Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது

பாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது

-

“ஜெயலலிதாவை விடுதலை செய்து மக்களிடம் சிறைப்பட்ட நீதித்துறை”

புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

ஜெயா விடுதலையையும். பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயா நிரபராதியா - ஆர்ப்பாட்டம்
ஜெயா நிரபராதியா? பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!

இன்று காலை 11 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 27 அன்று குற்றவாளி என்று நீதிபதி குன்ஹாவால் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழகம் முழுவதும் ஜெயாவின் தொண்டர்கள் என்ற பெயரில் கூலிப்படைகளால் நடத்தப்பட்ட வன்முறையை, பேருந்து எரிப்பை, கடையடைப்பை கைகட்டி, வாய் பொத்தி, ஐம்புலனடக்கி வேடிக்கை பார்த்த அதே போலிசு,  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்தது; பெண் தோழர்கள், குழந்தைகள் உள்ளிட்டு அனைத்துத் தோழர்களையும் தர தரவென இழுத்து வேனில் ஏற்றியது. வேனுக்குப் பக்கத்தில் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவரையும் அப்படியே தூக்கி வேனில் அடைத்து கைது செய்தனர்.

ஜெயா நிரபராதியா? - ஆர்ப்பாட்டம்
“இது நிதியால் வாங்கப்பட்ட நீதி, இது பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் நீதிமன்றம்”

66 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்ட ஜெயலலிதா, மீண்டும் பல கோடிகளை சுருட்ட, எம்.எல்.ஏ கூட்டம் கூட்டுவதும், மீண்டும் முதல்வராவதற்கு அனைத்து ஆயத்தங்களை செய்து கொண்டும் இருக்கிறார். உண்மையான குற்றவாளி ஜெயாவின் பதவியேற்பு விழாவிற்கு 7,000 போலிசை அனுப்பி பாதுகாக்கச் செய்யும் அதே போலிசு, தோழர்களை குற்றவாளிகளைப் போல அடித்து வேனில் ஏற்றி ’வால் டாக்ஸ்’ சாலையில், போலிசு குடியிருப்பில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஜெயா நிரபராதியா - ஆர்ப்பாட்டம்
குற்றவாளிகளை தண்டிக்க அருகதை அற்ற அரசமைப்பை வீழ்த்துவோம்.

கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், ”கொடுத்த காசுக்கு மேல் குமாரசாமி கூவியதால்”, தமிழக மக்களின் சொத்துக்களை திருடிய ஜெயலலிதா ’நிரபராதி’யாக்கப்பட்டார். தீர்ப்பு வந்ததும், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் வெல்லும்” என மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கை பேசினார், ஜெயா. குனிந்து கும்பிடுப் போட்டே பழக்கப்பட்ட அடிமைகள் கூட்டத்தைக் கூட்டி ஐந்தே நிமிடத்தில் ஒப்புதல் வாங்கி, இன்று ஆளுநரிடம் அரசமைக்க உரிமையும் கோரியுள்ளார் மக்கள் சொத்தைத் திருடிய ஜெயலலிதா.

எம்.எல்.ஏ-க்கள் கைத்தட்டலால் அவ்வை சண்முகம் சாலையே அதிர்ந்ததாகவும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்ததாகவும் செய்திகளை அப்டேட் செய்து நெஞ்சம் குளிருகின்றன பத்திரிகைகள்.

ஆனால், இது நிதியால் வாங்கப்பட்ட நீதி என்பதையும், இது பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் நீதிமன்றம் என்பதையும் புரிந்து கொண்டு தீர்ப்பையும், நீதித்துறையின் யோக்கியதையையும் எள்ளி நகையாடுகின்றனர், மக்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் நீதித்துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்தவதாகவும் அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள்,
சென்னை.

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம். தோழர்கள் கைது

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

______________________