
மணிஷா கட்கால். வயது 40. பெயரில் மணிஷா இருப்பதால் வெண் திரையில் கவரும் நாயகியின் ‘அழகை’ கொண்டிருப்பதாக ஏமறாதீர்கள். அவளது நிலத்தைப் போலவே சருமமும் வறண்டு போன ஒன்று. கண்களில் சில அடிகளைத் தாண்டி பார்க்கும் ஒளி இல்லை. ஒடுங்கிப் போன தாடைகள், எலும்பையே நகையாக கொண்டிருக்கும் கழுத்து, இந்து மனைவிமார்களின் முத்திரையான பொட்டு கூட அவளிடம் சாயம் இழந்துதான் தெரிகிறது. இருப்பினும் அவள் அந்த பொட்டை வகிடில் வைக்காமல் இல்லை.
நல்லது, இப்படித்தானே இந்தியாவின் பெரும்பான்மையான உழைக்கும் பெண்கள் இருப்பார்கள். இருப்பதில் மட்டுமில்லை நண்பா, இறப்பதிலும்.
பாரதீய ஜனதா ‘சீரும் சிறப்புமாய்’ ஆளும் மராட்டிய மாநிலத்தில், மராத்வாட பிராந்தியத்தின் ஓஸ்மானபாத் மாவட்டத்தில் உள்ள அம்பி கிராமத்தில் பிறந்த அபலைகளில் மணிஷாவும் ஒருத்தி. ஐந்து குழந்தைகள். அவளும், கணவரும் கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள். மோடியின் வளர்ச்சி வரைபடத்தில் அம்பானியோ, அதானியோ இருக்கும் போது இந்த அழகற்ற பெண்ணுக்கு இடமேது? எனவே சமீப காலமாக வேலை இல்லை.
மராத்வாடா பிராந்தியத்தில் வறட்சி என்கின்றன ஊடகங்கள். அந்த செய்திக்கிடையில் ரியல் எஸ்டேட், நகை, ஓட்டல் விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இயற்கையின் வறட்சி மணிஷாக்களுக்கு மட்டும்தான் சொந்தம். இனி மணிஷாவின் குடிசைக்குள் நுழைவோம்.
தட்டில் காய்ந்து போன இரண்டு சப்பாத்திகள். டப்பாக்களில் அரிசியோ, கோதுமையோ, மாவோ ஏதுமில்லை. நிலமும், சருகுகளும் காய்ந்திருக்கும் போது சமையலறை மட்டும் காயாமல் இருக்குமா என்ன?
ஏதாவது வேலை கிடைக்குமா என்று கணவர் வெளியே செல்ல, விளையாட தெம்பில்லை என்றாலும் தெருவில் குழந்தைகள் இருக்க, கதவை மூடிய மணிஷா சமையலுக்கு தேவையற்றிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்துக் கொண்டாள்.
குழந்தைகள் பசியையும், குடும்பத்தின் வறுமைமையும், பார்க்கச் சகிக்க முடியாத ஒரு பெண் ரத்தத்தாலும், நெருப்பாலும் எழுதிய கவிதை அது. ஆனாலும் என்ன? பாகுபலியில் பளிச் வண்ணங்களையும் தனியொருவனில் பஞ்ச் டயலாக்கையும் தேடும் இதயங்களுக்கு இந்த கவிதை எரிச்சலூட்டும். மல்டிபிளக்ஸ் அழகில் பரதேசிகள் நுழைந்தால் ஏற்படும் அபஸ்வரம் சொல்லிப் புரியாத ஒன்று.

உலகம் சுற்றும் தூதுவராய் மோடி பறந்து பறந்து, பன்னாட்டு முதலாளிகளை அழைக்கிறார். அந்த கனவான்கள் வரும் போது இந்த அன்றாடங்காய்ச்சிகள் கண்ணில் படக்கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.கவின் மராட்டிய மாநில முதல்வர் இத்தகைய வேள்விகளை நடத்துகிறார் போலும்.
கெரசினுக்கு கிருஷ்ணாயில் என்ற பெயர் உண்டு. ராமனின் பெயரால் கட்சி வளர்த்தவர்கள், கிருஷ்ணனின் பெயரால் இறுதிச் சடங்கு செய்கிறார்கள். என்ன இருந்தாலும் இந்து ஞான மரபு அல்லவா?
அடுத்தது என்ன? ஃபேஸ்புக்கில் இரண்டு சொட்டு லைக், நாலு சொட்டு ஷேர், பிறகு பாகுபலியின் அடுத்த பாகம் நரபலி, வாலுவின் அடுத்த அத்தியாம் ரீலு,….
இப்படித்தான் மணிஷாவின் இறுதிச் சடங்கை இந்தியா செய்து கொண்டிருக்கிறது.
குற்ற உணர்வு குறுகிப் போன காலத்தில் அந்த பேதைப் பெண்ணின் தற்கொலை ஒரு ஃசெல்பியின் மதிப்பைக் கூட பெறப்போவதில்லை.
மணிஷா, உனக்கு அஞ்சலி செலுத்த எங்களிடம் பண்பாடு இல்லை. அதற்கு மன்னித்துக் கொள் என்று கேட்பதற்கு மனமில்லை.
உன் விதியை எழுதிய கயவர்கள் உனது ஐந்து குழந்தைகளுக்கும் எழுதுவார்கள் என்பதால் குழந்தைகள் குறித்து கவலை வேண்டாம்.
போய் வா!