Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு

ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு

-

ரியாதையான வட்டார வழக்கிற்காக நினைவு கூறப்படும் கொங்கு மண்டலத்திற்கு மற்றொரு குரூர முகமும் இருக்கிறது. அதுதான், கவுண்டர் சாதி முகம்.

தமிழகத்திலேயே மிகக் கடுமையான சாதிய புறக்கணிப்பும் அடக்குமுறையும் இருக்கும் பகுதி. தமிழகத்திலேயே மிக வலுவான சாதிய பொருளாதார அரசியல் அதிகார வர்க்க அடித்தளம் கொண்ட சாதியாக கவுண்டர் சாதி இருக்கிறது. தலித்திய அமைப்புகளும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்குமளவுக்கு கூட இங்கே இல்லை.

இத்தகைய சூழலில் இந்த ஆதிக்க சாதி உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுக்கும் சில அமைப்புகளில் சற்றே பெரிய அமைப்புதான் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி.

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடுஇத்தகைய ஒரு ஆகப்பிற்போக்கான அமைப்பு “கலாச்சாரம் காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியாவில் ஒரு மாவட்ட மாநாடை 27-09-2015 ஞாயிறு அன்று நடத்தியது.

இரண்டு மாதங்களாக சுவரெழுத்து கடைசி ஒரு வாரத்தில் சுவரொட்டி நகரெங்கும் பிளக்ஸ் பேனர்கள் கொடி என ஏகத்திற்கும் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆதிக்க சாதி வெறி காக்கப் போகும் கலாச்சாரத்தை அறிய கொடிசியா சென்றோம்.

சாதிக் கட்சி தலைவர்களுக்கு முன் நிபந்தனை சாதிப் பெருமிதத்திற்கு நிகரான முட்டாள் தனம் என்பதை ஈ.ஆர்.ஈஸ்வரன் பல தொலைக்காட்சி விவாதங்களில் தெளிவுற விளக்கியுள்ளார்.

“சாதிய சாக்கடைகள் பலவாகும். அவை கலக்கும் மையக் கடலே ஆர்‌.எஸ்‌.எஸ் ஆகும்” என்ற புதுமொழிக்கிணங்க, ஈஸ்வரன், இந்த விநாயகர் சதுர்த்தி அன்று மேட்டுப் பாளையத்தில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் சிறப்புரை நல்கியுள்ளார். இதே இந்து முன்னணி மற்றும் இங்கிருக்கும் இந்து அமைப்புகளின் அணிகளில் கணிசமானோர் அருந்ததிய சமூக இளைஞர்களே. கோவைக் கலவரத்தில் சிறை சென்றவர்களில் 90 சதம் அவர்களே. கலவரத்திற்கு தலித்துக்களையும் களவாணித்தனத்திற்கு ஆதிக்க சாதிகளையும் பயன்படுத்துவது பார்ப்பனியத்தின் தந்திரம்.

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடுஅவ்வகையில் கொடிசியாவில் நடந்த இந்த மாநாட்டிற்கும் (மாநாடே ஆர்‌.எஸ்‌.எஸ் அஜெண்டா தான் என்ற போதிலும்) ஆர்‌.எஸ்‌.எஸ் நிர்வாகிகளையும் பி‌.ஜே.பி, இந்து முன்னணி நிர்வாகிகளையும் அழைத்து மேடையில் அமர வைத்திருந்தார். ஆக ஆதிக்க சாதியும், ஆர்‌.எஸ்‌.எஸ் மும் கள்ள உறவை விடுத்து நேரடி உறவிலேயே இறங்கி வெகு நாட்களாயிற்று.

மூன்று மணிக்கு மாநாட்டுத் திடலை அடைந்த பொது பொது மக்களில் ஒருவர் கூட இல்லை. ER Boys என டிசர்ட் அணிந்த இளைஞர்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டிருந்தனர். மாநாட்டுத் திடலை சுற்றிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்களில் ஈஸ்வரன் இளித்துக் கொண்டிருந்தார். அதிலும் தலைமைச் செயலக பின்னணியில் தலையை சாய்த்த படி அவர் இருக்கும் பிளக்ஸ் ஜெயாவின் கண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டால் சுளுக்கு உறுதி. இதில் ஈசன் படை எனவும் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரோட்டில் இருந்து மாநாட்டுத் திடலுக்கு திரும்பும் வழியில் தீரன் சின்னமலையின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. காலனியாதிக்கத்தை எதிர்த்து சமரசமில்லாமல் போராடிய இந்த மாவீரனை சாதிய அடையாளமாக்கி அரசியல் செய்யும் யுவராஜ் முதல் இன்ன பிற ஆட்களை என்ன பிறவி எனக் கொள்வது. அதிலும் சின்னமலையை புகழ்ந்து விட்டு, ஆர்‌.எஸ்‌.எஸ் வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு திப்புவை இகழும் ஈஸ்வரனை விட இழி பிறவி யாரும் இல்லை என்றே கொள்ளலாம்.

மாநாட்டுப் பந்தலுக்கு திரும்புவோம்.

தலித் இளைஞர்கள் குழு ஒன்றை அழைத்து வந்திருந்தனர் (மத்தளம்) ஜமாப் அடிக்க. அவர்களுக்கும் ஈசன் படை என்ற டிசர்ட்டை அவர்கள் போட்டிருந்த சட்டைக்கு மேல் அணிவித்து நிறுத்தியிருந்தார்கள். இங்கு பெரும்பாலும் ஜமாப் அடிப்பது தலித்துகளாகவும் ஆடுவது கவுண்டர்களாகவும் இருக்கும்.

ஈசன் படை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொங்கு ஈஸ்வரன் சாதிவெறி மாநாடு
“நம்மால் முடியும்”

இளைஞர் அணி தள்ளாடியபடி வந்து நின்றது. அப்போதே மழை தூறத் துவங்கியிருந்தது. மேடையில் வேறு ஆண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தனர். அடடே, கொங்கு நாட்டின் பழம்பெரும் கலையென்று சற்று அருகே சென்று பார்த்தால்,

தன்னானே தன்னானே.. தன்னானே… அண்ணன் ஈஸ்வரன் புகழ் தன்னானே… என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.

மழை வேகம் பிடித்துக் கொண்டது. அனைவரும் கலைந்து சென்று ஆங்காங்கே கிடைக்கும் நிழல்களில் பதுங்கிக் கொண்டனர். கூட்டம் என்று சொல்லிக்கொள்ள சேர்ந்திருந்த நூறு பேரும் சேர்களை தலைக்கு பிடித்துக் கொண்டு பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள். இவர்களும் ஒரு 1 மணி நேரம் பார்த்தார்கள் மழை விடுவதாயில்லை. இதெல்லாம் ஒரு மழையா…? எனக் கூறியவாறு

முடியும் முடியும் ! நம்மால் முடியும் !

என முழக்கம் போட்டும் பார்த்தார்கள். கொங்கு சிங்கங்கள் எவையும் மழையில் நனைவதற்கு தயாராக இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு ஒரு வழியாக மழையின் வேகம் குறைந்தது. உடனடியாக ஐந்தாறு டான்ஸ் பாய்ஸை மேடையில் ஏற்றி விட்டனர். சினிமா பாடல் மெட்டுக்களில் ஈஸ்வரனை ஆபாசமான புகழ் மொழிகளுடன் பாடல்கள் ஒலிக்க அதற்கு அந்த டான்ஸ் பாய்ஸ் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 17,000 ரூபாயம் ஒன்பது நிமிட நடனத்துக்கு. மேடை, மேடைப் பின்னணி, அலங்காரங்கள் இன்ன பிறவெல்லாம் ஆர்‌கே ஈவண்ட்ஸ் என்ற ஒப்பந்த முறை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். கொடிசியா வாடகை, இந்த ஏற்பாடுகள் விளம்பரங்கள் என எல்லாவற்றையும் பார்க்கையில் தோராயமாக அரைக் கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பார்கள் எனத் தெரிகிறது.

டான்ஸ் பாய்ஸ் ஆட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்து, பெண்கள் சிறிது நேரம் கும்மியடித்தனர். பின்னர் ஜமாப் அணியினரை மேடையில் ஏற்றி அடிக்க வைத்தனர். கூட்டத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இதில் இடையிடையில் அண்ணன் ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கிறார் என ரன்னிங் கமெண்ட்ரி வேறு.

ஈஸ்வரன் என்ட்ரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஈஸ்வரன் ஐந்தே கால் மணி வாக்கில் 3 நபர்களை அழைத்துக் கொண்டு கையை மேலே தூக்கி காட்டியவாறே வந்தார். இந்த கூட்டத்திற்கென மலேஷியாவில் இருந்து வந்திருக்கிறார்களாம். ஈஸ்வரன் வந்தவுடன் அவருக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கூறி புதிதாக ஒரு ஜமாப் குழுவினரை மேடையேற்றினர். அறிவிப்பாளர், நம்ம பசங்க அடிச்சி நம்ம பொண்ணுக ஆடும் ஜமாப் என அறிவித்தார். அது முடிந்த பின்னர், கொ.ம.தே.க நிர்வாகிகள், கவுண்டர் சங்க நிர்வாகிகள், ஆர்.‌எஸ்.‌எஸ் இந்து முன்னணி பி.‌ஜெ.‌பி நிர்வாகிகள் என அனைவரும் மேடையேறி மாநாட்டை துவக்கினர்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை

பல்வேறு பகுதிச் செயலாளர்களாக பேசத் துவங்கிய சுமார் 10 பேரின் பேச்சுக்களும் “கலாச்சாரம் காப்போம்” என்ற தலைப்பின் கீழ் கோவையில் ரோடு சரி இல்லை. தொழில் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமென்று ஈஸ்வரனிடமும் அரசிடமும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை என்கிற பெயரில் மதமாற்ற தடை சட்டம் வேண்டும் மத வெறியை துவக்கி வைத்தார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ்.

மலேசிய மங்குனிகளில் மூன்றில் இருவர் மட்டுமே பேசினர். அதில் ஒருவர் மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ். “இங்கிருந்து போன கொங்கு இனம் நாங்க. மலேஷியாவில் நாங்க நல்லா பெருமையோட வாழ்கிறோம். அடுத்த வருடம் மலேஷியாவில் ஒரு கொங்கு மாநாட்டை போடுகிறோம். அதற்கு உலகக் கொங்கு மக்கள் வர வேண்டும்” என பேசினார். பேசாத நபர்தான் மலேசியாவின் இளம் தொழிலதிபர் பிரக்தீஸ் குமாராம். கொங்கு மண்ணின் மைந்தாராம் எப்போது நிதி கேட்டாலும் அள்ளிக் கொடுப்பார் எனவும் கூறினார்கள்.

மேடையில் ஈஸ்வரனின் வலது புறம் இந்த தொழிலதிபர்களும் இடது புறம் கவுண்டர் சங்க தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஈஸ்வரன் கட்சியின் கட்டுமானம் இவர்களை வைத்து தான் இருக்கிறது.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
ஈஸ்வரன்

இறுதியாக, ஈஸ்வரன் மைக் பிடித்தார். எடுத்த எடுப்பிலேயே, மலேசியாவின் ரப்பர் தோட்டத்துக்கு பிழைக்கச் சென்று அப்போதே நேதாஜியின் படையில் பணியாற்றிய வீரர்களின் வாரிசுகள் இந்த மலேசியா காரர்கள் என ஆரம்பித்தார்.

‘பயபுள்ள வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா’ என நினைப்பார்களோ என்று நினைத்தாரோ என்னவோ அடுத்ததாக, கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என ஒரு லிஸ்ட் வாசித்தார். கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் அவர்கள் யார் என்றால் அந்நிய சக்திகள் என சாதிவெறியை ஆரம்பித்து வைத்தார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
‘நடுநிலை’ பத்திரிகை

இடையில் அண்ணனின் கொங்கு நாடு என்ற ‘நடுநிலை’ பத்திரிகையை அனைவருக்கும் இலவச விநியோகம் செய்து கொண்டிருந்தனர் ஈசன் படையினர்.

“நான் 10 நாளைக்கு முன்னாடி அமெரிக்கா போனது எல்லோருக்கும் தெரியும். அங்கு ஐநா அலுவலகத்தில் ஒரு வாசகம் இருந்தது, கற்பழிப்புகளை தடுப்பது பற்றி. அந்த வாசகத்திற்கு ஒரு தென்னிந்தியப் பெண்ணின் படத்தை போட்டிருக்கிறார்கள். என்ன அநியாயம். அங்கு ஒரு அமெரிக்கப் பெண்ணின் படத்தை போட வேண்டியது தானே. இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு வேதனையாக இருக்கிறது.” என்று வன்புணர்ச்சியின் கொடுமையை வெளியே தெரியவிடக்கூடாது என்று உறுமினார்.

அடுத்து, “ஜவுளித் தொழில் பாதிக்குது, 1970 விவசாயிகள் போராட்டம், கொங்கு மக்களுக்கு அரசு வேலை வேண்டும், அவினாசி அத்திக்கடவு காளிங்க ராயன் வாய்க்கால், உலக முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்ணில் மாவோயிஸ்டுகளா என ஈஸ்வரன் சாதி-மதவெறிக்கு இடையில் பல்வேறு ‘நலத்திட்டங்கள்’ குறித்து கவலைப்பட்டார்.

கொங்கு ஈஸ்வரன் சாதி வெறி மாநாடு
வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன்

ஒரு வழியாக பேச வேண்டியதை யெல்லாம் பேசி முடித்து கொங்கு நாட்டை காக்க அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநாட்டை முடித்து வைத்தார்.

மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகளும் வி‌.வி‌.ஐ‌.பி வரிசையில் அமர்ந்திருந்த பணக்கார கவுண்டர்களும் மேடையை முற்றுகையிட்டிருந்த ஆடி போன்ற கார்களில் கிளம்ப அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்திருந்தவர்கள் டூவீலர் ஸ்டாண்டையும் தாங்கள் வந்த பஸ் இருக்கும் ஸ்டாண்டுகளையும் நோக்கி நடக்கத் துவங்கினர்.

இப்படியாக வெறும் வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியால் மட்டுப்பட்டிருந்த சாதிய மத இயக்கங்கள் அ.தி.மு.க என்ற சீரழிவின் சின்னம் துவங்கிய பின்னர் சற்று வேகமாக தமிழகத்தில் வளரத் துவங்கின. தமிழகத்தில் துவண்டு கிடந்த சாதியத்தை உயிர்ப்பித்ததில் ராமதாஸ் போன்றவர்கள் முன்னோடிகள்.

பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அந்தந்த வட்டார ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் உதவுகின்றன. இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி இருப்பதில் ஆச்சரியமில்லை.

இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இளவரசன், கோகுல்ராஜ் என்று தலித் இளைஞர்களின் தலைகள் பகிரங்கமாக வெட்டப்படும் சூழ்நிலையில், பயங்கரவாதி யுவராஜ் போன்ற சாதிவெறியர்கள் அரசு, ஊடகங்கள், போலிசால கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆதிக்க சாதிவெறியை முறியடிப்பது அவசியம். இதில் “தமிழ் இந்து” உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் ஈஸ்வரன் கட்சி மாநாட்டை வரவேற்று எழுதுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலாச்சாரம் மதவெறி என்றால், ஈஸ்வரன் கட்சியின் கலாச்சாரம் சாதிவெறி. இந்தக் கலாச்சாரத்தைக் காக்கத்தான் இவர்கள் மாநாடு போடுகிறார்கள். பணம் வசூலிக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இப்படி பகிரங்கமாகவே கிரிமினல்கள் பொதுவாழ்க்கையில் கலந்து கொள்வது இந்தியாவைத் தவிர வேறு எங்கு நடக்கும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க