- திருப்பூரில் விரட்டப்பட்ட “சைமா”வால் கடலூர் நகருக்கே கேடு!
- அனுமதிக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல, “சைமா”வே திரும்பி ஓடு!
கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும், 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.
நிலவளமும், நீர்வளமும் கொண்ட இப்பகுதியில், பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால், பல்வேறு அழிவுகளையும் நாசங்களயும் உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக எல்லா இடங்களிலும் நடப்பதைப் போல, ‘வேலைவாய்ப்பு கிடைக்கும், தொழில் வளர்ச்சி பெருகும்’ என்று ஆசை காட்டப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

“பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!” என்ற பார்முலாவுடன் தற்போது கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முன்னோடியாக இப்பகுதி நிலங்கள் விவசாயிகள், மற்றும் மீனவர்களிடமிருந்து பறிக்கப்படடன.
சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ 200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் பயோனீர், சாசன், டாக்ரோஸ், லாயிட்ஸ், டேன்பேப் போன்ற 5 பெரிய ரசாயன ஆலைகளும், கெம்பிளாஸ்ட், சன்மார் போன்ற யூனியன் கார்பைடுக்கு நிகரான ஆபத்தை விளைவிக்கும் பி.வி.சி தயாரிக்கும் ஆலையும், நாகார்ஜுனா போன்ற எண்ணெய் துரப்பண தொழிற்சாலைகள் உள்பட 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. ரூ 200 கோடி மூலதனத்தில், 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே. ஃபார்மா, 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட ஆலைகள் துவங்கப்பட்டதால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ செழிப்பாக நடந்துகொண்டிருந்த விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக 1980-களுக்கு முன்பு 30 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 800 அடிக்கு மேல் போய்விட்டது. அவ்வாறு உள்ள நீரிலும், “80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்துவிட்டன” என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிறக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, குடற்புண், நுரையீரல் பாதிப்பு, கருச்சிதைவு, தோல் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மனவளர்ச்சி குறைவு, குறைப்பிரசவம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோய் உருவாகும் சூழல் பிற இடங்களைக் காட்டிலும் 2,000 மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.
மேற்கண்ட ஆலைகளில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டும், பாய்லர் வெடித்தும், கழிவு நீர் குழாய்கள் வெடித்தும், அவ்வப்போது தொழிலாளர்கள் இறப்பதும் சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த ஆலைக் கழிவுகளால் காற்று, நீர், நிலம் என அனைத்தும் நஞ்சாகிவிட்ட நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வந்துள்ளது திருப்பூரில் மக்களால் போராடி விரட்டியடிக்கப்பட்ட சைமா (SIMA – SOUTH INDIAN MILLS ASSOCIATION) எனும் பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை நிறுவனங்களின் சங்கம்.

இதற்கு முன்பு இந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் எங்கும் முந்திரி, நிலக்கடலை, நெல், கேழ்வரகு, எள், தர்பூசணி, தோட்டப்பயறு வகைகள் என்று முப்போகம் மட்டுமல்ல எந்நேரமும் மகசூல் தரும் பூமியாகும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமுக்காளம் போல் விரிந்து கிடக்கும் இயற்கைச் சூழல் காண்போரின் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது. சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி, மணிலா, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றோ சைமா என்ற பின்னலாடை சாயப்பட்டறை நிறுவனத்தாரின் அடிக்கட்டுமான வேலைகளால் பாலைவனமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை நிறுவ தேர்ந்தெடுத்துள்ள முப்போகம் விளைந்த 317 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள பெரியப்பட்டு, மடவாப்பள்ளம், வாண்டியான்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சாமியார்பேட்டை சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, கரிக்குப்பம், குமரபேட்டை, கோபாலபுரம், அன்னப்பன்பேட்டை, தச்சம்பாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சைமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், முற்றுகை, மனுகொடுக்கும் போராட்டம், 10,000 அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் என்று இடைவிடாமல் போராடி வருகிறார்கள்.

