ஓ …… ஆசிரியர் சமூகமே!
- அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க வாரீர்….
- நேர்மையில், உண்மையில், ஒழுக்கத்தில் நம்பிக்கை இழந்த ஒரு தலைமுறையை காக்க வாரீர்!

அரசுப்பள்ளிகளை முடமாக்கும் கல்வி தனியார்மயத்தை எதிர்க்காமல் மாணவர்கள் எண்ணிக்கையை கூட்டாமல் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? ஆசிரியர் வேலை வாய்ப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது என்பதை இன்றைய ஆசிரியர் சமூகம் புரிந்திருக்கிறதா? தாய் மொழியும், அதன் இலக்கியங்களும் ஒரு இனத்தின் உயிர் ஆதாரம் என்பதை வரும் தலைமுறையினர் உணர்ந்துள்ளார்களா? இன்றைய தனியார்மய கல்வி முறை அதனை உணர்த்த முடியுமா?
கொலை, கொள்ளை, குடிப்பழக்கம், நுகர்வு வெறி, ஆபாச கலாச்சார சீரழிவு, பொறுப்பின்மை, நம்பிக்கையின்மை, நாட்டுப்பற்றின்மை, சமூக உணர்வின்மை இத்தகைய செயல்கள் அதிகரிப்பதற்கு ஆசிரியர் பணி, பள்ளிக் கல்வி முறையின் குறைபாடு முக்கிய காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே கல்வியின் நோக்கம் என்ற நச்சு வித்து வளர்ந்து மரமாகப் படர ஆரம்பிக்கிறது. மாணவர்கள் மார்க் எடுக்க எதையும் செய்யலாம் என கூச்சமின்றி தனியார் கல்வி நிறுவனங்கள் அமல்படுத்துகின்றன. இதற்காக ஆசிரியர்களை கூலி அடிமைகளாகப் பயன்படுத்துகின்றனர்.
இலாப நோக்கமின்றி செயல்படும் அரசுப்பள்ளிகளில் மட்டுமே உண்மையான புரிதலில் கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க முடியும். நமது இலக்கிய வளங்களை, இயற்றியவர்களின் வல்லமையை, நமது வரலாற்றை மாணவர்களுக்கு சொல்ல முடியும். வளமான எதிர்கால சமுகத்தை உருவாக்க முடியும்.
கல்வி தனியார்மயம் என்ற புற்று நோய் அரசுப்பள்ளிகளை அழிக்க முயல்கிறது. இனிமேலும் நாம் அமைதி காக்கக் கூடாது.
- சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் போராட்டம்..
கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம்.. - அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த போராட்டம்..
- சுத்தமான குடிநீர் , போதிய கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க

என தொடர்ந்து போராடி வருகிறோம்… களைப்படையாமல் போராட ஒரு கை கொடுங்கள் என கேட்கிறோம்.
சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க, நீங்களும் இணைந்து ஏதோ ஒரு வடிவத்தில் ஆதரவளித்தால் நமது கல்விப் பணியை விரிவுபடுத்த முடியும்.
மே, ஜூன் ஆகிய இருமாதங்கள் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பிரச்சாரம், இறுதியில் மாநாடு, பேரணி பொதுக்கூட்டம் என நடத்த உத்தேசித்துள்ளோம்.
சொந்த வேலை இல்லாதவர்கள் யாரும் இல்லை, நேரம் ஒதுக்கி நாம்தான் செய்ய வேண்டும். அது சமயம் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் சந்திப்புக் கூட்டத்திற்கு தவறாது வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே!
- ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே!
- பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!!
- எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்…
சந்திப்பாளர் கூட்டம்

இடம் :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (PUSER),
(CSC கணினி பயிற்சி மையம் எதிரில் )
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம்
நாள் : 09-05-2015 சனிக்கிழமை
நேரம் : காலை 10-00 மணிக்கு
தொடர்புக்கு: 93450 67646
அரசுப்பள்ளி நமது பள்ளி. அதில் பிள்ளைகளை சேர்ப்பது நமது கடமை. இன்று ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். நீத்பதிகள், டாக்டர், வக்கீல், என்ஜினியர், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான்!
அனைத்து மாணவர்களும் சாதி, வர்க்க, வேறுபாடு இன்றி சீருடையில் சமமாக கல்வி பயில்கிறார்கள். லாப நோக்கமின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

புத்தகம், நோட்டு, சைக்கிள், மடிகணினி, பஸ் பாஸ், மதிய உணவு என அனைத்தும் அரசு இலவசமாக மாணர்களுக்கு தருகிறது. அனுபவமிக்க அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் ரூ 30,000-க்கு மேல்.
அவர்கள் சரியாக சொல்லித்தரவிட்டால் நாம் கேட்க முடியும். அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை பெற்றோர்கள் தலையிட்டால் சரி செய்யமுடியும்.
தனியார் பள்ளிகளில்,
மாணவர்களை பணயக் கைதிகளாக்கி பணம் பறிக்கிறார்கள். அனைத்திற்கும் காசு, பணம், துட்டு என பல ஆயிரங்கள். கட்டவில்லை என்றால் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் கல்நெஞ்சர்கள். கட்டணக் கொள்ளையை கேள்விக் கேட்கும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

தனியார் பள்ளிகளில், மார்க் எடுக்கும் எந்திரமாக மாணவர்களை மாற்றி பிராய்லர் கோழியாக வளர்க்கிறார்கள். ரூ 5,000 சம்பளத்திற்கு கூலி அடிமைகளாக, அனுபவமற்ற ஆசிரியர்களை வைத்து கல்வியை வியாபாரப் பண்டமாக ஆக்கி தனது லாப வெறிக்காக நமது பிள்ளைகளை துன்புறுத்தி கசக்கிப் பிழிகிறார்கள்.
பெற்றோர்களே சிந்திப்பீர்!
- அரசுப் பள்ளி நமது பள்ளி!
- அரசுப் பள்ளிகளில் நமது பிள்ளைகளை சேர்ப்போம்!
- தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்!
சைக்கிள் பேரணி
நாள் : 08/05/2015 வெள்ளிக்கிழமை நேரம் காலை 9 மணி
துவங்கும் இடம் : டி-எம்-பள்ளி, புதுக்குப்பம், விருத்தாச்சலம்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (PUSER),
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்
பேச : 9345067646, 93600 61121