Monday, April 28, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தலித்துக்கள் முசுலீம்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - காரணம் என்ன?

தலித்துக்கள் முசுலீம்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு – காரணம் என்ன?

-

sinam intro 4ட இந்திய மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் பல மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹரியானாவைச் சுற்றியுள்ள ஜாட், ரஜபுத், தாக்கூர் சாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சமீப வருடங்களாக தலித்துகளின் மீதான தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருக்கின்றது. ஆகஸ்டு 2014-ம் ஆண்டு தேசிய குற்றப் பதிவுத் துறையின் தரவுகளை, தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு (National Confederation of Dalit Organizations) ஆய்வு செய்திருக்கிறது.

ஆய்வின்படி 1994-2003 காலட்டத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றச் சம்பவங்களை 2004-2013 காலகட்டத்தில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு சுமார் 250 சதவீதம் அதிகரித்திருப்பதை பதிவு செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாத நிலவரத்தின் படி, தேசிய குற்றப் பதிவுத் துறையின் (National Crime Records Bureau) தரவுகளின் அடிப்படையில் 2000-மாவது ஆண்டிலிருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளில் தலித்துகளின் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் ஏழு மடங்காக அதிகரித்துள்ளன. 2000-மாவது ஆண்டில் சுமார் 117 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – இது படிப்படியாக அதிகரித்து, 2014-ம் ஆண்டில் 830 தாக்குதல் சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

bihar election (1)தலித்துகளின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள அதே வேளையில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. சில பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்த முசாபர்நகர் கலவரத்தைத் தொடர்ந்து இந்தி பேசும் மாநிலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து அங்கும் இங்குமாக சிறிய அளவிலான கலவரங்கள் மற்றும் தனிநபர் கொலைகள் நடந்து வருகின்றன. இச்சம்பவங்கள் தொடர்வது இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஆழமான ஒரு கசப்புணர்வைத் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்துள்ளது. அதன் உச்சமாக நடந்தது தான் தாத்ரி சம்பவம்.

தலித்துகள் மற்றும் இசுலாமியர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

பார்ப்பனிய சாதிக் கொழுப்பேறிய வட இந்திய மாநிலங்களில் தலித்துகளின் வாழ்நிலை இன்னமும் மத்திய காலக் கொடுங்கோன்மையை நினைவுபடுத்துகிறது. தலித் ஒடுக்குமுறை என்பது வட இந்திய சமூக உளவியலில் மிக இயல்பான அன்றாட சமூக வாழ்வியல் கூறு. இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி என்பது ஏற்கனவே கிறுக்குப் பிடித்த சாதி மத வெறி பிடித்த இந்துத்துவ குரங்கு, சாராயம் குடித்த நிலையை அடைந்துள்ளது. தலித்துகளின் கோவில் நுழைவு உரிமை, திருமண உரிமை மற்றும் பிற ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் தற்போது ஒரு புதிய வேகத்தில் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

beef politics (6)இசுலாமியர்களையும் தலித்துகளையும் குறிவைக்க ஒவ்வொரு காலத்திலும் விதவிதமான பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் இந்துத்துவ அரசியல் தற்போது மாட்டுக்கறி விவகாரத்தை வாளாக ஏந்திச் சுழற்றுகிறது. கல்லறைக்குள் ஆழ்ந்து போன அயோத்தி கோயிலும், பொது சிவில் சட்டமும் உயிர்த்தெழ மறுப்பதால் தற்போதைய இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சி நிரலில் கோமாதாவே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

சமீப காலமாக மாட்டுக்கறி விவகாரம் அகில இந்திய பார்ப்பன ஊடகங்களின் முக்கியமான பேசு பொருளாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்த பீகாரை மையமாக வைத்து இந்த விவாதம் நடத்தப்பட்டது. முதலாளிய மற்றும் பார்ப்பன ஊடகங்கள் இந்த விவாதங்களை தேர்தலை மட்டும் கருப்பொருளாக கொண்டு விவாதித்து வந்த நிலையில், இந்துத்துவ ’கோமாதா’ அரசியலின் நோக்கமோ தேர்தலையும் தாண்டிய நலன்களை தன்னுள் கொண்டிந்தது.

தாத்ரி கொலை குறித்து அகில உலகமும் காறி உமிழ்ந்த போதும் அதைக் குறித்து வாயைத் திறக்க மறுத்து விட்ட நரேந்திர மோடி, மிகச் சரியாக பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதற்கொரு விளக்கத்தை அளித்தார். மேற்படி விளக்கத்தில் கொலைக்கான அடிப்படைக் காரணத்தை ஆதரித்திருந்த மோடி, அதையே தனது பீகார் பிரச்சாரங்களின் முக்கிய கருப்பொருளாக மாற்றினார். தேர்தல் முடிவுகள் காவி பயங்கரவாதிகளின் பகற் கனவில் மண்ணள்ளிப் போட்டு விட்டாலும், இந்துமதவெறியின் ஒடுக்குமுறை முடிவுக்கு வந்ததாக பொருளில்லை.

