Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

புழல் சிறை முன்பு பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

-

tasmac-puzhal-demo-04டாஸ்மாக்கை நொறுக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல் நிலையத்திலும், புழல் சிறையிலும் காக்கிச்சட்டை போலீசாரும் உளவுத்துறை போலீசாரும் நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து 06-08-2015 அன்று புழல் மத்திய சிறைச்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்களும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

புழல் சிறை நுழைவாயில் காலை 9 மணியளவிலிருந்தே காக்கிச்சட்டைகள் குவிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. “என்னைக்கும் இப்படி இருக்காது, சார். சாராயக் கடையை ஒடைச்ச மாணவர்களை உள்ள போட்டதிலிருந்து இப்படித்தான் இருக்கு. ஸ்டாலின் வந்துட்டு போனாரு. இன்னைக்கும் யாரோ கட்சிக்காரங்க வாராங்களாம்” என்றார் சிறையின் முன்பு துணி தேய்க்கும் கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி.

சிறைக்கு எதிரில் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த காய்தே மில்லத் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவியர், “நாங்க இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். சசிபெருமாள் அமைதியா காந்தி வழியில போராடினார். கடைசியில இந்த அரசு அவரை எப்படி நடத்திச்சி. அவர் உயிரை விட்டதுதான் மிச்சம். அதனால, மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைச்சது சரிதான். பெண்களுக்குத்தான் தெரியும் டாஸ்மாக்கால எவ்வளவு பிரச்சனைன்னு. நாங்களும் கண்டிப்பா இந்தப் போராட்டத்தில கலந்துப்போம்” என்றனர்.

சுமார் 11 மணி அளவில் பு.மா.இ.மு தோழர்களும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் கூட ஆரம்பித்தனர். ஆங்காங்கு நின்றிருந்த காக்கிச்சட்டைகள் அணிவகுத்து சிறை வாயிலுக்கு முன்னர் ஒரு வரிசையாகவும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தடுப்புகளைப் போட்டு அதைச் சூழ்ந்து ஒரு குழுவாகவும் நின்று கொண்டனர்.

வெட்கக் கேடு, மானக்கேடு
சாராயம் அரசுச் சொத்தாம்
கொலை கொள்ளை மலியுது
பாலியல் வன்கொடுமை மலியுது
ஊருக்கு ஊர் டாஸ்மாக் என்று தமிழகமே நாறுது

டாஸ்மாக்கை உடைக்கப் போராடி
சிறை சென்ற மாணவர் மீது
பச்சையப்பன் மாணவர் மீது
சிறையின் உள்ளே தாக்குதல்
கொலை வெறித் தாக்குதல்

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடிய போராளிகள்
மாணவர்கள் ஒன்றும் ரவுடிகள் அல்ல
மாணவர்கள் ஒன்றும் பொறுக்கிகள் அல்ல

கையிலெடுப்போம், டாஸ்மாக்கை ஒழித்துக் கட்ட
மக்களை அதிகாரத்தைக் கையிலெடுப்போம்

என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மில்டன், “இந்த மாணவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்துவதற்கு முன்பு காவல் நிலையத்தில் வைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கியிருக்கின்றனர். அதன் பின்னர் நீதிமன்ற காவல் கோரி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் செய்திருக்கின்றனர். மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள காயங்களைக் கண்ட மாஜிஸ்திரேட் இனிமேல் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்படி எச்சரித்த பிறகும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சிறைக்குள் காவலர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களது காயங்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை.

அவர்களைச் சந்திக்கச் சென்ற எமது அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணனிடம் மாணவர்கள் இந்த விபரங்களைச் சொல்லி தமது காயங்களைக் காட்டியிருக்கின்றனர். இரண்டு மாணவர்களுக்கு கை எலும்பு முறிந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். அதை உறுதி செய்ய எக்ஸ்-ரே எடுப்பதைக் கூட சிறைத்துறை நிர்வாகம் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஓயாது. டாஸ்மாக் கடையை உடைத்த மாணவர்களின் போராட்டம் சரியானது என்று அதனை ஆதரிக்கிறது.

tasmac-puzhal-demo-08சென்னையிலும், தமிழகமெங்கும் டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.”

சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் புழல் சிறையின் நுழைவாயிலை ஒரு அரசியல் போர்க்களமாக்கியது என்றால் மிகையில்லை.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக புழல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் ஒருவர், “இந்தக் குடியை கண்டிப்பா ஒழிக்கணுங்க. எங்க வீட்டுக்காரரும் குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறாரு. மாசம் 5,000 ரூபாய் சம்பாதிப்பாரு, அவரே குடிச்சி தீர்த்துருவாரு. மாணவர் போராட்டத்தை நாங்கல்லாம் ஆதரிக்கிறோம்” என்றார்.

அம்பத்தூரில் உள்ள கே.எம் எஞ்சினியரிங் நிறுவன தொழிலாளர், “எங்க கம்பெனியில பு.ஜ.தொ.மு தலைமையில உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டாத்தான் பேச்சு வார்த்தைக்கு வருவேன்னு சொன்னாரு முதலாளி. அதை நம்பி போராட்டத்தை முடிச்சா, இன்னும் பேச்சுவார்த்தைக்கு வராம இழுத்தடிக்கிறாரு. இப்போ, தினக் கூலிக்குப் போய்தான் குடும்பத்தை காப்பத்றேன். இன்னைக்கு டாஸ்மாக் உடைச்சு போராடின மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்க இங்க வந்திருக்கிறேன். கண்டிப்பா மாணவர்களுக்கு நாங்க ஆதரவா இருப்போம்” என்று உழைக்கும் வர்க்க ஒற்றுமையை பிரகடனப்படுத்தினார்.

நாவற்பழம் விற்றுக் கொண்டிருந்த அம்மா, “இந்தக் குடியை ஒழிக்கணும்னா, கடைகளை உடைக்கிறதுதான் வழி” என்று உறுதியாகக் கூறினார்.

அரசின் அடக்குமுறைகளையும் மீறி டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது.

  • வினவு செய்தியாளர்கள்

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்: