“உலக நாடுகள் அனைத்தும் இராணுவத்திற்காக செலவிடும் மொத்த தொகையில் பாதிக்கு மேல் தனது பங்காக செலவிடும் அளவுக்கு தன்னை அமெரிக்கா வளர்த்துக் கொண்டது எப்படி?”
“ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விற்பனை பொருளாக்கப்பட்டதும், அவர்களது கட்டாய உழைப்பும், அவர்களது துயரமும்தான் அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் வளத்துக்கும் காரணம். இந்த உண்மையை கேட்பது பலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும் அதுதான் உண்மை.”
கார்னல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராபர்ட் பர்ஷோச்சினி அமெரிக்க வல்லரசின் இராணுவ வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தும் தனது பதிவை மேற்கண்ட கேள்வி பதிலுடன் தொடங்குகிறார்.
அமெரிக்காவின் மொத்த இராணுவ செலவீனத்தை ($61,000 கோடி) இரண்டாக பிரித்தாலும் கூட, அதில் ஒரு பகுதி மட்டுமே (அதாவது $30,500 கோடி), உலக நாடுகளில் சீனா ($21,600 கோடி) மற்றும் ரசியா ($8,400 கோடி) அல்லது சவுதி அரேபியாவின் ($8,100 கோடி) ஒட்டு மொத்த இராணுவ செலவீன தொகைக்கு ஈடாகிறது. இதில் சவுதி அரேபியாவின் இராணுவச் செலவுகள் அமெரிக்க ஆதிக்கத்தின் நீட்சிதான் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதைத்தாண்டி ஐரோப்பிய வல்லாதிக்கங்களான ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி தத்தமது இராணுவ ஆதிக்கத்துக்கு முறையே $4,600 கோடி, $6,000 கோடி, $6,200 கோடி, $3,100 கோடி செலவிடுகின்றன.
வடகொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் என்று ஊளைச்சவுண்டு விடும் ஊடக பயங்கரவாதிகளுக்கு மத்தியில் அதன் இராணுவ செலவீனம் உலகவரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்க இயலாத வண்ணம் திருஷ்டி பொட்டு அளவில் இருக்கிறது. அதற்கு எதிராக நிறுத்தப்படும் ‘ஜனநாயக’ தென்கொரியா தனது இராணுவத்திற்காக ஆண்டுக்கு $3,600 கோடி செலவிடுகிறது.

ஈரானின் இராணுவ செலவீனமோ உலக வரைபடத்தில் குறிப்பிட இயலாத அளவிற்கு மிக மிகச் சிறியதாக உள்ளது. அதாவது 2009 கணக்கின் படி $1,000 கோடி. ஆனால் இவர்கள் தான் ஆயுதங்களை குவித்து உலகை மிரட்டுவதாக $61,000 கோடி செலவு செய்யும் அமெரிக்கா சீன் போட்டது.
போகிற போக்கில் இன்னொரு குண்டையும் போட்டுத்தாக்குகிறார் ராபர்ட் பர்ஷோச்சினி. அதாவது அமெரிக்கா லாவோசில் போட்ட வெடிக்காத குண்டுகளை அகற்றுவதற்கு $1,600 கோடி தேவைப்படுகின்றது. இந்தக் குண்டுகளை அப்புறப்படுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்கா இன்னமும் லாவோசிற்கு $1,600 கோடி தொகையை வழங்க மறுக்கிறது.
அமெரிக்க வல்லரசின் ரகசியம் இது!
பின் குறிப்பு:
இதை வெண்முரசு வேந்தர் ஜெயமோகனிற்கு சமர்ப்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி போன்ற காமடி பீஸ் அரசர்களின் புகழ்பாடி உண்டி வளர்க்கும் கவிராயர்கள் இல்லாமல் இலக்கியம் இல்லை. அதுவே மோடி, ஹிட்லர், அமெரிக்கா என்றால் இலக்கிய ஆளுமைகள் சிலிர்த்து எழும்; அறம், இலட்சியவாதம், மரபு, வரலாறு என்று கண்டதை உமிழும். அதாவது வேதக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதையே இவர்கள் உள்ளொளி தத்துவமாக இழுத்து விடுவார்கள்.
