கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டவிழ்த்துவரும் பாசிசம் மாணவர்கள், பொதுமக்கள், வழக்கறைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அனைவரையும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜே.என்.யு-விற்கு வெளியே இரயில் நிலையம் உட்பட பல இடங்களில் மாணவர்கள் வகைதொகையின்றி தாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கறிஞர்களின் ஆர்.எஸ்.எஸ் கூலிப்படை ஒன்று விக்ரம் சிங் சவுகான் தலைமையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியும் தடுக்க வந்த வழக்கறைஞர்கள், மாணவர்களைத் தாக்கியும் வெறியாட்டம் போட்டது.
இந்த விக்ரம் சிங் சவுகான் தனது முகப்புத்தகத்தில் ராஜ்நாத்சிங், ஜே.பி. நட்டா, கைலாஸ் விஜய்வர்க்கியா போன்ற பிஜேபி தலைமைக் கும்பலின் ஆசியோடு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சங்கப்பரிவார காலிகள் தினமும் தேசியக் கொடியை கையில் ஏந்தி மோடி அரசின் பயங்கரவாதத்தை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் வெளியேயும் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏ.பி.வி.பி-யின் காலித்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அந்த அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்களே பாசிசத்தின் கொடூரத்தை முன்னிட்டு தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.
பிரதிப் நார்வல், ராகுல் யாதவ், அங்கிட் ஹான்ஸ் ஆகிய மூன்று மாணவர்கள், தாங்கள் அரசின் கைக்கூலியாக இருக்கமுடியாது என ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகுவதற்கு கீழ்க்கண்ட இரண்டு காரணங்களை முன்வைத்திருக்கின்றனர்.
- ஜே.என்.யுவில் கட்டவிழ்த்து விடப்படும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிசத் தாக்குதல். பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் மாணவர் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டது.
- பி.ஜே.பி கட்சி மனுஸ்மிருதி மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை குறித்து கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் மீது நீண்ட நாட்களாக இருந்து வரும் முரண்பாடு
ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
தங்களது விலகல் கடிதத்தில் இம்மூன்று மாணவர்களும் “மாணவ சமூகத்தின் மீது வரைமுறையற்ற வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் அரசின் பிரச்சாரகர்களாக தாங்கள் இருக்க முடியாது” எனவும் “இந்த இந்த அரசு வலதுசாரி பாசிஸ்டுகள் (பிஜேபி எம்.எல்.ஏ ஓபி சர்மா போன்ற குண்டாந்தடிகள்), பாட்டியலா கோர்ட் வளாகம் மற்றும் தேசியக் கொடி ஏந்தி ஜே.என்.யு நுழைவு வாயிலில் ஒவ்வொரு நாளும் நடத்தும் வன்முறையை நியாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
மேலும் தங்களது கடிதத்தில் ஒவ்வொரு நாளும் ஜே.என்.யு வளாகத்தில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுவருவது காலித்தனமன்றி தேசபக்தி அல்ல, தேசத்தின் பெயரால் நீ என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது; தேசபக்திக்கும் காலித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு என்று ஆர்.எஸ்.எஸ் கும்பலை மேலும் தனிமைப்படுத்தியிருக்கின்றனர்.
தேசத்துரோகம் என்பதன் பெயரில் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவக் கும்பல் ஜே.என்.யுவை மூடு (#shutdownjnu) என்று இணையதளத்தில் நச்சுப்பிரச்சாரம் செய்துவருவதைச் சுட்டிக்காட்டும் இம்மாணவர்கள் மூடவேண்டியது ஜே.என்.யு அல்ல பாசிசத்தைப் பிரச்சாரம் செய்யும் Zee தொலைக்காட்சி நிறுவனத்தைத்தான் ((#shutdowzeenews) என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த Zee தொலைக்காட்சி நிறுவனம் தான் மோடி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஊதுகுழலாக புரளிகளையும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு கரசேவை புரியும் ராஜீவ் மல்கோத்ரா போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை வைத்து கருத்தரங்கு நடத்துவது, வரலாற்றைத் திரிப்பது போன்ற வேலைகளையும் Zee தொலைக்காட்சி நிறுவனம் தான் செய்து தருகிறது. தற்பொழுது மோடி அரசுக்கு எதிராக போர்க் குணத்துடன் போராடி வரும் ஜே.என்யுவையே காலி செய்யும் வேலையில் இந்தக் கும்பல் இறங்கியிருக்கிறது.
இந்நிலையில் “நமக்கு அடையாளத்தை வழங்கிய ஜே.என்.யு பல்கலைக்கழகத்தை காப்பாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டும்” என்று இம்மாணவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மொத்தத்தில் தேசபக்தியை முன்வைத்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் ஒரு பார்ப்பன பாசிச கட்சி என்பதை அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களே அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
மனுஸ்மிருதி குறித்து உன் நிலைப்பாடு என்ன? உடைத்துப்பேசு என்று கேள்வியை முன்வைக்கிற பொழுது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலில் மிஞ்சுவது யாராக இருக்க முடியும்?

அவர்கள் தான் பார்ப்பன, பனியாக்கள், தரகுமுதலாளிகள், இந்துத்துவ கைக்கூலிகள். இவர்கள் இன்றைக்கு அனைத்து அரசியல் அரங்கையும் கைப்பற்றிக் கொண்டு நால்வர்ணம், சாதியின் பலன்கள், மனுஸ்மிருதி இந்துக்களின் கலாச்சாரம் என்று வெளிப்படையாக பேசிக்கொண்டு சமுதாயத்தின் அடித்தட்டு உழைக்கும் மக்களை தேசபக்தி என்று பகல்வேடம் போட்டுக் கொஞ்சி நஞ்சு ஊட்டுகின்றனர்.
தலித்துகளை தலித்துகளாகவே வைத்திருக்கும் பொருட்டு அருந்ததியர் பொதுநலச்சங்கம் என்று வானதி சீனிவாசன் போன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலெல்லாம் சேரிக்குள் இப்படித்தான் நயவஞ்சமாக வேலை செய்கின்றன. தலித்துகளை இந்துத்துவத்தைக் காக்கும் காலாட்படையாக வைத்திருப்பதை இப்படித்தான் நிறைவேற்றுகின்றனர். பழங்குடிகளை ஆக்கிரமித்து வேதத்தைத் திணிப்பது, சமஸ்கிருதமயாமாக்குவது என இவர்களின் அரசியல் மேலோடு நைச்சியமானது.
இந்த மேலோட்டைத்தான் இம்மாணவர்கள் பிளந்துகாட்டி ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் உயர்சாதி பார்ப்பன பனியாக் கூட்டம் என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். இந்தவகையில் இந்தியாவில் முக்கியமான மக்கள் விரோதியான ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் முகம் திரை கிழிக்கப்பட்டிருக்கிறது.
தேசபக்தி, கலாச்சாரத் திருவிழா என்று என்னதான் கன்னக்கோல் திருடர்கள் இருட்டில் சாவி போட்டாலும் மாணவ சமுதாயத்திடம் செருப்படி வாங்க தயங்கியதேயில்லை. இதைத்தான் நாம் மேலும் மேலும் செய்ய வேண்டியிருக்கிறது.
தேசபக்தி கூச்சல் விவசாயிகள், மாணவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெறுவதை தடுத்துவிடமுடியாது என்பதற்கு இது ஓர் வகைமாதிரி. இதைப் பலப்படுத்தி மக்கள் சக்தியாக்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்பும் நமது ஒவ்வொருவரது கடமையாகும்.
- இளங்கோ