Wednesday, April 16, 2025

தமிழ் மக்களின் உணவு புலால்

-

(2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளியான கட்டுரை)

முன்னாள் குடியரசு தலைவரும், சங்கர மடத்தின் தலைமைச் செயலருமான ஆர்.வி தனது இளமையின் ரகசியம் மரக்கறி உணவுதானென்றும், புலால் உணவையே தடை செய்ய வேண்டுமென்றும் சமீபத்தில் பேசியிருக்கிறார். ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து. அது ஒருபுறமிருக்க, கிடா வெட்டுத் தடைச் சட்டம் வந்ததிலிருந்து சைவம், ஜீவகாருண்யம் பிரச்சாரம் தீவிரமாகியிருக்கிறது. நமது நாட்டில் புலால் உணவு சாப்பிடாதவர்கள் அதிகம் போனால் பத்து சதவீதம் பேர். இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதை புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.

ஆர். வெங்கட்ராமன்
ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து.

உண்மையைச் சொன்னால் குரங்கு மனிதனாக மாறியதற்கான காரணங்களில் மிக முக்கியமானது புலால் உணவு. “இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்து” என்கிறார் எங்கெல்ஸ்!

“மனிதனை மனிதக் குரங்காகப் பின்னுக்கு இழுப்பதுதான் பாசிசம்” என்பது தோழர் ஜூலியஸ் பூசிக்கின் மதிப்பீடு. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பார்ப்பன பாசிஸ்டுகள் நம்மை மரக்கறிக்கு இழுக்கிறார்கள் போலும்! பஜ்ரங் தள் என்பது குரங்குப் படைதானே!

எனினும், தமிழ் மக்களை அவ்வளவு சுலபமாகக் குரங்காக்க முடியாது. காரணம் நாகரிகம். இசை, கலை, மொழி ஆகியவற்றைப் போல உணவுப் பழக்கமும், சுவையறிவும் ஒரு பண்பாட்டின் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல். அவ்வகையில் தமிழ் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சில அரிய செய்திகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் குரங்காக மாற்றப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

புலால் உணவு
இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் புலால் உணவை, அதாவது ஊன் உணவைப் பழக்கமாகக் கைக் கொண்டிருந்தனர் என்பது சங்கப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன.

  • “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுப் படி அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து உண்ட செய்தியைச் சொல்லுகிறது.
  • மதுரைக் காஞ்சியும் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று தமிழர்கள் ஊன் சோறு உண்டதை உவப்பக் கூறுகிறது. அதாவது, அந்தக் காலத்தில் பிரியாணிக்கு அழகிய தமிழ்ச் சொல் ஊன்சோறு.

 

  • ஏதோ நெய்தல் நிலத்திலும், மலை சார்ந்த குறிஞ்சி வாழ் மக்கள் மட்டும்தான் தாவர உணவு மட்டுமின்றி, புலால் உணவுக்குப் போயினர் என்று யாரும் பொய் சொல்ல முடியாது. உழுதும், பயிரிட்டும் வாழ்ந்த மருத நிலத்து மக்களும் “ஆமைக்கறியின் ருசி தெரியுமா உனக்கு, வேண்டுமானால் மருதநிலத்தில் வந்து தங்கிப்பாரு” என்பது போல அழைக்கின்றனர்.
மீன் பொரித்தல்
“மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்”

அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

  • கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவை வேண்டுமா? “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’க்கு வாருஙள்.
  • மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரிக்கும் பக்குவம் வேண்டுமா? “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலை வரிகளை சங்கராச்சாரிக்குப் படிக்கக் கொடுங்கள். அவரும் தண்டத்தைப் போட்டுவிட்டுக் கொண்டத்தைக் கேட்டுக் கத்த ஆரம்பித்து விடுவார்.
  • குறிஞ்சி நிலக் கடவுளான முருகளுக்கு குறமகள், “வலி பொருந்தி ஆட்டுக்கிடாயின் குருதியோடு கலந்த தூய வெள்ளரிசியைப் பலியாக சிதறுகிறாள்” என்று திருமுருகாற்றுப்படை பழந்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையைச் சொல்கிறது. மலைகளில் ஏறி தேன் சேகரித்து, முயல் வேட்டையாடி உழைப்பில் ஈடுபட்டிருந்த உண்மையான முருகனுக்கு ஊன் உணவே பிடித்தமானது.

முருகன், ஸ்கந்தனான பிறகு உண்டைக்கட்டியே அவனுக்கும் உணவாகி விட்டது. இப்போது, சுடலை மாடன், ஸூடலை மாடஸ்வாமியாக மாற்றப்படுகிறார். இனி கிடாவெட்டும் கிடையாது. வெறும் பொங்கல்தான். அவாள் “சுத்தம்” செய்ய விரும்புவது சுடலை மாடனை அல்ல – சூத்திரம், பஞ்சமரைத்தான்.

– சுடர்விழி

இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகப் பயன்பட்ட நூல், வாசகர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழர் உணவு
நூலாசிரியர் : சே. நமசிவாயம்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்