Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்

கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்

-

டலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையும், பள்ளி, கல்லுரிகளில் கல்வி கற்கும் உரிமையும் ஆதிக்கச் சாதிகளால் மறுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதி சார்ந்த கட்சிகளின் அடையாளமிட்ட கயிறு, டாலர், ஸ்டிக்கர், கைவளையம் உள்ளிட்ட பொருட்களை அணிந்து கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சாதி மாணவர்களும் வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் பேருந்துகளிலும் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். வட தமிழகத்தில் உள்ள மாணவர்களும் பா.ம.க மற்றும் வி.சி.க என்று கட்சிகளிலும் சாதிரீதியாக பிரிந்தே உள்ளனர்.

இவர்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதைப் பற்றி மாணவர்களும் கவலை கொள்வதில்லை. இந்தக் கட்சிகளும் கவலை கொள்வதில்லை.  அதே நேரம் சாதி ரீதியான மோதல் மட்டும் இம்மாணவர்களின் முக்கிய நிகழ்வாக உள்ளது. அதிலும் ஆதிக்க சாதி வட்டாரத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நிலைமை மோசமாகவே இருக்கிறது.

1. கடலூர் மாவட்டம் ராம்பாக்கம் என்னும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதி சார்ந்த கட்சிகளின் அடையாளம் கொண்ட சொரப்பூரை சார்ந்த தலித் மாணவருக்கும் சொர்நாவூரைச் சார்ந்த வன்னிய மாணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் தலித் மாணவர் பாதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட இவர் ராம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய தலித் நண்பர்களிடம் கூறியுள்ளார். இவர்கள் சொர்நாவூரை சார்ந்த மாணவனிடம், “ஏன் இவனை அடித்தாய்” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே ராம்பாக்கத்தில் உள்ள வன்னிய இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராம்பாக்கத்தில் உள்ள இரு சாதிகளுக்கும் இடையே சாதிமோதல் ஏற்பட்டது. வழக்கம் போல, இதில் தலித்துக்களே பாதிப்புக்குள்ளாகினர்.

2. திருவந்திபுரம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பு மாணவர்கள் வகுப்பறையில் பிரிந்தே அமர்ந்து படித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆதிக்கச் சாதி மாணவிகள் தலித் மாணவனை அழைத்து, “பாடம் எழுதி விட்டாயா” என்று கேட்டுள்ளனர். இதை பார்த்த ஆதிக்கசாதி மாணவர்கள், “எங்கள் சாதிப் பெண்ணிடம் உங்களுக்கு என்னடா பேச்சு” என்று தலித் மாணவரை அடித்ததற்கு அந்த மாணவர் திருப்பி அடித்துள்ளார்.

தான் அடிவாங்கியதைப் பொறுத்துக் கொள்ளாத ஆதிக்கசாதி மாணவர்கள் தங்களின் ஊருக்குள் புகுந்து, “நம்ம சாதிப் பொண்ணுங்களை சேரிப் பயலுங்க கிண்டல் செய்கிரானுங்க கேட்டா அடிக்கிறானுங்க” என்று கூறி மொத்த ஊரையும் திரட்டிவந்து கண்ணில் பட்ட தலித் மாணவர்களை எல்லாம் கொடுரமாக தாக்கினர். சில தலித் மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் வைத்து பூட்டியதைக் கண்ட சாதிவெறி கும்பல் வகுப்பறையின் கதவுகளை உடைக்க முயற்சிக்கும் போது தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் ஆசிரியை தடுத்துள்ளனர். இவர்களை சாதிவெறி கும்பல் பிடித்து கீழே தள்ளியதால் மயக்கமடைந்தனர். இவ்வளவு சம்பவங்கள்நடக்கும் போது எதையுமே கண்டுகொள்ளாமல் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று போலிஸ் வேடிக்கை பார்த்து ரசித்து நின்றது.

காவல் துறையும் கல்வி துறையும் இணைந்து நடத்திய விசாரணையில் தலித் மாணவர்கள் 7 பேரும், ஆதிக்க சாதி மாணவர்கள் 3 பேரும் சாதிக் கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று முடிவு செய்து அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

“இந்த ஜனநாயகத்தில் பாதிக்கப் பட்டவனுக்குத்தான் அதிக தண்டனையா என்றும், பள்ளியில் சாதி கலவரம் செய்தால் பள்ளியை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை” என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.

3. விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம், பாண்டிக்குப்பம் உள்ளிடப் பகுதியில் ஆலய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதிற்கு எதிராக போராடிய தலித் மக்கள் கொடுரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் தீர்ப்பின் முடிவான தேரை இழுக்கும் உரிமை தலித்துகளுக்கு வழங்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முயுயாத ஆதிக்கசாதியினர் தேரையே கொளுத்திவிட்டுள்ளனர்.

இப்படி பள்ளியில் மட்டுமல்ல, வழிபாட்டு உரிமையிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும் முழு உரிமை கிடைக்கவில்லை. மறுபுறம் தலித் மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக் கொள்கிற தலித் கட்சிகளும் கூட அம்மக்களின் சமத்துவ உரிமைகளுக்காக மற்ற உழைக்கும் மக்களோடு ஐக்கியப் பட்டு போராடாமல் சராசரி ஓட்டுக் கட்சி வழிமுறைகளையே பிரதானமான அரசியல் வழிமுறைகளாக வைத்திருக்கின்றனர். அதன்படி திருவிழா வசூல், கட்டப் பஞ்சாயத்து என்று பிழைப்புவாதத்தில் மூழ்கிவிட்டனர். இறுதியில் ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டூழியங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அத்தோடு பா.ம.க போன்ற சாதிவெறிக் கட்சிகளும் தமது பிரதான அடிப்படையாக சாதிவெறியை கொம்பு சீவிவிடுவதையே வைத்திருக்கின்றனர்.

pmk-caste-atrocity-cartoon-slider

எனவே திருவிழா, பள்ளி, இன்னபிற பொது இடங்களில் எந்நேரமும் சாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் சிறுபகுதி ஆதிக்க சாதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் ஆதிக்க சாதி வெறியர்களின் ஓட்டுக் கட்சி முதலீடாக உள்ளது.

எனவே ஆதிக்க சாதிவெறியர்களை குறிவைத்து அதே சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து போராட வேண்டும்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் பகுதி