சாலை போக்குவரத்து மசோதா – 2015 – பொது போக்குவரத்துக்கு சாவுமணி
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியான பெரிய வேலை வாய்ப்பினை வழங்கும் துறை சாலை போக்குவரத்துத் துறை. நாட்டில் விவசாயம் அழிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் நகரத்திற்கு விரட்டப்படும்போதும், படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களிலும் பெரும்பாலானோர் பணிபுரிவது இதில்தான். அதைத் தவிர்த்து சாலையோர மெக்கானிக் கடை முதல் புதுப்பேட்டை போன்ற பகுதிகள் வரை அனைவரையும் வாழ வைக்கும் போக்குவரத்து துறையை கார்ப்பரேட்டுகளின் காலடியில் வைத்து விட்டார் மோடி.

அந்த சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து
- “நாட்டின் பொதுப் போக்குவரத்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்ப்பு!”
- “கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசின் சதி!”
என்ற தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னிசியர்கள் சங்கம் (இணைப்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி) சார்பாக 31 – 5- 2015ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீசியன்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
சங்கத் தலைவர் தோழர் இல. தெய்வீகன் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார். தோழரின் தலைமை உரையின் போது சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவின் ஒவ்வொரு அம்சங்களையும் எடுத்துரைத்து அது எப்படி வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சிறு குறு தொழில் செய்பவர்களை பாதிக்கிறது என்பதனை விளக்கினார். மேலும், “அரசின் தனியார்மய தாராளமய மறுகாலனியாக்க கொள்கைகள் அனைத்தையும் பண்டமாக்கி விட்டது. இன்றுள்ள அரசு ஆளும் தகுதியை இழந்துவிட்டது. இதற்கு மாற்று மக்கள அதிகாரத்தை கையில் எடுப்பதுதான்” எனக்கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய சங்க பொதுச் செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் பேசுகையில், “தனியார் நிறுவனங்களின் வாகன உற்பத்தி ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. எனவே அந்த முதலாளிகள் பிழைக்க அவர்களின் கைக்கூலி மோடி மக்களுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகள் லாபவெறி பூதத்தை போன்றது அடக்க முடியாது. அதற்கான தீனியாக இப்போது போக்குவரத்து துறை திறக்கப்பட்டுள்ளது” என அபாயத்தை உணர்த்தும் வகையில் பேசினார்.

முதல் முறையாக சாலையில் வாகனம் ஓட்டுபவர்களின் பிரச்சனை பற்றி பேசப்படுவதால் வள்ளுவர் கோட்டம் வழியாக சலையில் பயணிப்பவர்கள் அனைவரும் நின்று கவனித்துவிட்டு சென்றனர். இறுதியாக நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பு.ஜ செய்தியாளர்கள்
சென்னை.