பூனேவைச் சேர்ந்த 19 வயதான அமிதேஷ், சிவில் எஞ்சினியரிங் முதலாமாண்டு மாணவர். அவர் மீது மதக் கலவரத்தைத் தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துவது, இணைய பயங்கரவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்” என்று மே 2-ம் தேதி டுவிட்டரில் போட்ட நிலைத்தகலுக்காக அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா என்ற நகரத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் நடத்திய ரயில் மறியல் புகைப்படங்களை சேர்த்து இந்த நிலைத் தகவலை போட்டிருந்தார், அமிதேஷ். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இசுலாமியர் ஒருவரின் தாடியைப் பிடித்து இழுத்து, மூக்கில் குத்தி இரத்தம் வடியச் செய்த இந்து மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காண்ட்லாவைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் ரயில் மறியல் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அமிதேஷ் சிங்கின் டுவிட்டர் கணக்கின் பெயர் @AmiteshSinghBJP. டுவிட்டரில் பிரதமர் மோடி பின்தொடரும் 1,200 பேரில் அமிதீஷூம் ஒருவர். அதாவது, மோடியை பின்தொடரும் 12 கோடி டுவிட்டர் கணக்குகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சுமார் 1,200 பேரில் அமிதீஷ் சிங்கும் ஒருவர். அவர் தன்னுடைய டுவிட்டர் சுயவிபரக் குறிப்பில், “பா.ஜ.க இளைஞர் அணி நகர துணைத்தலைவர்” என்றும், “பிரதமரால் பின்தொடரப்படுபவர்” என்றும் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு “முஸ்லீம்களை கொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுத்த மோடி இன்று நாட்டின் பிரதமராகியிருப்பதைப் பார்த்து தானும் கனவுகள் கண்டிருந்திருப்பார் அமிதேஷ் சிங். மேலும், ‘மத்தியில் “நம்ம” ஆட்சி, மகாராஷ்டிராவிலும், “நம்ம” ஆட்சி. எனவே, ஒரு இனப் படுகொலையை நாடு முழுவதும் அவிழ்த்து விடும் தருணம் வந்து விட்டது’ என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
குஜராத்தில் மோடி, தொகாடியா தொடங்கி, தமிழ்நாட்டின் ராமகோபாலன், எச் ராஜா வரை மேடைகளில் முழங்கியதை இணையத்தில் முழங்கியிருக்கிறார் அமிதீஷ்.
பா.ஜ.க.-வின் அரசியலுக்கு அமிதேஷ் மட்டும் ஒரே சாட்சி இல்லை. அதே நாளில், பா.ஜ.க-வின் ஹரியானா மாநில ஐ.டி கிளை இணை அமைப்பாளர் புனித் அரோரா என்பவர் “ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பிகானீர் செல்லும் ரயிலை ஷாம்லியில் தடுத்து நிறுத்தி இந்துக்கள் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து அவர்களைக் கொல்லப் போவதாக மிரட்டுகின்றனர் #GodhraAgain” என்று டுவிட்டர் நிலைத்தகவல் போட்டிருக்கிறார். (Puneet Arora – @puneetarora82)

ஆனால், இந்து மதவெறியர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. டுவிட்டரில் அமிதேஷின் நிலைத்தகவலை பார்த்த சக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் அவரை கண்டித்தார்கள். நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கையும் இணைத்து, இவரை கண்டிக்குமாறு கேட்டார்கள்.
அமிதேஷ் முதலில் “வேறு யாரோ என் பெயரில் கணக்கு ஆரம்பித்து, எனது புகைப்படத்தையும் பயன்படுத்தியிருக்கின்றனர்” என்றிருக்கிறார். பின்னர், “இது தன்னுடைய கணக்குதான் ஆனால், யாரோ அதை ஹேக் செய்து விட்டனர்” என்றார். தொடர்ந்து நெருக்கடி அதிகமாகவே, மன்னிப்பு கோரும் டுவீட்டுகளை வெளியிட்டு, தன்னுடைய வெறுப்பைக் கக்கும் டுவீட்டை அழித்து விட்டார். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை தனது டுவிட்டர் கணக்கையே அழித்து விட்டார்.
டுவிட்டர் ஆர்வலர்கள் விடாப்பிடியாக போலீசில் புகார் பதிவு செய்ய, அமிதேஷ் மீது குற்றவியல் சட்டங்களின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது பூனே போலீஸ்.

ஆனால், “அமிதேஷூக்கும் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று புனே காவல்துறை ஆணையர் கே.கே.பாதக் சான்றிதழ் அளித்து விட்டார். பண்ட் கார்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் நிகம், “விசாரணையில் அமிதேஷூக்கு பா.ஜ.கவுடன் தொடர்பு இல்லை” என்று தெரிய வந்ததாகக் கூறியிருக்கிறார். தன் திட்டப்படி மதவெறி பிரச்சாரமும் செய்ய வேண்டும், ஆனால் அதில் சிக்கிக் கொள்ளும் நபர்களை கைகழுவி விடவும் வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோட்பாட்டின்படி பூனே பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கணேஷ் கோஷ், “அமிதேஷ், கட்சியின் யுவ மோர்ச்சாவுடன் தொடர்புடையவர் அல்ல” என்று கூறி விட்டார்.
ஹாஷிம்புரா படுகொலைகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வரை சென்றும், மலியானா படுகொலைகளுக்கு வழக்கே பதிவு செய்யாமலும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்த மதவெறியர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் இந்த நாட்டில், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விட்டு நடத்திய மோடி நாட்டின் பிரதமராகவும் உலாவும் இந்த நாட்டில், அமிதேஷ் சில நாட்களில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்பது உறுதி. மேலும், கலவரம் ஒன்றை தூண்ட வேண்டுமானால் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற பாடத்தையும் அவர் கற்றுக் கொண்டிருப்பார்.

அமிதேஷ் பற்றவைக்க முயன்ற மதக் கலவரத்துக்கான தூண்டுதல் உத்தர பிரதேசத்தில் நடந்தது. முகமது ஃபரூக் மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த சிக்லியில் தனியார் ஆங்கில வழிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவர், தனது நண்பர்களுடன் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் உத்தர பிரதேசம் சாகரான்பூரில் வசிக்கும் அவரது சமய ஆசிரியர் ஹஸ்ரத் மவுலானா தல்ஹா சாகபை பார்க்கப் போவது வழக்கம். மே 1-ம் தேதி காலையில் டெல்லியிலிருந்து சகரான்பூர் செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் பயணித்திருக்கின்றனர்.
ரயில் பயணத்தின்போது கழிப்பறைக்குச் செல்ல முயன்ற ஃபரூக்கை அங்கு உட்கார்ந்திருந்த இந்துமதவெறி காலிகள் சிலர் தாக்கி தாடியைப் பிய்த்து, ரத்தம் வரும்படி அடித்து அவர் வசம் இருந்த பணத்தையும் பறித்திருக்கின்றனர். அது தொடர்பாக புகார் அளிப்பதற்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா போலீசிடம் புகார் கொடுத்திருக்கின்றார் ஃபரூக்.

2013-ம் ஆண்டு மேற்கு உத்தர பிரதேசத்தில் முசாஃபர் நகர் பகுதியில் அமித் ஷா நடத்தி வைத்த ஜாட் சாதியினரின் முஸ்லீம்கள் மீதான மதவெறி தாக்குதல்களில் ஷாம்லி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த கடந்த 2 ஆண்டுகளில் ரயில் பயணத்தின் போது இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை காவி குண்டர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் தன் மீதான தாக்குதல் குறித்து ஃபரூக் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் (மே 2-ம் தேதி) ஆயிரக் கணக்கான முஸ்லீம் மக்கள் ரயில் நிலையத்தில் கூடி, ஃபரூக்கை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த பிறகு பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றிருக்கின்றனர்.
அந்தப் போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாஹித் ஹசனும், அதே கட்சியைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் ஹாஜி வாஜித் கானும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி இஸ்லாமும் கலந்து கொண்டனர். பெரும்பாலானவர்கள் கலைந்து சென்ற பிறகும், ஆளும் சமாஜ்வாதியையும், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் சிக்க வைக்க விரும்பிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மறியலைத் தொடர்ந்தார். அவர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது, அதைத் தொடர்ந்து அந்த கும்பல் அருகிலிருந்து காவல் நிலையத்தைத் தாக்கி, நிறுத்தியிருந்த சில வண்டிகளை எரித்தது.

இந்த ரயில் மறியல் தொடர்பான படங்களையும், செய்திகளையும் பயன்படுத்திதான் பா.ஜ.க பூனேவிலிருந்தும், ஹரியானாவிலிருந்தும் பயங்கரவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
நாடெங்கிலும் மத வேற்றுமைகளை கிளறி விட்டு, காய்ந்த சருகுகளை பரப்பி வைத்து, ஏதாவது ஒரு சம்பவம் கலவரத்தீயை பற்ற வைக்கும் என்று காத்திருக்கின்றன இந்து மத வெறி ஓநாய்கள். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பார்ப்பன மதவெறி பாசிசத்துக்கு பலியாகி அமிதேஷ் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மதவெறி போதை ஊட்டப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் நிலநடுக்க அபாயத்தை விட இந்துமதவெறியின் அபாயம் அதிகம். என்ன செய்யப் போகின்றோம்?
– செழியன்
இது தொடர்பான செய்திகள்
- Mob-police clashes in Shamli triggers communal GodhraAgain discourse on Twitter
- Engineering student held in Pune for threat on social media
- It wasn’t #GodhraAgain. So what exactly happened in Uttar Pradesh?
- Shamli tense, 17 hurt in protest over ‘attack’ on Tablighi men
- Users claiming BJP association spread rumors by trending #GodhraAgain, Party must act against those