சைமா (ஜவுளி பூங்கா) சாயப்பட்டறை பிரிவு தொடங்க சுமார் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த்ப்பட்டு ரூ 600 கோடி செலவில் அடிக்கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விடத்தில் லாயல் டெக்ஸ்டெல் மில், வி.டி.எம் லிமிடெட், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட், ஸ்ரீ சரவணா ஸ்பின்னிங் மில், பண்ணாரியம்மன் குருப்ஸ், பி.கே.எஸ் டெக்ஸ்டைல் மில் உள்ளிட்ட நிறுவனங்கள் இவ்வளாகத்தில் அமைய உள்ளன.
மத்திய ஜவுளிதுறையின் கீழ் இயக்கப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஜவுளித்துறையும் ஒரு பங்குதாரர் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆலைகளை நிறுவுவதற்கு இலவசமாக நிலம், கட்டிடம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் என அனைத்து அடிக்கட்டுமான வசதிகளையும் செய்துகொடுத்து முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அரசே வாரியிறைக்கிறது.

இந்த ஆலைகள் துவங்கப்பட்ட பிறகு நாள் ஒன்றுக்கு 1.09 கோடி லிட்டர் தண்ணீர் பூமியிலிருந்து ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சப்படும். இதனால் சுற்றுவட்டாரங்களில் தற்போதே 800 அடிக்கு சென்றுவிட்ட போர்வெல் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். தண்ணீர் இன்றி விவசாயம் அழியும் அபாயம் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆலையின் சாயக்கழிவுகளும் பூமியின் உள்ளே இறக்கப்படும், கடலிலும் கலக்கப்படும். இதனால் கடல் நீரும், நிலத்தடி நீரும் ஒன்றாகக் கலந்து தாவரங்கள், கால்நடைகள், மீன்கள், அதைச் சார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுசூழல் ஆணையம், பொதுப்பணித்துறை, வனத்துறை, போக்குவரத்துதுறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட எல்லா துறை அதிகார வர்க்க கிரிமினல்களின் ஒப்புதலோடு முதலாளிகள் இந்த கொடூர வெறியாட்டத்தை நடத்துகிறார்கள். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அரசுக்கு தெரியாததல்ல, தெரிந்தேதான் நடைபெறுகிறது. திட்டமிட்டு மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறது இந்த அரசு. கத்தியில்லை துப்பாக்கியில்லை, அணுகுண்டு இல்லை வெடிகுண்டில்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளின் படுகொலை. எந்த காரணம் என்று அறியாமல், என்ன நோய் என்று கூடத் தெரியாமல் செத்து மடியப்போகிறது நம்முடைய தலைமுறை. இதை இப்படியே அனுமதிக்கப்போகிறோமா? அல்லது எதிர்த்து போராடி இம் மண்ணையும் மக்களையும் காப்பாற்றப் போகிறோமா? இதுதான் இன்று நம் கண்முன்னே உள்ள கேள்வி.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் 15 கிராமங்களின் முன்னணியாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி துண்டறிக்கை, சுவரொட்ட, முழக்கங்கள் தயாரித்து தாங்களே மக்கள் நிதி வசூல் செய்து அதன்மூலம் இரவுபகல் பாராமல் ஊர் ஊராக மக்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்து போராட்டத்திற்கு தயார்படுத்தினார்கள்.
பத்து நாட்களுக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கடிதம் கொடுத்தும் கடைசிவரை அனுமதி அளிக்க வேண்டிய காவல்துறை, முதல் நாள் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கழுத்தை அறுத்தது. முன்னணியாளர்களை இழுத்தடித்து அவர்களை சோர்வடையச்செய்து, தனது கங்காணிகள் மூலம் உள்ளூர் கிராமங்களில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க தடுத்து நிறுத்துவது, மிரட்டுவது போன்ற அத்தனை சதி வலைகளையும் அறுத்தெறிந்து விட்டு, பெரியப்பட்டு கடைத்தெருவில் 18-04-2015 காலை 10 மணிக்கு நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அரங்க நிகழ்ச்சியாக மாற்ற வைத்தார்கள்.

