Tuesday, April 22, 2025
முகப்புசெய்திமாணவர்களை விடுவிக்க மறுக்கும் அரசு !

மாணவர்களை விடுவிக்க மறுக்கும் அரசு !

-

டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய மாணவிகளை சிறையில் மிரட்டிய உளவு போலீசு உமாசங்கர்

வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு!

வீரம் செறிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்ற வைத்த தீ தமிழகமெங்கும் பற்றி பரவி வருகின்றது.

தள்ளாடும் தமிழகத்தை மீட்க போராடிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளை குண்டர்களின் துணையுடன் வெறி கொண்டு தாக்கியது போலீசு கூலிப்படை. “குடிகாக்கும் அரசுதான் எனது அரசு” என்று பறை சாற்றிக்கொண்டார் ஜெயா. அடித்து நொறுக்கப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் லாக்கப்பில் வைத்து கையில் கிடைத்த இரும்பு பைப், கற்கள் என எல்லாவற்றையும் எடுத்து தாக்கிய குடிகாரப்படை மீண்டும் சிறையினுள்ளும் ஆண்தோழர்களை கடித்துக் குதறியது. ஏற்கனவே ரத்தம் சொட்டசொட்ட வந்தவர்களை அடித்து தன் வீரத்தைக் காட்டியது ஜெயில் போலீசு. இதில் சாரதி, ஆசாத், செல்வகுமார் ஆகிய தோழர்களின் தலை, கால்கள், கைகள் உடைக்கப்பட்டன.

புழல் சிறை முன்பு ஆர்ப்பாட்டம்
புழல் சிறை முன்பு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இந்த அநியாயத்துக்கு எதிராக சிறையினுள்ளே அந்த தோழர்கள் போராடிய  அதேசமயம் சிறை வாசலிலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறையில் உள்ள ஆண் தோழர்களை அடித்து கொடுமைப்படுத்திய போலீசு,  மாணவிகளை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தது. உமாசங்கர் என்ற உளவுப்போலீசு மாணவிகளிடம் சென்று, “உன் சாதி என்ன?” “யாரையாவது காத்லிக்கிறாயா?” “விபச்சார கேசில் உள்ளே தள்ளிடுவேன்” என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார்.

எத்தனை கொடுமைகள் நடந்தாலும் சரி, டாஸ்மாக் ஒழிப்பு போராட்டதில் சிறை சென்ற போராளிகள் தாங்கள் எவ்வித குற்றமும் செய்துவிட்டு சிறைக்கு வரவில்லை எனவே தங்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி பிணை மனுவை வாபஸ் பெற்றதோடு இன்று வரை பிணை மனு தாக்கல் செய்ய மறுத்து வருகினர்.

கடந்த 3-ம் தேதி சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் 15 நாட்களுக்கு பின்னர் சிறையடைப்பை நீட்டிக்க வைக்க வேண்டும் என்பதற்காக 17-ம் தேதி எழும்பூர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சட்டவிரோத காவலை நீட்டிக்கக் கூடாது என்று முறையிட்ட  வழக்கறிஞர்களின்  வாதத்தை காது கொடுத்து கேட்கவே நீதிமன்றம் மறுத்தது. அதற்கு எதிராக சிறைபட்டவர்கள் நீதிமன்றத்திலேயே முழக்கமிட்டு இந்த நீதிமன்றம் போலீசின் கைப்பாவையாக செயல்படுவதை அம்பலப்படுத்தினர்.

மாணவிகளை சிறைக்காவலில் அச்சுறுத்திய உமாசங்கருக்கும் சிறைகண்காணிப்பாளருக்கும் எதிராக போடப்பட்ட ஆட்கொணர்வு மனு 18-03-2015 அன்று காலை உயர்நீதிமன்றத்தில் தமிழ்வாணன், சிடிசெல்வம் ஆகிய நீதிபதிகளின் முன்பு  விசாரணக்கு வந்தது. அதில் உமாசங்கர் என்ற உளவுப்போலீசு சிறைக்கு வருவார் என்றும் அவர் இலங்கை கைதிகளைப் பற்றிய விசாரணை செய்வார் என்றும் 4-ம் தேதிமுதல் 7-ம் தேதிவரை சிறைக்கு வரவே இல்லை என்று பொய் சொன்னது அரசு. இதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் சங்கரசுப்பு “சிறைக்காவலில் இருக்கும் மாணவிகளை உமா சங்கர் சந்திக்கவில்லை என்றால் அந்த சிறையினுள் இருக்கும் வீடியோ பதிவுகளை ஒப்படைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மாணவிகள் தரப்பில் உமா சங்கர் சிறைக்குள் வந்தார் என்றும் அரசு தரப்பில் வரவில்லை என்றும் சொன்னதால் இந்த வழக்கில் உண்மையை அறிய சிறைகுள் பதிவாகி இருக்கும் CCTV பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு 26-08-2015 அன்று தள்ளிவைக்கப்பட்டது.

சிறையில் உள்ள ஆண்களை மிருகத்தனமாக தாக்கியதற்கு எதிரான ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவட்ட நீதிபதி திரு. செந்தில் குமரேசன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அவ்வறிக்கை18-08-2015 அன்று உயர் நீதிமன்றத்தில் மேற்கண்ட நீதிபதிகளின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மனுதாரர் வழக்குரைஞருக்கும், அரசு தரப்பிற்றும் அளிக்குமாறும், மேலும் இவ்வழக்கு 26-08-2015 அன்று தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளாடும் தமிழகத்தின் தன்மானம் காக்கப்போராடி சிறை சென்ற மாணவப் போராளிகளின் நியாயத்திற்கான போராட்டத்திற்கு ஊடகங்கள் தோள் கொடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
9445112675