Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிழுப்புரம் - திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்

விழுப்புரம் – திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்

-

அரசுப் பள்ளிகளின் சட்ட விரோத, கட்டாய நன்கொடை கொள்ளையை கண்டித்து…

விழுப்புரம்

நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடித்து வருகின்றன. குறிப்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜன், ரவிராஜபாண்டியன், சிங்காரவேலன் போன்றவர்களின் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு கல்விக் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு தனியார் பள்ளியும் கல்விக் கட்டணங்களை முறையாக வாங்குவதோ அல்லது சட்டத்துக்குட்பட்டு கல்விக்கட்டணங்களை நடைமுறைப் படுத்துவதோ இல்லை.

vilupuram-govt-school-fees-1
பல பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்திய போது ஆயிரக்கணக்கில் ஏழை பெற்றோர்களிடம் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கூடமும் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது

இந்தப் பள்ளிகள் பக்கம் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத பெரும்பான்மை மக்களுக்கு அரசுப்பள்ளிதான் ஒரே புகலிடம். தமிழகம் முழுவதும் உள்ள பல அரசுப்பள்ளிகளில் போதிய கட்டிடங்கள், போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள், குடிநீர் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், “தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்கள் கொட்டி அழமுடியாது, படிக்க வைக்க முடியாது” என்று இலட்சக்கணக்கான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்க்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாகத் தான் வழங்கப்படுகின்றது என்பதுதான் அதன் அடிப்படை.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு முடித்து மாணவர்கள் பதினோராம் வகுப்பில் இணையும் போது கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும் 200 ரூபாய் திருப்பித்தரப்படும் பணமாக பெறுகின்றனர், அதுவும் கட்டாயமில்லை என்ற அரசு உத்தரவுடன். அதற்கு மேல் எந்தக் கட்டணமும் கிடையாது என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்வியை இலவசமாக வழங்குவதற்காக பலகோடிகள் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கென்று தனி கல்வி அமைச்சகம், கல்வித்துறை, பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதற்கென்று மிகப்பெரிய பொறுப்புகளில் அதிகாரிகள் என்று மிகப்பெரிய அரசமைப்பே இலவசக் கல்வி வழங்குவதற்கு செயல்படுகிறது.

இலவசக்கல்வியை கேள்விக்குறியாக்கும் விதத்தில் விழுப்புரத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் இந்த கல்வியாண்டில் ரூ 50-லிருந்து ரூ 1,500 வரை மாணவர்களிடையே கட்டணம் மற்றும் நன்கொடை என்கின்ற பெயரில் கட்டாயமாக கொள்ளையடித்துள்ளதாக ஆதாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.

பெற்றோர் – ஆசிரியர் இடையே ஒரு சுமுகமான உறவை வளர்த்து நிறைவான கல்விச் சூழலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது பெற்றோர் – ஆசிரியர் கழகம் என்ற அமைப்பு. ஆனால், அந்த அமைப்பின் மூலமாக அதற்குரிய பணியை ஆற்றாது ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் அநியாயமாக பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் கட்டாயப்படுத்தி சட்டவிரோதமாக பணத்தை பிடுங்கி உள்ளனர்.

பள்ளிகள் வாரியாக சொல்ல வேண்டும் என்றால்…

1. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 ரூபாய் கட்டணமாக வாங்கி விட்டு 50 ரூபாய்க்கு ரசீது கொடுத்திருக்கிறார்கள்.

2. எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 200 இருந்து 250 ரூபாய் வரை வசூலித்து இருக்கிறார்கள். ஆனால் ரசீது ஏதும் கொடுக்கவில்லை.

3. திரு.காமராஜ் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ 800 லிருந்து ரூ 1500 வரை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக வகுப்புகளுக்கு தகுந்தவாறு நானூறு ரூபாய் ஆக பிரித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ரசீது கொடுத்திருக்கிறார்கள்.

4. கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

5. பீமநாயக்கன் தோப்பு நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

6. கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 250 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். ரசீது தரவில்லை.

இது போன்று விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய நன்கொடையை வசூலித்திருக்கிறார்கள்.

மேலும் எடப்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றவர்களிடமும் ரூ.200 கட்டாயமாக வசூலித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, “பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழை வாங்கவோ, அல்லது கொடுக்கவோ பணம் ஏதும் வாங்கக்கூடாது” என்று அரசின் சார்பில் உத்தரவு உள்ளது. அதனையும் எந்தப் பள்ளியும் மதிப்பது இல்லை. கட்டாயமாக ரூ.50 முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர்.

சோழகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்க 100 ரூபாய் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீதும் தரவில்லை என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்தச் சூழலில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி(RSYF) யின் சார்பாக பல பள்ளிகளில் நேரில் ஆய்வு நடத்திய போது ஆயிரக்கணக்கில் ஏழை பெற்றோர்களிடம் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கூடமும் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டக் கல்வித்துறையும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் சட்டவிரோதமாக அநியாயமாக ஏமாற்றி வாங்கிய பணத்தை ஒரு வாரத்திற்குள் திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும், கட்டணக் கொள்ளையடித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு 26-06-2015 அன்று  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனுவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப்பள்ளி கட்டணக் கொள்ளை, விழுப்புரம்
“எதிர்காலத்துல அரசு பள்ளிக்கூடத்துல தான் படிக்க போறாங்க… அதிகாரிங்கள எதிர்கொள்ளத்தான் போறாங்க, அதுக்கு இதெல்லாம் பயிற்சியா இருக்கும்”

தோழர்கள் மற்றும் பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. மார்ஸ்சை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தித்து அரசுப் பள்ளிகூடங்கள் தந்த ரசிதுகளை காட்டியதும் அதிர்ந்தது போல் காட்டிக்கொண்டார்.

“எனக்கு அதிர்ச்சியா இருக்கு. உடனடியா இதுல தலையிட்டு நடவடிக்கை எடுக்கறேன். நீங்க நல்ல வேல செஞ்சி இருக்கீங்க..” என்றார் ஒன்றும் தெரியாதவர் போல.

“ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு கட்டணங்கள் திருப்பி தரப்படவேண்டும். இல்லையேல் முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்று கூறிவிட்டு கிளம்பினோம்.

நம் தோழர்கள் கைக் குழந்தைகளுடன் வந்திருந்ததை பார்த்துவிட்டு “ஏன் குழந்தைகளை அழைச்சிட்டு வெயில்ல வந்தீங்க” என்றார்.

நம் தோழர்கள் “எதிர்காலத்துல அரசு பள்ளிக்கூடத்துல தான் படிக்க போறாங்க… உங்களைப் போன்ற அதிகாரிங்கள அவங்க எதிர்கொள்ளத்தான் போறாங்க, அதுக்கு இதெல்லாம் பயிற்சியா இருக்கும்” என்று சளைக்காமல் பதிலளித்ததும் அவரும், அவருடன் இருந்தவர்களும் இணைந்து ஒரு சிரிப்பு சிரித்தார்கள் பாருங்கள். அக்மார்க் கவுர்மென்ட் சிரிப்பு!

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF),
விழுப்புரம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.

2011-ம் ஆண்டு இப்பள்ளியில் தலைமையாசிரியர் சட்டவிரோதமாக மாணவர்களிடமிருந்து கட்டண வசூல் செய்ததை கண்டித்து  போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 4 பேர்  கலெக்டர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய அந்த தலைமையாசிரியர் ஜாலியாக உலா வருகிறார் ?

அது மட்டுமல்ல ஏழைகளிடம் பணம் புடுங்கும் திறமையை பாராட்டி இந்த அரசு DEO வாக பதவி உயர்வும் வழங்கியுள்ளது!

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) சார்பாக மாவட்டம் முழுவதும் சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அரசுப்பள்ளி கட்டணக் கொள்ளை, திருவாரூர்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க