
மத்திய பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க பாசிச இந்துத்துவக் கும்பல், அங்கன்வாடிகளிலும், மதிய உணவுதிட்டத்தின் கீழும் முட்டை வழங்குவதை தடை செய்திருக்கிறது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Integrated Children Development Schemes, ICDS-1975) சமூக மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகம், பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் பொருட்டு மிக சமீபத்தில் உணவு பட்டியலில் அவித்த முட்டையை சேர்த்திருந்தது.
ஏழை எளிய மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் ஆகச் சிறந்த மலிவான புரதப்பொருள் முட்டை. மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளின் மிகத் தீவிரமான ஊட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்கு முட்டை அவசியம். ம.பியில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களான மாண்ட்லா, அலிராஜ்பூர், கோசாங்கபாத் ஆகிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்துத்துவக் காலிகளுக்கு இதெல்லாம் தேவையில்லை. “நான் முதலமைச்சராக நீடிக்கும் வரை, முட்டையை அனுமதிக்கமாட்டேன்” எனக் கொக்கரித்திருக்கிறார் அம்மாநிலத்தின் முதலமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் வெறியருமான சிவராஜ் சிங் சவுகான். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீடியோ பேச்சுக்களுக்கு இணையான பயங்கரவாதம் இது.

“அங்கன்வாடி மையங்களில் முட்டையின் தேவை என்ன?” என்று திமிராகக் கேட்கும் இந்த இந்துத்துவக் கும்பல், பசுச் சாணியை உடம்பில் பூசிக்கொள்வதால் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் என மாநிலம் முழுவதும் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு முட்டாள்தனமாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.
இந்தியாவிலேயே மத்தியப்பிரதேசத்தில் தான் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்கு முட்டையை தடை செய்ததன் பின்னணியில் வைர வியாபாரம் செய்யும் மார்வாடி, பார்ப்பன, ஜெயின் கும்பல்களும், ஆர்.எஸ்.எஸ் காலிகளும் உள்ளனர். இவர்கள் அடிப்படையில் பொருளாதாரத்தில் செல்வச் செழிப்பானவர்கள். அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மார்வாடி ஜெயின் வீட்டு பிள்ளைகள் சத்துவணவு சாப்பிடும் தேவை கிடையாது. சப்பாத்திக்கு நெய்யும், அமுல் வெண்ணெய்யும் திகட்டத் திகட்ட வெண்பொங்கலும், பருப்புச் சோறும், அதில் பிடிக்கொன்றாய் போடப்பட்ட முந்திரியும் இவர்களுக்கு எளிது!
ஆனால் மறுபுறமோ பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கொடிய வறுமைஅளித்திருக்கும் ஆரோக்கியமின்மைக்கு முட்டை அவசியம். இச்சமூகத்து குழந்தைகள் சவலைகளாக சதையும் இரத்தமுமின்றி வாடும் போது முட்டையை தடைசெய்த பாசிச இந்துத்துவம் தனது கோரப்பற்களில் இளம்பிஞ்சுகளின் இரத்தத்தைச் சுவைத்தவாறு காட்சியளிக்கிறது.

இந்து பார்ப்பனியத்தின் மனித்தன்மையற்ற செயலுக்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமா?
தற்போதைய கணக்கின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட 19.46 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கின்றனர். உலகில் நான்கில் ஒரு ஊட்டச் சத்துக்குறைவான குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என்கின்றன தரவுகள். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 13 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் இறக்கின்றனர். அதாவது பார்ப்பன இந்துத்துவத்தால் அப்பட்டமாக கொலை செய்யப்படுகின்றனர்!
இளம்பிஞ்சுகளைப் பொறுத்தவரை இந்தியாவின் வரலாறு இதுதான் என்ற நிலையில் ம.பி முதலமைச்சரின் நடவடிக்கையை, தான் வரவேற்பதாகவும் அவருக்கு விழா எடுக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது பாசிச மதவெறிக்கும்பலான திகம்பர் ஜெயின் மகாசமிதி.
இக்கும்பலின் தலைவன் அனில்பக்துல் கூறும் பொழுது “முட்டை என்ன மரத்திலா காய்க்கிறது?” என எகத்தாளத்தோடு ஆளும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நடவடிக்கையை வரவேற்றிருக்கிறான்.
ஆனால், மறுபுறமோ பழங்குடிக் சமூகத்து குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாடு தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவில் சாதிவாரியாக கணக்கெடுக்கிற பொழுது, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதாச்சாரம், தாழ்த்தப்பட்டவர்களில் 53.2%ஆகவும், பழங்குடியினரில் 56.2% ஆகவும் பிற சாதிகளில் 44.1% ஆகவும் இருக்கிறது.

அதே சமயம் தீவிர குறை எடை (Severe Under Weight Prevalence) கொண்ட குழந்தைகளின் விகிதாச்சாரம் தாழ்த்தப்பட்டவர்களில் 21.3% ஆகவும் பழங்குடியினரில் 26.3%ஆகவும் பிற சாதிகளில் 15.7% ஆகவும் இருக்கிறது.
இதில் 1990-லிருந்து 2015 முடிய, குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாட்டை போக்குவதற்கும் உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் முயற்சியை எடுத்துவருகின்றன. பொலிவியா, சீனா என்று மட்டுமில்லை, இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசும், நேபாளும் கூட, குழந்தைகளின் விசயத்தில் அக்கறை காட்டுவதாக தெரிவித்திருக்கின்றது உலக உணவுப் பேரவையின் அறிக்கை. ஆனால் இந்தியாவோ, குழந்தைகள் விசயத்தில் தான் அடைய வேண்டிய இலக்கை தவறவிட்டிருக்கிறது.
எந்தளவிற்கு தவறவிட்டிருக்கிறது என்றால் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் என்ற அளவிற்கு. இதற்கு முழுக்கவும் காரணம் இந்த நாட்டின் மானக்கேடான இந்துத்துவ அரசியலும் அதற்கு தூபம் போடும் மறுகாலனியாக்கக் கொள்கைகளும் ஆகும்.
மறுகாலனியாக்கக் கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை, ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்த மத்திய அரசே பொறுப்பேற்றிருந்தது. மாநில அரசுகள் துணைச் செலவுகளை மட்டுமே நிர்வகித்து வந்தன. ஆனால், 90-களுக்கு பிறகு மத்திய அரசு தனது பொறுப்பை கழற்றிக்கொண்டு 50%-50% என சமன்பாட்டை மாற்றியது. இதிலும் இன்னும் முனைப்பாக இன்றைய மோடி அரசோ இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ரூ 16,316 கோடியில் இருந்து ரூ 8,000 கோடியாக ஈவு இரக்கமின்றி வெட்டி எறிந்திருக்கிறது. இது உலகமயமாக்கல் நமது குழந்தைகளின் இரத்தத்தில் கைநனைத்த பரிமாணத்தின் ஒரு பக்கம்.

மறுபுறத்தில் மோடி பதவியேற்ற இந்த ஓராண்டு காலத்தில், பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடிகளில் முட்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
சான்றாக, ராஜஸ்தானில் முட்டை, மாட்டுக்கறி, ஒட்டகக்கறிக்கு தடை. குறிப்பாக பேரான் மாவட்டத்தில் சகாரியா பிரிவினரின் குழந்தைகள் கொத்துக்கொத்தாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஆரம்பத்தில் இறந்தனர்.
வசுந்தரா தனது ஆட்சியில், இந்து பார்ப்பனியத்தைக் காரணம் காட்டி, குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதை தடை செய்தார். குறிப்பாக, அம்மாநிலத்தில் வழங்கப்படும் தாலியா எனப்படும் கஞ்சியும் கிச்சடியும் மிகத்தீவிர ஊட்டச்சத்துக்குறைபாட்டை (Acute Malnutrition) போக்குவதற்கு எந்த விதத்திலும் சரியான மாற்று அல்ல என்று அன்றைக்கு சத்துணவு பணியாளர்களே எதிர்க்குரல் எழுப்பினர். இறந்த குழந்தைகளோ முட்டை உண்பதில் பிரச்சனை இல்லாத பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது கொடூரத்தின் உச்சம்.
-
ஒரு குழந்தை எங்கெல்லாம் முட்டை சாப்பிடலாம் (மத்திய இந்தியாவில் முடியாது) பிற மாநிலங்களைக் கணக்கில் கொள்கிற பொழுது குஜராத்தின் மூலை முடுக்கெங்கும் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை என்பது கிடையாது. ஏனெனில் அது மோடியின் கோட்டை. மோதிஜி மோதிஜி என்று மிகவும் அருவெறுப்பாக தமிழ்நாட்டு ஊடகம் முதற்கொண்டு கருத்து விபச்சாரம் செய்துகொண்டிருந்த மொத்த எபிசோட்டிலும் குஜராத்தின் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச் சத்துக் குறைபாடு கொண்டவர்கள் என்கிற உண்மை ஆழமாக புதைக்கப்பட்டது. சாய்நாத்தின் கட்டுரையும் புரட்சிகர இயக்கங்களின் அம்பலப்படுத்தல்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காவி கும்பலின் மோசடி பிரச்சாரத்திற்கு முன் அமுங்கிப்போனது. இத்தகைய இலட்சணத்தில் தி இந்துவின் சமஸ் போன்ற அடிவருடிகள் மோடியின் சாதனை குறித்து கூச்சமே இல்லாமல் நடுப்பக்க கட்டுரைகளை தீட்டி சுய இன்பம் அடைகிறார்கள்.
- ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், சட்டீஸ்கரிலும் குழந்தைகளின் மதிய உணவுத்திட்டத்தில் முட்டை தடை செய்யப்பட்ட ஒன்று.
- பஞ்சாப்பின் ஆறு அரசு உறைவிடப் பள்ளிகளைத் தவிர, முட்டை குழந்தைகளின் சத்துணவில் தரப்படுவதில்லை.
- கர்நாடகாவில் பா.ஜ.க அரசு ஆட்சியில் இருந்த பொழுது, 2007-ல் இந்துத்துவக் கும்பல், குழந்தைகளின் சத்துணவுத் திட்டத்தில் முட்டையை தடை செய்திருந்தது.
- பீகாரிலும் மேற்குவங்கத்திலும் முட்டை மாநில அரசால் வழங்கப்பட முடியாத மிகவும் ஆடம்பரமான பொருள்!
- தாழ்த்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் கொடூர அடக்குமுறையைச் சந்தித்துவரும் உத்தர பிரதேசத்தில் முட்டை இந்துத்துவப் பார்ப்பனியத்தைக் காரணம் காட்டியே பல இடங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு மத்தியப்பிரதேசத்தின் அங்கன் வாடியிலும், பள்ளியிலும் மட்டுமல்ல, பொதுஇடங்களான பவித்ரா நகராட்ஸ் என்ற அழைக்கப்படும் இடங்களிலும் முட்டை தடை செய்யப்பட்ட ஒன்று!

