Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து

சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து

-

டந்த செப்டம்பர் மாதத்தில்டெல்லியிலுள்ள சவூதி அரேபிய தூதரக முதன்மைச் செயலாளரான மஜீத் ஹசன் அசூர், நேபாள நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களைப் பாலியல் அடிமையாக வைத்து சித்திரவதை செய்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கும்பல் பாலியல் வன்முறை, இயற்கைக்கு மாறான உடலுறவு, ஆபாச வசவுகளுடன் அடித்துத் துன்புறுத்தல், பட்டினி போட்டு சித்திரவதை – என அப்பெண்கள் நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த 30 மற்றும் 50 வயதாகும் இவ்விரு பெண்களும் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறிய டெல்லியைச் சேர்ந்த பெண் கடத்தல் பேர்வழியிடம் ஏமாந்து, தரகர்கள் மூலம் குர்கான் நகரின் மேட்டுக்குடி பங்களா பகுதியில் குடியிருக்கும் சவூதி அரேபிய தூதரக அதிகாரியிடம் கடந்த ஜூலையில் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். அன்றிலிருந்து தூதரக அதிகாரியும் அவனது 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளும் அன்றாடம் அப்பெண்கள் மீது கும்பல் பாலியல் வன்முறையை ஏவி கொடூரமாக வதைத்துள்ளனர். இக்கொடுமையை அப்பெண்கள் எதிர்த்தபோது கத்தியால் குத்தப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தூதரக அதிகாரி பங்களாவுக்குக் கொண்டுவரப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த வேறொரு பாலியல் அடிமைப் பெண் எப்படியோ தப்பித்து, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழுவினரிடம் இது பற்றி தெரிவித்தார். அக்குழுவினர் டெல்லியிலுள்ள நேபாள தூதரகத்தில் முறையிட்டு, இந்திய வெளியுறவுத் தூதரகத்தின் உதவியுடன் குர்கான் போலீசார் மூலம் அப்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்பெண்களின் வாக்குமூலத்தோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குர்கான் போலீசாரால் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளபோதிலும், முதன்மைக் குற்றவாளியான தூதரக அதிகாரியைக் காணவில்லை என்றும் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறுகிறது போலீசு.

இக்குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லை என்று மறுத்துள்ள சவூதி அரேபிய தூதரகமோ, டெல்லி போலீசார் வியன்னா தீர்மான விதிகளை மீறித் தூதரக அதிகாரி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், அத்தூதரக அதிகாரியைப் பாலியல் குற்றவாளியாக இழிவுபடுத்திவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சவூதி அரேபிய அரசும் அத்தூதரக அதிகாரியும் ஒத்துழைத்தால்தான் விசாரணையைக்கூட நடத்த முடியும். அக்காமவெறி தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக இந்திய அரசு அறிவிக்கலாமே தவிர, அதற்கு மேல் ஒன்றும் செயவும் முடியாது.

இந்த கொடுஞ்செயல் நாட்டு மக்களின் நினைவுகளிலிருந்து மறைவதற்குள்ளாகவே, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ஏழைப் பெண்ணாகிய கஸ்தூரி முனிரத்னம், வீட்டுப்பணியாளராக சவூதிஅரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்துவந்த போது, அவரது எஜமானி அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, அவரது வலது கையை வெட்டியெறிந்துள்ள கொடுஞ்செயல் நடந்துள்ளது.

மாதம் ஏறத்தாழ ரூ. 10,000 சம்பளம் தருவதாகக் கூறி அதைக் கொடுக்காததோடு, பல நாட்களாகப் பட்டினி போடப்பட்டு கஸ்தூரி சித்திரவதை செயப்பட்டுள்ளார். இதை அவர் உள்ளூர் அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவித்ததால், வீட்டின் எஜமானி ஆத்திரமடைந்து கொலைவெறியுடன் அவரை அடித்து உதைத்து கையை வெட்டியுள்ளார். கை வெட்டப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கஸ்தூரியை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் மூலமாகத்தான் இக்கொடுஞ்செயல், கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று கஸ்தூரியின் குடும்பத்தாருக்கும் பின்னர் உலகுக்கும் தெரிய வந்துள்ளது.

தன் உடலில் ஏற்பட்டள்ள கொடுங்காயங்கள் அனைத்தும் தான் பணியாற்றிய வீட்டின் எஜமானியால் ஏற்படுத்தப்பட்டது என்று கஸ்தூரி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை சரியில்லை என்றும், அந்த வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து அவருக்குக் கை எலும்பு முறிந்ததாகவும், அவரது கை செயலிழந்து போனதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் பற்றி கஸ்தூரியின் எஜமானியை விசாரித்து வருவதாகவும் ஒரு கட்டுக்கதையை சவூதி போலீசார் கூறுகின்றனர்.

இத்தனைக்கும் பிறகும், இந்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இக்கொடுஞ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உரிமைகளைத் துச்சமாக மதிக்கும் மன்னராட்சிமுறையைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, கடந்த செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமைகளைத் தர மதிப்பீடு செய்வதற்கான உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமெரிக்காவின் ஆசியோடு நியமிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை அழைக்க சவூதி அரேபியாவுக்குச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், பாலியல் அடிமைகளாக வதைக்கப்பட்ட இரு நேபாளப் பெண்களுக்கும், வீட்டுப் பணியாளர் கஸ்தூரிக்கும் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளதாகக் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இக்கொடுஞ்செயல்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுக்கும் புரவலனாக சவூதி அரேபியா உள்ளபோதிலும், இதற்கெதிராக இந்துவெறியர்கள் வாய் திறப்பதுமில்லை. அமெரிக்காவின் கூட்டாளியாகவும் பணக்கார முஸ்லிம் நாடாகவும் இருப்பதாலும், இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளதாலும் அந்நாட்டுடன் இந்திய அரசு இணக்கமாகவே நடந்து கொள்கிறது. நேபாளப் பெண்கள் மற்றும் கஸ்தூரி விவகாரங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்கவோ சவூதி அரேபியாவுடனான தூதரக உறவுகளைத் துண்டிக்கவோ முன்வராமல் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதாலேயே இந்த விவகாரம் நீர்த்துப் போகச் செயப்படுகிறது. அதேசமயம், மேட்டுக்குடி இந்தியர்கள் என்றால், இந்திய அரசின் அணுகுமுறை வேறாக இருக்கிறது.

நியூயார்க்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி கோப்ரகடே, கடந்த டிசம்பர் 2013-ல் மோசடி ஆவணங்களைக் கொடுத்து சங்கீதா என்ற வீட்டுப் பணியாளருக்கு “விசா” பெற்று அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, உரிய சம்பளம்கூட கொடுக்காமல் கொத்தடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் அம்பலமாகி அமெரிக்க போலீசாரால் கைது செயப்பட்டார். மேட்டுக்குடி அதிகாரியான அவர் கைது செயப்பட்டதை இந்திய நாட்டையே அவமதிக்கும் செயல் என்று கூச்சல் போட்ட இந்திய அரசு, தூதரக அதிகாரிகள் பற்றிய வியன்னா மாநாட்டு விதிகளைக் காட்டித்தான் இந்த வழக்குகளைக் கைவிடச் செய்து, தேவயானியை மீட்டு வந்தது. இதேவழியில், இவ்வாண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி ரவி தாப்பரும் அவரது மனைவியும் வீட்டுப் பணியாளரைச் சித்திரவதை செய்த வழக்கை கைவிடச் செய்தது.

தேவயானி போன்ற மேட்டுக்குடியினர் குற்றமிழைத்தாலும் இந்திய அரசால் தப்புவிக்கப்படுகின்றனர். ஆனால் கஸ்தூரி போன்ற ஏழைகள் கொத்தடிமைகளாக உழன்றாலும், எஜமானர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டாலும் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இந்திய அரசு முன்வருவதில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

– தனபால்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________