Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !

போலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !

-

chennai highcourt  demo - 4.8 (4)டாஸ்மாக்கை மூட கண்ணீர்விடுவது தீர்வல்ல! கல்வீச்சுதான் ஒரே வழி என காட்டிய புரட்சகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களையும், பச்சையப்பா கல்லூரி மாணவர்களையும் வாழ்த்துகிறோம்!

மக்களின் வாழ்வை காக்க போராடியவர்களை
நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்!

மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய
போலீஸ் மீது உடனடியாக கைது செய்!

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, டாஸ்மாக்கை மூடு!

– என்ற கோரிக்கைகளை முன்வைத்து 04.08.2015 மதியம் உயர்நீதிமன்றத்தின் ஆவின் கேட் முன்பாக மக்களை பாதிக்கும் டாஸ்மாக்கை மூட மறுக்கும் அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை வழக்குரைஞர் பொற்கொடி துவங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், சங்க செயலாளர் அறிவழகன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் என 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க (MHAA) செயலர் வழக்குரைஞர் அறிவழகன் பேசும் பொழுது, “மக்களை பாதிக்கும் மது ஒழிப்புக்காக போராடிய மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை வழக்குரைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட போராடும் மக்களுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கும்” என்றார்.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பேசும் பொழுது, “என்னுடைய தனிப்பட்ட கருத்தாக, மாணவர்கள் சாத்வீகமாக தான் போராடவேண்டும். ஆனால், குடிமக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக மாணவர்கள் போராடியது சரி! அப்படி பொதுநோக்கத்திற்காக போராடிய மாணவர்களை காவல்துறை தாக்கியது தவறு. அதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயலரும், வழக்குரைஞமான மில்ட்டன் உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சார்பாக ஊடகங்களுக்கு பேட்டித்தந்தார்.

”பச்சையப்பா கல்லூரி மாணவர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் அரசின் அமைந்தகரை சாராயக்கடையை நொறுக்கியது வீரஞ்செறிந்த போராட்டம். அந்த போராட்டத்தீ இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களிடமும், மக்களிடமும் காட்டுத்தீப் போல பரவி வருகிறது. மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்கினார்கள் என்றால், ஒற்றுமையாகவும், உறுதியாகவும் போராடுவார்கள். இப்பொழுதும் அதை நிரூபிக்கிறார்கள். போராடிய மாணவர்களில் 15 பேரை சூழ்ந்துகொண்டு காவல்துறை வெறித்தனமாக தாக்கியுள்ளது. கைது செய்த பிறகும், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று, இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளது. இரவு வரை மருத்துவமும் செய்யாமல் இருந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட சம்பந்தபட்ட காவலர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். டாஸ்மாக்கை எதிர்த்து போராடும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் எப்பொழுதும் உறுதியாக துணை நிற்போம்”

ஆர்ப்பாட்டத்தின் போது வழக்குரைஞர்கள் எழுப்பிய முழக்கங்கள்:

குடிகெடுக்கும் டாஸ்மாக் கடையை
இழுத்து மூடு
விருத்தாசலம், கோயம்பத்துார்
பச்சையப்பன் கல்லுாரியிலே
தொடருகின்ற போராட்டத்தை
வீரஞ்செறிந்த போராட்டத்தை
அணையவிடோம்!

கல்வி கொடுக்க வக்கில்ல
தண்ணீர் கொடுக்க வக்கில்ல
மருத்துவம் கொடுக்க துப்பில்ல
குடிக்க சொல்லறான் கவுர்மண்டு
பாதுகாக்கிறான் போலீசு

நடவடிக்கை எடு!
டாஸ்மாக் கடைக்கு எதிராக
போராடிய மாணவர்களை
வெறிகொண்டு தாக்கிய
காக்கி சட்டை ரவுடிகளை
கைது செய்-சிறையில் அடை

சசிபெருமாளை கொலைசெய்தது
தமிழக அரசு!
கொலைகார தமிழக அரசு
போலிசும் கலெக்டரும்
நீதிமன்றமுமே குற்றவாளிகள்
போராடிய மாணவர்களின்
மண்டைய பிளந்தது
காட்டுமிராண்டி தமிழக அரசு

தீர்வில்லை தீர்வில்லை
நீதிமன்றம் தீர்வில்லை
சட்டமன்றமும் தீர்வில்லை
இந்த அரசு கட்டமைப்பில்
தீர்வு என்றுமே இருந்ததில்லை

வன்முறை அல்ல!
குடிகெடுக்கும் டாஸ்மாக்கை
அடித்து நொறுக்குவது
வன்முறை அல்ல!
டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம்
மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், சென்னை

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

_________________________________________________

 

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

_________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க