தனியார்மயம், கார்ப்பரேட் மயம்: மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்! – பகுதி – 2
ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதைக் கைவிடும் அரசு, மருத்துவ சுற்றுலாவை – வெளிநாட்டு நோயாளிகளுக்கு உலகத் தரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை – புதிய தேசிய நலக் கொள்கையாக அறிவிக்கிறது. மருத்துவ சுற்றுலாவை அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாய்ப்பாகக் கருதும் அரசு, அதனை ஏற்றுமதித் தொழிலுக்குச் சமமாகக் கருதி, அச்சிகிச்சையை மேற்கொள்ளும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு மேலும்மேலும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்தச் சலுகைகளின் பொருள், இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வெளிநாட்டுப் பயணிகளின் சிகிச்சைக்கு மானியம் வழங்குவதாகும்.
அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நமது ஆட்சியாளர்கள் எதனையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள், ஒன்றை விற்று நாட்டை வளமாக்கலாமே என்றுகூட விரைவில் அறிவிப்பு வெளிவரலாம். இந்திய அளவில் சிறுநீரக வியாபாரம் மருத்துவ சுற்றுலாவுடன் இணைந்திருப்பதைப் பொதுமக்கள் கவனத்தில் கொண்டால், நாம் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சில பத்தாண்டுகளுக்கு முன் இதய நோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நிலைவந்தால், ஏழை எளிய மக்கள் விதி முடிந்துவிட்டது என்பதாக, மரணத்தை எதிர்கொள்வதாக இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஆனால், இது எப்படிப்பட்ட மாற்றம்? காசு இருந்து செலவு செய்தால் இந்நோய்களைக் குணப்படுத்த இயலும் அல்லது மரணத்தை ஒத்திப்போட முடியும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அரசு ஆதரவு, காப்பீடு பாதுகாப்பு இல்லாத நிலையில், அடித்தட்டு மக்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தைக்கூடப் பெரும் கடனாளியாக மாற்றிவிடுகிறது. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம் முதலான மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து விரிவாக ஆய்ந்து தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத், இத்தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு என்று நிறுவியிருக்கிறார். அதாவது, நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு மருத்துவமனைகளின் அவலநிலை

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சேவையும் தரமும் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் இந்தச் சீரழிவு நாளுக்குநாள் அதிகரித்து, அதனை நம்பியிருக்கும் ஏழை மக்களின் துன்பத்தை அதிகரிக்கிறது.
- பெரும்பாலான மருத்துவமனைகளில் புதிய நோய்களுக்கு வழிகோலும் வகையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உயிருக்கே ஊறுவிளைவிக்கும் மருத்துவக் கழிவுகளும் இதில் அடங்கும்.
- மருத்துவமனைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளின் நிலைமையைச் சொல்லவே தேவையில்லை.
- பெரும்பாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு குடிநீர் வியாபாரம் பெருத்துப் போயிருக்கிறது.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் வாசல் பகுதிகளில் உணவுப் பண்டங்கள், குளிர் பானங்கள், பழரசங்கள் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஈ மொய்க்கும் அந்த உணவை நோயாளிகளும் அவர்களைப் பார்க்க வருபவர்களும் வாங்கி உண்பதால் புதுப்புது நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- சவக்கிடங்குகளில் சடலங்களைப் பாதுகாக்க போதிய குளிர்சாதன பெட்டிகள் இல்லை. இதனால் அதிக சடலங்கள் வரும் நேரங்களில் அவற்றை மூட்டையாகக் கட்டி ஓரமாகப் போட்டு விடுகின்றனர். மேலும், பிணவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நின்று, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டைப் பரப்பி வருகிறது.
நோயாளிகளின் பராமரிப்பு
- நோயாளிகளுக்கான வழிகாட்டு மையமின்றி, அவர்கள் அலைய வைக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு நோயின் தன்மையும் விளக்கப்படுவதில்லை.
- வீல்சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் ஆகியவை போதிய அளவில் இல்லை. மின்தூக்கிகள் பெரும்பாலும் செயல்படுவதில்லை. இதனால் வயதானவர்கள், நடக்கமுடியாத நோயாளிகளை, அவர்களது உறவினர்கள் தோளில் சுமந்தோ, தூக்கியோ செல்ல வேண்டியிருக்கிறது.
- எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பெரும்பாலான நேரங்களில் மூடியே வைக்கப்படுகின்றன.
- சோதனை முடிவுகள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதனால் சிகிச்சை துவங்க தாமதமாகி, நோய் பாதிப்பு கடுமையாகிறது.
- போதிய அளவில் படுக்கை வசதி இல்லாததால், பல்வேறு சமயங்களில் நோயாளிகள் துண்டை விரித்துத் தரையில் படுக்க வேண்டியிருக்கிறது.
- நாய், எலி, பாம்பு, கொசு மற்றும் பல்வேறு வகையான பூச்சிகளின் புகலிடமாக மருத்துவமனைகள் விளங்குகின்றன.
- ஸ்ட்ரெச்சர், வீல்சேர் தள்ளுபவர் துவங்கி, மருத்துவமனையின் அத்துணை பிரிவு ஊழியர்களிடமும் ரூ 50 முதல் ரூ 500 வரை இலஞ்சமாக நோயாளிகளின் உறவினர்கள் அழ வேண்டியிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரம் ரூபாய்கள் வரை பறிக்கப்படுகிறது.
- புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர்களுள் பலர் 11 மணிக்கு வந்து 12 மணிக்குக் கிளம்பி, தங்களது கிளினிக்குக்குப் போய்விடுகின்றனர்.
- மருந்து வழங்கும் பிரிவில் சாதாரண நோய்களுக்கு வழங்கும் மருந்துகள் மட்டுமே தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், இதய நோய், தோல் நோய் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான மாத்திரைகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
- முக்கிய மருந்துகள் மட்டுமல்லாது, கையுறை வரை வாங்கிவர வெளி மருந்துக்கடைகளுக்கு டாக்டர்கள் சீட்டு எழுதித் தந்து அனுப்புகின்றனர். வார்டுகளுக்கு வந்து டாக்டர்கள், நோயாளிகளைச் சந்தித்து மருந்துகள் ஆர்டர் எடுத்துச் செல்லும் புரோக்கர்கள் அதிகரித்துள்ளனர்.
- மருத்துவமனைக்குள் போலீசு நிலையம் இருந்தும் குழந்தைகள் கடத்தப்படுவதும், வார்டுகளில் பொருட்களும் பணமும் திருடப்படுவதும் நடந்து வருகின்றன.
தாய்மையை வர்த்தகமயமாக்கிய தனியார்மயம்

“பெண் என்ன பிள்ளை பெறும் இயந்திரமா?” எனக் கேட்டார் பெரியார். “ஆம்” என்கிறார்கள் நவீன மருத்துவர்கள்.
குழந்தையின்மை ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் அது பிரச்சினையே அல்ல. அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களுக்கு எதிரான சமூக அமைப்பே.
சமூகத்தின் இந்தச் சாபக்கேட்டை தமக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டார்கள் மருத்துவர்கள். குழந்தையின்மை என்பதை பெரிய அவமானகரமான பிரச்சினையாக இன்னும் பெரிதுபடுத்தியதில் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு மருத்துவத்திற்கு மிக முக்கிய இடமுண்டு.
குழந்தை ‘பாக்கியம்’ இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால் கணிசமான பணம் தரப்படுகிறது.
ஆம், தாய்மை ஒரு தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. வாடகைத் தாய்மார்களுக்கு சொற்பமான பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெரும் பணத்தை இடைத்தரகர்களாகச் செயல்படும் மருத்துவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.
அதேசமயம், மிக வறுமையான குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லை என்றால், அதற்குத் தீர்வு காண்பதற்கு மகப்பேறு மருத்துவத்தில் தீர்வு இல்லை. காரணம், அந்த ஏழைப் பெண்ணிடம் பணம் இல்லை என்பதுதான்.
“கிட்னி, லிவர், ஹார்ட்..” – ரெண்டு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ
வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்மூர் எளிய மக்களின் சிறுநீரகங்களையும் இதர உடல் உறுப்புகளையும் அறுத்து விற்பதற்கு இங்கு சில மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளும் தயங்குவதில்லை. இந்திய அளவில் கிட்னி வியாபாரம் மருத்துவச் சுற்றுலாவுடன் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பல விவசாயிகளின், நெசவாளர்களின் கிட்னி காணாமல் போனது இப்படித்தான்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்கு கிட்னி வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் கிட்னிகளை விற்றார்கள். அப்போதைய கமிஷனர், “29 மீனவப் பெண்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இத்திருட்டையொட்டி 13 மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பித்துக் கொண்டனர். இப்போது கிட்னி திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமை நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் – மருந்து கம்பெனிகளின் சட்டவிரோதக் கூட்டு
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளின் பொதுப்பெயரில் அல்லாமல், வியாபாரப் பெயரில் பரிந்துரை செய்கின்றனர். நோயாளிகளுக்கு எந்த மருந்தை எதற்காகச் சாப்பிடச் சொல்கிறார்கள் என்றோ, எந்த மருந்தில் என்னென்ன கூட்டுப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்றோ, அது அவசியமா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய நோய்க்கு விலை குறைவான மருந்தே போதுமானது என்றாலும்கூட, மருத்துவர் பரிந்துரை செய்த விலையுயர்ந்த மருந்துதான் தன்னுடைய உடலுக்கு ஏற்றது, மற்றதை வாங்கிச் சாப்பிட்டால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றும் நோயாளி அஞ்சுகிறார்.
உதாரணமாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஒரு நிறுவனத்தால் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை வெறும் 25 ரூபாய்க்கும் இன்னொரு நிறுவனத்தால் ரூ 385-க்கும் விற்கப்படுகின்றன. நீரழிவைக் கட்டுப்படுத்த 10 மாத்திரைகள் ரூ 133 என்ற விலையில் முன்னணி மருந்து நிறுவனத்தால் விற்கப்படுகிறது. அதே மாத்திரை மற்றொரு நிறுவனத்தால் வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நோயாளிகளுள் பெரும்பாலோர் ஏழைகள்தான். மருத்துவத்துக்கே தங்களுடைய வருவாயில் அல்லது சேமிப்பில் அதிகபட்சம் செலவிடுகிறார்கள். மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய எந்த அரசும் இந்த விலை வித்தியாசத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களோ போதுமான இலாபம் என்பதில் திருப்தி கொள்ளாமல், கொள்ளை லாபம் என்ற இலக்கில் ஏழை நோயாளிகளைச் சுரண்டுகின்றன. தனியார் நிறுவனங்களுக்குக் கட்டற்ற சந்தையை அமைத்துக் கொடுத்ததன் விளைவுதான் இது.
மருந்துகளின் விலை உயர்வுக்கு அப்பால், போலி மருந்துகளும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியாவில் தாராளமான புழக்கத்தில் உள்ளன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலாபத்தை முன்னிட்டு போலி மருந்துகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மேம்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத் துணியும் அரசும் அதிகார வர்க்கமும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்குச் சட்டபூர்வ அனுமதி அளிக்கின்றன.
மருத்துவத் துறையின் இன்னொரு அருவெறுக்கத்தக்க கோர முகம், அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல். உலகெங்கும் ஆண்டுக்கு 7.2 இலட்சம் கோடி டாலர் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகக் கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம். இதில் 10 முதல் 25 சதவீதம் வரை ஊழலில் கரைந்துவிடுகிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே துயரத்தைச் சுமக்க வேண்டும். தமது பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவமனையின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, பரிதவித்து நிற்கும் இப்படிபட்ட துயரர்களிடம் நடத்தப்படும் ஊழல், கட்டணக் கொள்ளையைவிடக் கொடூரமானது.
இலவச மருத்துவ சேவை: சலுகை அல்ல, உரிமை
சீனா அடிப்படையான மருத்துவ நலத்தில் பாராட்டத்தக்க தன்னிறைவைப் பெறக் காரணமாக இருந்தது அந்நாட்டு அரசின் விருப்புறுதி மட்டுமே அல்ல. அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் முக்கிய காரணமாகும். அந்நாட்டில் மருத்துவம் தொடர்பாக “ரூல் 57” என்றொரு சட்டவழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி,
1. ஆங்கில மருத்துவம் பயின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக உள்நாட்டு மருத்துவமான அக்குபஞ்சர் உள்ளிட்ட ஆறு அங்கங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவத்தைப் பயின்றால் மட்டுமே மருத்துவப் பதிவு வழங்கப்படும்.
2. வெளிநாட்டிலிருந்து ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளபோது, அது உள்நாட்டு மருந்துகளைவிட சிகிச்சையளவில் உயர்வானதென நிரூபித்தால் மட்டுமே உரிமம் கிடைக்கும்.
3. கிராமப்புறங்களிலும் தொழிலமைப்புகளிலும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு வெறுங்கால் மருத்துவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு, பகுதி நேரமாக மருத்துவப் பணியாற்றப் பணிக்கப்பட்டனர்.
வெறுங்கால் மருத்துவர்கள் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளின் ஊடாக தங்களை ஊரக மருத்துவ நலப் பயிற்சியாளர்களாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்ட வெறுங்கால் மருத்துவர்களில் ஒருவர்தான் தற்போதைய சீனாவின் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சூ சென். மருத்துவத்தை சமூகமயமாக்கும் நோக்கத்தோடு 1978-ல் நடந்த சர்வதேச நாடுகளின் கூட்டமொன்றில் உருவாக்கப்பட்ட அல்மா ஆடா தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்தது சீனாவின் வெறுங்கால் மருத்துவ முறைதான்.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையிலுள்ள கார்ப்பரேட் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள் நலன் சார்ந்த சுகாதாரக் கொள்கைக்குப் பதிலாக மக்கள் நலனை முன்னிறுத்தும் வெறுங்கால் மருத்துவர்கள் போன்ற கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்பொழுதுதான் அனைவருக்குமான அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார நலனை உறுதிப்படுத்த முடியும்.
முற்றும்
– கே.எஸ்.
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________