Monday, April 28, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்கார்ப்பரேட் 'சமூக'ப் பாதுகாப்புத் திட்டங்கள்

கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்

-

ட்ஜெட் உரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்ட திட்டங்களை விவரிப்பதற்கு நிதியமைச்சர் கணிசமான நேரம் எடுத்துக் கொண்டார். இதனுடன் ஒப்பிடும்போது, கார்ப்பரேட் வரியை 30% இலிருந்து 25% ஆக குறைப்பது பற்றிய அறிவிப்புக்கு அவர் ஒதுக்கியது சில நொடிகள் மட்டுமே. அதேபோல சுங்கவரிக் குறைப்பு குறித்த அறிவிப்புக்கும் சில நொடிகள் மட்டுமே. ஆனால், இவற்றால் அரசுக்கு ஏற்படப்போகும் இழப்போ, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று கூறப்படும் திட்டங்களுக்கு அவர் செலவிடவிருக்கும் தொகையைப் போலப் பன்மடங்கு அதிகம்.

10-caption-2இந்த பட்ஜெட் உரை முழுவதுமே கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதைப் பற்றித்தான் பேசுகிறது. இதன் ஊடாக சமூகப் பாதுகாப்பு பற்றிய தனது முன்மொழிதல்களை நிதியமைச்சர் நெய்திருக்கிறார். அவர் அறிவித்திருக்கும் திட்டங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவதாக, அனைத்து மக்களுக்குமான ஆயுள் காப்பீடு. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமயோஜனா என்ற இந்த திட்டம், விபத்தினால் மரணம் அடைபவர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரிமியம் செலுத்தவேண்டும். காப்பீட்டுத் தொகை 2 இலட்சம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் மக்களது எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதுதான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதில் உள்ள கவர்ச்சி. அப்படி நிச்சயமாக ஒரு ஆதாயம் இருப்பதனால்தான் இந்த காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.

அடுத்த திட்டம், இயற்கை மரணம் அல்லது விபத்தினால் மரணம் ஆகியவற்றுக்கான காப்பீடு. இது 18 வயது முதல் 50 வயது வரை உள்ளோர்க்கு மட்டும்தான். இதன் முதிர்வுத்தொகை 2 லட்சம் ரூபாய். ஆண்டுக்கு கட்ட வேண்டிய பிரிமியம் 330 ரூபாய்.

இரண்டு காப்பீட்டுத் திட்டங்களிலுமே பிரிமியம் தொகையை மக்கள்தான் (சந்தாதாரர்கள்தான்) கட்டவேண்டும். இப்படி சமூகம் (அதாவது அரசு) ஐந்து காசு கூட வழங்காத இந்தத் திட்டங்களுக்குப் பெயர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாம்! இப்படியான காப்பீட்டுத் திட்டத்தை எந்த காப்பீட்டு நிறுவனமும் அறிவிக்க முடியும்.

இரண்டாவது சமூக நலத் திட்டத்தின் பெயர் அடல் பென்சன் யோஜனா என்ற புதிய ஓய்வூதியத் திட்டம். ஆண்டுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்துவீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு செலுத்து வீர்கள் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் இது.

10-corporate-welfareஅரசைப் பொருத்தவரை, நீங்கள் கட்ட விரும்பும் ஒரு ஆண்டுக்கான பிரிமியம் தொகையில் பாதியை அல்லது அதிகபட்சம் ஆயிரம் ரூபாயைத் தனது பங்களிப்பாக முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தும். அதற்குப் பின் அவரவர் பாடு. டிசம்பர் 31, 2015-க்குள் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அரசாங்கம் இந்தத் தொகையைச் செலுத்தும் என்பது இன்னொரு கூடுதல் நிபந்தனை.

இந்த திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது அரசாங்கத் திட்டமாகவும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் திட்டமாகவும் இருப்பதால், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து முன்னேற்றம் காண்பார்கள். அவ்வளவே.