அர்ஜுன் சம்பத் எனும் கைக்கூலியுடன் அமெரிக்காவில் மேடையேறியது குறித்து கொஞ்சம் வெட்கப்பட்டிருந்தார், ஜெயமோகன். அதற்கே அவரது அமெரிக்க என்.ஆர்.ஐ அம்பிகள் சிலிர்த்து எழுந்து அர்ஜுன் சம்பத் மற்றும் அவரை மேடையேற்றிய தமிழ் பெயரில் இருக்கும் இந்துமதவெறி சங்கத்துக்காக வாதாடினார்கள். உடனே தான் பட்டது வெட்கமே அன்றி, கோபமல்ல என்று மற்றுமொரு இழுப்பை விட்டிருந்தார் ஜெயமோகன். குசுக்கள் கூட சூறாவளி போல சித்தரித்துக் கொள்ளும் இக்காட்சிகளை இதுவரை வரலாறு கண்டதில்லை.
இப்படி பச்சையாக பாசிசத்தை ஆரத்தழுவி வெண்முரசு என்று மச்சகந்தியை பராசரன் சீரழித்த கதையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்திலும், தான் அமெரிக்க டூர் போனதை முன்னிட்டு ‘அமெரிக்க இலட்சியவாதம்’ எனும் அடையை இலக்கிய உலகிற்கு நல்கியிருந்தார்.
“அது என்ன சார் அமெரிக்க இலட்சிய வாதம்” என்று ஒரு வாசகர் அப்புராணியாய் கேட்கப் போக, கேட்பது ஒருவேளை இடதுசாரியாக இருக்குமோ என்ற ஐயத்தில் கம்யுனிஸ்டுகளை விளாசியிருந்தார். அதாவது ‘கம்யுனிஸ்டுகள் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சவுண்டு விடுகிறார்கள். இந்தக் கூச்சலுக்கு மத்தியில் உனக்கெல்லாம் அமெரிக்க இலட்சியவாதம் குறித்து எதாவது தெரியுமா’ என்ற தொனியில் விளக்கியிருந்தார். அமெரிக்காவை எதிர்க்கும் கம்யூனிச வகைமாதிரிகளுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் குறிப்பிடுகிறார். அமெரிக்கா ஆராதிப்பதே இத்தகைய போலிக் கம்யூனிசத்தைத்தான். இந்த உண்மை இலக்கிய மேதைக்கு தெரியவில்லை.
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். அமெரிக்காவின் புகழ், வளர்ச்சி, தொழில் நுட்பம், சுத்தம், சுகாதாரம், கவர்ச்சி அனைத்திலும் கோடிக்கணக்கான ஏழைநாட்டு மக்களது ரத்தம் கலந்துள்ளது. சுந்தர ராமசாமி தனது இறுதி காலத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே மறைந்தார். ஜெய மோகன் போலவே அமெரிக்காவையும் கொண்டாடினார். சு.ரா வழியில் எழுத்தும் எண்ணமும் அமெரிக்காவில் செட்டிலாவதையே “அமெரிக்க இலட்சியவாதம்” என்கிறார் ஜெயமோகன். பரவாயில்லை, பாணபத்திர ஒணாண்டிகள் மகிழ்ச்சியடைவதையே சோகமுற்றிருப்பதாக காட்டுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிங்கமுத்துவுக்கு கிடைத்தது அ.தி.மு.க. ஜெயமோகனுக்கு கிடைத்தது அமெரிக்கா!
– இளங்கோ
செய்தி ஆதாரம் Visual Of Global Military Expenditures