இதுதவிர, பார்ப்பனியத்திற்கு எங்கெல்லாம் மரண அடிதரப்பட்டதோ, எங்கெல்லாம் சுயமரியாதை முற்போக்கு பொதுவுடமை இயக்கங்கள் கிளர்ந்து எழுந்தனவோ அங்கெல்லாம் குழந்தைகள் ஓரளவு காப்பற்றப்பட்டிருக்கின்றனர்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் குழந்தைகள் முட்டை தின்கிறார்கள் என்பதற்கும், அது காவிமயமாக்கப்பட்ட வட இந்தியாவில் இல்லை என்பதும் முற்போக்கு இயக்கங்களின் போதாமையால் மக்கள் அங்கே எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிற பொழுது நமக்கு ஆத்திரம் வருகிறது.
பிள்ளைக்கறி தின்னும் பிணந்தின்னி பார்ப்பனியம் இந்தியாவின் அவமானமாக தொடர்வதும் இந்துத்துவ பாசிசம் கோலோச்ச அனுமதிப்பதும் விசயமறிந்தும் போராடத் தயங்குகிற நமது கையலாகாத்தனத்தின் வெளிப்பாடின்றி வேறென்னவாக இருக்க முடியும்?
இன்றைக்கு தமிழ்நாட்டிலே கருத்துரிமையை நிலைநாட்டும் பொருட்டு பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபும் பொதுவுடமை இயக்கங்களின் மக்கள் திரள் போராட்டங்களும் நமது குழந்தைகளையும் போராட்டத்தில் பங்கேற்கச் செய்கிறது.
ஆனால் அங்கோ இந்துத்துவக் காலிகள் நோஞ்சான் குழந்தைகளின் குரல்வளையில் ஏறி நின்று கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் அவர்களின் குழந்தைகள் வாழவழியில்லை என்பதை நாம் எப்படியாவது அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பாசிச ஆர் எஸ் எஸ் இந்துத்துவக்கும்பல், இந்தியாவை குழந்தைகளின் எலும்புகளால் நிரப்பிவிடுவர்.
– இளங்கோ
செய்தி ஆதாரங்கள்
- Top of Form Global Hunger: India Has The Highest Number Of Undernourished People In The World,
- Indian state of Madhya Pradesh bans eggs in free meals
- No eggs to kids, ‘vegetarian CM’ Shivraj Singh Chouhan to anganwadis
- No eggs for Anganwadi: Strictly-veg Chouhan shoots down protein rich food proposal for kids
- Veg Chouhan blocks eggs in anganwadis
- ICDS: Costs and ‘sentiment’ in way of eggstra nutrition for children
- Scrambled up
- Noon meal without egg
- In Rajasthan, Sahariya children battle malnourishment, death