ஓய்வூதியம் என்பதே இல்லாத, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. ஆனால், மத்திய அரசின் தேசிய சமூக உதவித்திட்டத்தின் கீழ் (National Social Assistance Programme) சமூக ஓய்வூதியம் பெறுகின்ற பரம ஏழைகள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் இவர்களில் சிலருக்கு மாதம் 200 ரூபாய் தரப்படுகிறது. இந்த பரம ஏழைகள் 80 வயதைத் தாண்டி வாழ முடிந்தால், அவர்கள் மாதம் 500 ரூபாய் பெறமுடியும்.

10-ache-dinவறுமைக்கோடு என்பதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவுகோலின்படியே இந்த பரம ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1000 தரப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பணிப்பிரிவைச் சேர்ந்த (Task Force) சிறுபான்மை உறுப்பினர்கள் கோரினார்கள். இதனை நிராகரித்த அமைச்சகம், வேண்டுமானால் பணவீக்கத்துக்காக நூறு ரூபாய் சேர்த்துப் போட்டு, 300 ஆக உயர்த்திக் கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. பணமில்லை என்று கூறி இந்த 300 ரூபாயைக் கூடத் தர முடியாது என்று கைவிரித்து விட்டது அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
மேற்கூறிய தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழான தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், குடும்ப உதவித் திட்டம், பேறுகால உதவித் திட்டம் ஆகியவையெல்லாம், மக்களுடைய உரிமை என்று முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் (2008) கூறுகிறது. மேற்கூறிய திட்டங்களுக்கான உதவித்தொகையைப் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சரோ, இந்த சமூகப் பாதுகாப்புச் சட்டம் பற்றியே பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை.

அடுத்து வருவது, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) மற்றும் ஊழியர்களுக்கான அரசு காப்பீட்டுக் கழகம் (Employee State Insurance Corporation) ஆகியவற்றை மெல்ல ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சி. இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எஃப். ஆகியவற்றுக்கு புதிய மாற்றுகளை வழங்குவது என்ற பெயரில், சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட மேற்சோன்ன திட்டங்களால் பயன் பெறும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியே இழுத்து, முதலீட்டுச் சந்தை மற்றும் தனியார் காப்பீட்டுச் சந்தையில் தள்ளி, அவற்றின் விரிவாக்கத்துக்கு வழிசெய்கிறது நிதியமைச்சரின் சமூக நலத் திட்ட அறிவிப்பு.

இ.எஸ்.ஐ. வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டுக்கு (Health Insurance) மாறிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பின் நோக்கம், மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகளுடைய சந்தையை விரிவுபடுத்துவதும், மருத்துவத்தை முற்று முழுதாக விற்பனைப் பண்டமாக்குவதும்தான்.

10-captionஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலேயே தொடர்வதா, அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக்கொள்வதா என்று முடிவு செய்யும் வாய்ப்பை தொழிலாளர்களுக்கு வழங்குவது என்ற பெயரில், அவர்களை புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இழுத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை மூலதனச் சந்தைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இதன் நோக்கம். எனவேதான், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவோருக்கு வரிச்சலுகையும் வழங்குகிறார் நிதியமைச்சர்.

அதுமட்டுமல்ல, சமூகப் பாதுகாப்பு பற்றிப் பேசும் நிதியமைச்சர், வருங்கால வைப்பு நிதிக்காக பணப்பிடித்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று ஒரு அபாயகரமான யோசனையையும் முன்வைத்திருக்கிறார். இது தொழிலாளர்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சமூகப் பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டவே பயன்படும். அரசாங்க உத்திரவாதமுள்ள ஓய்வூதியம் என்பதற்குப் பதிலாக, பங்குச் சந்தையில் அதனை முதலீடு செய்தால், கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, தொழிலாளிகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் படுகுழியில் இழுத்து விடுவதுதான் இதன் நோக்கம்.

