சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி சென்ற ஒவ்வொருவருக்கும் தனிபட்ட காரணங்கள் இருந்தாலும் தமிழர்களில் பல பேருக்கு ஒற்றுமையான ஒரு காரணம் தங்கச்சி என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பாசத்திற்குரிய சென்டிமெண்டாக இருக்கும் இந்த தங்கச்சி விவகாரம் நிஜத்தில் பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை எனலாம். சீர், வரதட்சணை, முறை என்று ஒன்றும் குறைவைக்க கூடாது என்றால் சிங்கப்பூருக்கு வண்டி ஏற வேண்டும். அப்படி சென்றவர்களில் ஒருவர் தனபால்.

தினமும் அரைப் பட்டினி வயிற்றோடு பாடுபட்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கரை சேர்த்த களைப்பில் பெற்றோர்கள் இருந்தனர். மீதமுள்ள கடைக்குட்டி பெண் கல்யாணத்திற்காவது மகன் பொறுப்பேற்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் சோர்ந்து போன தனபாலும் இறுதியில் கைக்கெட்டும் சொர்க்கமான சிங்கப்பூருக்கு சென்றார்.
இவ்வளவு வறுமையிலும் அவர் பட்டப்படிப்பை முடித்தது எப்படி? பகுதி நேரமாக வேலை செய்து படிப்புக்கான செலவு தேவைகளை ஏற்பாடு செய்து கொண்டார். இத்தகைய பொறுப்புணர்வே அவரை சிங்கப்பூரை நோக்கியும் ஓட வைத்தது.
எதிரே நின்ற தங்கைக்காக சிங்கப்பூர் சென்று ஏழு வருட கட்டிட தொழிலாளியாக பணி முடித்து பிறகு ஊர் திரும்பி தங்கைக்கு மட்டுமல்ல தானும் மணமுடித்து மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். இனி சிங்கப்பூர் அனுபவம் குறித்து அவரே பேசுகிறார்.
எப்ப சிங்கப்பூர் போனீங்க?
“1998-இல் சிங்கப்பூர் போனேன். ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவேன். 2005-ல நிரந்தரமா வந்துட்டேன்.”

இரண்டு வருசத்துக்கு ஒரு தடவதான் விடுமுறையா?
“வருசத்துக்கு ஒரு தடவ விடுமுறை உண்டு. வந்து போகலாம். ஆனா ஒரு வருசத்துக்கு ஒரு தடவ விசாவ புதுப்பிக்கணும். அதுக்கும், வந்து போகும் செலவு கணக்கும் பாத்தா நம்ம சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகாது.”
நீங்க சிங்கப்பூர் போக எவ்வளவு செலவாச்சு?
“சிங்கப்பூருக்கு போன செலவு அத்தனைக்கும் கடன்தான். ஏஜெண்டுக்கு மட்டும் 1,65,000. விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.”
எவ்வளவு சம்பளம்?
“தினக்கூலிதான். படிச்சிட்டு நல்ல அட்மிசன் லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும். வேலை நேரம் போக ஓவர் டைம் பாத்தாத்தான் சம்பளம் கொஞ்சமாவது கட்டுப்படியாகும். அதுவும் நாம நெனச்சா மாதிரி பாக்க முடியாது. மேனேஜருக்கு வேண்டியவனுக்கும், வேலை சுறுசுறுப்பா செய்றவனுக்கும் தான் ஓவர் டைம் கெடைக்கும். வேலை நெருக்கடியா இருந்தாத்தான் மத்தவனுக்கும் ஓ.டி. கிடைக்கும். அப்ப நமக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாலும் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. இதையெல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா 15,000 முதல் 20,000 வரை இந்திய பணம் மாதம் கிடைக்கும்”
எத்தன வருசத்துல கடன அடைச்சிங்க?

“குடும்பத்துல வேற செலவு இல்லன்னா ஒரு வருசத்துல கடனை அடைச்சிருப்பேன். போன மறுவருசமே தங்கச்சி கல்யாணம் வந்துருச்சு. நல்ல மாப்பிள்ளை விட்டா கிடைக்காதுன்னு வீட்ல ஒரே புலம்பல். சிங்கப்பூர்ல இருக்குற நம்பிக்கையில தங்கச்சிக்காக வட்டிக்கி வாங்கும்படியா போச்சு.”
மொத்தமா கடன் எவ்வளவு வாங்கினிங்க? வட்டியோட சேத்து எவ்வளவு அடைச்சிங்க?
“சிங்கப்பூர் போறதுக்கு வட்டிக்கு பணமா 50,000-ம். சொந்தக்காரங்க அஞ்சு பேருகிட்ட நகையா வாங்கி அடகு வச்சுட்டு அதுல 1,50,000-ம் புரட்டிட்டு போனேன். யாருக்கு நகைங்க அவசரமா தேவைப்படுதோ அவுங்களுக்கு முதல்ல திருப்பிக் கொடுத்தேன். தங்கச்சி கல்யாணத்துக்கு நகையோடோ சேத்து 2 லட்சம் கடன் வாங்குனேன். மொத்தம் நாலு லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் 2 லட்சம் கிட்டக்க வந்துருச்சு. அஞ்சு வருசத்துல அசல் வட்டின்னு ஆறு லட்ச சொச்சம் அடைச்சேன்.”
நீங்க என்ன படிச்சிருக்கிங்க?
“நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு சில டிப்ளம்பா கோர்ஸ்சும் முடிச்சேன். அதுல ஒண்ணுதான் ஏ.சி சர்வீஸ் பத்தினது. சிங்கப்பூர்ல கட்டிட தொழில்தான் முதன்மையானது. அதுல ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க. ஏன்னு வாய தொறந்தா ஊருக்கு அனுப்பிடுவானுங்கன்னு மட்டும் புரிஞ்சுச்சு. கடனா, தொடப்பமான்னு பாத்தா தொடப்பந்தான் செயிச்சுச்சு.”

படிச்சுட்டு இந்த வேலையா பாக்க போனிங்க?
“கலெக்டருக்கே படிச்சிருந்தாலும் ஒர்க்கர் விசாவுல போனா கக்கூசு கூட கழுவ சொல்லுவானுங்க. மறுக்க மடியாது.”
படிச்ச உங்கள கூட்ட சொன்னப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?
“நீங்க கேக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பாதிப்பா இல்லைங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே கல்லு கடைக்கி வேலைக்கி போவேன். மரம் ஏறுவேன். கல்லூரி முடிஞ்சதும் பைனான்ஸ்காரங்களுக்கு கணக்கு எழுதுவேன். தண்டல் வசூலுக்கும் போவேன். அப்படி, எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.”
கடைசி வரைக்கும் ஏ.சி சம்மந்தமான வேலை கிடைக்கவே இல்லையா?
“நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலருக்கே. இதுலயும் பல ப்ரோமோசன் கெடைச்சுது. ஒரு நாள் பெயிண்ட் அடிச்ச தொழிலாளி ஊருக்கு போயிட்டாருன்னு என்ன அடிக்க சொன்னானுங்க. அடிச்சேன். பரவாயில்லையே அவனவிட நீ கீழ ஒழுகாம நீட்டா ஆடிக்கிறியே நீயே அடின்னானுங்க.

நாலு வருச்ம கழிச்சு வேறொரு கம்பனி. அங்க போனதும் “ஏற்கனவே என்ன வேலை செஞ்சுருக்க” அப்படின்னானுங்க. “சிமெண்டு கூட்டுனேன்”னு சொன்னேன். அப்படியா “சரி மரம் வேலை நடக்கும் போது விழும் தூள்கள கூட்டுன்”னு திரும்பவும் தொடப்பத்த கையில கொடுத்துட்டானுங்க.
கொஞ்ச நாள் பொறுத்து ஆசாரி வேலை செஞ்ச தாய்லாந்து நாட்டுக்காரர் ஊருக்கு போய்ட்டார். என்ன மரம் அறுக்கச் சொன்னானுங்க. தாய்லாந்து ஆசாரி படிக்காத ஆள். அவருக்கு அளவு எடுத்து எழுதிக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தாரு. எனக்கு அது தேவைப்படல. நானே அளவு குறிச்சு வேகமாவும் வெட்டி தள்ளிட்டேன். ஒடனே அந்த வேலையை எனக்கு குடுத்துட்டானுங்க.”
திரும்பி வந்த தாய்லாந்துக்காரர் என்ன விரோதி மாதிரி பாத்தாரு. இங்க வாடாப்பான்னு கூப்புட்டு நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே இத விட எனக்கு பெருக்குறதுதான் ஈசி. ஓனருட்ட சொல்லி எனக்கு பெருக்குற வேலையையே வாங்கி குடுத்துருன்னு சொல்லி நட்பானேன். ஓனரு ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.”
பெருக்குறதுக்கும் அறுக்குறதுக்கும் கூலி வித்தியாசம் எவ்வளவு?

“ஒரு மண்ணும் கிடையாது. அதே கூலிதான் ஒரு பத்து பைசா கூட அதிகம் தர மாட்டாங்க. மொத்தமா அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
ஒரு ஓனரு ஒரு கட்டிடத்தையே காண்ட்ராக்ட் எடுத்துருப்பான். இல்ல ஒரு சில வேலைகளை மட்டும் எடுத்துருப்பான். நாம எந்த முதலாளிகிட்ட வேலை பாக்குறோமோ அவனோடோ காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சுன்னா அடுத்து அவன் வேலை குடுக்குற வரைக்கும் சும்மாதான் இருக்கனும். அதிகப்படியான நாள் இழுத்துட்டு போச்சுன்னா சில பேர் சாப்பாட்டுக்கு காசு தருவாங்க. இல்லன்னா அதுவும் நாமதான் பாத்துக்கனும்.”
இதுதான் வேலையின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு வேற வேலையை கொடுத்து தரகர்கள் ஏமாத்துறாங்களா?
“அரசாங்க வேலையின்னு கூட்டிட்டு போயியா ஏமாத்துறாங்க. அப்படியெல்லாம் கிடையாதுங்க. சிங்கப்பூருல கட்டுமான நிறுவனம்தான் அதிகம். கட்டுமான பணிக்குதான் வேலைக்குன்னு கூட்டிட்டு போறாங்க அதுல இருக்குற கொத்தனார், ஆசாரி, பிளம்பிங்கு, ஒயரிங்கு, சென்ட்ரிங்கு எல்லாந்தான் அத்துபடி அதுல ஏதாவது ஒரு வேலைதான், இதுல என்ன ஏமாத்தறது.”

இவ்வளவு சிரமம் இருந்தும் ஏன் சிங்கப்பூரை நாடி போறாங்க?
“இந்த பகுதியில 90-கள்ல சிங்கப்பூர் போறது ஒரு ஃபேசனாவே இருந்துச்சு. பள்ளி இறுதியாண்டுல கோட்டை விட்டவங்க, கல்லூரி படிப்ப பாதியில விட்ட இளைஞர்கள் விவசாய வேலை பாக்காம வெட்டியா சுத்தறத தடுக்க நினைச்சுதான் சிங்கப்பூர் அனுப்புனாங்க. திரும்பி வரமுடியாமல் கஸ்டத்த உணர்வாங்கன்னு பெத்தவங்க நினச்சாங்க. பசங்களுக்கும் வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான் திருவாரூரு, தஞ்சாவூரு, பட்டுக்கோட்டை ஆட்கள் அதிகம்”
சிங்கப்பூர் அனுபவத்துல எது முக்கியம்?
“ஊர்ல இருக்கும் போது சாராய வியாபாரிங்க கூட பழக்கம் இருந்தும் கூட குடிக்காமதான் இருந்தேன். அப்டிபட்ட என்னை குடிகானா ஆக்குன பெருமை சிங்கப்பூரையே சாரும்.”
சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

“எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது. ஆனா கடந்து போகும் மந்த நாட்டவர்கள் இளைப்பாரும் ஒரு இடமா அமைச்சதுதான் அதன் சிறப்பு. அதை பயன்படுத்தி எந்த வகையில முன்னேத்திக்கலான்னு புத்திசாலித்தனமா செயல் பட்டுருக்காங்க.”
உங்களைப் போல உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிதானே இந்த சிறப்பெல்லாம்?
“இது ஏதோ சிங்கப்பூர்ல மட்டும் நடக்கறது மாறி பேசிரிங்க. எங்கயுமே உழைக்கிறவங்களுக்கு இதுதானே கதி.”
சிங்கப்பூர் போனதுல தங்கச்சி கல்யானம் செஞ்சிங்க வேற என்ன பொருளாதாரத்துல முன்னேற்றம்னு சொல்லுங்க?
“ஆறு லட்சம் கடன அடைச்சது போக, ஒரு ஏக்கருக்கு குறைவா நிலம் வாங்கினேன். இதையும் சேத்தா சிங்கப்பூர் போயி நான் சம்பாதிச்சது என்ன ஒரு ஏழு லட்சம் வரும். கடன் போக இந்த நிலந்தான் இப்ப மிச்சம். இதை ஊர்ல இருக்கும் போது குத்தகைக்கு எடுத்தே சம்பாதிச்சிருப்பேன். அப்டி பாத்தா சிங்கப்பூர்ல நான் அடைஞ்ச வருமானத்தையும் சந்தோசத்தையும் விட ஊருலேயே இருந்துருந்தா நல்லா சம்பாரிச்சி சிறப்பா வந்துருப்பேன். என்ன ஒன்னு, கொஞ்ச நாள் அதிகம் ஆகும் அவ்ளவுதான். எல்லா வசதியும் இருந்து மொதல் போட்டு சிங்கப்பூர் போறவங்க கொஞ்சம் காசு பாக்கலாம். வட்டிக்கி கடன்பட்டு லேபரா போயி குடும்பத்துல A to Z-வரைக்கும் நாமதான் நல்லது கெட்டது பாக்கனும்ணு சிங்கப்பூரு ஓடுனா கணக்குதான் வரும். வசதி வராது.”

நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?
“இந்த கேள்வியதாங்க எங்க வீட்டுக்காரம்மா நிதமும் கேக்குது.”
– சரசம்மா
(ஊர், பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
_________________________________
சிங்கப்பூரில் ஓரளவு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களே அதன் அருமை பெருமை பற்றி அளந்து விடுகிறார்கள். அங்கே கடுமுழைப்புடன் வேலை செய்யும் தொழிலாளிகள் மீதான சுரண்ட்லை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
சிங்கப்பூர் சுரண்டல் என்பது ஒரு விசச்சூழல். ஒன்றில் மாட்டிக் கொண்டால் அதன் தொடர் விளைவாக முழுச்சுற்று முடித்து கையில் ஒன்றுமில்லாமல்தான் வரவேண்டும். அதற்குள் சிங்கப்பூர் பொருளாதாரம் ஒரு தொழிலாளியின் ஆகச் சிறப்பான இளைமைப் பருவ உழைப்பை திருடி விடும்.
இந்த சுரண்டலுக்கு அடிநாதமாக இருப்பது சிங்கப்பூர் பற்றிய கதைகள்தாம். அந்தக் கதைகளை நம்பி தொழிலாளிகள் கடன் வாங்கி செல்கிறார்கள். சென்ற பிறகு அந்த கனவு மறைந்து கடனை அடைப்பதற்காக கிடைக்கும் தொழிலை செய்ய வேண்டியிருக்கிறது. ஓவர்டைம் என்பது இங்கே ஒரு தொழிலாளியின் விருப்பத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. முதலாளி சொன்னால் செய்ய வேண்டும். அதே போன்று வேலை இல்லை என்றால் தானே தனது செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை இருக்கும் போது தொழிலாளியை தங்க வைத்து, சோறு போட்டு வேலை வாங்கும் வேலையை கம்பெனியே செய்து விடும்.
இந்த மாறுபாடு ஏன்? இங்கே உதிரிப்பாட்டாளிகளை தங்க வைத்து நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கும் அதே உத்திதான் சிங்கப்பூரிலும். இன்னும் மருத்துவம், விடுமுறை, பொதுவான உரிமைகள் எதுவும் ஒரு தொழிலாளிக்கு கிடையாது. வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் கம்பெனியின் நிறுவன முதலாளி மரணத்தின் போது மன்னார்குடியில் மலர் அஞ்சலி போடவில்லையா என்று சிலர் கேட்கலாம். அடிமைகளாக இருக்கும் போது ஆண்டைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத்தான் செய்யும். அது அடிமைத்தனத்திலிருந்து வரும் அவலம். அதற்காக பரிதாபப்படலாமே ஒழிய பெருமைப்படமுடியாது.
ஆகவேதான் சிங்கப்பூர் சென்று ஆறு, ஏழு வருடம் வேலை பார்த்து திரும்பும் ஒரு தொழிலாளிக்கு கடைசியில் ஏதும் மிஞ்சுவதில்லை. ஆனால் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உழைப்பை வைத்து சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது வங்கி கணக்கை கூட்டிக் கொள்வார்கள்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
– வினவு