இந்தியாவின் பெருநகரங்களில் முஸ்லிம் மக்களுக்கு வாடகை வீடுகள் மறுக்கப்படுவது சற்றே பழைய சேதியாகி விட்டது. முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு அவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக இந்தியாவின் முக்கிய நிறுவனம் ஒன்று வேலை மறுத்திருப்பது புதிய சேதி. மும்பையை சேர்ந்த ஜீசன் அலி கான் என்ற இளைஞருக்கு தான் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இயங்கும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் என்ற வைரத் தொழிலில் ஈடுபடும் நிறுவனம் தான் அந்த முஸ்லிம் இளைஞரை நிராகரித்தது.

ஜீசன் அலி கான் சர்வதேச வணிகம் (International Business) பயின்ற எம்.பி.ஏ பட்டதாரி. ஹரே கிருஷ்ணா நிறுவனத்தின் சர்வதேச வணிகப்பிரிவில் வேலைக்கு சேர விளம்பரத்தை பார்த்து விட்டு மே மாதம் 19-ம் தேதி தனது விண்ணப்பத்தை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். விண்ணப்பத்தை அனுப்பி விட்டு மறுமொழிக்காக பதைப்போடு காத்திருந்த ஜீசனுக்கு 20-ம் நிமிடத்திலேயே பதில் வந்து சேர்ந்தது. ஆவலுடன் இன்பாக்ஸை திறந்துள்ளார். அதில் ”விண்ணப்பித்ததற்கு நன்றி. முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே நாங்கள் வேலைக்கு சேர்க்கிறோம் என்பதை வருத்ததுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என்று இருந்தது. ஹரே கிருஷ்ணா நிறுவனத்திடம் இருந்து தனக்கு வந்த மின்னஞ்சல் பதிலை முதலில் ஜோக் என்று கருதியுள்ளார். அதே நேரம் அவருடன் விண்ணப்பித்த அவரது இரண்டு நண்பர்களும் நேர்முகத்துக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். பிறகு தான் தனக்கிழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இப்படி ஒரு அற்ப நடத்தையை ஹரே கிருஷ்ணா நிறுவனத்திடம் இருந்து தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஹரே கிருஷ்ணா வைரத் தொழிலின் நிறுவனர் சாவ்ஜி தன்ஜி தோலக்கியா குஜராத்தின் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர். சூரத்தில் வைர உற்பத்தியும், அதன் வர்த்தக மற்றும் விற்பனை நிலையம் மும்பையிலும் அமைந்துள்ளது. கடந்த 15 வருடங்களில், 50-க்கு மேற்பட்ட நாடுகளில் வணிகத்தை பெருக்கியுள்ளது ஹரே கிருஷ்ணா. தனது தந்தை வழி மாமாவுடன் இணைந்து வைரத்தை தீட்டி வழவழப்பாக்கும் தொழிலை செய்து வந்த தோலக்கியா 1984-ல் தனது சகோதரர்களுடன் இணைந்து சொந்தமாக வைர தொழிலில் இறங்கினார். 1991-ம் வருடம் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் லிமிடட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில், அதன் வருவாய் மிகச் சாதாரணமான நிலையில் இருந்து வந்தது. இப்போது, இந்தியாவின் ஐந்து மிகப்பெரிய வைரத்தொழில் நிறுவனங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு அதானியின் தொழில் கொள்ளை மட்டுமே அனைவரும் பரவலாக அறிந்த ஒன்று. வைர வியாபாரி தோலக்கியாவின் வருவாயும் மலைப்பை தருவது. கடந்த 2014-ம் வருடத்தின் இறுதியில் ஹரே கிருஷ்ணா ஈட்டிய மொத்த வருவாய் ரூ 6,000 கோடியாக இருந்தது.

தனது லாபத்தில் சிறு பகுதியை கொண்டு ஊழியர்களை குளிப்பாட்டியது ஹரே கிருஷ்ணா. 207 வீடுகள், 424 கார்கள் மற்றும் தங்க/வைர நகைகளை ‘சிறப்பாக’ பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கினார். தோலாக்கியா. தோலக்கியாவை ஒரு ‘பரோபகாரி’யாகவே அனைவருக்கும் தெரியும். தேசிய ஊடகங்களில் ஹரே கிருஷ்ணாவின் முஸ்லிம் வெறுப்பு – இந்துத்துவ முகம் அம்பலமானதை அடுத்து சற்று அதிர்ந்தார், சாவ்ஜி தன்ஜி தோலக்கியா. தனது தாராள முகத்தை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு பழியை நிறுவனத்தின் மனித வளத்துறையை சேர்ந்த ஊழியர் தீபிகா திகே மீது போட்டார். தீபிகா புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியர் என்பதால் நிறுவனத்தின் கொள்கைகள் தெரியவில்லை என்றுள்ளார். மேலும், தனது நிறுவனத்தில் ஒரு முஸ்லீம் வேலை செய்வதாகவும் வெளியிட்டிருகிறார்.
இந்த கண்துடைப்பு விளக்கங்களைத் தாண்டி முசுலீம்களுக்கு இத்தகைய நிறுவனங்களில் வேலை இல்லை என்பதே உண்மை.

ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது. மியான்மரின் ரொகிங்கியாக்கள் போல; இலங்கையின் தமிழீழப் பகுதியில் வாழும் தமிழர்களை போல இந்திய முஸ்லிம்களிடம் இந்து சமூகப் பெரும்பான்மையின் பலத்தை இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து அவர்களை நிர்மூலமாக்கும் பாசிச செயல்திட்டத்தின் ஒரு வடிவம் இந்த சம்பவம். எனவே இந்த சம்பவம் வெறும் தற்செயல்தானா என்பதை மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் கேள்வியெழுப்பி பார்க்க வேண்டியது அவசியமாகும்.
அலிசாகர் ஜாவேரி என்ற இசுலாமியர் குஜராத்தின் பாவ்நகரில் இந்துக்கள் குடியிருக்கும் இடத்தில் விற்பனைக்கு வந்த ஒரு பங்களாவை கடந்த 2013-ம் வருடம் வாங்கினார். இதனை மோப்பம் பிடித்த வி.ஹெச்.பி தொடர் தொல்லைகளை கொடுத்து கடந்த 2014-ம் வருடம் அந்த பங்களாவை விற்க வைததது. “தனது வீட்டை ஒரு இந்துவுக்கே வாடகை விடுகிறேன் அல்லது சினிமா ஷூட்டிங்குக்கு பயன்படுத்தக் கொடுக்கிறேன்” என்று இறைஞ்சியதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, வி.ஹெச்.பி. “48 மணி நேரத்துக்குள் ஜாவேரி தனது பங்களா வீட்டை இந்துக்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்குமாறு” கூக்குரலிட்டிருந்தார், பிரவீன் தொகாடியா.
முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்ட சொத்துக் கண்காட்சி 2012-ம் வருடம் ஆமதாபாத்தில் நடத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு வீடுகள் கிடைப்பதில் இருக்கும் ‘சிக்கலை தீர்க்கும்’ எண்ணத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தில், சில பல்கலைக்கழகங்கள் காஷ்மீர் மாநிலத்தவரை சேர்த்துக் கொள்வதில்லை என்பன போன்று முஸ்லீம்களின் சேரிமயமாக்கத்துக்கு பெரும் பட்டியலே இருக்கிறது. பெருநகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகை வீடுகள் மறுக்கப்படுவது பொதுப்புத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது.
இந்துத்துவத்தின் இந்தியாவில் முசுலீம்களுக்கு மட்டுமல்ல ஏழை இந்துக்களுக்கும் கூட இடமில்லை. மாநகரங்களிலிருந்து தூக்கி எறியப்படும் உழைக்கும் மக்களை சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்குகிறது பார்ப்பன பனியா தரகு முதலாளித்துவ கும்பல். அதில் முசுலீம்கள் மீதான வெறுப்பு என்பதும் எப்போதும் கலந்தே இருக்கிறது.
ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் போது மட்டுமே இந்த வெறுப்புணர்வின் வேரை வெட்டி எறிய முடியும்.
இது தொடர்பான செய்திகள்
- Shocker: Muslim youth denied job by company that says it hires only ‘non-Muslim candidates’
- VHP, RSS force Muslim to sell home in Hindu locality
- Ahmedabad to host first property show for Muslims
- Amazing story of a businessman who gifted cars, flats to staff
– சம்புகன்.