40 தொழிலாளர்களுக்குக் குறைவானவர்கள் பணி புரியும் இடங்களைத் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் சோதனை செய்யக்கூடாது என்பன போன்ற புதிய விதிகள் மூலம் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலுடன் நிதியமைச்சரின் மேற்கூறிய அறிவிப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும். “மேக் இன் இந்தியா” திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், தொழில் துறையில் எவ்வித அரசாங்கத் தலையீடும் கூடாது, வேலையில்லாதவர்களுக்கு அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று அரசு எண்ணுவது தெளிவாகத் தெரிகிறது.

மூன்றாவதாக, நிதியமைச்சர் அறிவித்திருப்பவை, வருமானவரி செலுத்தும் இந்தியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள். இதிலும் பட்டியல் நீண்டதாக இருக்கிறதே தவிர, சரக்கு ஏதும் இல்லை. 80 வயதுக்கு மேற்பட்ட வெகு மூத்த குடிமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய வருமான வரி விலக்கு பெறத்தக்க மருத்துவச் செலவின் அளவு ரூ 60,000 த்திலிருந்து 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயனடையப் போகிறவர்கள் எத்தனை பேர்? இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் 3.6 கோடிப் பேர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் வெறும் 4.9 இலட்சம் பேர்தான். இவர்களிலும் மேற்கூறிய சலுகைகளைப் பெறும் அளவுக்கு வருமானம் அதிகமுள்ளவர்கள் வெகு குறைவு. ஆகவே, இது பணக்காரச் சிறுபான்மைக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பதே உண்மை.

இது மட்டுமல்ல, வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்., ஜி.பி.எஃப்.,) யாராலும் பாத்தியதை கோரப்படாமல் கிடக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சொந்தமான 9000 கோடி ரூபாயை எடுத்து, மூத்த குடிமக்கள் நல நிதி ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இது பற்றிய உள் விவரங்களை அவர் வெளியிடாத காரணத்தினால், இது எந்த சமூகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறது என்பதை இப்போது சொல்ல முடியவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2008-ல் இயற்றப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டதாகையால், அதனைக் கோருவதற்கு சட்ட ரீதியான உரிமை மக்களுக்கு இருந்தது. தற்போது நிதியமைச்சர் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கு அத்தகைய சட்டரீதியான உத்திரவாதம் ஏதும் கிடையாது என்பதால், அரசு நினைத்தால் மறு கணமே இத்திட்டங்களைக் கைவிட்டு விட முடியும்.

சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளின்படி (இந்திய உணவுக் கழகத்தை மூடுவது, அரசுக் கொள்முதலைக் குறைத்து தனியார் கொள்முதலை ஊக்குவிப்பது, நியாயவிலைக் கடைகளை மூடுவது) உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய ஏழைக் குடும்பத்தினரின் எண்ணிக்கையை 67% இலிருந்து கணிசமாகக் குறைப்பதே இந்த அரசின் திட்டம். ஆனால், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அது பற்றி வாய் திறக்கவில்லை. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தங்களது கருத்தை உரக்கச் சொல்லியிருப்பதே நிதியமைச்சரின் தற்போதைய மவுனத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும். ஆனால், உணவுப் பாதுகாப்புக்காக ஒரு போராட்டம் நடத்துவதைத் தவிர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

அடிப்படையான சமூகப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பொருத்தமட்டில், ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பவற்றை எல்லாம் ரத்து செய்யும் திசையில் செல்வது என்பதுதான் மத்திய அரசு கூறும் செய்தி. சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒப்புக்கு ஏதேனும் கொடுத்தாலும், அது நிச்சயம் சந்தை அடிப்படையிலான தீர்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய சமூக நலத் திட்டங்கள் எனப்படுபவை அனைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களால் தலைமை தாங்கப்பட்டு, அரசால் பாதுகாப்பு வழங்கப்படும் ஆட்கொல்லி முதலாளித்துவத்துக்கு மேலும் ஊக்கம் கொடுப்பவையாகவே அமையும்.

(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி மார்ச்-21 இதழில் பேரா. கே.பி.கண்ணன் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.)
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க