அரசின் பார்வையில் தேவையில்லாதவர்கள் என்று புறக்கணிக்கப்படும் பகுதிகளாகவே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அது போன்ற பகுதி தான் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஓசான்குளம் பகுதி.

பல நூறு குடும்பங்கள் இருந்தாலும் போதிய குப்பைத் தொட்டிகளோ ,ஒழுங்கான சாலைகளோ, பொதுக் கழிப்பறைகளோ எதுவும் இல்லை, ஆனால் அவர்களை சீரழிக்க அருகிலேயே டாஸ்மாக் கடைகளை வைத்துள்ளது அரசு.
இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் சென்னையின் எழிலைக் கூட்ட பல்மாடிகுடியிருப்புகளுக்கு வண்ணம் அடிக்கவும், வாட்சு மேன்களாகவும், பெண்கள் வீட்டு வேலைகள் செய்பவர்களாகவும் உள்ளனர். வெகு சிலரே மாதச் சம்பள வேலைகளுக்கு செல்பவர்களாக உள்ளனர். குறைந்த சம்பளம், அதிக விலைவாசி இவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் டாஸ்மாக் சாராயக் கடைகள் இவர்களின் உழைப்பின் கணிசமான பகுதியை பிடுங்கிக் கொள்கின்றன. தங்களின் நேரடி அனுபவத்திலேயே மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளையும், குடும்பச் சிதைவுகளையும், பல சீரழிவுகளையும் எதிர்கொள்கின்றனர். இச்சூழ்நிலையானது பல இளைஞர்களையும், சிறுவர்களையும் பெற்றோரின் கண்காணிப்பில் இல்லாதவர்களாக மாற்றியுள்ளது. அதனால் பல இளைஞர்களும் சிறுவர்களும் சாராயத்திற்கும் பல்வேறு போதை பழக்கத்திற்க்கும் எளிதாக பலியாகின்றனர்.

தங்கள் அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசவோ அல்லது அதைப் பற்றி நினைக்கவோ வாய்ப்பில்லாமல் இன்று வேலை கிடைத்தால் தான் அடுத்த வேளை சோறு என்று ஒரு புறம் வாழ்நிலை அவர்களைத் துரத்துகிறது. மற்றொருபுறம் இந்த அரசு திட்டமிட்டே சாராயத்தால் அவர்களின் வாழ்வை சிதைக்கின்றது. அதோடு மட்டுமில்லாமல் அவர்களின் குறைந்த பட்ச சமூக பொறுப்பையும் இல்லாமல் செய்கிறது.
இந்தப் பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சென்னை மாவட்ட கலைக்குழுவின் சார்பில் 26-07-2015 அன்று மக்கள் கூடும் தெரு முனைகளில் வீதி நாடகம் மூலம்,
- மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை தமிழகத்தில் இருந்தே அப்புறப்படுத்துவோம்!
- நமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட போராடுவோம்!
என பிரச்சாரம் செய்யப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அன்றாடம் தங்கள் வாழ்வில் சாராயத்தால் பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்கும் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களும், சிறுவர்களும், திரளான இளைஞர்களும் என நூற்றுக்கணக்கானவர்கள் கூடி நின்று நிகழ்ச்சயை பார்த்து தங்களின் ஆதரவை தந்தனர். அது மட்டுமில்லாமல் போராட்டங்களே நமக்கு விடிவைத்தரும் என உணர்வதாக பெண்களும், இளைஞர்களும் தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.