Tuesday, April 22, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !

அம்மாவின் மரண தேசம் – ஆவணப்படம் வெளியீடு !

-

ammavin marana thesam stillவினவு தளத்தின் முதல் ஆவணப்படமான கருவாடு படத்திற்கு பிறகு இது இரண்டாவது படைப்பாக வருகிறது. அந்த வகையில் நிறையவே மேம்பட்டும் இருக்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் “மூடு டாஸ்மாக்கை ” – இயக்கத்தின் வீச்சால் கடலூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்தில் தோழர்களின் துடிப்பான பங்களிப்பாலும், மக்களின் உயிரோட்டமான கதைகளாலும் இந்த ஆவணப்படம் தனக்குரிய கலையழகையும், போராட்ட உணர்ச்சியும் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம்.

இந்த ஆவணப்படத்திற்குரிய வேலைகள் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக நடந்தன. மற்ற வேலைகளோடு சேர்த்து செய்ய வேண்டிய நெருக்கடி, நிதிச் சுமை காரணமாக முழுவீச்சில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியாத நிலை, வினவு குழுத் தோழர்களே முதன் முறையாக இதன் சகல தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபட்டதால் வந்த தொழில் நுட்பச்சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி படம் நிறைவடைந்ததே பெரும் போராட்டமாக இருந்தது.

தமிழ்ச்சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் காயடிக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் உண்மையில் அந்த படைப்பாளிகளுக்கு விருது, பணம் என்று நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வழிகாட்டுகிறது. எங்களுக்கோ இது மக்களின் வலியை, வாழ்வை, ஆன்மாவை கண்டடைவதின் மூலம் போராடும் மக்களுக்கு ஒரு ஆயுதமாக பயன்பட வேண்டும் என்பதைத் தாண்டி வேறு ஆசைகளில்லை.ammavin marana thesam still 2

எனினும் இந்தப்படத்தை இரண்டு மூன்று டீசர்கள், முறையான வெளியீட்டு விழா, டிவிடி விற்பனை என்று நாங்களும் திட்டமிட்டிருந்தோம். அதே நேரம் தோழர் கோவன் கைது ஏற்படுத்திய அரசியல் சூழல் இந்த படத்திற்குரிய வெளியீட்டு நேரத்தை தெரிவு செய்து விட்டது. இதை விட இந்த படத்தை வெளியிட வேறு நல்ல தருணம் கிடைக்காது.

தோழர் கோவன் பாடிய பாட்டு பெண்களை இழிவுபடுத்துகிறது, மலிவான ரசனையைக் கொண்டிருக்கிறது, ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது என்று சிலர் இன்னமும் அவதூறு செய்து வருகிறார்கள். பெரும்பான்மையான மக்களும், கட்சிகளும், அறிஞர்களும், ஊடகங்களும் இதை ஏற்கவில்லை என்றாலும், இந்த கருத்து பா.ஜ.க, அ.தி.மு.க, போலிசு, இவர்களை ஆதரிக்கும் ஊடக வட்டாரங்களால் தொடர்ந்து பேசப்படுகிறது.

எனில் பெண்களை இழிவுபடுத்துவது யார், விதவைகளாக்குவது யார், இலட்சக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக்குவது யார், யார் தேச விரோதி, சமூகத்தின் இணக்கத்தை சீர்குலைப்பது யார்? – அனைத்திற்கும் இப்படம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையின் மூலம் பதில் அளிக்கிறது.

45.50 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை முழுமையாக பாருங்கள். நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், பகிருங்கள். இதன் டி.வி.டி வெளியாகும் போது வாங்கி ஆதரியுங்கள், இப்போது நன்கொடை தாருங்கள்!

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் பாசிச ஜெயாவின் ஒடுக்குமுறையை ஒழிக்கும் இடியாக இறங்கட்டும்.

நன்றி

தோழமையுடன்
வினவு

நன்கொடை

 

பாகம் ஒன்று, பாகம் இரண்டு என இரு பிரிவுகளாக ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.