மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை–மறையாத மனு நீதிக்கு முடிவுகட்டுவோம்!
- புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க காலிகளின் அடாவடி
- மாணவர்களின் பதிலடி!
மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியைச் சார்ந்த முகமது அக்லாக் என்ற முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுத் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார், அவரது மகன் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.

மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காகவே இவ்வாறான பல்வேறு வன்முறைகளும் கொலைவெறித் தாக்குதல்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நித்தமும் அரங்கேறி வருகின்றன. இவ்வன்முறைகளில் உயர்சாதி இந்துக்களை ஈடுபடுத்தி அவர்களை இசுலாமிய மக்களுக்கு எதிராக நேரடியாகவும், தலித் மக்களுக்கு எதிராக மறைமுகமாகவும் அணிதிரட்டி வருகிறது இந்தியாவை ஆளும் இந்துத்துவ கும்பல்.
ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் உழைக்கும் மக்களை மதரீதியில் பிளவுபடுத்த ஓர் ஆயுதமாக மாட்டுக்கறி பயன்படுத்தப் படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, நம் உணவு எதுவாக இருக்கவேண்டும் என்பதை ஒரு சிறு கூட்டம் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது!

“மாடுதின்னும் புலையர்” என்று இதே மாட்டுக்கறியின் பெயரால்தான் வரலாறு நெடுகிலும் கோடானகோடி தலித் மக்களும் ஆதிவாசிகளும் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது அதே ஆயுதம் சிறுபான்மையினருக்கு எதிராக சாதி இந்துக்களை அணிதிரட்ட ஏவப்படுகிறது.
- தீண்டாமையையும் சாதி வேற்றுமையையும் காத்துநிற்கும் இந்துமதத்தைப் புறக்கணிப்போம்!
- நாம் “மாடு தின்போர்” என்று உரக்கச் சொல்வோம்!
- தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்துவெறிப் பாசிசத்தை அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் பிறந்த இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்!
- மாட்டுக்கறியின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்துவெறிக்கு முடிவுகட்டுவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 13 அக்டோபர் 2015 அன்று பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான மாணவர்களும், முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் / கட்சிகளின் பிரதிநிதிகளும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஆனந்தன், பல்கலைக்கழக ஆய்வாளர் சத்தியராஜ் உள்ளிட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இம்முன்னணியாளர்களும், பிற மாணவர்கள் பலரும் கண்டன உரையாற்றினர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், மற்றும் பெரியார் அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இவ்வார்ப்பாட்டத்தின் இறுதியில் கூடியிருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி வழங்கப்பட்டது. அனைவரும் மாட்டுக்கறியை உண்டு சாதி ஒடுக்குமுறை, பார்ப்பனக் காவிகளின் சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மதவெறி ஆகியவற்றிற்கு எதிரான தமது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதுபற்றி அறிந்த இந்து காவி வெறியர்கள் அடுத்தநாள் (14 அக்டோபர் 2015) அதே இடத்தில் மாட்டுக்கறிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி மாட்டுக்கறி விருந்து நடத்திய மாணவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வசைபாடினர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் காலிகள் திரண்டு தலித் மற்றும் முசுலீம் மக்களை மிக மோசமான, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல். இதுதான் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தின் பண்பாடு என்பதை நன்கு உணர்த்துவதாக இருந்தது அந்த இந்து வானரங்களின் வசைமொழிகள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அப்போது அங்கு திரண்டு அவர்களின் பேச்சுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி இந்து வெறியர்களின் காலுக்குச் செருப்பாய்ச் செயல்ப்பட்டது போலீசு. மாட்டுக்கறி உண்ணும் தலித் மக்களை இழிவுபடுத்தியும், நேரடியாக மிரட்டியும் பேசிய காவிக் கிரிமினல்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யவேண்டிய காவல்துறை, “அவன் இன்னிக்கு மைக் போட்டுத் திட்டுறான், நீ நாளைக்கு திருப்பித் திட்டு. நான் இப்போ அவன ஏன் இப்டி பேசுற-னு கேக்க முடியாது.” என்று வெட்கமில்லாமல் கூறியது.
அதனைத் தொடர்ந்து ஒரு கொந்தளிப்பான சூழல் வளாகத்தில் உருவானது, 16 அக்டோபர் அன்று மீண்டும் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்துவது என்று முடிவுசெய்தனர் மாணவர்கள். இதனை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கீழ்க்காணும் முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வளாகத்தினுள்ளும் புதுவை நகர் முழுவதிலும் ஒட்டப்பட்டன:
“The saffron snake sneaking to poison Pondicherry University!
Govt. of Pondicherry and Police!
- Arrest the RSS & BJP saffron fanatics who made shabby remarks on the basis of caste and religion against the students of Pondicherry University who came out in support of the nutritious and working class food of beef!
Students and people of working class!
- Let us root out the RSS and ABVP Hindu fascists trying to polarise the united students of PU belonging to various faiths and cultures on caste and communal lines!

It is absolutely ridiculous for the Brahmins who consumed bulls and horses during Yagas to advocate beef-banning!
Let us give a fitting reply to the saffron fascists who issued murder threats against the beef-eating Dalits and Muslims!”
மாணவர்களின் வேகத்தையும் எழுச்சியையும் கண்டு மிரண்டுபோன போலீசு அனுமதி மறுத்தது, போராட்டம் எதுவும் இதுகுறித்து இருதரப்பிலும் நடத்தக் கூடாது என்று கூறியது. இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தடையை மீறி தொடர்முழக்கப் போராட்டம் நடத்தத் தயாராகினர்.
செயலில் இறங்கிய போலீசு, இரவோடு இரவாக ஒலிபெருக்கி வைக்கவோ வேறந்த ஏற்பாடுகளும் செய்யவோ முடியாதபடி அனைத்தையும் தடுத்தது. திட்டமிட்டபடி மாணவர்கள் 16-ம் தேதி காலை கூடி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.
ஆங்கிலத்தில் சுவரொட்டிகளைப் படித்த காஷ்மீர், மராத்தி, வட இந்திய மாணவர்களும் தமிழ் மாணவர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்துவெறியை முறியடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எழுச்சியுடன் பேசினர். புரட்சிகர அமைப்புகளின் தோழர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தமது ஆதரவை மாணவர்களுக்கு நல்கினர்.
செய்வதறியாது திகைத்த போலீசு உடனே கலைந்துசெல்லும்படி மிரட்டிப் பார்த்தது. மாணவர்கள் முடியாது என்று மறுத்து கைதுசெய்துகொல்லுமாறு கூறவே சற்று பின்வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது!
காஷ்மீரி மற்றும் பிற வட இந்திய மாணவர்கள் தமிழ் மாணவர்களோடு இணைந்து இன, மொழி எல்லைகளைக் கடந்து நடந்த எழுச்சிகரமான போராட்ட நிகழ்வாக இது அமைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுவை அமைப்புக்குழு.