“நீதிபதிகள் (உள்ளூர் போலீசை வைத்துக் கொண்டு) தங்களுக்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்கள். அதனால், உள்ளூர் போலீசுக்குப் பதிலாக மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படையை உள்ளே அழைத்தார்கள். அதுவும் பலனின்றிப் போனால், எல்லைப் பாதுகாப்புப் படை, இராணுவம் உட்பட வேறு படைகள் அழைக்கப்படுவார்கள்.”- இப்படி தமிழக அரசை எச்சரித்தது அல்லது மிரட்டியது இந்திய உச்ச நீதிமன்றம்.

பிற எல்லாத் துறைகள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்ட எளிய மக்களுக்கும் கடைசிப் புகலிடம் நீதிமன்றங்கள்தாம் என்பதைச் சொல்லியே இந்திய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும்படியான மாயையைத் தக்கவைக்க முயலுகிறார்கள். ஆனால், அந்த நீதிமன்றமோ, அதுவும் அதன் உச்ச நீதிமன்றமோ தனது கடைசிப் புகலிடமாக இராணுவத்தைத்தான் நம்புகிறது. அப்படி இருக்கும்போது இந்திய எளிய மக்கள் தமது கடைசிப் புகலிடமாக உச்ச நீதிமன்றமேயானலும் அதை இனியும் நம்பலாமா!
அப்படி என்ன நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுப்போனது? பொதுமக்களாலா, தீவிரவாதிகளாலா? அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போலீசால்தான் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது, வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தாக்கப்பட்டார்கள்; அதற்கு யாரும் தண்டிக்கப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் என்றால் கருப்புப் பூனைப் படையை போட்டுக்கொள்வார்கள்.
“நீதிமன்றங்களில், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைதியான, கண்ணியமான சூழலில், வழமையான முறையில் வழக்குகளை நடத்தமுடியவில்லை; வழக்கறிஞர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்; கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள்; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அளவுக்கு மீறிப் பணம் பறிக்கிறார்கள்; இரவில் அறைகளில் தங்கி குடிக்கிறார்கள்” என்று பலவாறான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்கள் என்று எடுத்துக்கொண்டால், வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளும் அவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒழுங்கீனங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தனிநபர்வாரியாக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.
ஆனால், அவ்வாறு செய்யாமல், போலீசு அதிகாரியின் அறிக்கையைக் காப்பியடித்து, வழக்கறிஞர்கள் அனைவரின் பொதுப்போக்குகளாகச் சித்தரித்து, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை வெளியேற்றிவிட்டு, நீதித்துறையையும் சட்டத்துறையையும் முழுமையாகக் கைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் சதிகார நோக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு; பார் கவுன்சிலைச் சீரமைப்பது, வழக்கறிஞர்களுக்கான கல்விச் சீரமைப்பு, அங்கீகாரத்துக்கான தேர்வுமுறையைப் புகுத்துவது; நீதித்துறைக்கு எதிரான ஒழுங்கீனம், கண்ணியக்குறைவு, அவமதிப்பு முதலானவற்றைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சதியில் பார்ப்பன நீதிபதிகளோடு சமூகச் சொரணையற்று, பிழைப்புவாதிகளாகச் சீரழிந்துபோன பிற பிரிவு நீதிபதிகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியொரு மேல்சாதி, மேட்டுக்குடி அதிகாரச் சாதியாகப் பரிணமித்துள்ளார்கள்.

இந்த மக்கள் விரோத அதிகாரச் சாதி இப்போது ஒரு பொதுக்கருத்தைப் பரப்புகிறது: நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்களில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் என்று அனைவரையும் முத்திரை குத்துகிறார்கள். இது, பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவதூறு செய்து அரசியல் எதிர்த் தரப்பை ஒடுக்குவதுபோன்ற சூழ்ச்சி. அதன் தொடச்சியாக, வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிக்கிறார்கள்; நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் போடுகிறார்கள், பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள் என்றும், இவை ஏதோ கிரிமினல் குற்றங்களைப் போலவும் இவற்றால் நீதிமன்ற மாண்பு, புனிதம், கண்ணியம் குறைந்து போவதாகவும், நீதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவதாகவும், அதனாலேயே இத்தனை கெடுபிடிகள் என்றும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.
2009-ம் ஆண்டு பிப்ரவரியில்சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குப் பெரும் படையாகத் திரண்டு வந்த போலீசு, அங்கிருந்த வாகனங்களை உடைத்துநொறுக்கி, வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் ஓடஓட விரட்டி மண்டையை உடைத்து வெறியாட்டம் போட்டது. அந்தக் குற்றத்துக்காக யாரையும் தண்டிப்பதற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எதற்கும் இதுவரை துப்பில்லை. வாயிலே கருப்புத் துணி கட்டிக்கொண்டு குழந்தை குட்டிகளோடு போய் நீதிபதியை மறித்து முழக்கம் போடுவதும்; அநீதியான தீர்ப்பை மீறி அமைதியாகப் போராடுவதும், அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு அடாவடியாக நடத்துவதைக் அங்கேயே ஊர்வலம் போய் கண்டிப்பதும் நீதிபதிகளுக்கு எப்படி ஆபத்தாகும்?
நீதிபதிகளையும் போலீசாரையும் அவர்களது அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் நாளும் நெருக்கமாக இருந்து அவதானித்து வருவதால் அவர்களது வரம்புகளையும் வழக்கறிஞர்கள் அறிந்துள்ளார்கள். இவர்களில் சமூக, அரசியல் உணர்வுபெற்ற வழக்கறிஞர்கள் இயல்பிலேயே போராட்டக்காரர்களாக இருக்கிறார்கள். நீதிபதிகளும் போலீசாரும் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் காத்து நிற்கும் அரண்களான நீதிமன்றங்கள் அல்லாது வேறெங்கு போய் போராடுவார்கள்! நீதிபதிகளின் ஊழல்கள் உட்பட போராட்டக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகள் மீது பதில் சொல்வதற்குப் பதிலாக நீதிபதிகளிடம் இல்லாத மாண்பு, கண்ணியம் பற்றிப் பேசி நடவடிக்கை எடுக்கிறார்கள்!
– மாணிக்கவாசகம்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________