Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !

மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !

-

உயர்கல்வி நிறுவனங்களை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பார்ப்பன கும்பலை முறியடிப்போம் !
புமாஇமு வின் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர் !

RSYF protest in chennai (7)ரணதண்டனைக்கு எதிராக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியினை தேசவிரோத நிகழ்ச்சி என்று கூறி அதன்மூலம் அப்பல்கலைக்கழகத்தை முழுவதும் ஆக்கிரமிக்க துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல். உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நான்காவது முயற்சி இது.

சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை, புனே திரைப்படக் கல்லூரியில் காவிக்கும்பல் திணிப்பு, ரோஹித் லெமுலா தற்கொலை என பற்றிப் படரும் பார்ப்பன பாசிசத்தின் வேர்கள் இப்போது ஜே.என்.யூவை இறுக்கிக் கொண்டு இருக்கின்றன.

நாடு முழுவதும் மக்களை பிளவு படுத்தி மோதல்களை உருவாக்குவதும் தாத்ரி, முசாராபாத், குஜராத் போன்ற கலவரங்களை திட்டமிட்டு நடத்தி முசுலீம் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் கொன்று குவிப்பதையே செயல் திட்டமாகக் கொண்டுள்ள இந்த ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலை எதிர்ப்பதுதான் தற்போது தேசத் துரோகமாக சித்தரிக்கப்பட்டு அவ்வாறு எதிர்ப்பவர்கள் கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் போல படுகொலை செய்யப்படுகின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்துக்கும் சாட்சியாக இருந்த ஜே.என்.யூ, பார்ப்பன பாசிஸ்களுக்கு எதிரான தளமாகவும் இருக்கிறது. அங்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி கும்பலாலோ மாணவர்களின் செல்வாக்கை பெற முடியவில்லை. அதனால்தான் தேசபக்தி ஊளைகளை எழுப்பி அதன் மூலம் ஜே.என்.யூவை கைப்பற்ற போலீசு – நிர்வாகம் – அரசு துணை கொண்டு முயல்கிறது. அன்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கும்பல்தான் இன்று வெள்ளைக்காரனின் காலனியச் சட்டங்களைக் கொண்டு ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்குகளை வீசுகிறது.

நாட்டையே அன்னியர்களுக்கு தாரை வார்க்கும் கும்பலிடம் எது தேசம் ? எது தேசத்துரோகம் என்பதை கற்க வேண்டிய நமக்கு அவசியம் இல்லை. இந்த போலி தேசபக்தியை திரை கிழிக்கும் விதமாகவும் உயர்கல்வித்துறையை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிச கும்பலை முறியடிக்கும் விதமாகவும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் மார்ச் 3-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் ஜே.என்.யூவில் நடந்தது என்ன என்பதை மாணவர் பிரதிநிதிகள் விளக்க இருக்கின்றனர்.இந்து மதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். காவி இருளை கிழிக்க ம.க.இ.கவின் புரட்சிகர பாடகர் கோவன் பாடுகிறார். ஆகவே தமிழகத்தை பார்ப்பன பாசிச எதிர்ப்புக் கோட்டையாக்கி பெரியார் பிறந்த மண்ணில் சாதி மத வெறிக்கு இடம் இல்லை என்பதை பறைசாற்றிட மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் என அனைவரும் மார்ச் 03, வியாழன் அன்று வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு சங்கமிப்போம். பார்ப்பன பரிவாரக் கும்பலுக்கு முடிவு கட்டுவோம்.

  • தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
    சென்னை. 9445112675

__________________________

 ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்க்கு பலியான ஜாக்குலின் ஃபாக்ஸ்.
முதலாளித்துவ பயங்கரவாதம்!

johnson-baby powder cartoonமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்குலின் ஃபாக்ஸ் எனும் 62 வயது கருப்பினப் பெண்மணி, கருப்பை புற்று நோயினால் இறந்து போகிறார். கடைசி 35 வருடங்களாக ஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்த டால்கம் முகப்பூச்சு நறுமணப் பவுடரே தனது கேன்சருக்கு காரணம் என்பதை அவர் நம்பினார்.

அவரது 59 வயதில்தான் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதோடு ஆட்கொல்லி தீவிரத்தோடு இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் 72 மில்லியன் டாலரை அதாவது 493 கோடி ரூபாயை ஜான்சன் நிறுவனம் வழங்குமாறு மிசௌரி நீதிமன்றம் உத்திரவிட்டது. இதில் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை, 62 மில்லியன் டாலர் அபராதத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“வாடிக்கையாளரின் நலன் மற்றும் பாதுகாப்பை விட எங்களுக்கு வேறு என்ன பொறுப்பு இருக்கும்? இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது” என்று ஜான்சன் நிறுவனம் கூறியிருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கும் இந்நிறுவனம் அங்கே அபராதத் தொகையை குறைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற நடுவர்களில் ஒருவரான ஜெரோம் கென்ட்ரிக், வழக்கின் போது தாக்கல் செய்யப்பட்ட ஜான்சன் நிறுவனத்தின் அலுவலக ஆவணங்களைப் பார்த்து பிரச்சினையை புரிந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அந்நிறுவனம் காஸ்மெட்டிக்ஸ் துறையை ஒழுங்குபடுத்தும் அரசு வாரியத்தின் வாயை அடைக்கவும் முயன்றதாகவும், குறைந்த பட்சம் பவுடர் பெட்டியில் எச்சரிக்கையாகவது தெரிவித்திருக்கலாம், அதைக்கூட செய்யவில்லை என்றார் அந்த நடுவர்.

புகை பிடிப்போருக்கு கான்சர் வரும் அபாயம் இருப்பது போலவே டால்கம் பவுடர் பயன்படுத்துவோருக்கு குறைவான வாய்ப்பு மட்டும் இருப்பதாகவும் இதனால் பவுடர் பயன்படுத்தும் அனைவருக்கும் கான்சர் வரவாய்ப்பில்லை என்று சிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தாலும் சிகரெட் பெட்டியில் கான்சர் எச்சரிக்கையாவது இருக்கிறது, பவுடர் பெட்டியில் அது இல்லையே!

நிறுவன ஆவணங்கள் கூறும் தகவல் படி, பொதுவான உடல்நலன் விழிப்புணர்வு காரணமாக அதிக மக்கள் (வெள்ளையர்கள்) டால்கம் பவுடரை தவிர்ப்பதால், ஹிஸ்பானியர்கள் மற்றும் கருப்பர்களிடம் பவுடர் உபயோகத்தை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. பொதுவில் இந்தப் பிரிவு மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் எப்படியெல்லாம் திட்டமிடுகிறார்கள் பாருங்கள்! அமெரிக்காவிலேயே இதுதான் கதி என்றால் இனி இந்நிறுவனத்தின் படையெடுப்பு நம்மைப் போன்ற நாடுகள் அன்றி வேறென்ன?

தற்போதே இங்கு அவர்களது பொருட்கள் அனைத்தும் குழந்தைகள் உலகில் முக்கியமான பங்கைப் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவில் இருக்கும் தரம் இங்கே நிச்சயம் இருக்கவே இருக்காது. ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டாலும் நெஸ்லே மாகி நூடில்ஸ் மாதிரி சரிக்கட்டி விடுவார்கள்.

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மேல் கான்சர் நோயாளிகள் தொடுத்திருக்கும் வழக்கு ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றன. அதில் ஃபாக்ஸ் தொடுத்திருக்கும் வழக்கில் முதன் முறையாக அபராதம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இதை ஆரம்பத்திலேயே தோற்கடிப்பதற்கு அந்நிறுவனம் கடுமையாக முயலும்.

மனித நலன், மக்கள் நலன், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தெல்லாம் ஒரு முதலாளித்துவ நிறுவனம் இப்படித்தான் கொடூரமாக சிந்திக்க முடியும்!

________________________

ஆத்தாவுக்கு 68- முடிஞ்சு 69-ஆம்!

amma 68 cartoon vinavuதிபராசக்தி அருளோட
கன்னியாகுமாரியிலேர்ந்து பொன்னாரு போற்ற
அதிக ஆயுள், அதிக ஆரோக்கியமுன்னு
(ரெண்டும் ஒண்ணுதாம்யா வெண்ணை!)
இந்திரப் பிரஸ்தத்திலிருந்து மோடி ட்விட்ட
அதிகாரத்தை பெண்களுக்கு கொடுத்த வள்ளலம்மான்னு
கொதியில தமிழிசை கண்ணீர் சிந்த
234 தொகுதியலயும் நாயாய் உழைப்பேன்னு
(பெறவு 234-லயும் போட்டியிடவா முடியும்)
அடிமை வேல்முருகன்
பண்ருட்டியிலேர்ந்து குதிக்க

ஆற்காட்டுல 1500 கிலோ
அடுமனைத் துண்டாம்
அ.தி.மு.க தலைமை தொழுவத்துல
68 கிலோ இனிப்பாம்
ஆணையர் (காவல்துறை) கணக்குல
68,000 மரக்கன்றாம்
ஆம்பூர் அம்மணிங்க கையில
அம்மா படத்தோட பச்சையாம்
மதுரையில ரத்தமாம், நெல்லையில சத்தமாம்…
அப்பாலிக்கா அலகு குத்தி,
பறந்து காவடி, படுத்து காவடி,
புழுதி வழிபாடு, புண்ணாக்கு சோறு
தங்க ரதம், வெள்ளி கோபுரமுன்னு

சிக்கல் சிங்கராவேலன்ட்ட ஆரம்பிச்சு
எட்டுக்குடி முருகன் தொட்டு
போதாக்குறைக்கு வேளாங்கண்ணி மேரியம்மா,
நாகூர் தர்ஹா பாய்ங்களையும் இழுத்து போட்டுக்கிணு
அண்டம் ஒடுங்குற மேறி 68 ஐ
டெர்ர்ர்ர்ரரா……. கொண்டாடுறவன்
அத்தோட வுட்டானா? அடங்கித்தான் போனானா?

அறநிலையத்துறை அல்லா கோவிலுலயும் பூஜை
அரசு மருத்துவமனையில
பொறக்குற கொழந்தைக்கு பரிசு
அம்மா உணவகத்துல மூணு வேளையும்
இலவச் சோறுன்னு
ஆத்தா பிறந்த நாளை
அரசு விழாவா மாத்திப்புட்டான்.
சரிடே,

வாயில போடுறு பொங்கலும்,
கன்னத்துல போடுற பக்தியும் இலவசமுன்னா
டாஸ்மாக்குல சரக்கடி
பாருல சைட் டிஷ்ஷடி..
கல்லறையில எரிச்சுக்கோன்னு
இன்னைக்கு அல்லாம் இலவசமுன்னு அறிவிச்சா

கருவறை முதல், கல்லறை வரை
கும்பிடுறவனும் வாழ்த்துவான்,
செத்தவனும் போற்றுவான்!

– கவிப்பொறி அசுரச் சாத்தான்

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்