இந்திய ராணுவம் தங்களது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கி வருவதை கண்டித்து தேசிய பத்திரிகைகள் தினமான கடந்த திங்கட்கிழமை (16-11-2015) அன்று நாகாலாந்து பத்திரிகைகளின் தலையங்க பகுதி வெறுமையாக விடப்பட்டிருந்தது. மேலும் 15-ம் தேதி the Nagaland Post, Nagaland Page, Morung Express, Eastern Mirror, Tir Yimyimand Capi ஆகிய 6 பத்திரிகைகள் இணைந்து இந்திய ராணுவத்தை கண்டித்து ஒரு கூட்டறிக்கையும் வெளியிட்டுள்ளன.

கடந்த 2015 அக்டோப 24-ம் தேதி நாகாலாந்தில் செயல்பட்டுவரும் அசாம் ரைபிள் படைப்பிரிவின் சார்பில் “சட்டவிரோதமான அமைப்புகளுக்கு ஊடகங்களின் உதவி” என்று தலைப்பிடப்பட்டு ஒரு கடிதம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில், ‘நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்பு மத்திய அரசால தடைசெய்யப்பட்டிருக்கிறது’ என்றும், ‘அநத அமைப்பின் கோரிக்கைகளையோ, அந்த அமைப்பை பிரபலப்படுத்தும் வகையில் செய்திகளையோ வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று எச்சரித்திருந்தது.
இந்திய ராணுத்தை கண்டித்த இப்போராட்டத்திற்கு நாகாலாந்து பத்திரிகைகள் கூட்டமைப்பு, நாகா மாணவர் அமைப்புகள் ஆதரவை தெரிவித்துள்ளன. நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கொடூரமான அடக்குமுறைச் சட்டத்தை இந்திய அரசு 1958 முதல் அமல்படுத்திவருகிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் அமலில் இருக்கும் பகுதியில் ராணுவத்திற்கு எதிராக மூச்சுவிடுவதே கொலைக்குற்றமாக கருதப்படும் சூழலில் அடக்குமுறைகளை எதிர்த்து போராடும் நாகாலாந்து பத்திரிகைகளை நம்மூர் ஜெயா மற்றும் மோடி அடிமை ஊடகங்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
தங்களது பிரதேசத்தை ஆக்கிரமித்த ஆங்கில காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான தீரமிகு போராட்டத்தை நடத்தியவர்கள் நாகா பழங்குடியினர். இம்மக்களின் போராட்டம் 1947 அதிகார மாற்றத்திற்கு பின்னரும் தொடர்நதது.
தங்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிராக நாகா பழங்குடியினர் தங்களது போராட்டத்தை தீவிடப்படுத்தினர்.1951-ல் நாகா தேசிய கவுன்சில் மேற்கொண்ட பொதுவாக்கெடுப்பில் 99% சுதந்திர இறையாண்மையுள்ள நாகா அரசுக்கு வாக்களித்தனர். இந்நிலையில் 1955-ம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு படை நாகாலாந்திற்கு அனுப்பப்பட்டது. ஆங்கில காலனியாதிக்கவாதிகள் தோற்றுவித்த துணைராணுவப்படைகளின் ஒன்றான அசாம் ரைபிள் படைப்பிரிவும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்டது.

இச்சிறப்பு அதிகாரச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் அதிகாரிகள் மட்டுமல்ல சாதாரண படை வீரர்கள் கூட, பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, முன் அனுமதியின்றி எவரையும் சோதனையிடவும், சந்தேகிக்கும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதிகாரத்தை வழங்குகிறது. இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் மீதான குற்றங்களை விசாரிக்கவோ, வழக்கு தொடுக்கவோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நீக்கக்கோரி வடகிழக்கு மக்கள் ஆண்டுகணக்கில் போராடி வருகிறார்கள்.
இந்த அடக்குமுறைச் சட்டத்தின் உதவியோடு கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட எல்லா குற்றங்களையும் பகிரங்கமாக நடத்திவருகிறது இந்திய ராணுவம். அதன் ஒரு பகுதிதான் பத்திரிகைகளின் மீதான அடக்குமுறை. இந்த ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் குரல் எழுப்பியுள்ளன நாகாலாந்து பத்திரிகைகள். அரசு, அரசுசார அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட்களின் தாக்கமில்லாமல் தொடர்ந்து மாற்று கருத்துக்களுக்கு இடமளித்து, பத்திரிகை சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காமல் இயங்கப்போவதாக தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
நாகாலாந்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் பத்திரிகை சுதந்திரம் எனப்படுவது அரசையும் முதலாளிகளையும் ஆதரித்து எழுதும் தினமணி வைத்தியநாதன், தந்தி டி.வி பாண்டே போன்ற ஜால்ராக்களுக்கு மட்டும் தான் பொருந்துகிறது. அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மிரட்டப்படுவதும் வழக்கு தொடரப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்து மத வெறியர்கள் விரும்பாத செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடிய தோழர் கோவன் மற்றும் பாடலை வெளியிட்ட வினவு தளத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுவதும், முகநூலில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்படுவதும் இவர்களின் பத்திரிகை சுதந்திர இலட்சணத்தை அம்பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க
- Nagaland newspapers published with blank editorial space
- Unlawful to report militant statements
- Nagaland: Papers carry blank editorials to protest Assam Rifles letter
- Nagaland Editors Take on Army in Defence of Press Freedom