Monday, April 21, 2025
முகப்புபார்வைகேள்வி-பதில்" பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பு " - புதிய ஜனநாயகம் கேள்வி-பதில்

” பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பு ” – புதிய ஜனநாயகம் கேள்வி-பதில்

-

நான் தொடர்ந்து படித்துவரும் நல்ல, முற்போக்கான பத்திரிகை ‘புதிய ஜனநாயகம்’. ஆனால், உங்கள் அமைப்பு பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பாம். “என்னதான் முற்போக்காகப் பேசினாலும் எழுதினாலும் பார்ப்பனியம் புரட்சி செய்யாது” என்று வாதிடும் இங்குள்ள சில அன்பர்களுக்கு என்னால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. இதற்குத் தெளிவானதொரு பதில் அளிக்கவும்.

எஸ்.குமார், கும்பகோணம்

டாக்டர் அம்பேத்கர், “பார்ப்பான் புரட்சி செய்ய மாட்டான்’’ என்று கூறியுள்ளார். சமூக, பண்பாடு, பொருளாதாரப் புரட்சிக்கே இவ்வாறு கூறியுள்ளார். நமது மார்க்சிய அரசியல் புரட்சிக்கு நிச்சயம் அவரது கூற்று மிகச் சரியாகப் பொருந்தும், ஆதிக்க உணர்வு எல்லா மனிதர்க்கும் இயற்கைதான் எனினும் பார்ப்பனர்களுக்கு வளர்ப்பு முறையில் அது ஏற்பட்டுள்ளது.

தற்போது சமூக, பொருளாதார சூழ்நிலைகளால் புரட்சிகர இயக்கங்களில் சேர்ந்து புரட்சிக்கு பாடுபடலாம். தக்க சூழ்நிலை வரும் போது அவர்களது ஆதிக்க உணர்வு வெளிப்படும். அது புரட்சிகர அமைப்பைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். எனவே அவர்களை அமைப்புத் தலைமைக்கு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே அமைப்புக்கு உகந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். தங்கள் பதில் என்ன?

— நிரந்தரன், பெரிய புறங்கணி

தமிழினவாதிகளின் “தாயகம்” திராவிடர் கழகத்தின் “உண்மை” ஆகிய ஏடுகள் மூலம் அறிய வந்ததாகக் கூறிக் கொண்டு, இதேபோன்று எமது அமைப்பில் “பார்ப்பனத் தலைமை” என்கிற கேள்விக்கு சரியாக ஓராண்டுக்கு முன்பு (1992 ஜூனில்) புதிய ஜனநாயகத்தில் பதில் எழுதியுள்ளோம். ஓராண்டாகியும் எமது விளக்கத்திற்கு மறுப்பும் பதிலும் அவர்களிடம் கிடையாது. ஆனால் கொஞ்சமும் நேர்மையற்ற முறையில் தமது அவதூறுகளை மட்டும் பரப்பி வருவதாகத் தெரிகிறது. நாம் முன்பு அளித்த பதில் சாராம்சமாகப் பின்வருமாறு.

  1. பிறப்பால் பார்ப்பனர்களாகவும், இருப்பால் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் வாழும் ஒரு சில தோழர்கள், எமது அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது உண்மையே! இதை நாங்கள் பகிரங்கப்படுத்தவோ, மூடிமறைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள்தான் எமது அமைப்பின் தலைமையாக இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய்யும் அவதூறுமாகும். அதே சமயம், அவர்கள் மற்ற பிற தோழர்களைப் போலவே கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், சித்தாந்த – கொள்கை உறுதியும், தகுதியும், அனுபவமும், மக்களையும் புரட்சியையும் நேசிப்பதும் இருப்பின் ஜனநாயகபூர்வமான முறையில் தலைமைக்கு வரவும் தடை ஏதும் கிடையாது. ஏனென்றால் இந்த அமைப்புக்குள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. இன்ன சாதிப் பிறப்புடையவர்கள் தலைமைக்கு வரலாம் அல்லது வரக்கூடாது என்கிற விதி எதுவும் எமது அமைப்பில் கிடையாது. இது ஒரு மார்க்சிய- லெனினிய அமைப்பு. இங்கே சாதி அடிப்படையிலான கம்யூனிஸ்டுகளிடையே வகைப்பிரிவுகள் இல்லை. ஏனென்றால் சமுதாயத்தில் சாதியை ஒழிப்பதற்கு முன் புரட்சிகர அமைப்புகளில் சாதியை ஒழித்திட வேண்டும் என்பதுதான் எமது கொள்கை. அதுமட்டுமல்ல; எமது அமைப்பின் அரசியல், சித்தாந்த, கொள்கை மற்றும் அமைப்பு முடிவுகள் முற்றிலும் ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது இது பார்ப்பனத் தலைமையுடையது, அவர்கள்தான் முடிவுகள் எடுத்து வழிநடத்துகிறார்கள் என்கிற அவதூறு இதில் இயங்கிவரும் தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதாகும்.
  2. பார்ப்பன சனாதன வருணாசிரம சாதிய அமைப்பை முற்றாகத் துடைத்தெறியாமல் இந்த நாட்டின் ஐனநாயகப் புரட்சியோ அதன் ஒரு அங்கமாகிய தேசிய இன விடுதலையோ பூர்த்தியாகாது; இந்த அமைப்பை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் அனைவரும் ஜனநாயகப் புரட்சிக்கும், தேசிய இன விடுதலைக்கும் எதிரிகள்தாம். அப்படிப்பட்ட எதிரிகளாகப் பார்ப்பனர்கள் அனைவரையுமே கருத முடியாது. பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாத பிற மேல் சாதிகளையும் சேர்ந்த நிலப்பிரபுக்களையும், தரகு அதிகார முதலாளிகளையும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையுமே எதிரிகளாகக் கருத முடியும். அவ்வாறின்றி ‘பார்ப்பன சாதி – வருணாசிரமப் பிறப்புடைய அனைவருமே எதிரிகள், “உள்ளிருந்தே அடுத்துக் கெடுக்கும் நரித்தனம்” அவர்களுடைய பிறவிக்குணம். அதற்கு விதிவிலக்குக் கூட கிடையாது’ என்பதுதான் தமிழினவாத, திராவிட (பூர்வகுடி) இனவாதக் கட்சிகள், குழுக்களின் நிலைப்பாடு. இது முற்றிலும் தவறானது. பகுத்தறிவுக்கே எதிரானது. மார்க்சிய லெனினிய சித்தாந்தத்துக்கு மாறானது; (பூர்வகுடி) இனவாத சித்தாந்தம் (Racialism) ஆகும்.
    “பிறவிக்குணம்” என்று எதுவுமே கிடையாது; ஒருவரது குணநலன்கள் அவரது சமூக வாழ்வால்தான் உருவாகிறது. தீர்மானிக்கப்படுகிறது. பிறவியினால் அல்ல. பிறப்பு என்பது ஒரு விபத்தைப் போன்ற தற்செயலாக நிகழ்வது; அதை வைத்துக் கொண்டு எவரது சமூக, அரசியல் தகுதிகளையும் தீர்மானிக்கக் கூடாது. இதுதான் பகுத்தறிவு. அரசியல் மார்க்சிய- லெனினியக் கண்ணோட்டம்.குறிப்பிட்ட வருண சாதிப் பிறப்புத்தான் மனிதர்களது குணநலன்களையும், சமூக-அரசியல் தகுதிகளையும் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக வைக்க வேண்டும் என்பது உண்மையிலேயே பார்ப்பன சனாதன சித்தாந்தம் ஆகும். இதுவேதான் நாஜி சித்தாந்தத்தின் மூலகர்த்தா நீட்சே உருவாக்கிய தத்துவம். இதன் அடிப்படையில்தான் ஆரிய இனமே உலகை ஆளும் அறிவும், திறமையும் தகுதியும் உடையது என்ற இட்லரின் கோட்பாடு வகுக்கப்பட்டு ஆரிய இனமல்லாதாரை அடிமைப்படுத்தவும், வேட்டையாடவும் கிளம்பினர். நீட்சே – இட்லரின் சித்தாந்தத்தைப் போன்றதுதான் திராவிட (பூர்வகுடி) இனவாதமும் ஆகும். ஆகவே இதை நாம் ஏற்கவில்லை.
  3. பார்ப்பனர்களின் “அடுத்துக் கெடுக்கும் நரித்தனம்” பற்றி தமிழர்களை எச்சரித்துவரும் பல்வேறு கட்சிகளும் குழுக்களும்கூட தமது வசதிக்கேற்ப பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்கின்றனர். மணியம்மையைப் பொருந்தாத் திருமணம் செய்து கொண்டு “சொத்துக்களுக்கு வாரிசாக்குவது” என்ற யோசனையை பெரியாருக்குக் கொடுத்த ராஜாஜி அவரது திராவிட இயக்கத்தவரைவிட நம்பகமானவராகக் கருதப்பட்டார். வி.பி. ராமன் அண்ணாதுரைக்கும், குகன் கருணாநிதிக்கும் ஆலோசகர்களாக வைத்துக் கொள்ளப்பட்டனர். சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு வீரமணியும், குடும்பத்தின் பத்திரிகை சங்கிலித் தொடரை நடத்துவதற்கு கருணாநிதியும் பார்ப்பனர்களிடம் பொறுப்பளித்தனர். பா.ம.க.வின் கோவை மாவட்டத்துக்கும் “தினப்புரட்சி” நாளேட்டிற்கும் பொறுப்பானவர்களில் ஒரு முக்கியப் புள்ளி பிறப்பால் பார்ப்பனர். இது ஒருபுறம் இருக்க, பார்ப்பனர்களை எதிர்ப்பது, ஆனால் அவர்கள் உருவாக்கிய பார்ப்பன சனாதன வருணாசிரம அடிப்படையிலான சாதிகளை அங்கீகரித்து, ஆதரித்து தம்மை சத்திரியர், வைசியர் என்று பெருமை பாராட்டிக்கொள்வதோடு சூத்திரர், பஞ்சமர், சண்டாளர் ஆகிய வருணங்களின் வழிவந்த சாதிகளைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்துவதும் பார்ப்பனத் தன்மை உடையதுதான்.
  4. எல்லாவற்றுக்கும் மேலானது. அரசியல், சித்தாந்தம், கொள்கை, நடைமுறை ஆகியவற்றில் பார்ப்பனீயத்துடன் எந்த வகையிலாவது சமரசம் செய்து கொள்கிறோமா என்பதுதான் முக்கியமானது. நாம் புலிகளை ஆதரிக்காதவர்கள் என்று அறிந்தும் “இவர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள்” எனக் குற்றஞ்சாட்டி நமது தோழர்கள் மீது “தடா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அரச துரோக வழக்குகள் போட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால் எங்களைப் போல “பார்ப்பன பாசிச எதிர்ப்பு” முழக்கத்தை முன் வைத்துப் போராடாது மழுப்பும் கட்சிகளும், குழுக்களும் இதைப் பார்ப்பனத் தலைமை என அவதூறு செய்கின்றனர். தங்களை புலி, சிங்கம், யானையைப் போன்ற புறநானூற்று வீரர்கள் என்று பீற்றிக் கொண்டவர்கள் எல்லாம் ராஜீவ் கொல்லப்பட்ட 1991 மே 21-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு எங்கே போனார்கள்? ‘ராஜீவைக் கொன்ற தாணு போதைமருந்துக்கும, வரைமுறையற்ற பாலுறவுக்கும் அடிமையானவள்; அவளும், சிவராசன், சுபா போன்றவர்களும் சி.ஜ.ஏ ஏஜெண்டுகள்’ என்று எழுதியும் பேசியும் “நரித்தனமாக” நடந்து கொள்வதுதான் அரசியல் விவேகம் என நியாயப்படுத்தினார்கள். அந்த இக்கட்டான நெருக்கடி, அடக்குமுறை நாட்களிலும் துணிந்து பாசிச பார்ப்பன எதிர்ப்பு, ஈழ ஆதரவு நிலையெடுத்து போராடிய எமது அமைப்பின் தலைமையையும், தமிழின உணர்வையும் சந்தேகிப்பதற்கு இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

“பார்ப்பனத் தலைமை” என்கிற அவதூறுக்கு எதிராக நாம் அளித்த மேற்கண்ட விளக்கத்துக்கும் கேள்விகளுக்கும், அந்த அவதூறைப் பரப்பிவரும் எந்தத் தரப்பினரிடம் இருந்தும் இதுவரை பதில் வரவில்லை. மாறாக அவதூறைத் தொடர்கின்றனர். அவர்களது நேர்மையின்மையை இதுவே அம்பலப்படுத்துகிறது. இதுவே, இப்போது பதிலளிக்க எடுத்துக்கொண்ட கேள்விகளுக்கும் விளக்கமாக உள்ளது. மேலும், பார்ப்பனப் பிறப்புடைய அனைவரையும் பற்றி அம்பேத்கார் அவநம்பிக்கை கொண்டிருந்தார் என்பது உண்மையானால் அவர் ஏன் ஒரு பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்? மகாத்மா பூலேவுக்குப் பிறகு, பார்ப்பன சனாதன வெறியரான திலகருக்கு எதிராக சமரசமின்றிப் போராடிய மாபெரும் சீர்திருத்தவாதியான ராணடே ஒரு பார்ப்பனர் என்றாலும் அவரை ஒரு மாமனிதர் என்று ஏன் போற்றினார்?

“அம்பேத்காரைப் போன்று ஒரு தாழ்த்தப்பட்டவரது தலைமையினால்தான் அச்சமுதாயம் விடுதலை அடைய முடியும்; அத்தலைமையினால்தான் தாழ்த்தப்பட்டவர்களது பிரச்சனைகளை உணரவும், புரிந்துகொள்ளவும் உறுதியாக போராடவும் முடியும். மற்றபிற சாதியினர் குறிப்பாக மேல் சாதிக்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள்” என்று கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளின் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு தலைமை, ஒரு அமைப்பு எனப் பல நூறு அமைப்புகள் தோன்றியுள்ளன. பெரியார் ஈ.வெ.ரா.வைக்கூட தாழ்த்தப்பட்ட சாதிகள் தமது தலைமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாரும் தம்மைச் சூத்திரர்களின் பிரதிநிதியாகவும், அம்பேத்காரைத் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகவும் கருதிப் பேசினார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இப்படியே போனால் வன்னியருக்கு ராமதாசும், நாயுடுகளுக்கு கெங்குசாமியும்தான் தலைவர்கள் என்பதுகூட நியாயமாகிவிடும். இத்தகைய அணுகுமுறை சமுதாய, இன அரசியல் விடுதலைக்கும் புரட்சிக்கும் சரியானதுதானா?

இது ஒருபுறம் இருக்கட்டும். நமது கருவறை நுழைவுப் போராட்டம் திராவிடர் கழகம் உட்பட அனைத்து அரசியல் சமூக இயக்கங்களிலும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளிடம் பெருத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. பாசிச பார்ப்பன ஜெயா கும்பலுடன் சமரசம் செய்துகொண்டும், பெரியாரைப் பூசையறைத் தெய்வமாகவும் அவரது போதனைகள் தொழுகைக்குரிய மந்திரங்களாகவும் மாற்றி செயலிழக்கச் செய்துள்ள திராவிடர் கழக வீரமணிக்கு நமது கருவறை நுழைவுப் போராட்டம் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சுயவிளக்கமளிக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முகாமடித்து நமது அமைப்புகளில் ‘பார்ப்பனத் தலைமை’ பற்றிய அவதூறு பரப்பி வருகிறார்.

“பார்ப்பனராகப் பிறந்த அனைவருமே நம்பிக்கைத் துரோகம் செய்துவிடுவார்கள். அடுத்துக் கெடுக்கும் நரித்தனம். சூழ்ச்சியும் அவர்களது ரத்தத்திலேயே ஊறியவை; இதற்கு விதிவிலக்கே கிடையாது” என்பதுதான் வீரமணி போன்றவர்களது வாதம். ஆனால் திராவிடர் கழகத்தின் அனுபவமும், அணுகுமுறையுமே இதற்கு மாறானது என்பதற்குச் சான்றுகள் கூறமுடியும்.

“1923 டிசம்பர் 15-ம் நாள். சட்டசபைத் தலைவராக இருந்த ஸர்.பி.ராஜகோபாலாச்சாரியார் உத்தியோகம் காலாவதி முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டார். அவர் முதன்முதலில் சட்டசபைத் தலைவரானபோது நமது கட்சியார் பலருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. முதலில், அவர் பொதுவாழ்வில் ஈடுபட்டு அனுபவம் பெறாதவர். வாழ்நாள் முழுவதும் உத்தியோக மண்டலத்தில் வாழ்ந்தவர். ஒரு பிராமணரல்லாதார் கட்சி அதிகாரப் பதவி வகிக்கும் போது ஒரு பிராமணர் பட்சபாதமின்றி நடந்துகொள்வாரா என்ற சந்தேகமும் பலருக்கு இருந்தது.

“ஆனால் புத்திமானானான சர். ராஜகோபாலாச்சாரியார் தலைமை பதவியேற்ற சொற்ப காலத்துக்குள் எல்லோருடைய சந்தேகங்களையும் நீக்கிவிட்டார். அவர் தலைவராக இருந்த மூன்று வருச காலத்தில் எந்த மெம்பரையும் அலட்சியமாக நடத்தியதில்லை. சட்டசபையில் உக்கிரமான விவாதங்கள் நடக்கும் போது உண்டாகக்கூடிய அசம்பாவிதங்களை எவர் மனமும் புண்படாமல் தீர்ப்புக் கூறுவதில் அவர் வெகு சமர்த்தர். பிராமணர் அல்லாதார் என்ற துவேசம் அவரிடம் எட்டுணையும் கிடையாது.

‘’பிறப்பால் நான் பிராமணனாயினும், மனத்தால் நான் அல்லாதானே என அவர் வெகு பெருமையாகக் கூறிக்கொள்வாராம். எனவே, அவர் உத்தியோகம் வகித்துப் பிரிந்த கடைசி நாளன்று சர்வகட்சியாராலும் நன்றாகப் பாராட்டப் பெற்றார்.”

(பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு : நீதிக் கட்சி வரலாறு பக். 66)

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் (1937-40) தலைமையேற்று வழிநடத்திய பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி போன்ற தலைவர்களின் வரிசையில் ஒன்பதாவது சர்வாதிகாரியாக போராட்டத் தளபதியாக இதே ராஜகோபாலாச்சாரியார் இருந்தார். அப்போராட்டத்தில் பங்கு கொண்டு இரண்டு முறை சிறை சென்ற வேலூர் துளசி அம்மாள் பிறப்பால் பார்ப்பனரே; அதற்காக அவர்களது தமிழ்ப்பற்றைச் சந்தேகிக்க முடியுமா?

அதே போன்று பிறப்பால் பார்ப்பனரான மறைந்த சென்னை மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மீது பெரியாரும் அண்ணாதுரையும் மதிப்பு வைத்திருந்தனர் என்பதை மறுக்கமுடியுமா?

இல்லை – இப்போது “முரசொலி” ஆசிரியர் குழுவில் உள்ள “சின்னக் குத்தூசி” பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், ‘அவர் பார்ப்பனீயத்துடன் சமரசம் செய்து கொண்டார். திராவிட இயக்கத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்’ எனக் குற்றஞ்சாட்ட முடியுமா?

அதற்கு மாறாக, ஆட்சியில் இருந்த போது இந்திரா, ராஜீவுக்கும், பார்ப்பனதாசன் எம்.ஜி.ஆருக்கும் சாமரம் வீசியதோடு பார்ப்பன ஜானகியின் அற்ப ஆட்சிக்கும் முட்டுக்கொடுத்தும் பார்ப்பன –பாசிச ஜெயாவிடம் கைநீட்டி ஆதாயம் பெற்று ஆதரவும் காட்டி வருகிறார் வீரமணி. பார்ப்பனரல்லாத பிறப்பு இத்தகைய துரோகங்கள் செய்யாதவாறு அவரைத் தடுக்க வில்லையே!

ஆகவேதான் கூறுகிறோம்; பிறப்பு என்பது தலைமையின் தகுதியாக இருக்க முடியாது. வாக்கும், வாழ்வும்தான் அதற்கான அடிப்படையாக இருக்க முடியும.

– புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 1993