Wednesday, April 23, 2025
முகப்புகலைகவிதைபுரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !

புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !

-

ப்ரல்- 22, லெனின் பிறந்தநாள்
புரட்சி பிறக்கட்டும்

லெனின்
“நீ என்ன செய்தாய் புரட்சிக்கு?” எனும் நேர் கொண்ட பார்வை லெனின் !

புரட்சிக்கு குறைவாக
எதையும் ஏற்காத
பிடிவாத புரட்சியாளரின்
பிறந்த நாளை
எப்படிக் கொண்டாடுவது?

அவரைப் பற்றி பேசலாம்
அதை
லெனின் காதுகள் சகிப்பதில்லை…
அவர் வாழ்வை வியக்கலாம்
ஆனால்
அது லெனினுக்குப் பிடிப்பதில்லை…

என்னதான் பேசினாலும்
இறுதியில்,
” நீ என்ன செய்தாய் புரட்சிக்கு?”
எனும்
நேர் கொண்ட பார்வை லெனின் !

ஒரு தொழிலாளியிடம்
இன்று நீ
அரசியல் பேசி
வர்க்க உணர்வுக்கு
கொண்டு வரும்
பிரசவ வலியில்…
லெனின் பிறக்கிறார்!

ஒரு தொழிற்சங்கத்தின்
கிளை தொடங்கும்
உற்சாக உதடுகளில்
லெனின் சிரிக்கிறார்!

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
விழுந்து எழுந்து விடாப்பிடியாய் நடை பழகும் குழந்தையின் உறுதியைக் கொண்டிருக்கும் ஒரு தோழனின் தன் முயற்சியில் லெனின் தவழ்கிறார்.

விழுந்து எழுந்து
விடாப்பிடியாய்
நடை பழகும் குழந்தையின்
உறுதியைக் கொண்டிருக்கும்
ஒரு தோழனின்
தன் முயற்சியில்
லெனின் தவழ்கிறார்!

சுயநலன் மறுத்ததற்காய்
சொந்தம் விலகி,
சுகம் ஒன்றே குறிக்கோளாய்
சுற்றம் நழுவி,
குடும்பமே கூட வராது
குறை சுமத்தும் தருணத்திலும்
உழைக்கும் மக்களுக்காய்
உணர்ச்சி குன்றாது
அடியெடுக்கும் கால்களில்
லெனின் நடக்கிறார்!

புவியில்
ஒரு புல்லின் அழகையும்
சீரழிக்கும் முதலாளித்துவத்தின்
வேரழிக்க துடி துடிக்கும்
இதயத்தில்
லெனின் வாழ்கிறார்!

எறும்பின் உழைப்பையும்
சுரண்டும்
இயற்பகை ஏகாதிபத்தியத்தின்
கொடுங்கரம் முறிக்கும்
விசையின் இயற்பெயர்
விளாதிமிர் இலியிச் லெனின்.

லெனின்
கார்ப்பரேட் பயங்கரத்தை அழி! கம்யூனிச ஆசான் லெனின் முகத்தில் விழி!

கார்ப்பரேட் பயங்கரத்தை
அழி!
கம்யூனிச ஆசான்
லெனின் முகத்தில் விழி!
காவிப் பாசிசம் நொறுக்கு
லெனின் பிறந்த நாள்
அதற்கு!

வாடும் மலரில்
நீர் தெளித்துக் கொண்டே
சுடு சொல்லை
உதடுகளில் தெளிக்கும்
உழைப்பாளி பெண்….

கொதிக்கும் வெயிலில்
உருகும்
வாழ்க்கைத் துளிகளை
கூச்சமின்றி திருடும்
அதிகாரத்திற்கு எதிராக
மனதில் வெடிக்கும்
சாலையோர உழைப்பாளி…

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்....
“இந்த அரசை ஒழிக்காமல் இனி வாழ்க்கையில்லை!”

இன்னும்… மாணவர், மீனவர்
விவசாயி தொழிலாளி என
கோடிக்கணக்கான குரல்கள்
குவியும் ஒரு சொல்;
“இந்த அரசை ஒழிக்காமல்
இனி வாழ்க்கையில்லை!”

இதற்குப் பெயர்தான் புரட்சி
இதற்குப் பெயர்தான் லெனின்

லெனின்
உங்களுக்கு பிடிக்குமெனில்
போராட்டக் களங்கள்
புதிதாய் பிறக்கட்டும்!

– துரை.சண்முகம்