Wednesday, April 23, 2025
முகப்புசெய்திஊத்திக் கொடுத்த அம்மா மற்றும் குறுஞ்செய்திகள்

ஊத்திக் கொடுத்த அம்மா மற்றும் குறுஞ்செய்திகள்

-

உபர்: அமெரிக்க கால் டாக்சியை பந்தாடும் பிரான்ஸ்!

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் துவங்கப்பட்ட “உபர்” கால் டாக்சி தற்போது இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளில் ‘தொழில்’ செய்து வருகிறது. தகுதியற்ற ஓட்டுநர்களை அமர்த்துவது, கிராக்கிக்கு ஏற்ப வாடகை கட்டணத்தை ஏற்றிக் கொள்வது, செல்பேசி செயலிகளை இறக்கி முழுச் சந்தையையும் ஏகபோகமாக கைப்பற்றுவது, போட்டி கம்பெனிகளில் ஊடுறுவி பொய்யாக சேவைகளை ரத்து செய்து வாடிக்கையாளருக்கு வேறுப்பேற்றுவது…

– இப்படி பல்வேறு ‘தொழில் தர்மங்கள்’ மூலம் அமெரிக்கவைச் சேர்ந்த இந்த பன்னாட்டு நிறுவனம் ‘வளர்ந்து’ வருகிறது. இந்தியாவில் இதன் ஓட்டுநர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பிரான்சில் உபர் நிறுவனம் நுழைந்து முறைகேடாக சந்தையை ஆக்கிரமிக்கும் நிலையில், ஜூன் – 25, 2015 அன்று நாடு முழுவதும் வாடகைக் கார் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இது நம்மூர் அடையாளப் போராட்டமல்ல. உபர் கார்கள் தலைகீழாக பந்தாடப்பட்டிருக்கின்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உலகமயத்தின் ஆக்கிரமிப்பு ஒன்றை எதிர்த்து அதன் குகையிலேயே போர் நடந்துதான் வருகிறது. சந்தையின் சுதந்திரம் வேண்டுவோர் இனி பாரிசில் சுதந்திரமாக நடமாட முடியுமா?

_________________

amma-sarakku-cartoon-small-724x1024ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கு 307 என்றால் தாய்க்கு என்ன செக்சன்?

“கலசப்பாக்கம் அருகே 4 வயது சிறுவனுக்கு மது கொடுத்த தாய்மாமன் பிடிபட்டார். தப்பியோடிய இரண்டு பேருக்கு வலைவீச்சு. தாய்மாமன் மீது இபிகோ 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு.” – இது இன்றைய நாளிதழ் செய்தி.

சும்மா சொல்லக்கூடாது. போலீசுக்காரர்களும் சில நேரங்களில் நியாயமாகத்தான் சிந்திக்கிறார்கள். சின்னப் பையனுக்கு சரக்கு கொடுத்தால் அதற்கு இன்ன செக்சன் என்று, இந்தியன் பீனல் கோடைத் தயார் செய்த வெள்ளைக்காரன் எழுதவில்லை. நம்முடைய அரசியல் சட்ட பிதாமகர்களின் தொலைநோக்குப் பார்வையிலும், இது படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், பால்மணம் மாறாச் சிறுவனுக்கு சரக்கு ஊற்றிக் கொடுப்பது, அவனைக் கொலை செய்யும் முயற்சிதான் என்று தெளிவடைந்து, அதற்கேற்ப வழக்கும் பதிவு செய்த போலீசை பாராட்டத்தான் வேண்டும்.

மருமகனுக்கு ஊத்திக்கொடுத்த தாய்மாமனுக்கே 307 என்றால்,

மக்களுக்கெல்லாம் ஊத்திக் கொடுக்கும் தாய் மீது என்ன செக்சன் போடுவது? என்ன தண்டனை விதித்து தீர்ப்பெழுதுவது?

307X ஏழு கோடி = எவ்வளவு?

என்ன கொடுமை இது குமாரசாமி!

_____________

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு…

tamilnadu-women_____________________

ஆட்சி இல்லை, காட்சி

தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை; காட்சிதான் நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். – செய்தி

காட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதவரெல்லாம் கட்சி நடத்தும் போது ஆட்சிக்கு அருகதையற்றவர்கள் மாண்புமிகு-களாக வலம் வருவதை குற்றம் கூறி என்ன பயன்?

____________________________

ஒரு குக்கிராமத்தின் கொலை!

4 வயது சிறுமியான துர்காவின் வீட்டில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நூறு ரூபாய் திருடுகிறாள். இதை அச்சிறுமி தாயிடம் சொல்லியதை அடுத்து தீராக் கோபம் கொள்கிறாள் அந்த மாணவி. அடுத்த நாள் அந்த சிறுமியைக் கிணற்றில் வீசிக் கொன்றிருக்கிறாள். விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் இது.

திருட்டு, கொலை, கோபம், பழி வாங்கல் அனைத்தும் ஒரு கிராமத்தில் அதுவும் ஒரு இளவயது மாணவியிடம் வெளிப்பட்டிருக்கிறது என்றால் முழு சமூகத்தின் இயங்கு திசையையும் எப்படியிருக்கும்?

தனிமனித தனித்துவம் எனும் சமூக விரோதத்தை நுகர்வுக் கலாச்சாரம் ஊக்குவிக்கிறது என்றால், ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வின் நிதானத்தையும், சக்தியையும் உலகமயம் உறிஞ்சிக் கொள்கிறது.

வாழ்வின் சின்ன சின்ன பிரச்சினைகளை தீர்க்கக் கூட ஆயுள் தண்டனையை பரிசாக பெறுகிறார்கள். சின்ன சின்ன ஆடம்பரங்களை துய்ப்பதற்கு, ஊட்டி வளர்த்த உறவுகளை அறுக்கிறார்கள். பாரதூரமான விளைவுகளை நினைத்துப் பார்த்திராத சிறு கோபம் கூட பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் நாசகார சக்தியாக மாறி விட்டது.

தனியார் மயம், உலக மயம், தாராள மயம் எனும் மூன்று மந்திரச் சக்திகள் வசதிகளை நிறைந்த இன்றைய மகிழ்வுலகை படைத்து விட்டதாக சுயதிருப்தி அடைபவர்கள் முதலில் தமது குடும்பத்தில் அத்தகைய மந்திரம் என்ன நிதானத்தை, பக்குவத்தை, பொறுமையை, சகிப்புத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்று உரசிப் பார்க்க வேண்டும்.

ஒரு குக்கிராமத்தின் மாணவி ஒருத்திக்கு நூறு ரூபாய் தேவைப்படுகிறது. அதுவும் திருடுமளவு அவசியத்தைக் கொண்டிருக்கிறது. திருட்டுக்கு எதிராக நான்கு வயது மழலையை கிணற்றில் தூக்கி எறியும் வண்ணம் வெள்ளேந்தியான நாட்டுப்புறம் மாறிவிட்டது என்றால் விவரமான நகர்ப்புறத்தின் வன்முறைகள் எப்படி இருக்கும்?

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்