டூவீலர், ஆட்டோ, கார், வேன் என திரளாக மக்கள் மண்டபத்தில் கூடினார்கள். குறிப்பாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். போராட்டட்தை ஒடுக்குவதாகவே செயல்பட்ட காவல்துறையின் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள்.
இக்கூட்டத்தில் முதலில் பேசிய கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சக்காப்பு பேசியபோது

“இந்த மண்ணையும் உன்னையும் பாதுகாக்கணும்னா சாதிக்கு அப்பால், மதத்துக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் ஒன்று திரண்டு போராடினால்தான் சாதிக்கமுடியும்” என்று மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் பேசினார்.
அடுத்து பேசிய காயல்பட்டு புருஷோத்தமன்

“நாம இந்த மண்ணோடயும் கடலோடயும் நீர் நிலத்தோடயும் வாழ்ந்துடோம். சாயப்பட்டறை கம்பனிய வச்சி நம்மள பிரிக்க பாக்குறாங்க, சாதியும் சாராயமும் நம்மள வாழ வைக்காது, ஒன்னா சேந்து போராடுனாதான் நமக்கு வாழ்வு” என்று முடித்தார்.
காயல்பட்டு தாஸ் என்ற இளைஞர் பேசும்போது

“உலகத்துக்கே பெரிய குப்பை இந்தியா, இந்தியாவுக்கு பெரிய குப்பை தமிழ் நாடு, தமிழ்நாட்டுக்கு பெரியகுப்பை கடலூர். நிலத்தடி நீரையும் உறியுரான். கழிவு நீரை கடல்லையும் கொட்டுரான். தண்ணி நல்லா இருந்தாதான் நிலத்துல விளையுற உணவும் கடல்ல விளையுற பாசியும், அத தின்ற மீனும், மீனத்தின்ற மனுசனும் நல்லா இருக்க முடியும். இது ஒரு சங்கிலித் தொடர் மாதிரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. இதல்லாம் நம்ம ஊர்கடல் விஷமாச்சு, அதனால பல பெண்களுக்கு கருச்சிதைவு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படுது.
கிழக்க கெரண்ட்டு கம்பனி (IL&FS – INFRASTRCTURE LEASING AND FINANCIAL SERVICE), வடக்க (NOCL-NAGARJUNA OIL CORPARATION LTD), மேற்க்க (NLC-NEIVELY LIGNITE CORPARATION LTD), நடுவுல SIMA-SOUTH INDIAN MILLS ASSOCIATION) பின்னலாடை, சாயப்பட்டறை எல்லாத்துக்கும் தண்ணி வேணும். இல்லனா ஆலை இயங்காது . எல்லா கம்பனியும் எல்லா பொருளையும் தயார் பண்ண முடியுமா? எவனாவது ஒரே ஒரு நெல்லு தயார் பண்ண முடியுமா?” என முதலாளிகளின் முகத்தில் அறைந்தது போல் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அய்யம்பேட்டை இளங்கோவன் பேசியபோது

“நான் ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்தவன். எங்க ஊர்ல NOCL கம்பனி வந்தபோது ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவ தட்டி 2 பொட்டி நிறைய பணத்த வச்சி வெல பேசினான். அப்போது நான் அமைதியாக இருந்தேன். இந்தா பணத்தை வாங்கிக்கன்னு சொன்னாங்க. 2 மாடி வீடுகட்டி சந்தோஷமா இருன்னு சொன்னாங்க. அப்ப என் மனைவி தலையிட்டு ‘இந்த பணத்தை வாங்கிட்டு 300 குடும்பத்த சாகடிக்க போறீங்களா? நான் இப்பவே தூக்கு மாட்டி செத்துடுறேன்’ என்று எச்சரித்தார். அன்றிலிருந்து இன்று வரை எ ந்த கம்பனிகாரனுக்கும் அடிபணிய மாட்டேன், எதிர்த்து நின்று போராடுவேன், எப்போதும் போராட்டத்திற்கு வர தயாராக இருப்பேன்” என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அடுத்து சின்னாண்டிகுழி புருஷோத்தமன் பேசியபோது “கட்சிக்காரனவுல நம்பாதிங்க, அதிகாரிகல நம்பாதிங்க, என்ன கூப்படல உன்ன கூப்படல-னு பேதம் பாக்கக் கூடாது. இது யார் வூட்டு காரியமும் இல்ல, நம்ம தலைமுறைக்கான போராட்டம். ஊருசனம் ஒன்னா சேந்தாதான் சாதிக்கமுடியும்” என்று பேசினார்.

உள்ளூர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பேசும்போது“உலகத்தில் எல்லா நாடுகளையும் விட அதிக வளம்கொண்டது இந்தியா. இந்த வளங்களை விக்கிறத்துக்கு ஊர் ஊரா போயி நாட்ட வித்துகிட்டு இருக்காரு மோடி. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியானு சொல்றாங்க ஆனா இந்த மண்ணையும் விக்கறதுக்குதானா நம்ம தலைவர்கள் கட்டபொம்மன், பகத்சிங் போராடினார்கள்” என்று வேதனையுடன் பேசினார்.

அடுத்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சிதம்பரம் செந்தில், கடலூர் செந்தில்குமார் ஆகியோர் பேசுகையில், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து பற்றி கவலைபட தேவையில்லை. ஏனென்றால் போலீசும், நீதித்துறையும், கலெக்டர், ஆர்.டி.ஓ வும் கம்பனிகாரனுக்குதான் என்று அவர்களே சொல்லிவிட்டார்கள். அதை நாம் மதிக்க தேவையில்லை உங்களுக்கு எங்கள் அமைப்பு நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட தயாராக இருக்கிறோம்” என்று கூறி வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்ட அனுபவத்தை கூறி முடித்தார்கள்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் ராமலிங்கம் பேசும்போது

”இந்தியாவின் மையப்பகுதி போபாலில் 1984 டிசம்பர்-2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு நச்சுவாயு வெளியேறியதால் முக்கால்மணி நேரத்தில் 3828 பேர் இறந்தார்கள், 50,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களின் ஆடு, மாடு, நாய் ஆங்காங்கே செத்து கிடந்தன, மும்பையிலிருந்து போபாலுக்கு வந்த ரயில் பெட்டியிலிருந்த மக்கள் மூச்சு திணறி இறந்தார்கள், அதேபோல கடலூர் மீண்டும் ஒரு போபாலாக மாறும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் கம்பனி வ ந்தால் வேலைகிடைக்கும் என்று ஆசைகாட்டி மக்களை போராட்ட உணர்வை மழுங்கடிக்கச்செய்கிறார்கள். அன்று முதல் இன்று வரை அரசும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும் நமக்காக வாதாடியதோ,போராடியதோ இல்லை. எனவே இந்த அரசு எங்களுக்கு தேவையில்லை என்றும் மக்களே அமைப்பாகி அரசாக மாறுவோம்” என்று பேசி முடித்தார்.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் பாலசுப்ரமணியன் பேசும் போது

“கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விரட்டியடிக்கப்பட்ட சைமா இன்று கடலூர் சிப்காட்க்கு வந்துள்ளது. இதன் கட்டுமானப் பணி துவங்கும் போதே அரசியல் சார்பற்றும் சாதி பிரிவினையற்றும் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கவேண்டும். அன்று வெள்ளைக் காரனை விரட்டியடிக்க கட்டபொம்மன் போராடினான். அப்போதே காட்டிக் கொடுக்க பல எட்டப்பர்கள் இருந்தார்கள் இப்போதும் காட்டிகொடுக்க பல எட்டப்பர்கள் இருப்பார்கள் அதனால் கவலைப்பட தேவையில்லை.
இந்த அரசின் அத்தனை துறைகளும் மக்களுக்கானது அல்ல “உடம்புல ஒரு இடத்துல சீழ் வச்சா மருந்து மாத்திரை ஊசிப்போட்டு சரிபன்னிடலாம் ஆனா முழு உடம்பும் சீழ் வச்சா என்ன பண்ண முடியும். அப்படித்தான் இந்த அரசாங்கம் செயலிழந்து போச்சு. எல்லாம் முதலாளிகளுக்காகத்தான் இருக்கு. அதனால எல்ல ஊரிலும் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை கட்டி மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் எஞ்சி இருக்கும் ஒரே வழி.” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செய்திகள்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9791776709