beef politics (5)“தேசத்தை எதிர் கொண்டிருக்கும் இசுலாமிய தீவிரவாதம்” என்கிற பூச்சாண்டியை பதவியேற்று ஒரு வருடத்திற்குப் பின்னும் ஓட்ட முடியாத நிலையில் இந்துத்துவ அரசியல் தேவைகளுக்கு கடந்த நூற்றாண்டில் பெரும் சேவையாற்றிய ராமர் கோயில் பிரச்சினை அந்த நூற்றாண்டின் இறுதியிலேயே சற்று பலவீனமடைந்து விழுந்து விட்டது. இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற மோடி, அவரது முதல் இரண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பீகாரிகள் குறித்து உளறிக் கொட்டியதை லாலுவும், நிதிஷ் குமாரும் பீகாரிகளின் தன்மானத்திற்கே விடப்பட்ட சவாலாக முன்வைத்து அசிங்கப்படுத்தினர்.

பிரச்சார கூட்டங்களை மோடியின் அடுக்குமொழி சவடால் வசனங்களாலேயே ஊதித் தள்ளி விடலாம் என்ற மிதப்பிலிருந்த இந்துத்துவ கும்பலுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியமளித்தார் லாலு. தாம் ராகுல் காந்தியைப் போன்ற அமுல் பேபிகள் இல்லை என்பதையும் வாய்வீச்சில் தாங்களும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தான் என்பதையும் லாலுவும் நிதிஷும் முகத்திலறைந்தாற் போல் உணர்த்தினர். இந்தப் பின்னணியில் தான் சொல்லி வைத்தாற் போல் தாத்ரி சம்பவமும் அதைத் தொடர்ந்து பார்ப்பன மற்றும் முதலாளிய பத்திரிகைளில் நடக்கும் “விவாதங்களும்” அரங்கேறின.

தனது முந்தைய பிரச்சாரக் கூட்டமொன்றில் மாட்டுக்கறி தின்றார் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முகமது அக்லாக்கை இந்துத்துவ கும்பல் அடித்தே கொன்றதைக் கண்டித்துப் பேசிய லாலுபிரசாத் யாதவ், மாட்டுக்கறி இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல சில இந்துக்களுக்கும் கூட உணவு தான் என்று பேசியிருந்தார். இதை அப்படியே மடைமாற்றிய மோடி, நாட்டின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட யதுகுலத்தவர்கள் மாடு தின்பவர்கள் என்று லாலு பேசியதாக திரித்தார்.

Carcasses de veau dans le pavillon des viandes de boucherie du marché international de Rungis (Val-de-Marne, France)லாலுவின் தலை மயிரிலிருந்து மோடி பிடித்துக் கொடுத்த ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் வேலையை பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் செவ்வனே செய்து முடித்தனர். மத்திய அமைச்சர் கிரிராஜ், ”நித்திஷிடம் மாட்டுக்கறி உள்ளதாம்” என்றும் “யது குலத்தவர்களே… லாலு உங்களைப் பார்த்து துர்க்கா மாதா கோவிலில் மாட்டுக்கறியை வீசச் சொல்கிறார்” என்றும் பேசியிருக்கிறார்.

இசுலாமியர்களை இந்துக்களின் விரோதிகளாக காட்டுவது, அதனடிப்படையில் இந்து ஓட்டுக்களை அறுவடை செய்வது என்கிற இந்துத்துவ அரசியல் தந்திரத்திற்கு பீகார் தேர்தல் முடிவுகள் ஆப்பறைந்துள்ளன. எனினும், மாட்டுக்கறி அரசியலைத் தாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்துத்துவ கும்பல் அடைந்துள்ளது. பீகார் தேர்தல் தோல்விக்கு அப்பால், தமது நச்சுப்பிரச்சாரங்களின் மூலம் வட இந்திய பார்ப்பன இந்துப் பொது புத்தியில் மாட்டின் புனிதத்தை பதிய வைத்துள்ளதோடு, இசுலாமியர்கள் இந்துக்களின் புனித நம்பிக்கைகளுக்கு விரோதமானவர்கள் என்பதையும் பதிவு செய்துள்ளனர்.

கோமாதா அரசியலின் அரசியல் உள்நோக்கம் ஆர்.எஸ்.எஸ் விரும்பும் இராம இராஜ்ஜியத்தின் பார்ப்பன கலாச்சார விழுமியங்களை ஒட்டு மொத்த சமூகத்தின் பொதுக்கலாச்சாரமாக நிறுவும் நரித்தனம். இதற்காகவே இந்து மதத்தின் பல்வேறு சாதிப் பிரிவினர் மாட்டுக்கறி தின்பவர்கள் என்பதை மறைக்கிறார்கள். இன்றும் சில பகுதிகளில் இந்துக்கள் மாட்டை கோயிலில் பலியிட்டு விருந்துண்கிறார்கள் . மட்டுமின்றி மாட்டுக்கறி கசாப்புத் தொழிலில் பல்வேறு ’உயர்சாதி’ பனியா முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது பற்றியும் இந்துத்துவ கும்பல் வாய்திறக்க மறுக்கிறது.

