
நாளை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முதலாளி சவுந்திரராஜன் மகள் திருமண வரவேற்பு விழா கோவை கொடிசியா ஹாலில் நடக்க இருக்கிறது. திருமண வரவேற்பு விழாவில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளி கலந்துகொள்கின்றனர். திருமண வரவேற்பு சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக கோவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் 13 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது கோவை மாநகர போலீசு.
சி.ஆர்.ஐ பம்ப்ஸ் ஆலையில் தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டத்தைக் குறித்து வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
- சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி சௌந்தரராஜனின் அட்டூழியங்கள்
- சி.ஆர்.ஐ சட்ட விரோத கதவடைப்பு – உறுதியாக தொடரும் போராட்டம்
- சி.ஆர்.ஐ – பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை
ஆலையில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்யவில்லை, முதலாளி சவுந்திரராஜன் தான் கடந்த இரண்டு மாதங்களாக கதவடைப்பு செய்து தொழிலாளிகளை வறுமையில் தள்ளியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடிக்கிறார். மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை மனு கொடுக்கப்பட்டது. எதற்கும் பதில் இல்லை. நிர்வாகத்தின் கதவடைப்புக்கு அடாவடித்தனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆலைக்கு வெளியில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சி.ஆர்.ஐ முதலாளியின் மகள் திருமண வரவேற்பு விழா நாளை நடக்க இருக்கிறது. தொழிலாளிகளின் குடும்பங்களை வறுமையில் தவிக்கவிட்டுவிட்டு தொழிலாளிகள் ஈட்டிக்கொடுத்த லாப பணத்திலிருந்து மகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்கிறார் சவுந்திரராஜன்.

இதைக் கண்டித்து தான் நாளை திருமண வரவேற்பு விழா நடக்க இருக்கும் கொடிசியா முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடித்து சவ ஊர்வலம் நடத்தப்படும் என்று பு.ஜ.தொ.மு தோழர்கள் கோவை நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டினர். சுவரொட்டிகளையும், போராட்டச் செய்திகளையும் கண்டு சி.ஆர்.ஐ முதலாளி சவுந்திரராஜன் பீதியானாரோ இல்லையோ கோவை போலீசுக்கு பேதியாகிவிட்டது. நளை வரவேற்பு நடக்க இருக்கும் நிலையில் நேற்றே 11 தொழிலாளர்களை கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது.
இந்தத் தொழிலாளர்களைத் தவிர சி.ஆர்.ஐ ஆலையில் பணிபுரியாத பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர் விளைவை ராமசாமியையும், பு.மா.இ.மு தோழர் திலீபனையும் கைது செய்திருக்கின்றனர்.
ஜெயலலிதா பதவியேற்பை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியதற்காக இவர்களை கைது செய்திருப்பதாக கூறுகிறது போலீசு.
ஜெயலலிதா பதவியேற்றது எப்போது தோழர்களை கைது செய்திருப்பது எப்போது ? கோவை போலீசு ஜெயலலிதாவுக்கு மட்டும் விசுவாசமாக இல்லை. சி.ஆர்.ஐ முதலாளிக்கும் விசுவாசமாக நடந்துகொண்டிருக்கிறது.
போலீசின் விசுவாசம் இத்துடன் நிற்கவில்லை கம்பெனிக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் கழுதைகளை போல கிழித்திருக்கிறது. பிற தொழிலாளிகளை தனியாக அழைத்து போராட்டம் எல்லாம் நடத்தக்கூடாது நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டியிருக்கிறது.
தமது உரிமைகளுக்காக போராடிவரும் தொழிலாளர்களை கைது செய்து சிறையிலடைத்திருக்கும் கோவை போலீசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
நேற்று தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் நாளை திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. போலீசை ஏவிவிட்டு சில தோழர்களை கைது செய்துவிட்டதால் வரவேற்பு விழா பிரச்சினை இல்லாமல் நடந்துவிடும் என்று சவுந்திரராஜன் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்.

நாளை கொடிசியா ஹாலில் திருமண வரவேற்பு விழா சிறப்பாக நடக்குமா அல்லது சவுந்திரராஜனுக்கு எதிரான போராட்டம் சிறப்பாக நடக்குமா என்பதை கோவை தொழிலாளர்கள் முடிவு செய்வார்கள்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை