Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாதி விரும்பும் அன்புமணி, பாக் ஜிந்தாபாத் பா.ஜ.க - குறுஞ்செய்திகள்

சாதி விரும்பும் அன்புமணி, பாக் ஜிந்தாபாத் பா.ஜ.க – குறுஞ்செய்திகள்

-

anbumani vikatan interview cartoon

சாதியை ஒழிக்க முடியாது – ஆனந்த விகடன் நேர்காணலில் அன்புமணி அறிவிப்பு!

ட்டுக்கட்சி அரசியல் தலைவர்களை ‘நல்லொதொரு ஹார்லிக்ஸ் குடும்பத் தலைவராக’ காட்டும் ஆனந்த விகடன் 24 பிப், 2016 இதழில் ‘சின்னைய்யா’வை நேர்காணல் செய்திருந்தது.

அதில் இரண்டு கேள்விகளையும் அதற்கு சி.ஐயா அளித்த பதிலையும் படியுங்கள்.

கேள்வி: வன்னியர் சமூகத்தைத் தாண்டி பா.ம.க-வால் வாக்குகளைப் பெற முடியும் என இன்னமும் நினைக்கிறீர்களா?”

அன்புமணி பதில்:“…….. பா.ம.க., தலித் விரோதக் கட்சினும் சொல்றாங்க. ஆனால், தலித் மக்களுக்கு அதிகமா நல்லது செய்ததே நாங்கதான். ஒரு கட்சியின் நிறுவனர், தாழ்த்தப்பட்டவர் ஒருவரின் பிணத்தை தன் தோளில் சுமந்துகொண்டு போய் அடக்கம் செஞ்சது வேற எந்தக் கட்சியிலயாவது நடந்திருக்கா? அதைச் செஞ்சது எங்க அய்யாதான். மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு எங்களுக்குக் கிடைச்ச முதல் வாய்ப்பை, தலித் எழில்மலைக்குத்தான் தந்தோம். இப்பவும் வட மாவட்டங்கள் 15 வருஷங்களா அமைதியா இருக்கக் காரணம் எங்க அய்யாதான்.”

கேள்வி:“ஆனால், வட மாவட்டங்களைப் பெரும் பதற்றத்துக்கு உள்ளாக்கிய தருமபுரி-நத்தம் காலனி எரிப்பு முதல், சமீபத்தில் நடந்த விழுப்புரம் சேஷசமுத்திரம் தேர் எரிப்பு வரை… இந்தக் கலவரங்களுக்குக் காரணம் பா.ம.க என்றுதானே பேசப்படுகிறது?”

அன்புமணி பதில்:“நத்தம் காலனி குறித்து எத்தனையோ தடவை பேசியாச்சு. சேஷசமுத்திரம் பிரச்னை எல்லாம் கலவரமே கிடையாது. அது லோக்கல் பிரச்னை. அடிப்படையில் ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். மனுஷன் இருக்கிற வரை சாதி இருக்கும். சாதியையோ, மதத்தையோ நம்மால் அழிக்க முடியாது. பேர்லயே சாதி இருக்கே… பிரணாப் முகர்ஜினா முகர்ஜி சாதிப் பெயர். மேனன், யெச்சூரி, நாயர்னு பலரோட பெயருக்குப் பின்னாலயும் சாதி இருக்கு. அதனால, சாதியை ஒழிக்கிறது சாத்தியம் இல்லை. ஆனால், சாதி விஷயத்துல தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லைனு தான் சொல்லணும்.”

முதலமைச்சராக சி.ஐயாவை இறக்குவதற்கு எத்தனை சி-க்களை செலவழித்தாலும் ஆனந்த விகடன் முதல் அய்யோ பாவம் பாமரர் வரை பா.ம.க-என்றால் சாதிதான் நினைவுக்கு வரும். ஆனால் சி.ஐயா அந்தக் கேள்வியை கேட்ட உடன் பிணத்தை சுமந்த ராம்தாஸ், மத்திய அமைச்சர் பதவியைச் சுமந்த எழில்மலையை சொல்லி காலரை நிமிர்த்துகிறார். உடனே நத்தம் காலனி இளவரசனைக் கேட்கும் போது குடுமி சிலிர்த்துக் கொண்டு வருகிறது. அதாவது சாதியை மீறி காதல் புரிந்தால் இளவரசன்களை ஒழித்து விடுவார்கள் – அதனால் சாதியை லேசில் ஒழிக்க முடியாது. இதற்கு முகர்ஜி, காரத் என்று பின்னிணைப்பு வேறு!

பா.ம.கவோ, சி.ஐயாவோ, ம.ஐயாவோ என்னதான் மேக்கப் போட்டாலும் சாதி வெறியை மறைக்க முடியாது. இதை நாம் சொல்லவில்லை. சேம் சைடு கோல் போட்ட சி.ஐயாவே வழிமொழிகிறார்.

____________________________

பா.ஜ.க ஸ்பான்சரில் பாகிஸ்தான் சிந்தாபாத் – ஆதாராங்கள்!

mufti-sayeed-pm-modi-cartoon

“ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்ததற்கு பாகிஸ்தான், போராளி அமைப்புகள், ஹுரியத் ஆகியோர்தான் காரணம்… அவர்கள் ஏதாவது செய்திருந்தால் நாம் அமைதியாக தேர்தலை நடத்தியே இருக்க முடியாது. நான் இதை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டேன் என்பதை இங்கே அதிகார பூர்வமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.”

மார்ச் 2015-ல் ஒரு மாலை நேரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முப்தி முகமது சயீத், ஆற்றிய உரை இது. காலஞ்சென்ற முப்தி அப்போது இதைப் பேசும்போது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல்வரான பாஜக வின் நிர்மல் சிங், மூச்சு கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் முப்தி வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு முகமெல்லாம் பெருமை பொங்க 56 இஞ்ச் மார்பழகன் சூப்பர்மேன் மோடியும், 55 இஞ்ச் அஞ்சா நெஞ்சன் அமித் ஷா வும், பதவியேற்பு விழா மேடையில் முப்தி முகமது சயீதை கட்டித் தழுவினார்கள். ஜோக்கடித்து மகிழ்ந்தார்கள்.

முப்தி பேசிமுடித்த அடுத்த 4 மணி நேரத்துக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் “சுவிட்சுடு ஆஃப்.”இதற்கு மேல் ஒரு ஆளும் கட்சி எப்படி வலிக்காத மாதிரி நடிக்க முடியும்? ஒரு அறிக்கையை ரெடி பண்ணி விட்டார்கள். “தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கு தேர்தல் கமிசனுக்கும், ராணுவத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்” என்று அறிக்கை விட்டார் பா.ஜ.க செயலர் ஸ்ரீகாந்த் சர்மா.

“அது நீங்க சொல்றது. அவரு சொன்னதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க, அதைச்சொல்லுங்க” என்று திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்து விட்டார்கள் மீடியாக்காரர்கள். “நாங்க என்ன சொல்றோம்னா” என்று தொடங்கி “இதுதான் அந்த இன்னொரு வாழைப்பழம்” என்று முடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

ஆனானப்பட்ட டைம்ஸ் நௌ அப்பாடக்கர்கள், பா.ஜ.க.வினரின் தொண்டை வரை மைக்கை திணித்து நோண்டிப் பார்த்து விட்டார்கள். முடியவில்லையே. முப்தி முகமதுக்கு எதிராகவோ, ஹூரியத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகவோ ஒரே ஒரு வார்த்தையைக் கூட பா.ஜ.க.வினரின் வாயிலிருந்து மட்டுமல்ல வயிற்றிலிருந்து கூட வரவழைக்க முடியவில்லை.

இந்த வரலாற்றை இப்போது ஜே.என்.யூ பிரச்சினையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்! முதலில் அங்குள்ள மாணவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத், ஆசாதி காஷ்மீர் முழக்கமிட்டதாக பொய் படம், வீடியோ உருவாக்கி வெளியிட்டார்கள். பிறகு சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேச விரோதிகளென சித்தரித்தார்கள்.

ஆனால் இறந்து போன முப்தி முகமது சயீத் இப்படி பா.ஜ.க பண்டாரங்களை மேடையில வைத்துக் கொண்டே “தேசத் துரோகிகளுக்கு” வாழ்த்து தெரிவித்தாரே, அதற்கு இவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தி கோவணம் எங்கே பறந்து கொண்டிருந்தது? இவர்களை ‘தேச துரோகிகள்’ என்று அறிவதற்கு இப்படி ஒரு லைவ் நிகழ்ச்சி நடந்தும், பொய்யர்கள் தென்னாட்டு அர்னாப், வடநாட்டு பாண்டே போன்றோர் கையும் களவுமாக பிடிக்காமல் கடந்து போனது ஏன்?

காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது தேச துரோகமல்ல என்று நாம் கூறுகிறோம். தேச துரோகம் என்பது இவர்களது காப்பிரைட் கருத்து. ஆனால் அதே காப்பிரைட் கருத்து, கூட்டணி அரசில் பொறுக்கித் தின்பதற்காக காமடிரைட்டாக மாறுமென்றால் தேசபக்தி என்பது என்ன?

கொலைகாரர்கள் கருணையை விளக்கினால், விளக்குமாற்றை எடுப்பீர்களா இல்லை கருணையை விரிவாக விளக்குமாறு கோரூவீர்களா?

_____________________________

தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை -பின்னணி-சதி- என்ன? நீதிபதிகள்-வழக்கறிஞர்கள் சிந்தனைக்கு! – சிறுவெளியீடு!

  • prpc-judiciary-book-frontவழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன?
  • ஹெல்மெட் பிரச்சனை என்றால் என்ன?
  • நீதிபதிகளின் ஊழல் தொடர்பாக வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா?
  • வழக்கறிஞர்கள் தவறே செய்யாதவர்களா?
  • வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையின் சதிப்பின்னணி
  • இந்திய நீதித்துறையை – பார்ப்பனக் கோட்டையாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டம்
  • தலைமை நீதிபதி கவுல்-ராமசுப்பிரமணியன் கூட்டணியின் சித்து வேலைகள்
  • நடவடிக்கைக்கு ஆவணப்படுத்தும் பணிகள் அடுத்து நடவடிக்கை!
  • நடவடிக்கைக்கு பின் ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சி
  • சதி நிறைவேறினால் வரும் அபாயம்
  • ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஒழுக்க சீலர்களுடன் நீதித்துறை
  • நீதித்துறையைக் காக்கும் முறை என்ன?
    தீர்வு என்ன?

– என அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது சிறுவெளியீடு!

நம் அனைவரின் கோரிக்கையாக

(i) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்-நீதிபதி இராமசுப்பிரமணியனை உடனே மாற்று!

(ii) 44 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்!

(iii) நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை! என்பதாக இருக்கட்டும்.

பிப்ரவரி 19- ஆன நீதித்துறை கருப்பு தினத்தில் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக மீண்டும் எழுவோம்!

வீழ்வதல்ல பிரச்சனை-வீழ்ந்தும் எழாமல் இருப்பதே மிகப்பெரும் பிரச்சனை!

விழ,விழ எழுவோம்! வீறு கொண்டு எழுவோம்!

வெளியிடுவோர்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

பிரதிக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை – 9094666320
திருச்சி – 9487515406
மதுரை – 9443471003
விருத்தாச்சலம் – 9443260164

___________________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்