bihar-elections-hundutva-defusedஅமெரிக்க விவசாயத் துறை நடத்திய ஆய்வு ஒன்றிபடி, 2012-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 36.43 லட்சம் டன்கள். இதில் 19.63 லட்சம் டன்களை இந்தியர்களே உட்கொள்கின்றனர். இந்தியா உலகிலேயே ஐந்தாவது பெரிய மாட்டுக்கறி உற்பத்தி செய்யும் நாடு என்பதோடு, உலகின் மாட்டுக்கறி உட்கொள்ளும் அளவைப் பொறுத்தவரை உலகில் 7-வது இடத்திலும் இருக்கிறோம். மேலும் மாட்டுக்கறி ஏற்றுமதியைப் பொறுத்த வரை இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்று.

ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce and Industry) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்றிலிருந்து 2001-2002 காலகட்டத்தில் 20,600 டன்களாக இருந்த மாட்டுக்கறி ஏற்றுமதி பத்தே ஆண்டுகளில் இரண்டு மடங்காகி 2010-2011 காலகட்டத்தில் 22,000 டன்களாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய சாதனையைப் புரிந்த மாநிலம் குஜராத் – அதுவும் கோமாதாவின் புதல்வன் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாட்டுக்கறி வெட்டும் கூடங்கள் அதிகமிருக்கும் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத்தில் மட்டும் சுமார் 39 மாடு வெட்டும் கூடங்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 கோமாதாக்கள் கொல்லப்படுகின்றன. இதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மாட்டுக்கறி உற்பத்தி 18,59,430 டன்களில் இருந்து 48,69,000 டன்களாக – அதாவது சுமார் 163 சதவீத உயர்வை அடைந்துள்ளது.

beef politics (4)புனித கோமாதாவை கூறு கூறாக பிளந்து அவளின் புனிதமான இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முதலாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். முசாபர்நகரில் மாட்டுக்கறியை வைத்து பெரும் கலவரத்தை ஏற்படுத்தியதற்குப் பின் இருந்த மூளையான பாரதிய ஜனதா எம்.எல்.ஏ சங்கீத் சோம், மாட்டுக்கறி ஏற்றுமதியில் சக்கை போடு போட்டு வரும் அல்-துவா மற்றும் அல்-அனாம் என்ற இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து கோமாதா கறியை ஏற்றுமதி செய்யும் ஆறு முன்னணி நிறுவனங்களில் நான்கு நிறுவன்ங்கள் (அல்-கபீர், அல்-அரேபியா, எம்.கே.ஆர், பி.எம்.எல்) இந்து முதலாளிகளுடையது. இவை தவிர சிறிதும் பெரிதுமாக மாட்டுக்கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்து முதலாளிகளுடைய நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இசுலாமிய சாயலில் இருக்கின்றன.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் இந்துக் கோயில்களில் மாட்டை பலியிட்டு விருந்து வைப்பது இன்றும் சாதாரணமாக நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பீற்றிக் கொண்ட உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் கதிமாயி பண்டிகையின் போது மட்டும் சுமார் இரண்டரை லட்சம் மாடுகள் பலியிடப்படுகின்றன. ஆக, மாட்டுக்கறி உணவாக இசுலாமியர்களும் சூத்திர இந்துக்களும் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், அதன் ஏற்றுமதியில் கொள்ளை லாபம் அடிப்பவர்களோ உயர்சாதி இந்துக்கள்.

beef politics (1)தேசத்தை பூசிக்கும் கடவுளாகவும், அதன் குறுக்கே ஓடும் நதிகளைப் புண்ணிய தீர்த்தங்களாகவும் பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதா தான் தேசத்தின் பொதுச் சொத்துக்களையும் அதன் ஆறு குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் ’மிலேச்ச’ பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கிறது. எவற்றையெல்லாம் புனிதம் என்று சொல்லி சிவில் சமூகத்தைப் பிளப்பதற்குப் பயன்படுத்துகிறார்களோ, அவற்றின் புனிதத்தை அவர்களே கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.

நேற்று அயோத்தியையும் பொது சிவில் சட்டத்தையும் பற்றிக் கொண்டிருந்தார்கள், இன்று கோமாதாவையும் லவ் ஜிஹாத்தையும் கையிலெடுத்துள்ளார்கள், நாளை புதிதாக வேறொன்றை இறக்குவார்கள் – ஆனால், என்றென்றைக்கும் அவர்கள் எடுக்கும் ஆயுதங்களுக்குப் பலியாகப் போவது உழைக்கும் மக்கள் தான். வளர்ச்சி, முன்னேற்றம், முதலீடு என்கிற ஒப்பனைகளை அவர்கள் எப்போதோ கலைத்து விட்டார்கள், உண்மை நமக்கு எதிரே தான் நிற்கிறது. நாம் உணர்ந்து கொள்வதும் எதிர்வினையாற்றுவம் மட்டும் தான் பாக்கியிருக்கிறது.

–    தமிழரசன்

செய்தி ஆதாரங்கள்: