
1978-ம் ஆண்டில் நடிக்க வந்த விஜயகாந்த் 2001-ம் ஆண்டில் கல்வி வள்ளலாக அவதரித்து ஒரு சுயநிதிக் கல்லூரியை நிறுவுகிறார். செங்கல்பட்டு மாமண்டூர் அருகே ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரி எனும் பொறியியல் கல்லூரி உதயமானது. வழக்கம் போல கல்லூரி உரிமை ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்யப்படுகிறது. கல்லூரியின் நிறுவனராக விஜயகாந்தும், தலைவராக பிரேமலதாவும், தாளளராக சுதீஷும் அலங்கரிக்கின்றனர்.
விஜயகாந்த் குடும்பத்தின் சொத்து தே.மு.தி.க கட்சி மட்டுமல்ல ஆண்டாள் அழகர் கல்லூரியும்தான். தமிழக ஓட்டுக் கட்சி தலைவர்களின் ஒரு தகுதி சுயநிதிக் கல்லூரி என்பதால் விஜயகாந்தும் அதை விடாமல் நிறைவேற்றியிருக்கிறார். கூடுதலாக கல்யாண மண்டபம் கட்டியதும், மேம்பாலத்திற்காக அது ஓரளவு இடிக்கப்பட்ட போது கட்சி ஆரம்பித்ததும் வரலாறு.
2007-ம் ஆண்டில் முதுகலையும் அதற்கு முன் இளங்கலை மட்டும் இருந்த இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் விரைவு வண்டிகளில் பயணிக்கும் மக்கள் இக்கல்லூரியை தவறாமல் பார்த்தே ஆக வேண்டும். இந்த நிபந்தனை அருளைத் தவிர இக்கல்லூரி பொதுவில் மாணவரிடையே பேசப்படும் கல்லூரி அல்ல. சொல்லப் போனால் தமிழகத்தின் பெரும்பான்மை கல்லூரிகளின் நிலையும் அதுதான்.
11 வகைப் பட்டப் படிப்பில் 932 மாணவர்கள் புதிதாக இங்கே சேர முடியுமென்றாலும் இங்கே உண்மையில் பத்தாயிரம் மாணவர்கள் இல்லை. இளங்கலை, முதுகலை உள்ளிட்டு அனைத்து ஆண்டுகளிலும் படிக்கும் மாணவர்கள் 1000-ம் பேர்தான். எனில் இங்கே வருடம் சில பத்து அப்பாவி பிராணிகள்தான் கல்வி பயில சேருமென்பது தெரிகிறது.
அண்ணா பல்கலையின் ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு 80,000 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கு 1,25,000 ரூபாயும் இங்கே வசூலிக்கப்படுகிறது. இதில் கல்லூரி பேருந்து, விடுதி உணவுக் கட்டணம் இரண்டும் இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் கூற்றுப்படி பேருந்து கட்டணம் 9,000-த்திலிருந்து 14,000-மும், 14,000-த்திலிருந்து 20,000-மும் உயர்ந்திருக்கிறது. உணவுக் கட்டணத்தை பொறுத்தவரை 15,000-த்திலிருந்து 19,000- வரை கூட்டப்பட்டிருக்கிறது.
போன ஆண்டே இக்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அப்போது அடுத்த வருடம் பார்க்கலாம் என்று சமாளித்த நிர்வாகம் இந்த ஆண்டு மேலும் கூட்டியிருக்கிறது. வாக்கு மீறலோடு இந்த ஆண்டும் வயிற்றில் அடித்திருக்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு பதினைந்தாயிரம் கட்ட முடியாதா என்று நினைக்கும் தாயுள்ளங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பயிலும் வழியற்ற மாணவர்கள் அனைவரும் சொத்து பத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோதான் காலம் கழிக்கிறார்கள். இந்த உயர்வு அவர்களைப் பொறுத்த வரை பெரிய சுமை.
எனவேதான் இன்று 29.06.2015 அன்று, மாணவர்கள் பெரும் திரளாக போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கல்லூரி வளாகம் முன், மாமண்டூர் சாலையிலேயே மறியல் செய்திருக்கின்றனர். படையுடன் வந்த போலீசு மாணவர்களை மிரட்டியும், ஆசை வார்தை காட்டியும் ஏமாற்ற முயன்றது. மாணவர்கள் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போராடியிருக்கிறார்கள்.
இறுதியில் கல்லூரி முதல்வர், உரியவர்களின் பேசுமாறு கோரினார். அந்த உரியவர் மேனஜர் பால் ராஜன் என்பவர். அந்த ஆளோடு பேசிய போது ஜூலை ஆறாம் தேதி இந்த கட்டண உயர்வு குறித்த முடிவு அறிவிப்பதாக நிர்வாகம் தெரிவித்தது. எனில் ஆறாம் தேதி வரை கல்லூரி கிடையாது என்று மாணவர்கள் அறிவித்தனர். எப்படியாவது கல்லூரியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மனப்பால் குடித்த நிர்வாகத்திற்கு மாணவர்கள் பேதி கொடுத்து விட்டனர். கூடவே அண்ணா பல்கலைக்கு இது குறித்த விரிவான புகாரையும் அனுப்பியிருக்கின்றனர்.

இந்தக் கல்லூரியின் மாணவர்கள் மட்டுமல்ல, சுமார் 150 எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களும் பாவப்பட்டவர்கள்தான். ஏனெனில் சில ஆயிரங்களுக்கு கடுமையான பணி. வருடம் இரண்டு மாணவர்களை புதிதாக ஒரு ஆசிரியர் சேர்த்தால்தான் வேலையும், ஊக்கத்தொகையும் நிரந்தரம். இது போக சம்பள உயர்வோ, யூ.ஜி.சி தர ஊதியமோ இங்கே கற்பனையிலும் பார்க்க முடியாத சமாச்சாரங்கள்.
2001-ம் ஆண்டில் வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா போன்ற திரைப்படங்களில் தொந்தி குலுங்க டூயட்டும், வாய் நிறைய ஊழல் எதிர்ப்பு சவடாலும் அடித்த விஜயகாந்த் அதே ஆண்டில் துவக்கிய கல்லூரி 14 வருடத்திற்குள்ளாகவே வில்லனாகிவிட்டதை அப்போது அவர் நம்பியிருக்கமாட்டார். நாய் வேசம் போட்டால் குரைப்பது உறுதி என்றால் சுயநிதிக் கொள்ளையில் நல்லது என்ன இருக்க முடியும்?
இன்றைக்கு திருவாரில் விவசாயிகளின் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறாராம் விஜயகாந்த். அதற்கு 15 மாவட்டங்களிலிருந்து பச்சை துண்டு கெட்டப்பில் தொண்டர்கள் திரளாக வரவேண்டுமென்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவாம். இதே மா.செ-க்கள் வருடத்திற்கு எத்தனை சீட்டுக்கள் நிரப்ப வேண்டும் என்ற உள் ஒப்பந்தம் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
அதற்கு சமாதி எழுப்பும் வேலையில் ஆண்டாள் அழக கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். ஏற்கனவே இக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பு.மா.இ.மு சுவரொட்டி இயக்கம் எடுத்து போராடியிருக்கிறது. இப்போதும் மாணவர்களை அணிதிரட்டி நம்பிக்கையூட்டுகிறது. போராட்டம் நடக்கும் நேரத்தில் பு.மா.இ.மு தோழர்களும், ம.உ.பா.மை வழக்கறிஞர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர்.
அந்த் வகையில் கேப்டனின் கல்லூரி கொள்ளைப் போரை இம்மாணவர்கள் எதிர் கொண்டு விஜயகாந்தை மண்ணக் கவ்வச் செய்வர்.
– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.
போராட்ட படங்கள்: