Wednesday, April 23, 2025
முகப்புசெய்திபானிபூரி விற்பவருக்கு லெனின்தான் பாதுகாப்பு

பானிபூரி விற்பவருக்கு லெனின்தான் பாதுகாப்பு

-

வேலூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தோழர் லெனின் பிறந்த நாளில் “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்” தொடக்கம்.

வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்
வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் ஒன்று சேர்ந்து மாமேதை லெனின் பிறந்த ஏப்ரல் 22-ல் தங்களுக்கான “வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்” என்கிற சங்கத்தைத் தொடங்கி உள்ளனர்.

ஏப்ரல் 22-ம் தேதி காலை 9 மணி அளவில் நடந்த சங்கத் தொடக்க விழாவில் சங்கக் கொடியை ஏற்றி வைத்து பெயர்ப் பலகையை திறந்து வைத்தார் சங்கத் தலைவர் A.தாமோதரன்.

“தோழர் லெனின் பிறந்த நாளில் இந்த சங்கத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரும் இந்த சங்கத்தில் இணைய வேண்டும். சங்கத்தை பலப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நம்மையும் நமது வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என சங்கமாய் சேருவதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார் சங்கத்தின் செயலாளர் பூ.சரவணன்.

வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பானிபூரி, பழம், காய்கறி, துணி சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறு வியாபாரங்களில் ஈடுபடும் அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகளின் ஒரு வகைமாதிரியாக சிறுவணிகர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

“இப்ப எனக்கு வயசு 43. இருவது வருசத்துக்கு முன்ன ஒரு டீ கடையில வேல செஞ்சேன். அப்பல்லாம் போலீசு 50 பைசா மாமுல் கேப்பான். அப்புறமா ‘50 பைசா பத்தாது. ஒரு ரூபா கொடுன்னு’ கேப்பான். இல்லேன்னா பொய் கேசு போடுவான். எப்படியும் மாசம் ஒரு கேசாவது போட்டுடுவான். என்னை சும்மாவே ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போயி கையெழுத்து போடச் சொல்வான்.

வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்
சங்கமாய் சேருவதன் அவசியம்.

ஒரு நாள் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போனாங்க. ஒரு போலீசு ‘ஒண்ணுமில்ல போ’ங்கிறான். இன்னொரு போலீசு ‘இல்ல இல்ல, இவன் மேல ஒரு கேச போடுன்’றான். எம்மேல பொய் கேசு போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே என்னை பொய் சொல்லச் சொன்னாங்க. நான் உண்மையச் சொன்னேன். மாஜிஸ்ட்ரேட் என்ன ‘போ’ன்னு அனுப்பிட்டாரு.

இப்ப பதினஞ்சு வருசமா பானிபூரி கட நடத்தி வர்றேன். இப்பவும் போலீசு பிரச்சனைதான். மாமுல் கொடுக்கலன்னா ‘கடைய தூக்கு!’ன்னுவான்; அடிச்சு ஒடப்பான். பொழப்ப நடத்துறதே கஸ்டமா இருக்கும். நூறு ரூபா கெடைக்கும். அத வெச்சுதான் குடும்பம் நடத்தணும். பசங்கள படிக்க வைக்கணும்” இப்படி, தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வேதனையோடு வெளிப்படுத்துகிறார் தள்ளு வண்டியில் பானிபூரி விற்பவர்.

***

“30 வருசமா தள்ளு வண்டியில் முட்டை சேமியா கடை நடத்துறேன். இதுல வர்ற வருமானத்த வச்சுதான் குடும்பத்த நடத்தி வர்றேன். இதுக்கு முன்ன மாநகராட்சி ஆபீசுக்கு எதுத்தாப்ல கடை வச்சிருந்தேன். போலீசு துரத்தி அடிப்பான். இப்ப வேற எடத்துல கடை நடத்தி வர்றேன். இப்பவும் மாமுல் கொடுன்னு போலீசு கேப்பான். கொடுக்கலன்னா கடையை ஒடைப்பான். மாசத்துக்கு ரெண்டு கேசாவது போடுவான். ஒரு நாள் ‘குவாட்டர் விக்கிறியா’ன்னு என் மேல பொய் கேசு போட்டுட்டான். இப்படி கேசுன்னு போட்டுட்டா ஒரு நாளாயிடும். என்ன பண்றதுன்னு தெரியாது.

தரைக் கடை நடத்துறவங்களுக்கு அரசு சலுகை அது இதுன்னு சொல்றாங்க. ஆனா ஒண்ணும் இல்ல” என்கிறார் முட்டை சேமியா கடை நடத்துபவர்.
***

“பானி பூரி கடை நடத்துறேன். இந்தக் கடையை வெச்சுதான் குடும்பத்த நடத்தணும் புள்ளைங்கள படிக்க வெக்கணும். வெலவாசி ஏறிகிட்டே போவுது. எப்படி பொழப்ப நடத்தறது? இன்னொரு பக்கம் போலீசு தொல்லை. எதுத்து கேட்டா கேச போடுறான். கடையை வெக்காதேங்கிறான். என்ன பண்றதுன்னு தெரியல” என்கிறார் 43 வயதாகும் பானி பூரி விற்பவர்.
***

வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்
பல்வேறு வகையான சிறு வியாபாரங்களில் ஈடுபடும் அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகளின் ஒரு வகைமாதிரியாக சிறுவணிகர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகர் ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத் தோழர்களும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னணியாளர்கள்  வாழ்த்துரை வழங்கினர்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்.

வேலூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம்

தோழர் லெனின் பிறந்த நாள் விழா 22-04-2015 அன்று மாலை வேலூர் தோட்டப்பாளையத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் ஒலிபெருக்கி அமைத்து தெருமுனைக் கூட்டமாக நடத்தப்பட்டது.

வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம்
ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோவியத் அதிகார மையங்களைப் போன்று இனி நமது நாட்டிலும் மக்கள் அதிகார மையங்களை கட்டியமைக்க வேண்டும்.

குடிநீர், சுகாதாரம், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட தேவைகளுக்காக மக்கள் படாத பாடுபடுகிறார்கள். வசதியற்றவர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடாக நமது நாடு மாறி வருகிறது. அரசாங்கத்தின் எந்த ஒரு துறையும் மக்களின் அவசியமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில்லை. மொத்த அரசமைப்புமே செயலிழந்து நிற்கிறது. நமது தேவைகளுக்காக இனியும் இந்த அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை.

நாம் நமது தேவைகளைப் பெறவேண்டுமானால் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோவியத் அதிகார மையங்களைப் போன்று இனி நமது நாட்டிலும் மக்கள் அதிகார மையங்களை கட்டியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பிரச்சாரத்தின் ஊடே ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டன. லெனின் குறித்து தோழர் துரை.சண்முகம் அவர்கள் எழுதிய “புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர்!” என்கிற கவிதை வாசிக்கப்பட்டது.

வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம்தோழர் லெனின் பிறந்த நாள் விழாவையொட்டி தோட்டப்பாளையம் பகுதியில் லெனின் படம் திறந்து வைக்கப்பட்டு ம.க.இ.க பாடல்கள் காலை முதல் மாலை வரை ஒலிபரப்பப்பட்டன.

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

சென்னை குரோம்பேட்டையில் பெண்கள் விடுதலை முன்னணி

குரோம்பேட்டை பெண்கள் விடுதலை முன்னணி
தோழர் லெனின் பிறந்தநாள் லெனின் படம் திறந்து, மக்கள் மத்தியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தோழர் லெனின் பிறந்தநாள் லெனின் படம் திறந்து, மக்கள்  மத்தியில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

குரோம்பேட்டை கிளை செயலர் தோழர் மீனா பேசினார்.

”தோழர் லெனின் உழைக்கும் மக்களுக்கான தலைவர்.  தொழிலாளர்கள்-விவசாயிகளை ஆட்சி அதிகாரத்தில் அமர செய்தவர்.  எளிமையானவர். உறுதியானவர்.  மக்களின் மீது கொண்ட பற்றுக் காரணமாகவே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, தொழிலாளர்கள், உழைப்பவர்களுக்காகவே தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்.

ரசியாவில் புரட்சிக்கு தலைமை தாங்கினவர்.  புரட்சிக்கு பிறகு, ரசியாவில் அனைவரும் இலவச கல்வி, அனைவருக்கும் வேலை, பெண்களுக்கு சம உரிமையை நிலை நாட்டியவர்.

அவருடைய இறப்பிற்கு பிறகு பல நாடுகளில் மக்கள் சில நொடிகள் எழுந்து நின்று அந்த மாபெரும் மக்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி கண்கலங்கினார்கள். இதற்கு முன்போ, அதற்கு பிறகோ உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி மக்கள் கலங்கியதில்லை.

பிற்போக்கு ஜார் ஆட்சியை எதிர்த்து  போல்ஷ்விக் தலைமையில் மக்கள் உறுதியுடன் போராடி மக்கள் ஆட்சியை நிறுவியதை போல நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்கவேண்டும்.

இன்று நமது நாட்டில் ஆளும் வர்க்கமும், அதன் அரசமைப்பும் ஆள தகுதியிழந்து நிற்கிறது.  இதை தூக்கியெறிய வேண்டும்.  இழப்பு தியாகங்களுக்கு அஞ்சாமல் இயங்கிய  தோழர் லெனினிடமிருந்து கற்றுக்கொண்டு, நாம் முன்னேறி செல்லவேண்டும்” என்றார்.

பொதுமக்கள் மத்தியில் தோழர் லெனினின் உயர்ந்த பண்புகளையும், அவர் நமக்கான தலைவர் என்பதையும் பரப்புவதாக இந்த படத்திறப்பு விழா அமைந்தது.

தகவல்

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னைக் கிளை.