையும் ஊழல் இதுதான்.

– அஜித்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________